92. மிருக நடமாட்டம்

கடவுள் ஒரு சுமை. மதம் அதைக் காட்டிலும் பெரும் சுமை. வாழ்நாள் முழுதும் மூட்டை சுமந்து கூன் போட்டுவிடாதே’ என்று அவர் என்னிடம் சொன்னார். எனக்கு அது பிடித்தது. சரியாக இருப்பதுபோலப் பட்டது.

மடிகேரியில் குருநாதரின் ஆசிரமம் இருந்த இடம் ஒரு வினோதமான பிராந்தியம். அந்தக் குன்றின் சரிவுகளில் எல்லா மலை வாசஸ்தலங்களிலும் இருப்பது போன்ற குட்டை வீடுகள், சரிவு வீடுகள் உண்டு. ஆனால் ஆசிரமம் அனைத்துக்கும் மேல் வரிசையில் ஒரு மொட்டைப் பாறையின் பின்புறம் தனியே அமைந்திருக்கும். ஆசிரமம் இருக்கும் இடத்துக்கு முந்தைய கொண்டை வளைவு வரை வண்டிகள் வரும். ஆனால் ஆசிரமத்துக்கு ஒரு சைக்கிள்கூட வர முடியாது. குன்றின் அடிப்பகுதியில் இருந்து குடைந்து குடைந்து சாலைகளைப் போட்டுக்கொண்டே வந்தவர்களுக்கு அந்த இடம் வந்தபோது அலுத்திருக்கும் என்று நினைத்தேன். அல்லது அதற்கு மேலே யாரும் போய் வீடு கட்டி வசிக்கமாட்டார்கள் என்று நினைத்துத் திரும்பிப் போயிருப்பார்கள். பல காலம் உண்மையிலேயே யாரும் போகாத இடமாகவே இருந்து கானகம் மண்டிய இடமாகிவிட்டது. பிறகொரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவர் கண்ணில் அந்த இடம் பட்டிருக்கிறது. கொக்கோ பயிரிடலாம் என்று நினைத்து மொத்தமாக அங்கிருந்த நாற்பது ஏக்கரா நிலத்தை உரிமையாக்கிக்கொண்டு பயிரிட ஆரம்பித்தார். தோட்டத் தொழிலாளிகள் போய்வருவதற்காக அவர் செலவிலேயே ஒரு பாதையும் அமைத்தார். இதையெல்லாம் சரியாகச் செய்தவரால் வனத்துறை அதிகாரிகளை ஏனோ சமாளிக்க முடியாமல் போய்விட்டது.அவர் ஒன்றிரண்டு போகம் பயிரிட்டிருந்தால் அதிகம் என்று குருஜி ஒரு சமயம் சொன்னார். பிறகு அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார். அக்காலங்களில் அந்தத் தோட்டத்தொழில் அதிபரின் இரண்டு மகன்களுக்கு குருஜி பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக அங்கே போய்வந்துகொண்டிருந்திருக்கிறார். அந்தப் பழக்கத்தில் அவருக்குக் கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுத்து ஒரு கட்டடமும் கட்டிக்கொடுத்திருக்கிறார். குருஜி அங்கேயே தங்கி, தமது மகன்களைப் பெரிய மேதைகளாக்கிவிடுவார் என்று எண்ணியிருப்பார். குருஜி அங்கேயேதான் தங்கினார். ஆனால் அந்தத் தொழிலதிபர்தான் இடம் மாற்றிக்கொண்டு போய்விட்டார்.

நாங்கள் நடக்கத் தொடங்கியபோது குருஜி அந்தக் கானகத்தின் பூர்வகதையை எனக்குச் சொல்லிக்கொண்டே வந்தார். கொக்கோ பயிரிட்ட காலத்தின் கதை. கர்நாடகத்தில் அப்போது நிஜலிங்கப்பா முதல்வராகி இருந்தார். மாநிலத்தின் முதல் சட்டப்பேரவையின் நான்காவது முதல்வர். அவர் காலத்தில்தான் முதல் முதலில் மலைப்பகுதிகளில் தோட்டத் தொழில்களுக்கான நடைமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டதாக அவர் சொன்னார். நடைமுறைகளை ஒழுங்கு செய்துவிடலாம். மனிதர்களை என்ன செய்ய முடியும்?

‘இந்த இடத்தின் முதலாளி உண்மையில் மிகவும் தன்மையான மனிதர். பெரிய தொழிலதிபராவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஏனோ அவரால் வனத்துறை அதிகாரிகளுடன் ஒத்துப்போக முடியாமல் போய்விட்டது’ என்று குருஜி சொன்னார்.

‘அவர் என்ன ஆனார்?’ என்று கேட்டேன்.

‘தெரியவில்லை. இந்தத் தொழிலே வேண்டாம் என்று சொல்லிவிட்டு மங்களூருக்குப் போய் தங்கிவிட்டார். ஓரிரண்டு வருடங்கள் அதன்பின் தொடர்பில் இருந்தார். அதன்பின் அதுவும் இல்லாமல் போய்விட்டது’.

‘இடத்தை வேறு யாருக்காவது விற்றுவிட்டாரா?’

‘அதுவும் தெரியவில்லை. இன்றுவரை இந்த இடத்துக்கு உரிமை சொல்லிக்கொண்டு யாரும் வரவில்லையே? அப்படி வருகிறவரை இந்தத் தோட்டம் முழுவதும் நம்முடையதுதான்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

அப்போது அது தோட்டமாக இல்லை. பராமரித்தால்தானே தோட்டம்? புற்களும் புதர்களும் நெடிதுயர்ந்த செம்மரங்களும் வளர்ந்து மண்டியிருந்த காடு அது. எந்தக் காலத்திலோ போட்ட கம்பி வேலியின் மிச்சம் ஆங்காங்கே சிறிது தெரியும். குருஜி தனது இருப்பிடத்தை ஓர் ஆசிரமமாக மாற்றி அமைத்துக்கொண்ட பிற்பாடு கீழிருந்து ஒரு சிலர் வந்து போக ஆரம்பித்தார்கள். நான் ஆசிரமத்துக்குச் சென்று சேர்ந்த பிறகு அப்படி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. அரசாங்கம் கைவிட்டுவிட்ட அந்தப் பிராந்தியத்துக்கு சுமாரான மண் சாலையொன்று போடப்பட்டதே ஆசிரமத்துக்கு வந்து போகிறவர்களின் முயற்சியால் நடந்ததுதான்.

‘விமல், நிலம் ஒரு குறியீடு. அது ஸ்தூலமல்ல. வெறும் குறியீடு. முகத்தைப் பார்ப்பதற்குக் கண்ணாடி இருப்பது போல மனத்தைக் காண நிலம்’ என்று குருஜி சொன்னார்.

‘அப்படியா?’

‘ஆம். அதனால்தான் நான் அதனை எனது மூன்றாம் நம்பர் கடவுளாக்கி வைத்திருக்கிறேன்’.

‘மனமும் நிலமும் ஒன்றா?’

‘சந்தேகமில்லாமல் ஒன்றுதான். கொள்ளளவு காரணத்தால் மட்டுமல்ல. கொந்தளிக்க முடிவு செய்துவிட்டால் அவனை அடக்கவே முடியாது. அவன் ஒரு பிசாசாகிவிடுவான்’ என்று அவர் சொன்னார். எனக்குச் சட்டென்று அவர் எங்கே வருகிறார் என்பது புரிந்துவிட்டது. நான் புன்னகை செய்தேன்.

‘ஏன் சிரிக்கிறாய்? ஒரு காலத்தில் இங்கே கொக்கோ பயிர் எப்படிச் செழித்து வளர்ந்தது தெரியுமா? முதலாளி இங்கே பக்கத்திலேயே ஒரு சாக்லேட் தொழிற்சாலையை அமைக்க நினைத்திருந்தார். அது நடந்திருந்தால் கர்நாடகத்தின் தலைசிறந்த சாக்லேட் உற்பத்தி மையமாக இது ஆகியிருக்கும். ஆனால் என்ன நடந்தது? இந்த மரங்களைப் பார். அந்த புதர்களைக் கவனி. நம்மால் இப்போது உள்ளே நுழையக்கூட முடியாது. கரடிகளும் பாம்புகளும் காட்டுப் பன்றிகளும் மேய்ந்துகொண்டிருக்கின்றன. இரவுகளில் காட்டெருமைகள் சிலவற்றைச் சில நாள்களாக இங்கே பார்க்கிறேன். சிங்கம், புலிதான் மிச்சம்’.

