144. ரிஷி

யோனியில் குறியை வைத்துச் சொருகச் சம்மதிப்பது என்பது ஒரு பெண் தனது புருஷனுக்கு அளிக்கும் கௌரவம். அதற்குமுன் உதட்டோடு உதடு சேர்க்க அனுமதிப்பது அவன் மீது அவள் கொள்ளும் நம்பிக்கைக்கு அச்சாரம்.

‘உனக்குப் பசிக்கிறதா?’ என்று சித்ரா கேட்டாள். இல்லை என்று வினய் சொன்னான். ‘காலை நீலாங்கரை வைத்தியர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே நான்கு இட்லி சாப்பிட்டேன். பொதுவாக நான் காலை வேளைகளில் எதுவும் உண்பதில்லை. இன்று சாப்பிடும்படியாகிவிட்டது. இதோடு நாளை மதியம் உண்டால் எனக்குப் போதும்’ என்று சொன்னான்.

‘சரி, இரண்டு நிமிடம் இங்கேயே இரு. வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு சித்ரா எழுந்து போனாள். அவள் அருகே இருக்கும்வரை எங்குமே போகத் தோன்றாது என்றுதான் வினய்க்குத் தோன்றியது. தனக்கு ஏன் அவளோடு பேசப் பிடிக்கிறது, எதனால் எல்லாவற்றையும் அவள்முன் இறக்கி வைக்கிறோம் என்று திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்தான். ஒரு பாவ மன்னிப்புக் கோருவதில் உள்ள சொகுசு அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. தொப்பை சுமப்பவனுக்கு அந்தச் சுமை பழகி ஆண்டுக்கணக்கில் வலி மரத்துப் போய் நடந்துகொண்டிருப்பான். என்றாவது ஞானம் வந்து உடல் இளைக்கும்போது இத்தனைக் காலம் இப்படியா அவதிப்பட்டுக்கொண்டிருந்தோம் என்று தோன்றும். சிறு வயதில் வினய் சற்று குண்டாகவே இருப்பான். இரண்டு ஆள் உணவு உட்கொள்வான். உணவைத் தாண்டி நொறுக்குத் தீனிகளில் அவனுக்கு அதிக விருப்பம் இருந்தது. எதைப் பார்த்தாலும் எடுத்து உண்டுவிடுவான். எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவும். அவன் வீட்டை விடுத்துச் சென்றபோது அவனுக்குப் பத்தொன்பது வயது. அப்போது அவன் எழுபத்து ஆறு கிலோ எடை இருந்தான். மெல்லிய தொப்பையும் இருந்தது. ஆனால் வாழ்க்கை புரட்டிப் போட்டு அடித்துப் பசியில் மெலியத் தொடங்கியபின்பு, ஒரு கட்டத்தில் பசி பழகிய பின்பு வயிறு லேசாக இருப்பதன் அருமை அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. அதன்பின் பசியை வெல்லும் முயற்சியில் அவன் ஈடுபடத் தொடங்கினான். தினமும் காலை எழுந்ததும் இருபது கருவேப்பிலை இலைகளை மென்று தின்னுவான். ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பான். அதுதான் காலை உணவு. மதியம் சரியாக ஒரு பிடி சோறும், ஒரு பச்சைத் தக்காளிப் பழமும் சாப்பிடுவான். சில நாள் சொரிமுத்து அவனுக்கு ஒரு வெள்ளரிக்காய் வரவழைத்துக் கொடுப்பான். அதையும் சேர்த்து உண்பான். இரவு ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு சாத்துக்குடிப் பழம். இவ்வளவுதான் அவனது உணவாக இருந்தது. மூன்றாண்டுக் காலம் இப்படியே சாப்பிட்டு வந்ததில் அவன் தலை குனிந்து பார்த்தால் அவனது ஆண்குறி முழுதாகத் தெரியும்படி ஆனது. அதன்பின் சொரிமுத்து அவனுக்குச் சில ஆசனங்கள் சொல்லிக்கொடுத்தான். சில சுவாசப் பயிற்சிகளையும் கற்பித்தான். காற்றை உணவாக உட்கொண்டு பசியை நகர்த்தி வைக்க வினய் பழகத் தொடங்கினான்.எப்போது உணவு ஒரு பொருட்டே இல்லை என்று தெரிந்ததோ, அன்று அவன் கவலையற்றுப் போனான். சாதகங்களில் தீவிரமாக இருந்த நாள்களில் முப்பது முப்பத்தைந்து தினங்கள் வரைகூட அவன் ஒரு பருக்கை சோறும் உண்ணாதிருந்திருக்கிறான். வெறும் நீர் அருந்தி, வெறும் காற்றை உட்கொண்டு நாள்களைக் கடத்தியிருக்கிறான். உணவு நுழையாத உடலுக்குள் நோய்களும் நுழையாது என்று சொரிமுத்து எப்போதும் சொல்வான். ஒரு தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் என்று எதனாலும் பாதிக்கப்படாமல் எத்தனையோ வருடங்கள் அவன் உற்சாகமாக அலைந்து திரிந்திருக்கிறான்.

