யதி

86. கையேந்தல்

பா. ராகவன்

‘ஒரு கொலை செய்ததைக்கூட நான் பாவமாக நினைக்கவில்லை விமல். எனக்குக் கருவியாக இருக்கச் சம்மதித்த இரண்டு பெண்களை என் இச்சைக்குப் பயன்படுத்தினேன் பார், அங்கே நான் அழிந்துவிட்டேன்’ என்று வினய் சொன்னான்.

என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. நினைவின் இண்டு இடுக்குகள் அனைத்திலும் குற்ற உணர்வின் பூரணத்தை அவன் தெளித்து வைத்திருந்தான். அது உலராத ரத்தச் சேறு. கால் வைக்கும் போதெல்லாம் பாதங்களின் வழியே மேலே ஏறி உச்சந்தலையில் சென்று மோதும். மூளையின் ஒவ்வொரு அணுவையும் துளைத்துத் தாக்கும். ஒரு சர்ப்பமாக, ஒரு புழுவாக, ஒரு கிருமியாகக் குத்திக் கிழிக்கும். எத்தனை ஆண்டுகள்! என்னைத் தவிர அவன் இதை வேறு யாரிடமும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அவன் தனது கதவுகளை இழுத்து மூடி வெகுகாலம் ஆகியிருக்க வேண்டும். சுய வெறுப்பிலும் அவமான உணர்ச்சியிலும் தன்னைத் துளித்துளியாகச் சிதைத்துக்கொண்டிருந்தவனை எப்படி மீட்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ரயில் தடதடவென்று ஓடிக்கொண்டே இருந்தது. உலகெங்கும் ரயிலின் பேரிரைச்சலைத் தவிர வேறொரு சத்தமில்லை என்று தோன்றியது. நான் மெல்ல ஒரு முடிவுக்கு வந்து அவன் கையைப் பிடித்தேன். புன்னகை செய்தேன்.

‘என்ன?’

‘நீ பாவி என்றால் அப்போது நான் யார்?’ என்று கேட்டேன்.

‘உனக்கென்ன? நீ ராஜரிஷி. உன் உலகின் நியாயங்கள் வேறு. உனது தருமங்களுக்கு நிறம் கிடையாது. வாசனை கிடையாது’.

‘யார் சொன்னது?’

‘நீ அப்படித்தானே வாழ்கிறாய்?’

‘இல்லை வினய். மனித குலத்துக்கு தருமம் என்பது பொதுவானது. நாம் அதை எதிர்கொள்ள அச்சப்பட்டு சில சட்டங்களின் சட்டகங்களைக் குறுக்கே கொண்டு மறைத்துவிடுகிறோம். தருமத்தைக் காட்டிலும் சட்டங்கள் எளியவை. சமாளிக்கக் கூடியவை’.

‘நான் சட்டத்தையும் மதித்ததில்லை’.

‘ஆனால் யோசித்துப் பார். எக்காலத்திலும் உன் காமத்துக்கு நீ விசுவாசமாக இருந்திருக்கிறாய். சன்னிதிக்குச் செல்லாவிட்டாலும் நீதான் உண்மையான காமரூபிணியின் பக்தன்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தேன். அவனுக்குச் சிரிப்பு வரவில்லை.

‘என்ன மடத்தனம் இது! நான் செய்துகொண்டிருந்த காரியங்கள் யாவற்றுக்கும் மூலாதாரம் அவள்தான். அதர்வம் அவள் கூந்தலின் ஒரு முடி. ஆயிரமாயிரம் பேய்களும் பிசாசுகளும் சாத்தான்களும் இட்சிணிகளும் இடாகினிகளும் அவளது சுண்டுவிரல் நகத்துக்குள் சுருண்டு கிடக்கின்றன. உலகெங்கும் நிகழும் அத்தனைக் கருஞ்சித்து ஆட்டங்களும் அவளது விரலசைப்புக்குக் கட்டுப்பட்டவை. என்னால் அவளைக்கூட முழுதாக நம்பித் தாள் பணிய முடியவில்லை. என் சந்தேகங்களே என் விலங்குகளாகிவிட்டன. என் சந்தேகங்களே என் அவமானம். என் சந்தேகங்களே என்னைச் சாகடிக்கப் போகின்றன’. பேசிக்கொண்டிருந்தபோதே அவன் உணர்ச்சி வயப்பட்டுக் கண்ணீர் சிந்தினான்.

