103. ஆல் பாஸ் டுடோரியல்

தியானத்துக்குக் காதலோ காமமோ தடையாக இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கம், ஏதோ ஒரு கட்டத்தில் தியானத்தின் ஆகப்பெரிய நோக்கமே முத்தம் என்றாகிவிடும் என்று நினைத்தேன்.

என் கண்ணில் பட்ட மனிதர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்களாக இருந்தார்கள். இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெள்ளையர்கள் மொத்தமாக இங்கே வந்துவிடுகிறார்களா என்ன? இத்தனைக்கும் ரஜனீஷ் புனேவுக்கு வந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தன. அவரைப் பார்க்கவும் அவரது சொற்பொழிவைக் கேட்கவும் இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது நம்பமுடியாத அதிசயமாக இருந்தது. குறைந்தது முன்னூறு வெள்ளையர்களையாவது நான் அங்கே பார்த்தேன். ஆண்களும் பெண்களுமாக அவர்கள் மூலைக்கு மூலை நின்று பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். திடீர் திடீரென்று யாராவது ஒருவர் இருந்த இடத்தில் நடனமாடத் தொடங்கிவிடுவார். உடனே அவரோடு நாலைந்து பேர் சேர்ந்துகொள்வார்கள். அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல வேறு சிலர் ஆங்காங்கே தனியே அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்கள். சிலர் உலகை மறந்து முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். பெண்ணொருத்தி, ஒரு முத்த ஜோடி தங்கள் பணியை முடித்து விலகும் வரை அருகே அமைதியாக நின்றுகொண்டிருந்துவிட்டு, அவர்கள் விலகியதும் அவர்களிடம் ஏதோ பேசினாள். மூவருமாக உடனே கிளம்பி மைய மண்டபத்துக்குள் சென்றார்கள். வேறு எதற்காக இல்லாவிடினும் முத்தம் ஒரு இயல்பான காரியம் என்று ஒரு பெரும் சமூகத்துக்குப் புரியவைத்ததற்காகவேனும் ரஜனீஷைப் பாராட்டத்தான் வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எனக்குக்கூட அங்கே நடமாடிக்கொண்டிருந்த அழகிய பெண்களுள் நாலைந்து பேரைக் கூப்பிட்டு சிறிது நேரம் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. சிரித்துக்கொண்டேன்.

இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. தியானத்துக்குக் காதலோ காமமோ தடையாக இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கம், ஏதோ ஒரு கட்டத்தில் தியானத்தின் ஆகப்பெரிய நோக்கமே முத்தம் என்றாகிவிடும் என்று நினைத்தேன். எனக்கு அம்மனிதரின் மன அமைப்பைப் புரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எதையும் மறுப்பது, எதையும் எதிர்ப்பது என்பது ஒரு பாவனை. கவன ஈர்ப்புக்கு அது உதவும் என்றாலும் அதைத் தாண்டி அவரிடம் ஏதோ இருக்கத்தான் வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில், தத்துவங்களுக்கும் வேதாந்த விளக்கங்களுக்கும் உலகில் எங்குமே இத்தனை கூட்டம் சேராது. காதலையும் காமத்தையும் ஒரு சன்னியாசியிடம் வந்து பாடம் கேட்டாக வேண்டிய அவசியமில்லை. இதைத்தாண்டி வேறு எதற்கு வருகிறார்கள்? நான் அதை அறிந்துகொண்டே தீர வேண்டும் என்று நினைத்தேன்.

அன்று மாலை ஐந்து மணிக்கு ரஜனீஷ் மைய மண்டபத்துக்கு வருவார் என்றார்கள். மூன்றரை முதலே மண்டபத்தில் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. சௌகரியமாக ஒரு சுவரோரம் சென்று நான் அமர்ந்துகொண்டேன். என் அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். மிகவும் வாசனையாக இருந்தாள். பெரிய அழகி என்று சொல்ல முடியாதெனினும் அங்கு இருந்த அத்தனை பெண்களுமே சராசரிக்கு மேற்பட்ட அழகிகளாகத்தான் தெரிந்தார்கள். தவிர, அனைவருமே பணக்கார வீட்டுப் பெண்களாகத் தெரிந்தார்கள். சுமார் ஆயிரத்தைந்நூறு பேர் அன்றைக்கு அந்த அரங்கில் கூடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் யாருமே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகவோ, அல்லது அதற்கும் கீழ்த்தட்டுவாசியாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. சட்டென்று எனக்கு மடிகேரிக்கு வந்த ஒரு வங்காளத்து சன்னியாசியின் நினைவு வந்தது.

குருநாதர் அவரை பிருத்வி பாபா என்று அழைத்தார். எக்காலத்திலோ குருநாதர் வங்காளத்தில் ஒரு சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தபோது அவரை அங்கே சந்தித்திருக்கிறார். நாளெல்லாம் பொழுதெல்லாம் சேரி மக்களுடன் மட்டும்தான் அவர் உரையாடுவார். குப்பங்களைத் தாண்டி நகர்ப்புறப் பகுதிகளுக்கு அவர் வரவே மாட்டார் என்று குரு சொன்னார். படிப்பறிவில்லாத, பொருளாதார சௌகரியங்கள் இல்லாத, நாகரிகம் சார்ந்த ஆர்வமோ அக்கறைகளோ இல்லாத மக்களுடன் மட்டுமே உரையாடுவது அவரது வழக்கம். குப்பத்துக் குழந்தைகளுக்கு சளி பிடித்தாலோ, காய்ச்சல் கண்டாலோ பிருத்வி பாபாவிடம்தான் தூக்கிக்கொண்டு போவார்கள். பாபா அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவார். அதனோடு சிறிது நேரம் விளையாடுவார். அதுதான் அவரது வைத்தியம். என்ன வியாதியாக இருந்தாலும் அது உடனே குணமாகிவிடுவதை நான் பார்த்தேன் என்று குரு சொன்னார்.

பிருத்வி பாபா மடிகேரிக்கு வந்த தகவல் கிடைத்ததும் குருநாதர் எங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கக் கிளம்பினார்.

‘குருஜி, அவரை ஏன் நமது ஆசிரமத்துக்கு அழைத்துவரக் கூடாது?’ என்று கேட்டேன்.

‘முயற்சி செய்து பாரேன்? வந்தால் சந்தோஷம்தான் எனக்கும்’ என்று சொன்னார்.

மடிகேரியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு ஆதிவாசிக் குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். பார்ப்பதற்கு மிகவும் அழுக்காக இருந்தார். நிறைய புகையிலை மெல்லுவார் போலிருக்கிறது. தாடியில் வழிந்து வழிந்து திட்டுத் திட்டாகப் புகையிலைக் கறை படிந்திருந்தது. அவரது கண்கள் ஏதோ புதருக்குள் ஒளித்து வைக்கப்பட்ட கண்களைப் போல உள்ளடங்கி, ஒடுங்கியிருந்தன. இரு கரங்களிலும் நரம்புகள் புடைத்துக்கொண்டு வெளித் தெரிந்தன. பேசும்போது காரிக் காரித் துப்பிக்கொண்டே இருந்தார். அதுவும் உட்கார்ந்த இடத்திலேயே. தன் மேலேயே துப்பிக்கொண்டபோதும் அவர் துடைக்கவில்லை என்பதைக் கவனித்தேன். ஏனோ அவரை ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அப்போது தோன்றியது.

குருநாதர் அவரிடம் மிகவும் மரியாதையுடன் பேசினார். அவருக்காக எடுத்துச் சென்ற பழங்களைக் கொடுத்து வணங்கினார். எங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொருவரைக் குறித்தும் உயர்வாக எடுத்துச் சொன்னார். பிருத்வி பாபா எங்களை முன்னால் வரச் சொல்லி, ஒவ்வொருவரையும் தலை தொட்டு ஆசீர்வாதம் செய்தார்.

‘மடிகேரியில் எவ்வளவு நாள் இருப்பீர்கள்?’ என்று குருநாதர் கேட்டார்.

‘எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை. எல்லோரிடமும் இங்கு பணம் இருக்கிறது’ என்று அவர் சொன்னார். குருநாதர் சிரித்தார். ‘என் ஆசிரமத்தில் இப்போது நூற்று நாற்பது ரூபாய் இருக்கிறது. உங்களுக்குப் பிரச்னை இல்லையென்றால் அங்கு வந்து தங்கலாம்’ என்று சொன்னார்.

