91. தியானம்

எதில் முற்றுமுழுதாக உன் மனம் குவிகிறதோ, அதுவே தியானம். எதில் இன்னொன்றின் நினைப்பு இல்லாது போகிறதோ, அது மட்டுமே தியானம்.

குருநாதரும் என் சகாக்களும் மழை பார்த்துவிட்டுத் திரும்பி வருவதற்கு மாலை ஆறு மணிக்குமேல் ஆகிவிட்டது. நான்கு பேரும் ஈரத்தில் விரைத்துப் போய் வந்து சேர்ந்தார்கள். குரு ஒரு குழந்தையைப் போலச் சிரித்தார். அவரது விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் அவர்கள் வருகையை எதிர்பார்த்து நான்கு கனமான காய்ந்த டர்க்கி டவல்களை எடுத்து வைத்திருந்தேன். உள்ளே நுழைந்ததும் அதைக் கொடுத்தேன். அவர்கள் துடைத்துக்கொண்டு ஆ, ஊ என்று குளிரைக் கொல்ல முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஈரத் துணிகளைக் களைந்து உடம்பெங்கும் துடைத்துவிட்டு, புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, ‘சூடாக என்ன இருக்கிறது?’ என்று கேட்டார்கள்.

நான் ‘பிசிபேளாபாத்’ என்று சொன்னேன். அவர்கள் அதை முழுதாகக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. பாய்ந்து ஓடி அவரவர் தட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்கள். குருஜியும் அவர்களோடு அமர்ந்துகொண்டார். மஞ்சு கொண்டு வந்திருந்த பிசிபேளாபாத்தை நான் சற்று சூடு படுத்தி வைத்திருந்தேன். அதனோடு நான் சமைத்திருந்த பொரியலையும் சேர்த்துப் பரிமாறினேன். அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அள்ளி அள்ளி எடுத்துச் சாப்பிட்டார்கள். ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிட்டுத்தான் என்னை நிமிர்ந்து பார்த்தார்கள். சிரித்தார்கள்.

‘நீ சாப்பிட்டாயா?’ என்று குருஜி கேட்டார்.

‘சாப்பிட்டுவிட்டேன் குருஜி’.

‘நல்லது. என் அறைக்கு வா’ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்று கை கழுவிக்கொண்டு தட்டையும் கழுவிக் கொண்டு போய்க் கவிழ்த்துவிட்டுத் தன் அறைக்குப் போனார். நான் சமையலறையைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு அவர் அறைக்குள் நுழைந்தேன்.

‘உட்கார்’ என்று சொன்னார்.

அமர்ந்தேன்.

‘உன் முகம் ஏன் என்னவோபோல இருக்கிறது?’

‘இல்லையே. அநேகமாக சமைத்த களைப்பாக இருக்கும்’.

‘இது நீ சமைத்ததுபோல இல்லையே?’

‘ஆம் குருஜி. மஞ்சு கொண்டுவந்திருந்தாள். ஆனால் பொரியல் நான் செய்ததுதான்’.

‘அது தெரிந்தது. சரி சொல். வேறென்ன நடந்தது?’

எனக்குச் சட்டென்று உடலெங்கும் அச்சத்தின் புகை மூட்டம் எழுந்து சுழலத் தொடங்கியது. இந்த மனிதர் யார்? இவருக்கு என்னவெல்லாம் தெரியும்? மந்திர தந்திரங்கள் அறிந்தவரல்லர் என்றுதான் நான் கருதினேன். அதற்கும் அப்பால் அவருக்கு வேறு எதுவோ தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. எப்படியானாலும் அவர் எதையோ மோப்பம் பிடித்திருக்கிறார். இற்குமேல் நடந்ததை மறைப்பது என்பது வெறும் அபத்தம். சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். ஆனாலும் சற்றுத் தள்ளிப் போடலாம் என்று தோன்றியது. ஒரு சின்ன ஆட்டம். பிள்ளைக் களி. செய்து பார்த்தால்தான் என்ன?

குருஜி கேட்டார், ‘என்ன நடந்தது என்று கேட்டேன்’.

‘ஒன்றும் நடக்கவில்லையே குருஜி? மஞ்சு வீட்டில் இன்று பிசிபேளாபாத் செய்திருக்கிறார்கள். மழையில் நாம் என்ன சமைத்திருப்போம், என்ன சாப்பிட்டிருப்போம் என்று அவளுக்குக் கவலை வந்துவிட்டது. அவள் அம்மாவிடம் கேட்டு சமைத்ததில் ஒரு பகுதியை நமக்காக எடுத்து வந்துவிட்டாள். மிகவும் நல்ல பெண்’ என்று சொன்னேன்.

‘ஆம். அவள் நல்ல பெண்தான். ஆனால் நீ என்ன செய்தாய்?’ என்று குரு கேட்டார்.