நான் புன்னகை செய்தேன். ‘அப்படியா நினைக்கிறாய்? எனக்கென்னவோ உன்னுடைய இந்தச் சந்தேகங்கள்தாம் உன் தரிசனம் என்று தோன்றுகிறது’.

அவன் திடுக்கிட்டுப் போனான். ‘என்ன சொல்கிறாய்?’

‘இதோ பார் வினய். பக்தி என்பது கண்மூடித்தனமான நம்பிக்கை. நாத்திகம் என்பது இன்னொரு கண்மூடித்தனமான நம்பிக்கை. நீ நாத்திகனாக இல்லாமல், நம்பிக்கைகளுக்கான எல்லைக் கோட்டை வரையறுப்பவனாக இருக்கிறாய். ஒரு விதத்தில் நீ ஒரு உப தெய்வம். ஆனால் எதிர்க்கட்சிக்காரன்’.

‘புரியவில்லை’.

‘நான் என் குருவைக் கண்டடைந்த விதத்தைச் சொல்லுகிறேன். அதிலிருந்து உனக்குத் தேவையானதை உன்னால் எடுத்துக்கொள்ள முடிகிறதா பார்’ என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தேன்.

அன்றைக்கு நான் மிகுந்த பசியுடன் இருந்தேன். பெங்களூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி மைசூரைச் சென்றடைந்து, அங்கிருந்து மீண்டும் டிக்கெட் எடுக்காமல் ஒரு பேருந்துப் பயணம் மேற்கொண்டு மடிகேரிக்குப் போய்ச் சேர்ந்தேன். பயணத்தைப் பொருத்தவரை எனக்கு நோக்கமெல்லாம் இல்லை. கண்ணில் பட்ட பேருந்தில் ஏறினேன். அவ்வளவுதான். அது எங்கே போய் நிற்கிறதோ, அங்கே இறங்கிக்கொள்ளலாம் என்பது மட்டும்தான் திட்டம். வழியில் யாராவது பரிசோதகர் டிக்கெட் கேட்டு வந்துவிட்டால், அந்த இடத்தில் இறங்கி அடுத்த வண்டி பிடித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. பேருந்து மடிகேரிக்குச் சென்று சேர்ந்தபோதுதான் மடிகேரி என்றொரு இடம் இருப்பதையே அறிந்தேன்.

கால் வைத்த மாத்திரத்தில் எனக்கு அந்த ஊரைப் பிடித்துப் போனது. இன்றுள்ள அளவுக்கு அன்றைக்கு அது ஒரு பெரிய சுற்றுலாத் தலமெல்லாம் இல்லை. காவிரியின் பிறப்பிடத்தைக் காண மக்கள் வருவார்கள் என்றாலும் பெரிய கூட்டமெல்லாம் இருந்ததில்லை. நாலாபுறமும் மலை புடைத்த மண்வெளி. சரிவுகளில் காப்பித் தோட்டங்கள். விதவிதமான பழங்கள் பழுத்துத் தொங்கும் கானக வெளி. பசுமையற்ற ஒரு சதுர அடியைக்கூட நான் அங்கு காணவில்லை.