அதைத்தான் அவனுக்கு அப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றியது. தோல்வியின் ருசி முதல் முதலில் தட்டுப்பட்டபோது புத்தி உடனே உணவில்தான் சென்று ஒளிந்துகொள்ளச் சொன்னது. பகாசுரப் பசி எடுக்கத் தொடங்கியதும் அப்போதுதான். அந்தக் காலக்கட்டங்களில் அவன் நிறைய உண்டான். கிடைத்ததையெல்லாம் உண்டான். ஆடு, கோழி, காட்டுப்பன்றி, எருமை என்று அகப்பட்டதையெல்லாம் அடித்துக் கொன்று தோலைக் கிழித்துப் போட்டுவிட்டுப் பச்சையாகவே உண்பான். தோல்வியைத் தீனியில் புதைப்பதைக் காட்டிலும் போதையில் புதைப்பது சௌகரியமானது என்று விந்திய மலைச் சாரல்களில் அவன் திரிந்துகொண்டிருந்த காலத்தில் எவனோ ஒரு போதையடிமை சொல்லிக் கொடுத்துவிட்டு ஒரு பிடி கஞ்சாவையும் கொடுத்துச் சென்றான். அதன்பின் கஞ்சா இல்லாமல் தவமில்லை என்றானது. பசியைத் தவத்தில் வெல்ல நினைத்து, போதையில் தவத்தைத் தொலைத்துத் தூங்கிப் போனான்.

நினைத்துப் பார்த்தபோது வினய்க்கு சிரிப்பு வந்தது. திரும்பவும் அதுதான் தோன்றியது. சொரிமுத்துவை விட்டுப் போயிருக்க வேண்டாம்.

இரண்டு நிமிடங்களில் வருவதாகச் சொல்லிவிட்டுப் போன சித்ரா, ஒரே நிமிடத்தில் திரும்பி வந்து சேர்ந்தாள். எதிரே உட்கார்ந்து புன்னகை செய்தாள்.

‘எங்கே போனாய்?’

‘ஒன்றுமில்லை. யாரோ இந்தப் பக்கம் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை திசை மாற்றி அனுப்பிவிட்டு வந்தேன்’.

‘ஏன்?’

‘உனக்கு இடைஞ்சலாக இருக்குமே என்றுதான்’.

‘நன்றி. நான் உன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் பெண்ணே. ஆனால் நீ என்னைத்தான் திரும்பத் திரும்பப் பேச வைத்துக்கொண்டிருக்கிறாய்!’ என்று வினய் சொன்னான்.

‘என்னைப் பற்றி என்ன சொல்ல? உன்னைப் போலவே நானும் வாழ்வில் தோற்றவள். ஆனால் ஆவியாக அலையும் இக்காலத்தில் நான் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’.

அவனுக்கு அதுதான் பெரும் வியப்பாக இருந்தது. இறந்தபின் எமலோகம் போகக் கிளம்பும் எந்த ஆவியும் அவனறிந்து பாதி வழியில் திரும்பி வந்ததில்லை. அல்லது போகாதிருந்ததில்லை. ஆவிகளின் நோக்கம் வாழ்வில் அடையாது விட்ட ஏதேனுமொன்றை எண்ணி மறுகி அதற்காக அலைவதாக இருக்கக்கூடும். ஆனால் எந்த ஆவியும் அதற்காகத் தவமிருந்து வரம் பெற முயற்சி செய்வதில்லை. வாழும்போது செய்யாத எந்தத் தவமும் மரணத்தின்பின் சாத்தியமானதும் அல்ல.