‘கானகம் நல்லதல்லவா?’

‘ஆம். ஆனால் கொக்கோவின் ருசி அதில் இருக்காது’ என்று குருஜி சொன்னார்.

நான் சட்டென்று அவர் கரங்களைப் பற்றி நிறுத்தினேன். ‘நான் தவறுதான் செய்தேன் குருஜி. ஆனால் அதனை அப்போது விரும்பினேன். விருப்பத்தை ஒதுக்கிவிட்டு எதையும் சாதிக்க இயலாது என்று எனக்கு எப்போதும் தோன்றுகிறது’ என்று சொன்னேன்.

‘ஆனால் நீ தேர்ந்தெடுத்து விரும்பப் பழக வேண்டும். ஏனென்றால், உன் வயது இப்போது உனக்கு ஓர் இடைஞ்சல்’.

வாழ்வில் நான் தேர்ந்தெடுத்த பாதை எத்தனைக் கரடுமுரடானது என்பதை நான் அப்போது அறிந்திருந்தேன். கணப் பொழுது தீர்மானத்தில் என் வீட்டை உதறிவிட்டு நான் கிளம்பியிருந்தேன். ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. சிறு துளித் துயரம் இல்லை. உறவுகளின் ஆக்டோபஸ் பிடியில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விலகி நிற்பதே யோகம் என்று எனக்குத் தோன்றியது. ஒளிந்து வாழ்வதென்றால் பெருங்கூட்டத்துக்கு நடுவே கரைந்துவிட வேண்டும். வெளிப்பட்டு நிற்க வேண்டுமென்றால் தரையில் இருந்து ஓரடி உயரத்தில் கால்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எதையும், யாரையும் சாராதிருப்பது. அல்லது அனைத்தின் மீதும் கவிந்து கிடப்பது. எனக்கு மிக நிச்சயமாகக் கடவுள் வேண்டியிருக்கவில்லை. நான் அது குறித்து அப்போது நிறையவே யோசித்துவிட்டிருந்தேன். நான் வெறுப்பதற்குக் கடவுளிடம் ஒன்றுமில்லை. அதே போலவே விரும்பவும் அவன் ஒன்றுமில்லாதவனாக இருந்தான்.

உண்மையில் குருநாதரிடம் நான் மண்டியிட்டதன் ஒரே காரணம் அதுதான். தனது தொண்ணூறு கடவுள்களை அவர் எனக்கு அறிமுகப்படுத்தியபோது அதில் ஒன்றுகூட நான்கு கரங்களோ, கரத்துக்கொரு ஆயுதமோ கொண்டிருக்கவில்லை. உச்சந்தலையில் நதியைத் தேக்கி வைத்திருக்கவில்லை. சிலுவை சுமந்து சென்று அதிலேயே அறைபட்டுச் சாகவில்லை. அனுபவங்களைக் கடவுளாக்குவதன் மூலம் ஞானத்தின் வாயிலைத் திறப்பதை எளிதாக்க முடியும் என்று அவர் கருதினார்.

‘விமல், கடவுள் ஒரு சுமை. மதம் அதைக் காட்டிலும் பெரும் சுமை. வாழ்நாள் முழுதும் மூட்டை சுமந்து கூன் போட்டுவிடாதே’ என்று அவர் என்னிடம் சொன்னார். எனக்கு அது பிடித்தது. சரியாக இருப்பதுபோலப் பட்டது. உறவுகளை உதறியதைப் போலக் கடவுளையும் மதங்களையும் உதறுவது எனக்கு எளிதாக இருந்தது. ‘ஆனால் பெண்ணை நினைக்காதிருக்க முடியவில்லை குருஜி’ என்று சொன்னேன்.

‘ஏன் நினைக்காதிருக்க வேண்டும்? நான் உதறிய கடவுளைத்தான் நான் இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். நினைத்துக்கொண்டிருப்பதன் மூலம்தான் அவன் நெருங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள முடியும்’ என்று அவர் அப்போது சொன்னார்.

அதை நினைவுபடுத்தி, மஞ்சுவை நான் முத்தமிட்டது அதன் தொடர்ச்சிதான் என்று அவரிடம் கூறினேன்.