‘அப்படியா? ஆனால் நான் துப்புவது உன் சீடனுக்குப் பிடிக்கவில்லை’ என்று என்னைச் சுட்டிக்காட்டி அவர் சொன்னபோது எனக்குச் சங்கடமாகிவிட்டது. அப்படியெல்லாம் இல்லை என்று என்னவோ சொல்லிச் சமாளித்தேன். இந்த சித்தர்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

‘என்னால் மூன்று மணி நேரம் நெருப்பின் மீது அமர்ந்து தியானம் செய்ய முடியும். ஆனால் பணம் இருக்கும் இடத்தில் மூன்று விநாடிகள்கூட இருக்க முடிவதில்லை. மூச்சு முட்டிவிடுகிறது’ என்று அவர் சொன்னார்.

ரஜனீஷ் தனது ஆசனத்துக்கு வந்து அமர்ந்தபோது அதைத்தான் எண்ணிக்கொண்டேன். அவரது வெல்வெட் தொப்பியும் வெள்ளிக் கம்பிகள் போல் நீண்டிருந்த தாடியும் கருநீல நிறத்தில் அவர் அணிந்திருந்த பட்டு அங்கியும் வைரம் பதித்த பாத ரட்சைகளும் விலை உயர்ந்த கைக்கடிகாரமும் யாரையும் எளிதில் வசீகரிக்கக்கூடியவை. இயல்பிலேயே அவருக்கு ஒரு வசீகரம் இருந்தது. அழகன் தான். சந்தேகமில்லை. அவர் என்ன அருந்தியிருந்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கண்கள் சொருகிய விதமே விநோதமாக இருந்தது. பொதுவாக, போதையில் சொருகும் கண்கள் மேற்புறமாகச் சென்று சொருகும். இதுவே ஆழ்ந்த தியானத்தில் கண் சொருகுமானால் அது கீழ்ப்பக்கம் வந்து அடங்கும். அவருக்கு இரண்டுமாக இல்லாமல் இடது கண் வலப்பக்கத்திலும் வலது கண் இடப்பக்கத்திலுமாகச் சென்று சொருகி நின்றதைக் கண்டேன்.

அன்றைக்கு அவர் பேசவில்லை. அவரை உட்கார வைத்துவிட்டு ஒரு டேப் ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டுப் போனாள் ஒரு பெண். எப்போதோ எங்கோ அவர் பேசிய உரையின் பதிவு. ஒலி பெருக்கிகளின் மூலம் அது ஒலிக்கத் தொடங்கியது. என்ன ஆனாலும் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று தனது பெற்றோரிடம் அவர் தீர்மானமாகத் தெரிவித்த தினத்தைப் பற்றி அதில் பேசியிருந்தார்.

‘நான் ஒரு துறவியாகிவிடுகிறேன் என்று சொல்லியிருந்தால்கூட அவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள். மகன் ஒரு பிரபல துறவியானாலும் அவர்களுக்குப் பெருமையே. ஆனால் நான் அதுவுமில்லை, என்னை என் இயல்புப்படி அப்படியே விடுங்கள்’ என்று சொன்னதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை’

எனக்குப் போதும் என்று தோன்றிவிட்டது. சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டேன். அந்தக் கணம் எனக்கு அவர் ஒரு நல்ல டுடோரியல் காலேஜ் ஆசிரியராகத் தெரிந்தார். எனக்கு அத்தகைய நிறுவனம் ஒன்றை நடத்தும் எண்ணம் அறவே இல்லை என்று சொல்லிக்கொண்டேன். ஒரு ‘ஆல் பாஸ் டுடோரியல்’ நடத்துவதற்கு நான் ஆளல்ல. நான் செய்ய விரும்புவது வேறு.

மறுநாள் கணேஷ் ராம் எனக்கு மடிகேரியில் ஒரு ஏலக்காய் வியாபாரியின் முகவரியைக் கொடுத்து அவரைச் சென்று பார்க்கும்படிச் சொன்னான். ஆசிரமம் அமைப்பதற்கு அவர் உதவுவார் என்று தெரிவித்தான். நான் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அன்று இரவே மைசூருக்கு ரயிலேறிவிட்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com