143. செம்பவழக் கல்

ஐம்பது வயதில் ஒரு மனிதன் தனது சிறு வயதுப் பாலியல் கிளர்ச்சிகளை நினைவுகூர்ந்து சொல்ல நேர்வது அரிது. அதுவும் ஒரு பெண்ணிடம்.

உச்சிப் பொழுது நெருங்கிக்கொண்டிருந்தது. மணல் சுட்டது. ஆனாலும் கடல் காற்றின் ஓதம் சவுக்கு மரங்களின் வழியே பெருகி ஒழுகிக்கொண்டிருந்தது. வினய்க்கு அந்த அனுபவம் மிகவும் விநோதமாகப் பட்டது. பிடித்திருந்தது. சித்ரா இன்னமும் திருவிடந்தையில் ஒரு பேயாக உலவிக்கொண்டிருப்பாள் என்று அவன் எண்ணியிருக்கவில்லை. அவளை உணர்ந்த கணத்தில் இருந்து அவன் கிருஷ்ணனை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தான். அவளிடம் என்னென்னவோ பேச வேண்டும் போலத் தோன்றியது. அவள் ஒரு பெண்ணாகவே இருந்திருந்தால் இவ்வளவு பேசத் தோன்றுமா என்றும் சந்தேகம் இருந்தது. ஐம்பது வயதில் ஒரு மனிதன் தனது சிறு வயதுப் பாலியல் கிளர்ச்சிகளை நினைவுகூர்ந்து சொல்ல நேர்வது அரிது. அதுவும் ஒரு பெண்ணிடம். இன்றைக்கெல்லாம் சித்ரா உயிருடன் இருந்திருந்தால் அவளுக்கு நாற்பத்து ஆறு வயதாகியிருக்குமா? அவளிடமே கேட்டான். அவள் ஆமாம் என்று சொன்னாள்.

‘ஒருநாள். அன்று உனக்குப் பிறந்த தினம். அன்றைக்குக் காலையே கேசவன் மாமா இந்தத் தகவலை வீட்டில் சொன்னார். கோயிலில் சொஜ்ஜி தளிகை விடச் சொல்லி உன் அப்பா பணம் கட்டியிருந்தார்’.

‘ஓ!’

‘எட்டு மணிக்கு நீ கோயிலுக்கு வருவாய் என்றும் மாமா சொன்னார். அன்றைக்கு நான் ஏழரைக்கே குளித்துவிட்டுக் கோயிலுக்கு ஓடி உனக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்’.

அவள் சிரித்தாள்.

‘நீ வந்தாய். உன் அம்மா, அப்பாவுக்கு நடுவே நடந்து வந்தாய். அன்றைக்கு நீ கருநீல நிறத்தில் தாவணியும் வெளிர் நீலத்தில் பூப்போட்ட பாவாடையும் அணிந்திருந்தாய். அந்த வெளிர் நீலத்திலேயே ரவிக்கையும் அணிந்திருந்தாய். அந்நாள்களில் தாவணி நிறத்திலேயேதான் பெண்கள் ரவிக்கை அணிவார்கள். நீ ஒரு மாறுதலாகப் பாவாடையின் நிறத்தில் ரவிக்கையைத் தேர்ந்தெடுத்திருந்தாய். எனக்கு அது பிடித்திருந்தது’.

அவள் வாய்விட்டுச் சிரித்தாள். ‘தைக்கக் கொடுத்த ரவிக்கை கைக்கு வராததால் கிடைத்ததை அணிந்து வந்தேன்’.

‘நீ சன்னிதியில் நின்றிருந்தபோது நான் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். யாராவது பார்த்தால் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டால் போதும் என்ற முடிவுடன் எதற்கும் தயாராகப் பெருமாளை நோக்கிக் கை கூப்பிக்கொண்டிருந்தேன்’.

‘அப்படியா?’

‘ஆனால் பட்டாச்சாரியார் என்னை கவனித்துவிட்டார். எனது திருட்டுத்தனம் அவருக்குப் புரிந்துவிட்டது’.

‘என்ன சொன்னார்?’

‘நீ என்னைக் கடந்து திரும்பிப் போகும்போது, உன் தலையில் இருந்த ஒரு பூவை நான் எடுத்துக்கொண்டேன். அதையும் அவர் பார்த்தார்’.

‘ஐயோடா! நான் அதைக் கவனிக்கவேயில்லை’.

‘அன்றைக்கு நீ மருதாணி இட்டிருந்தாய். அது இடக்கரத்தில் சரியாகப் பற்றவில்லை. நான் அதைக் கவனித்தேன்’.

அவள் புன்னகை செய்தாள். ‘பட்டர் பிறகு என்ன சொன்னார் என்று கேட்டேனே?*

இப்போது வினய் புன்னகை செய்தான். ‘வேறென்ன சொல்வார்? உன் அப்பா கஷ்டப்பட்டு உங்களையெல்லாம் படிக்க வைக்கிறார். உன் அம்மா உன்னை மிகவும் நம்பியிருக்கிறாள். இந்த வயதில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது...’

‘நீ என்ன சொன்னாய் பதிலுக்கு?’

‘நான் சொல்ல என்ன இருக்கிறது? ஆனால் அன்று நீ அணிந்திருந்த கருநீலத் தாவணியை உருவி திரைச் சீலையாகத் தொங்கவிட்டு, தாயார் சன்னிதிக்குள் உன்னை அழைத்துச் சென்று என் மானசீகத்தில் நூறு முறை புணர்ந்தேன்’.

சித்ரா திகைத்துவிட்டாள். சிறிது நேரம் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு புறம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘கோபித்துக்கொண்டு விட்டாயா?’

‘இல்லை என்று எப்படிச் சொல்வேன்? உனக்கு வேறு இடமா கிடைக்கவில்லை?’

இப்போது வினய் குபீரென்று சிரித்துவிட்டான்.

‘சிரிக்காதே. எனக்குக் கோபம் அதிகரிக்கிறது’.

‘சரி சிரிக்கவில்லை. உண்மையைச் சொல்கிறேன். உன்னைத் தொட வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு கருவறையையே நான் மனத்துக்குகந்த இடமாகக் கருதிக்கொள்வேன். காமத்தின் தெய்வீகத்தை வேறெங்கும் நான் விரித்து நுகர்ந்ததில்லை’.

‘எல்லாம் நினைவில்!’

‘ஆம். எல்லாம் நினைவில். அதனால்தான், நிஜத்தில் மூடிய வெறும் அறைகளுக்குள் நான் புணர்ந்த பெண்கள் யாரும் என்னை தேவியின் பாதங்களுக்கு இட்டுச் செல்லவில்லை’.

‘நீ பேசுவதெல்லாம் எனக்கு பயங்கரமாக இருக்கிறது. ஆனால் பிடித்திருக்கிறது. என்னை ஒருவன் இவ்வளவு விரும்பியிருக்கிறான் என்றே எனக்கு இப்போதுதான் தெரிகிறது’.

‘இன்னொன்று சொன்னால் பயந்துவிடுவாய். உன்னை நான் மட்டுமல்ல. விமலும் விரும்பியிருக்கிறான்’.

‘அப்படியா?’

‘காலம் தோறும் எங்கள் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவராலும் நீ விரும்பப்பட்டிருக்கிறாய். மனத்துக்குள் புணரப்பட்டிருக்கிறாய்’.

‘ஆனால் உன் அண்ணா அப்படி இல்லை என்று நினைக்கிறேன்’.

‘தெரியவில்லை. அவன் அதைக் குறித்துச் சொன்னதில்லை. ஒருவேளை அவனும் உன்னை நினைத்திருப்பான் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், அந்நாளில் நீ ஒருத்திதான் இந்த ஊரின் ஒரே அழகி’.

‘நன்றி’ என்று சொல்லிவிட்டு அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘ஆனால் நீ உன் இலக்கில் தோற்றுவிட்டதாகச் சொன்னது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்று சொன்னாள்.

‘ஆம் சித்ரா. நான் தோற்றுத்தான் போனேன்’.

‘சரி. தெளிவாகச் சொல். நீ எதை எதிர்பார்த்தாய்?’

‘இப்போது எதற்கு அது? தோல்வியின் பூரணத்தை தரிசித்துவிட்டேன். அது பற்றிய வருத்தங்களும் விலகிவிட்டன. இப்போது நான் கவலைகள் அற்றவன். துக்கம் அற்றவன். சொல்லப் போனால் இப்போதுதான் நான் முழுத் துறவி. பார். ஒரு பெண்ணிடம் பேசக்கூடிய பேச்சா நான் பேசுகிறேன்? என் மனத்தின் மலத்தை இரு கரங்களாலும் அள்ளி உன் முன்னால் பரப்பி வைக்கின்றேன். இதன் துர்நாற்றத்தை எத்தனை எளிதாக என்னால் கடக்க முடிகிறது! எனக்கு இது போதும்’.

அவள் புன்னகை செய்தாள். ‘இது போதும் என்றால் உனக்கு எதற்கு கிருஷ்ணன்? அவனைக் குறித்து ஏன் தவம் இருக்கப் பார்த்தாய்?’

‘நியாயமான கேள்வி. துறவியானாலும் நான் மனிதன். துறவிகளுக்கும் நப்பாசை உண்டு’.

‘அப்படியா?’

‘ஆம். என் தம்பி ஒரு வார்த்தை சொன்னான். கிருஷ்ண ஜபம் நான் அடைய நினைத்ததை இழுத்துவந்து சேர்க்கும் என்றான்’.

‘சரிதான். அப்படியானால் உன் கிருஷ்ணன்தான் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறான் போலிருக்கிறது!’

‘ஒரு நிமிடம். அவன் என் கிருஷ்ணன் இல்லை. என் தம்பியின் கிருஷ்ணன். நான் நேற்றுவரை கிருஷ்ணனை நினைத்ததுகூட இல்லை’.

‘திடீரென்று ஒருநாள் கூப்பிட்டால் அவன் வந்துவிடுவானாமா?’

‘அப்படித்தான் அவன் சொன்னான்’.

‘இவ்வளவு அப்பாவியா நீ?’

‘அவ்வளவு முட்டாளாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஒரு லட்ச நாமஜபம் என்பது ஒரு பெரிய விஷயமல்ல. சும்மா கிடப்பதை முயற்சி செய்யலாமே என்று நினைத்தேன்’.

‘முடித்தாயா?’

‘இல்லை. அதற்குள் நீ வந்து எழுப்பிவிட்டாய்’.

‘மன்னித்துக்கொள்’.

‘பரவாயில்லை’.

அவள் வினய்யை வெகுநேரம் வெறுமனே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, ‘உனக்கு நான் ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன்’ என்று சொன்னாள்.

‘வேண்டாம் சித்ரா. ஆவிகளிடம் நான் உதவி கோரி வெகுகாலம் ஆகிறது. இப்போது எனக்கு அதில் விருப்பம் இல்லை’.

‘உன் இலக்கு என்னவென்று கேட்டேன். நீ அதை இன்னும் சொல்லவில்லை. ஒருவேளை நீ அதை அடைய நான் உதவ முடியும்!’

‘நீயா!’ அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘ஒரு பேயால் முடியாது என்று சொல்லிவிடாதே. என்னிடம் இருபத்தைந்து வருடத் தவப்பலன் இருக்கிறது. அதை நான் பயன்படுத்துவேன்’.

‘உன் நோக்கத்துக்காக நீ சேர்த்து வைத்திருப்பது!’

‘ஆம். அதைத்தான் உனக்குத் தருகிறேன் என்கிறேன்’.

வினய்யால் அதை நம்ப முடியவில்லை. இவள் என்ன சொல்கிறாள்! எனக்கு எதற்கு இவள் உதவ வேண்டும்! அதனால் இவளுக்கு என்ன லாபம் இருந்துவிட முடியும்!

‘அது பிறகு. நீ வெளிப்படையாக என்னிடம் பேசியது எனக்குப் பிடித்தது. பதிலுக்கு உனக்கு உதவி செய்யலாம் என்று தோன்றுகிறது. விருப்பமிருந்தால் சொல்’.

வினய் வியப்புத் தீராமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, ‘சரி சொல்கிறேன். எனக்குக் காமரூபிணியின் தரிசனம் வேண்டும். ஒன்று அவளது அனுக்கிரகத்தால் நான் உலகாள வேண்டும். அல்லது அவளுக்குள் ஒடுங்கி இல்லாது போய்விட வேண்டும்’.

‘இவ்வளவுதானா?’

‘இவ்வளவுதான்’.

‘இது என்னால் முடியும் என்று தோன்றுகிறது’.

அவனால் நம்ப முடியவில்லை. சிரித்தான்.

‘சிரிக்காதே. நான் பொய் சொல்லமாட்டேன்’.

‘ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் எத்தனையோ பேர் கொடுந்தவம் புரிந்து முயற்சி செய்து தோற்ற இடம் அது’.

‘தெரியும். நான் வென்ற இடமும் அதுதான்’.

அவன் அதிர்ந்தான். ‘என்ன சொல்கிறாய்?’

‘யுக யுகமாக மாதமொரு முறை பெருக்கெடுக்கும் தேவியின் உதிரத்தின் ஒரு சொட்டை என் உச்சந்தலையில் ஏந்தியிருக்கிறேன். இன்னமும் யமலோகம் போகாமல் இங்கிருந்து தவம் புரியும் வலிமையை அதுவே எனக்களித்தது. உலராமல், வழியாமல், உருண்டு விழுந்துவிடாமல் ஒரு செம்பவழக் கல்லாக என் சிரசில் நான் ஏந்திக் காத்துவரும் அதை உன் சிரத்துக்கு என்னால் மாற்ற முடியும்’.

அவன் நடுங்கியபடி எழுந்து நின்று கரம் குவித்தான். ‘தேவீ!’ என்று தன்னை மறந்து குரல் கொடுத்தான்.

‘நான் தேவியல்ல. வெறும் ஆவி. ஆனால் நீயறிந்த ஆவிகளுள் நான் ஒருத்தியல்ல. நான் வேறு. என் தவத்தின் உக்கிரமும் அதில் நான் அடைந்த வெற்றியும் உனக்குப் புரியாது’.

வினய் சட்டென்று நெடுஞ்சாண் கிடையாக அவள் முன்னால் விழுந்து சேவித்தான். நெடுநேரம் அவன் எழுந்திருக்கவேயில்லை. மண்ணில் முகம் புதைத்துக் குமுறிக் குமுறி அழுதான். ‘என்னை மன்னித்துவிடு, என்னை மன்னித்துவிடு’ என்று திரும்பத் திரும்பச் சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com