‘அவள் குளிர்கிறது என்று சொன்னாள். நீங்கள் எனக்குக் கற்றுத் தந்த மூச்சுப் பயிற்சியை அவளுக்குச் சொல்லிக்கொடுத்துக் குளிரைச் சற்று மறக்க வைத்தேன்’.

‘பிறகு?’

அதற்குமேல் அதை நீட்டிக்கொண்டு போவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. எனவே புன்னகை செய்தேன். ‘மன்னியுங்கள். நான் அவளை முத்தமிட்டேன்’ என்று சொன்னேன்.

‘வேறு?’

‘அவ்வளவுதான். வெறும் முத்தம். அவளுக்கும் அதில் சம்மதம் இருந்ததால் முத்தத்தின் கால அளவைச் சற்று நீட்டித்துக்கொண்டேன்’.

அதன்பின் அவர் பேசவில்லை. கண்ணை மூடிக்கொண்டு படுத்துவிட்டார். அவர் மீண்டும் அழைப்பார் என்று நினைத்து நான் சிறிது நேரம் அருகிலேயே நின்றிருந்தேன். ஆனால் அவர் உறங்கத் தொடங்கிவிட்டாற்போல இருந்தது. எனவே சத்தமில்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறி என் குடிலுக்குச் சென்றேன். சிறிது நேரம் முண்டகோபநிஷதத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்தேன். மனம் அதில் நிற்க மறுத்தது. எனக்குப் பெரிய கவலையெல்லாம் இல்லை. ஆசிரமத்தில் இனி நான் இருக்கக்கூடாது என்று குருஜி சொல்லுவாரேயானால், சரி என்று கிளம்பிவிடும் முடிவில்தான் இருந்தேன். ஆனால் ஏனோ அவர் அப்படிச் சொல்லக்கூடியவராக எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் சற்றும் கலவரமடையாமல் நடந்ததை அவரிடம் அப்படியே தெரிவித்தேன்.

உண்மையில் மஞ்சுவுக்கும் அந்த அனுபவம் புதிது. அதற்குமுன் தன்னை யாரும் முத்தமிட்டதில்லை என்று அவள் சொன்னாள்.

‘உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டேன்.

அவள் மௌனமாக இருந்தாள்.

‘பிடித்திருந்தால் நாம் இதனை நீட்டிக்கலாம். முத்தம் ஒரு யோகம்’ என்று சொன்னேன்.

அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை. ஆனால் நான் மீண்டும் முத்தமிட முயற்சி செய்தபோது அவள் தடுக்கவில்லை. அம்முறை நான்கைந்து நிமிடங்களுக்கு அந்த முத்தம் நீடித்தது. அவள் அப்படியே கிடந்தாள். ஒரு பொருளைப் போல. உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல். நானும்கூட அசையவில்லை. ஒரு முத்தத்தைத் தாண்டி வேறெதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மட்டும் எண்ணிக்கொண்டேன். சற்று படபடப்பாக இருந்தது. அது தவறா, சரியா என்று நான் கவலைப்படவில்லை. ஆனால், என்னால் அப்போது அதைத் தவிர்த்திருக்கவும் முடியாது என்று தோன்றியது. ஒருவேளை அவள் ஒப்புக்கொள்ள மறுத்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று சிறிது யோசித்துப் பார்த்தேன். சற்று அசடு தட்டியிருக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால் எத்தருணத்திலும் வன்முறையின் பிடியில் நான் விழுந்திருக்க மாட்டேன் என்று உறுதியாக நினைத்தேன்.

முத்தமிட்டு முடிந்து அவள் விலகியதும் சட்டென்று சொன்னேன், ‘இந்த நிமிடங்களில் உன் மனத்தில் வேறெந்த எண்ணமும் இருந்திருக்கக் கூடாது. அல்லது முத்தத்தைத் தாண்டி வேறொன்றை நினைத்தாயா?’

அவள் இல்லை என்று தலையசைத்தாள்.

‘சரி. அப்படியானால் நீ ஐந்து நிமிடங்கள் சரியாக தியானத்தில் இருந்திருக்கிறாய். கவனம் குவிந்த தியானம்’.

‘முத்தம் தியானமா?’

‘சந்தேகமென்ன? எதில் முற்றுமுழுதாக உன் மனம் குவிகிறதோ, அதுவே தியானம். எதில் இன்னொன்றின் நினைப்பு இல்லாது போகிறதோ, அது மட்டுமே தியானம்’.

அவள் சிரித்துவிட்டாள். ‘அப்புறம் கடவுள் எதற்கு? மோட்சத்துக்கு முத்தம் போதுமே?’ என்று சொன்னாள்.

‘ஆம். முத்தமும் மோட்சத்துக்கான வழிதான்’ என்று சொன்னேன்.