‘யார் சொன்னது உனக்கு? எந்த நிலையிலும் தவம் சாத்தியம். உனக்கொன்று தெரியுமா? உயிருடன் இருந்த காலத்தில் எனக்குப் பெரிய பக்தி கிடையாது. நான் ஒரு சராசரிப் பெண். இறந்த பின்பே நான் ரிஷி ஆனேன்’.

‘ரிஷியா!’ என்றான் வினய்.

‘ஆம். சந்தேகப்படாதே. நான் ஒரு ரிஷி. என் தவத்தின் அருமை எனக்குத் தேடித்தந்த அந்தஸ்து அது’.

‘நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான ஆவிகளுடன் பழகியவன் நான். எது ஒன்றும் இப்படி ஒன்றைச் சொன்னதில்லை’.

‘ஏன் என்றால் யாருக்கும் என்னை நிகர்த்த லட்சியம் இருந்திருக்காது’.

‘லட்சியமா?’

‘ஆம். அதுதான். என் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று உனக்குத் தெரியுமா?’

‘நீ தற்கொலை செய்துகொண்டதாக விமல் சொன்னான்’.

‘ஆம். நான் சற்றும் எதிர்பாராத துரோகத்தை உன் தம்பி எனக்குச் செய்தான். இத்தனைக்கும் நான் அவனைக் காதலித்திருக்கவில்லை. அவனை எண்ணி நாள்களைக் கழித்திருக்கவில்லை. அவனைத் தவிர இன்னொருவனை மணப்பதில்லை என்று சபதம் செய்திருக்கவில்லை. முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்துதான் எங்கள் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள்’.

‘'கேள்விப்பட்டேன்’.

‘நிச்சயம் ஆனதில் இருந்து அவன் என்னிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டான். நாங்கள் பலமுறை ஒன்றாக வெளியே சுற்றியிருக்கிறோம்’.

‘இதையும் விமல் எனக்குச் சொன்னான். அந்நாளில் இதெல்லாம் நம்ப முடியாத அதிசயமாக இருந்திருக்கும் அல்லவா?’

‘ஆனால் நான் அவனை நம்பினேன். உங்கள் வீட்டில் நீங்கள் மூன்று பேர் ஓடிப் போய் சன்னியாசி ஆனீர்கள். அவன் தனி ஒருவனாக இருந்து உன் அப்பா அம்மாவின் சிறு இச்சைகளைத் தீர்த்துக்கொண்டிருந்தான். அவன் படித்தான். அவன் உத்தியோகம் செய்தான். அவன் சம்பாதித்தான். அவன் ஒரு நல்ல சராசரியாகத் தன்னைத் திறமையாக வெளிக்காட்டிக்கொண்டான்’.

‘ஆம். அதுவும் தெரியும்’.

‘அவன் உன் பெற்றோருக்கு அளித்த அதே நம்பிக்கையை எனக்கும் அளித்தான்’ என்று அவள் சொன்னபோது, வினய்க்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. வினோத் அவளுக்கு முதல் முதலாக முத்தமிட்ட சம்பவத்தை சித்ரா அவனிடம் விரிவாக எடுத்துச் சொன்னாள்.

‘வினய், ஒரு முத்தம் ஆணுக்கு அளிக்கும் கிளர்ச்சியும் பெண்ணுக்குத் தரும் பாதுகாப்புணர்வும் சற்றும் சம்பந்தமே இல்லாதது என்பது உனக்குத் தெரியுமா?’

‘பாதுகாப்புணர்வா?’

‘ஆம். யோனியில் குறியை வைத்துச் சொருகச் சம்மதிப்பது என்பது ஒரு பெண் தனது புருஷனுக்கு அளிக்கும் கௌரவம். அதற்குமுன் உதட்டோடு உதடு சேர்க்க அனுமதிப்பது அவன் மீது அவள் கொள்ளும் நம்பிக்கைக்கு அச்சாரம்’.

‘இல்லை. நீ மிகைப்படுத்துகிறாய் சித்ரா. பாலுறவு இரு தரப்புக்கும் பொதுவானது. உடல் வேட்கை அனைத்து உயிர்களுக்கும் பொது’.

‘வேட்கை வேறு. அது பரஸ்பர நம்பிக்கைக்குப் பிறகு உண்டாவது. நான் அந்த நம்பிக்கையின் பிறப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகிறேன்’.