‘முத்தம் ஒரு தியானம் என்று நீ நினைத்தது வரை சரி. ஆனால் நினைத்த மாத்திரத்தில் தியானம் கைகூடாது. முயற்சி செய்துவிட்டுத் தோற்றுவிட்டதாகச் சொல்லிக்கொண்டு மீண்டும் அதையேதான் தேடிப் போவாய்’.

‘மீண்டும் மீண்டும் தியானம் நல்லதலல்வா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘தியானம் ஒரு கருவி. நீ கருவிக்குப் பொட்டு வைத்து ஆயுத பூஜை செய்பவனாகிவிட விரும்பினால் தொடரலாம். ஆனால் உன்னை என் பதினேழாம் நம்பர் மன்னிக்க மாட்டான்’ என்று அவரும் சிரித்துக்கொண்டேதான் பதில் சொன்னார்.

அன்று பிற்பகல் வரை நாங்கள் ஆசிரமத்துக்குத் திரும்பவேயில்லை. நடந்துகொண்டேதான் இருந்தோம். முந்தைய நாள் அளவுக்கு அன்று மழை இல்லை. சற்று வடியத் தொடங்கியிருந்தது போலப் பட்டது. ஆனாலும் தூறல் இருந்தது. திடீர் திடீரென்று சில நிமிடங்களுக்கு ஓங்கியடித்துவிட்டுப் போனது. நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்த கணம் முதல் எந்த மழைக்கும் நிற்காமல், எங்கும் ஒதுங்காமல் நடந்துகொண்டே இருந்தோம். போக்குவரத்தே இல்லாமல் போயிருந்த சாலையில் நடப்பது மிகவும் இதமாக இருந்தது. நாங்கள் போன இடமெல்லாம் மழை எங்கள் உடன் வந்தது. மூன்று மணிக்கு எனக்குப் பசித்தது. குருநாதரிடம் அதனைச் சொன்னேன். 'சரி வா சாப்பிடலாம்' என்று சொல்லிவிட்டு என்னை ஓர் உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்த சூழ்நிலையில் அந்த ஒரு உணவகம் மட்டும் திறந்திருந்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. குருஜி எனக்கு தோசையும் காப்பியும் வாங்கிக் கொடுத்தார். அவர் ஒரு கிச்சடி சாப்பிட்டார். பில்லுக்குப் பணம் கொடுக்க அவரிடம் காசில்லை. முதலாளியிடம் மறுநாள் கொடுத்தனுப்புவதாகச் சொல்லிவிட்டு வந்தார். பல்லாண்டுகளாக ஒரே இடத்தில் வசிப்பதில் இது ஒரு சௌகரியம். ஒரு சாதுவாக இருப்பது கூடுதல் சௌகரியம்.

மேலும் சிறிது நேரம் நடந்துவிட்டு மாலை நாங்கள் ஆசிரமத்தை நெருங்கியபோது குருஜி சொன்னார், ‘நடந்ததை மறந்துவிடு விமல். மற்றவர்களிடம் அதைப் பேசிக்கொண்டிருக்காதே. பெண்ணோ, காமமோ தவறென்று நான் சொல்லமாட்டேன். ஆனால் உன் தவத்தில் நீ அடையவேண்டியவை அதிகம். முதல் படிக்கட்டுப் பிச்சைக்காரனாக இருந்துவிட வேண்டாம் என்பதுதான் என் வேண்டுகோள்’ என்று சொன்னார்.

எவ்வளவு உயர்ந்த மனிதர் என்று நினைத்தேன். அவருக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன். ‘குருஜி, இனி நான் பெண்களை நினைக்கவே மாட்டேன், நெருங்கவே மாட்டேன் என்று பொய் வாக்கு அளிக்க நான் விரும்பவில்லை. ஆனால் எந்தப் பெண்ணும் என்னைச் சலனப்படுத்த அனுமதிக்க மாட்டேன்’ என்று சொன்னேன்.

‘அதுசரி. நாளை மஞ்சு மீண்டும் வந்தால் என்ன செய்வாய்?’

ஒரு கணம் யோசித்தேன். பிறகு சொன்னேன், ‘உச்சந்தலையில் முத்தமிட்டு ஆசிகூறி அனுப்பிவைப்பேன்’.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com