அன்று இரவெல்லாம் மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இனி பொழிய ஒரு சொட்டும் மிச்சமிருக்காது என்பதைப் போல. காலை சற்று வெளிச்சம் வந்ததும் எழுந்து வெளியே வந்து பார்த்தேன். ஏராளமான மரங்கள் வீதியெங்கும் முறிந்து விழுந்திருந்தன. கண்ணில் பட்ட மலைப்பரப்பெங்கும் சிற்றருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன. சமதளம் வாய்த்த சாலையெல்லாம் ஆறு போல நீர் ஓடிக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆசிரமத்துக்குள் நாங்கள் வளர்த்த பல மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. பூச்செடிகள் நனைந்து சுருங்கிச் சரிந்திருந்தன. பூந்தொட்டிகளெல்லாம் நீர் நிரம்பியிருந்தது. ஆசிரம வளாகத்துக்குள் நாங்கள் தங்கியிருந்த ஓலைச் சரிவிட்ட குடில்கள் நான்குமே பகுதியளவில் பழுதாகிவிட்டிருந்தன. இன்னொரு முழு நாள் மழையும் காற்றும் தொடருமானால் நாங்கள் குடில்களை காலி செய்துவிட்டு, குருநாதர் வசிக்கும் கான்கிரீட் கட்டடத்துக்கே இடம் பெயர்ந்துவிடவேண்டி இருக்கும் என்று தோன்றியது. என்ன காரணத்தாலோ அவர் எங்களைத் தனித்தைக் குடில்களில்தான் வசிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆசிரமவாசிகளுள் ஒருவனாக என்னையும் ஏற்றுக்கொண்ட தினத்தன்றே யாரையோ கூப்பிட்டு எனக்கொரு குடில் அமைத்துத் தரச் சொல்லிவிட்டார். அன்று மாலையே என் குடில் தயாராகிவிட்டது. மூன்றடி உயரத்துக்குச் செங்கல் வைத்துப் பூசிய சுவர்கள். மேலே கூரைச் சரிவு. அவ்வளவுதான். கதவு கிடையாது. எங்கிருந்தோ கான்கிரீட் பாளங்களை எடுத்து வந்து தரைக்குப் போட்டு பூசி மெழுகிவிட்டுப் போய்விட்டார்கள்.

எனக்கு அது மிகப்பெரிய வியப்பாகவும் மகிழ்ச்சி தரத்தக்கதாகவும் அன்று இருந்தது. ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த நாளில் நான் சிறுவன். வீட்டிலேயே எங்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு அறையைத்தான் ஒதுக்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அதை ‘என் அறை’ என்று நான் என்றுமே உணர்ந்ததில்லை. ஆனால், ‘என் பிள்ளைகளுக்கு நான் முதலில் தர விரும்புவது பூரண சுதந்தரம். ஒரு தனிக்குடில் அதன் தொடக்கம்’ என்று குருஜி சொன்னார். ஆனால் குடிலுக்குள் அமர்ந்து தியானத்தில் ஈடுபடக் கூடாது என்பது அவரது கண்டிப்பான உத்தரவாக இருந்தது.

‘தியானத்தை வெட்ட வெளியில் செய். இங்கு மலை முகடுகளுக்குப் பஞ்சமில்லை. நதிக்கோ அருவிக்கோ ஓடைகளுக்கோ பஞ்சமில்லை. இறைத்தன்மையின் முழு நிர்வாணம் வெளியெங்கும் நிறைந்திருக்கிறது விமல். அதை வீணடிக்கக் கூடாது’ என்று குருஜி சொன்னார்.

ஆசிரமத்தில் சேர்ந்த நாளில் இருந்து நான் என்றுமே அவர் பேச்சை மீறியதில்லை. தியானத்தை மலைச்சாரலில்தான் வைத்துக்கொள்வேன். தியானம் மட்டுமல்ல. பல மூச்சுப் பயிற்சிகளை, பின்னாள்களில் பயின்ற யோகப் பாடங்களையும்கூட வெட்ட வெளியில்தான் அப்பியாசம் செய்வது வழக்கம். முதல் முறையாகக் குடிலுக்குள் நான் மஞ்சுவை நெருங்கி முத்தமிட்டிருக்கிறேன். அதை ஒரு தியானம் என்று அவளிடம் குறிப்பிடவும் செய்திருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் ஒரு சன்னியாசி செய்கிற காரியமல்ல அது. குருஜி என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தேன்.

நான் உறங்கி விழித்ததற்கு அரை மணி நேரம் கழித்துத்தான் அவர் எழுந்து வெளியே வந்தார். என்னைக் கண்டதும் புன்னகை செய்தார். ‘மழை விட்டிருக்கிறது போலிருக்கிறதே? வாயேன், சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம்’ என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com