எனக்குப் பசித்தது. கையில் ஒரு ரூபாய்கூட இல்லை. உடுத்தியிருந்த ஆடை மிகவும் அழுக்கேறி, நாற்றமடித்தது. கழட்டிப் போட்டுவிட்டுக் குளிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் பிராமணன். குளித்த மறுவினாடி எனக்குப் பசிக்க ஆரம்பித்துவிடும். வேறு எதிலும் பிராமணனாக இல்லாவிட்டாலும் இந்த விஷயத்தில் நான் ஒரு பூரண பிராமணன். என் ஆராதனையெல்லாமே வயிற்றை நிரப்புவதாக மட்டுமே அன்று இருந்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பேருந்து நிலையத்தில் ஒரு கழிப்பிடமும் குளியலறையும் இருந்தது. ஆனால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டும். உள்ளே போய் வேலையை முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் பணமில்லை என்று சொன்னால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. திட்டலாம். சத்தம் போடலாம். அடிக்கலாம். அதை வாங்கிக்கொள்வதில் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் தண்டனையாகக் கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லிவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தேன். அதைவிட இன்னொரு பிரச்னை, குளித்துவிட்டு எதை அணிவது என்பது. நான் அணிந்திருந்த சட்டையையும் வேட்டியையும் மிக நிச்சயமாக என்னால் மீண்டும் அணிய முடியாது. என் வியர்வையின் கோர நாற்றம் என்னாலேயே சகிக்க முடியாததாக இருந்தது. ஏனென்றால், ஒன்பது தினங்களாக நான் அந்த உடைகளை மாற்றாமல் அப்படியே அணிந்துகொண்டிருந்தேன். இதில் ஆறு நாள் குளிக்கவும் இல்லை. குற்றாலத்தில் இருந்து கிளம்பி திருச்சிக்குப் போய் அங்கிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி வழியில் இறங்கி வழி மாறியதில் இருந்து பயணம் ஒன்றைத் தவிர வாழ்வில் வேறெதுவுமே இல்லை என்றாகிப் போனது எனக்கு. பசி, தூக்கம், பயம், கவலை, வீட்டு நினைப்பு அனைத்தில் இருந்தும் விடுபட்டு வெளியேற அந்த வேகம் வேண்டியிருந்தது. பேருந்தின் வேகம். ரயில் வேகம். சாலை சரியில்லாத இடங்களில் பேருந்து விழுந்து குலுங்கி ஆடி ஆடிச் சென்றதைக்கூட விரும்பினேன். ரசிக்கவும் செய்தேன். எனக்குள்ளே தேங்கியிருந்த அனைத்தையும் அந்தக் குலுக்கல்களில் உதிர்த்துவிட மிகவும் விரும்பினேன். ஒரு விஷயம்தான் எனக்குத் திரும்பத் திரும்ப அப்போது தோன்றிக்கொண்டிருந்தது. உறவுகளே இல்லாத ஒரு பெரும் வாழ்வு மட்டும் அமைந்துவிடுமானால் மனித வாழ்வில் துயரம் என்ற ஒன்று இருக்காது என்பதே அது. நான் புத்தரை அந்த இடத்தில் நிராகரித்துக்கொண்டேன். ஆசையற்று இருப்பது சாத்தியமில்லை. சாத்தியமற்ற ஒன்றை தரிசனமாகப் பெற்ற அவர் மீது எனக்குப் பரிதாபம்தான் வந்தது. ஆனால் உறவுகள் அற்று இருப்பது சாத்தியமானதுதான் என்று தோன்றியது. துயரங்களின் ஊற்றுக்கண்ணாக உறவுகளே எனக்குத் தோன்றியது. உட்கார்ந்து அலசிப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் அதற்குமுன் நான் குளிக்க வேண்டும். உடை மாற்ற வேண்டும். எதையாவது சாப்பிட வேண்டும். அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டே மடிகேரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தேன். வானம் இருளத் தொடங்கியிருந்தது. மதியம் மூன்று மணிக்கே ஆறு மணித் தோற்றம் காட்டியது. நினைக்காத ஒரு கணத்தில் சட்டென்று மழை பெய்யத் தொடங்கியது. என்னையறியாமல் ஓடிப்போய் ஒரு கடைக்கு முன்னால் இருந்த கூரைச் சரிவின் கீழ் நின்றுகொண்டேன். மழையில் இலவசமாகக் குளித்துவிடலாம்தான். ஆனால் ஈரத் துணியுடன் சுற்றிக்கொண்டிருக்க முடியாது. மலைக் காற்று ஏற்கெனவே பனி போர்த்தி வருடிக்கொண்டிருந்தது.

மழை நிற்கும் வரை காத்திருக்க முடிவு செய்தேன். ஆனால் அது நின்றபாடில்லை. அரை மணி நேரம் கடந்த பின்பும் விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. எனக்குக் கால் வலித்தது. மழைக்கு அந்தக் கடையோரம் ஒதுங்கிய எல்லோருமே குறைந்தது ஒரு தேநீராவது வாங்கி அருந்தினார்கள். அதற்கும் வக்கற்றுப் போய்த்தான் நான் நின்றுகொண்டிருந்தேன். என்ன செய்வதென்று புரியவில்லை. நெடு நேரம் யோசித்துவிட்டு, சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தேன். அந்தக் கடைக்காரனிடம் திரும்பி, ‘எனக்கு ஐந்து ரூபாய் பிச்சையாகத் தர முடியுமா?’ என்று கேட்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT