165. அடங்கல்

பாசத்தில் ரத்த சம்பந்தத்தின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். துக்கங்களின் மூலாதாரப் புள்ளியான அது பிறப்பின்போது பிறப்பது. 

மாமா குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தார். அந்த வயதில் யாராலும் அப்படி நிறுத்தாமல் அழுதுகொண்டே இருக்க முடியாது. குறைந்தபட்சம் தலை சுற்றி மயக்கம் வந்துவிடும். அதிகபட்சம் நெஞ்சு வலி வந்து உயிர் போய்விடும். மாமாவுக்கு இரண்டும் நேரவில்லை. ஒரு வாழ்நாள் முழுவதற்குமான கண்ணீரை மொத்தமாக அவர் சிந்திக்கொண்டிருந்தார். மயானத்துக்கு வந்திருந்த ஊர்க்காரர்கள் அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அமைதியாக நின்றார்கள். நான் வெட்டியானைப் பார்த்தேன். அவனது நிலைமைதான் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது. யார் கொள்ளி வைக்கப்போவது என்ற வினாவுக்கு அவனுக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. ஓரிரு முறை அவன் வினய்யைக் கேட்டுப் பார்த்தான். அவன் பதில் சொல்லாமல் திரும்பி முறைக்கவே, அமைதியாகிவிட்டான்.

நான் மாமாவின் அருகே சென்றேன்.

‘நேரமாகிறது. பாத்தியதை உங்களுடையது என்று அம்மாவே சொல்லிவிட்ட பின்பு நீங்கள் யோசிப்பது வீண்’ என்று சொன்னேன்.

‘அவ கெடக்கறா. அவளுக்கு என்ன தெரியும்? எனக்கு இப்போ விஜய் இங்கே வந்தாகணும்!’ என்று சந்நதம் வந்தவர்போலக் கத்தினார். இதற்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? மூன்று பேரும் அமைதியாக இருந்தோம்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. பாசத்தில் ரத்த சம்பந்தத்தின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். துக்கங்களின் மூலாதாரப் புள்ளியான அது பிறப்பின்போது பிறப்பது. பாலுக்கு முலை தேடும் கணத்தில் ஒரு பரிமாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. பிறகு பாற்கடலெனப் பொங்கி வழிந்துகொண்டே இருக்கும். மூச்சிருக்கும் வரை. முடிவு எட்டும் வரை. மூச்சுக் காற்றினைப் போலவே உடன் இருந்துவிட்டு, அது விட்டு விலகும்போது உடன் சென்றுவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். மாமா என் நம்பிக்கையை உதிர்த்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவரது துக்கத்தின் வீரியம் முற்று முழுதாக அவரது நெஞ்சத்திலேயே சுரந்த பாசத்தின் விளைவுதான். அதில் ரத்தக் கலப்பில்லை. பிறப்பின் தொடர்பில்லை. இந்தக் கணம்வரை அவர் அறியாத அப்பேருண்மைக்கு இனி ஒருபோதும் மதிப்பு இருக்கப்போவதில்லை.

அறிந்துகொண்ட நாங்கள் மட்டும் என்ன பெரிதாக மதிப்பளித்தோம்? ஒரு சொட்டுக் கண்ணீருக்கோ, ஒரு சுடுசொல்லுக்கோகூட வக்கற்ற ரகசியம். அந்தச் சுவடியை அண்ணா எதற்காக அத்தனை பத்திரமாகப் பாதுகாத்தான், ஏன் போகும்போது கொண்டு செல்லாமல் போனான் என்று தெரியவில்லை. இன்றுவரை வீட்டில் அது பத்திரமாக இருக்கிறது. அம்மாவே இறந்துவிட்ட பின்பு அதைப் பொருட்படுத்த இனி அங்கு யாரும் இருக்கப்போவதில்லை. ஒரு அதிசயம் நிகழ்ந்து அம்மாவோடு, அந்தச் சுவடியோடு, எங்கள் வீடு அப்படியே மண்ணுக்குள் இறங்கிப் புதைந்து காணாமல் போய்விட்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றியது. அவசியமே இல்லாமல் ஒரு குடும்பம் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டதன் மீதான வெறுப்பும் கோபமும் எனக்குள் சட்டென்று சிலிர்த்தெழுந்தது.

ஒருவேளை ஒவ்வொரு குடும்பமுமே இப்படித்தானா? தொடர்பு என எண்ணிக்கொள்ளும் எது ஒன்றும் தொடர்பல்ல என்று நினைத்தேன். எல்லாமே தனித்தனிக் கண்ணிகள். வந்தது முதல் விடைபெறல் வரை. வருவதற்கு ஏதோ ஒரு வழி. போவதற்கு ஒரே வழி. இடையில் வாழும் கணங்களின் வண்ணமெல்லாம் வெறும் மாயை. வண்ணமல்ல. கறுப்பு வெள்ளைகூட அல்ல. நிறமற்ற ஏதோ ஒன்று. உருவற்றது. குணமும் மணமுமற்றது. ஆனால் மாயை அழகானது. பிரம்மத்தை விடவும் பேரெழில் கொண்டது. எளிதில் பிடித்துப் போகிறது. விரும்பும் வரை சுகமளிப்பது. புரிந்துகொள்ள இயலாத பிரம்மத்தைக் காட்டிலும் புரியக்கூடிய மாயையை நான் மிகவும் விரும்பினேன். குளிரக் குளிர ஒரு போர்வைக்குள் சுருண்டுகொண்டு மெல்லிய கதகதப்புக்குள் கரைத்துக்கொள்கிற பரவசம் பிரம்மத்தில் கிட்டுமா தெரியவில்லை.

வினோத்திடம் இதனைச் சொன்னபோது, ‘ஒரு முறை ருத்ர பிரயாகையில் பனிக்கட்டிகள் நீரோடு சேர்ந்து உருண்டு போய்க்கொண்டிருந்தன. கால் விரல் தரையில் பட முடியாத அளவுக்குக் குளிர் கொட்டிக்கொண்டிருந்தது. சூடான ஒரு தேநீரும் சுகமான ஒரு கம்பளியும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் நினைத்தது. அப்போது ஒரு வயதான துறவி தான் கட்டியிருந்த இடுப்பு வேட்டியை அவிழ்த்து வைத்துவிட்டு, வெறும் கோவணத்துடன் நதியில் இறங்கினார். மூன்று முறை முக்குப் போட்டுவிட்டு, ஓடும் நதிக்கு நடுவே இருந்த ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். அவர் முடித்துவிட்டுக் கரையேறியபோது, நதியின் குளிர்ச்சியைப் பற்றிக் கேட்டேன். குளிர் என்பது நீரில் இறங்குவதற்கு முந்தைய உணர்வு என்று சொன்னார்’.

நான் மாமாவிடம் திரும்பிச் சொன்னேன், ‘கேட்டீர்களா? உங்களுக்கான பிரம்மம் கால்மாட்டில் தலை வைத்துப் படுத்திருக்கிறது. அதை நீங்கள் மாயையாக உணர்கிறீர்கள். நெருப்பின் பனிக் குளிர்ச்சியை உங்கள் அக்காவுக்கு நீங்கள் வழங்குவதே சரி’.

அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. ‘அது நியாயமில்லேடா விமல். இன்னும் கொஞ்சம் காத்திருப்போமே? அவன் வந்துட்டான்னா?’ என்று மீண்டும் சொன்னார்.

‘மாமா, அவன் வரப்போவதில்லை. தயவுசெய்து அம்மாவின் இறுதி ஆசையை நீங்கள் நிறைவேற்றுங்கள்’ என்று வினோத் மீண்டும் சொன்னான்.

‘வருவான்னு நீதானேடா சொன்னே? வினய்யும் ஆமான்னு சொன்னானே’.

இப்போது வினய், மாமா அருகே வந்தான். ‘அவன் வந்தாலும் எங்களோட நிக்கட்டும். நீங்க வைங்கோ’ என்று சொன்னான்.

‘இதுக்காகத்தானேடா இத்தன வருஷம் கழிச்சி நீங்க வந்திருக்கேள்? எனக்கு எப்படி மனசு வரும்?’

‘மாமா நாங்கள் இதற்காக வரவில்லை’ என்று நான் சொன்னேன்.

‘அப்பறம்? வேற எதுக்காக?’

‘இது எங்கள் துறவு முழுமையுறும் தருணம். வாழ்நாளெல்லாம் அறுத்தெறிந்த நூற்கண்டின் கடைசிச் சிக்கு இது. இதன்பின் ஒன்றுமில்லை’.

‘எழவு அறுத்துட்டுப் போயேன்? வேணான்னா சொல்றேன்?’ அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினார்.

‘கத்தி உங்களிடம் இருக்கிறது மாமா!’ என்று வினோத் சொன்னான்.

இதுவும் அவருக்குப் புரியவில்லை. நான் வினய்யைத் தனியே அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசினேன். அதிக நேரம் அம்மாவை இப்படிச் சிதையின் மீது வைத்திருக்க இயலாது. வெட்டியான் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டான். உடன் வந்தவர்கள் வீடு திரும்ப விரும்புவார்கள். தவிரவும், இந்த இடத்தில் ஒரு நாடக அரங்கேற்றத்துக்கான அவசியமும் இல்லை. இது நமக்கு ஒரு கடன். செய்து முடித்துவிட்டால் பிறகு அவரவர் பாதை, அவரவர் வழி.

‘மாமா?’ என்றான் வினய்.

‘அவர் தம் நினைவுகளைச் சுமந்துகொண்டு இன்னும் சிறிது காலம் அலைந்து திரிவார். அவர் ஒரு உயிருள்ள சித்ரா. பிறகு அவரும் அடங்கிப் போவார். அவ்வளவுதான்’.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, கங்காதரன் வேகவேகமாக அங்கே வந்துகொண்டிருந்தான். வினய்தான் முதலில் அவனைப் பார்த்தான். ‘ஒரு நிமிடம் இரு’ என்று சொல்லிவிட்டு அவன் எதிரே சென்று, ‘என்ன?’ என்று கேட்டான்.

‘இப்பத்தான் சேதி தெரிஞ்சிது. இன்னும் எரிச்சிடலியே?’

‘இல்லை’.

பரிதவிப்புடன் அவன் சிதைக்கு அருகே வந்து சில கணங்கள் அமைதியாக நின்றான். பிரார்த்தனை செய்வதுபோலக் கண்ணை மூடி இருந்துவிட்டு மீண்டும் வினய்யிடம் திரும்பி வந்து, ‘விஜய் இன்னும் வரலியா?’ என்று கேட்டான்.

‘எதற்கு? கொல்லவா? போய்ச் சொல் உன் சாமியிடம். இரண்டாவது பலி அவராக இல்லாதிருக்க அவரைப் பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்’.

கங்காதரன் மிரண்டு போனான். ‘டேய் என்ன நீ என்னென்னமோ சொல்லுற? எனக்கொண்ணும் தெரியாது அதெல்லாம்’.

அரைக் கணம்கூட இருக்காது. வினய் அவனை அப்படியே ஒரு சைக்கிள் டயரைப் போலத் தூக்கி வளைத்தான். பலம் கொண்ட மட்டும் விசிறி எறிந்தான். அலறிக்கொண்டு போய் கங்காதரன் விழுந்தபோது, அவன் இடுப்பில் இருந்து ஒரு சிறு கத்தி வெளியே வந்து விழுந்தது. பார்த்துக்கொண்டிருந்த கேசவன் மாமாவுக்கு அந்த விநாடி துக்கம் மறந்து போய்விட்டது. ஐயோ என்று பதறி இரண்டடி பின்னால் போனார். வினய் ஆவேசம் அடங்காதவனாக கங்காதரனை நோக்கி நடந்தான்.

‘வேணாம். என்னை ஒண்ணும் பண்ணிடாத. நான் வந்தது தப்பு. நான் போயிடுறேன்’ என்று அவன் பயந்து பின்வாங்கினான்.

வினய் அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான். ‘சொல்லு. யாரக் கொல்ல வந்தே?’

தப்பிக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. இங்குமங்கும் பார்த்தான். வேறு வழியில்லை என்று தோன்றியிருக்க வேண்டும். தன் பதற்றத்தை விழுங்கி வினய்க்கு மட்டும் கேட்கும்படியான கீழ்க்குரலில் ஏதோ சொன்னான்.

அதன்பின் வினய் அவனை எச்சரித்து விடுவித்தான். கங்காதரன் திரும்பிப் பாராமல் ஓடிப் போனான்.

இது மொத்தமே இரண்டு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது. மாமாவும் அவரோடு வந்திருந்த நண்பர்களும் வினோத்தும் நானும் வெட்டியானும், பேச்சற்றுப்போய் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். தனது மிச்சமென வினய் சேகரித்து வைத்திருந்தவற்றையும் அந்த ஆக்ரோஷத்தில் கொட்டிக் கரைத்துவிட்டான் என்று எனக்குத் தோன்றியது. ஒருவிதத்தில் அது சந்தோஷமாகவும் இருந்தது.

நான் எதிர்பார்த்தது போலவே வினய் எங்களிடம் திரும்பி வந்தபோது மிகுந்த சாந்தமுடன் காணப்பட்டான். அவன் முகத்தில் அபூர்வமானதொரு புன்னகை பிறந்திருந்தது. சிதைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த தணல் சட்டியைக் கையில் ஏந்தி எடுத்துவந்து மாமாவிடம் கொடுத்தான். இம்முறை மாமா மறுப்பேதும் சொல்லவில்லை. அவர் முகத்தில் அச்சம் குடிகொண்டிருந்தது.

‘போய் வைங்கோ. நீங்கதான் செய்யணும். இதான் விதி’ என்று சொன்னான். நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்போது வெட்டியான் பந்தத்தைப் பரபரவெனத் தயார் செய்தான். மாமா நடுங்கும் கால்களை உறுதியாக நிலத்தில் பதிக்க முடியாமல் தடுமாறி மெல்ல அம்மாவின் சிதை நோக்கி இரண்டடி வைத்தார்.

சட்டென்று மேலே பிரகாசித்துக்கொண்டிருந்த சூரியனை மறைத்து ஒரு பெரும் கருமேகக் கூட்டம் மெல்லக் கடந்து நகர ஆரம்பித்தது. சூழல் இருண்டுபோனது. மயானத்தின் மரக்கிளைகள் அசைவதை நிறுத்தின. எங்கோ கரைந்துகொண்டிருந்த காகம் ஒன்று கிளைவிட்டு எழுந்து பறந்து போனதைப் பார்த்தேன். மாமா அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு முன்பே அவர் கையில் இருந்த தணல் நிறைந்த மண் கலயம் கீழே விழுந்தது. அத்தனை பேரும் திடுக்கிட்டு அதைப் பார்த்த கணத்தில், ஒளியைப் போலொரு நீண்ட ஈர்க்குச்சி சரேலென எங்கிருந்தோ பாய்ந்துவந்து சிதையைத் தொட்டு, அதன் மீது விழுந்தது. யாரும் நெருங்கும் முன் சிதை தானே பற்றிக்கொண்டு எரியத் தொடங்கியது.

மாமா திகைத்துப் போனார். ‘நாராயணா! நாராயணா!’ என்று சிரத்துக்கு மேல் கரம் குவித்துக் கதறத் தொடங்கினார். என்ன நிகழ்ந்தது என்று யாருக்கும் விளங்கவில்லை. வினோத் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தான். என்னால் அந்த நேரத்தில் யோசிக்க முடியவில்லை. சரியாகச் சொல்வதென்றால், என் சொற்கள் என்னைக் கைவிட்டன. சொற்களற்ற மொழியில் கடவுள்களிடம் பேசும் திறன் பெற்றவரான என் குருநாதர் என்னைக் கைவிட்டார். என் அனைத்து அறிவுச் சேகரங்களும் என்னை விட்டு விலகி உதிர்ந்துவிட்டதைக் கண்டேன். என்னையறியாமல் கண்ணீர் சுரந்தது. வாழ்விலே முதல் முறை. நல்லது. இது இன்று நிகழ்ந்தாக வேண்டும் போலிருக்கிறது.

‘போகலாம்’ என்று வினய் சொன்னான்.

‘என்னடா நடந்தது இப்போ?’ என்று மாமா அவனிடம் கேட்டார். அவன் அவருக்கு பதில் சொல்லவில்லை. ‘போகலாம்’ என்று மீண்டும் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான். வினோத் ஓடிச்சென்று அவனைப் பிடித்து நிறுத்தி, ‘சொல். என்ன நடந்தது?’

‘அது அவன்தான். தன்னைத் தணலாக்கி அவளை எரித்துத் தான் இறந்துபோனான்’ என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com