‘சரி சொல்’.

‘அவன் என்னிடம் முறைப்படி அனுமதி கேட்டான். ஒரு முத்தமிடலாமா என்று கேட்டபின், அனுமதி பெற்று முத்தமிட முன்வரும் ஆணை எந்தப் பெண்ணும் எளிதில் நம்புவாள்’.

‘சரி’.

‘அவன் என்னை அனுமதி கேட்டு முத்தமிட்டான். அப்படி நெருங்கி முத்தமிடும்போது என் மார்பைத் தொட்டான். அது இயல்பாக நிகழ்ந்திருக்கலாம். திட்டமிட்டும் அவன் தொட்டிருக்கலாம்’.

‘சரி’.

‘நான் ஒன்றும் சொல்லவில்லை. இன்னொரு முத்தத்துக்கு அவன் ஆசைப்பட்டபோது, வெட்கத்தின் போர்வையில் அதைத் தவிர்த்தேன்’.

‘சரி’.

‘இப்போது சொல். குறியைக் கொடுத்தால்தான் ஒரு பெண் தன்னைக் கொடுத்ததாகுமா?’

‘நிச்சயமாக இல்லை. மனம் போதும்’.

‘நான் கொடுத்தேனே? அதை மதிக்க அவனுக்குத் தெரியவில்லையே’.

‘தவறுதான். ஆனால் அவன் தரப்பும் உனக்குப் புரிய வேண்டும்’.

‘என்ன புரிய வேண்டும்?’

‘அவன் திட்டமிட்டு உன்னை விட்டுச் செல்லவில்லை. அவனை ஒரு சக்தி செலுத்திக்கொண்டு போய்விட்டது’.

‘முட்டாள். அது அவன் சொல்லும் பொய். நீ அதை நம்புகிறாயா?’

‘பொய் என்று உனக்கு எப்படித் தெரியும்?’

‘ஞானமடைந்தவனின் முதல் அடையாளம் அவன் வெளிப்படையாக இருப்பான் என்பது. நீ ஞானமடைந்ததை நீ இப்போதுவரை உணரவில்லை. ஆனால் எனக்கு அது தெரிகிறது. இல்லாவிட்டால் என்னிடம் நீ உன் மனத்தைப் பிளந்து காட்டியிருக்க மாட்டாய்’.

‘நன்றி. ஆனால் வினோத் ஞானமடைந்து வீட்டை விட்டு வெளியேறவில்லை. அவன் பைத்தியம் முற்றி வெளியேறியவன்’.

‘எதைச் சொல்கிறாய்? கிருஷ்ணன் தன்னை அழைத்ததாக அவன் ஒரு கதை சொல்கிறானே, அதையா?’

வினய் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இதோ பார் வினய், கிருஷ்ணன் ஒரு நித்யக் காதலன். ஒரு காதலைக் கொன்று தன் பக்தனைத் தன்னிடம் அழைக்க அவன் ஒருபோதும் விரும்பமாட்டான். அது அந்த அவதாரத்தின் தத்துவத்துக்கே விரோதமானது’.

‘ஆனால் அவன் உன்னைக் காதலித்திருந்தால்தானே?’

‘ஒழியட்டும். காதல் இல்லை. காமம் இருந்திருக்கிறதல்லவா? அதுதானே அந்த முத்தத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டும்? ஒரு வேசியிடம் போயிருந்தால்கூட மணிக்கு இவ்வளவு என்று கூலி கொடுத்திருக்க மாட்டானா? இவன் வாழ்க்கை தரச் சம்மதித்தவன் அல்லவா? அப்படி நடந்துகொண்டது தவறே அல்லவா?’

வினய் புன்னகை செய்தான். சிறிது நேரம் எங்கோ பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘அவன் இப்போது என்னவாக இருக்கிறான் என்பது வரை நீ அறிந்திருப்பாய்!’ என்று சொன்னான்.

‘தெரியும். அவன் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாகியிருக்கிறான். அவன் மனத்தில் இப்போது எந்தக் களங்கமும் இல்லை. உனக்குத் தெரியுமா? இன்று காலை அவன் ஊருக்குள் நுழைந்ததும் என் அம்மாவைப் போய்ப் பார்த்து மன்னிப்புக் கேட்டான்’.

‘அப்படியா?’

‘அவன் ஊருக்குள் நுழையும்போதே நான் பார்த்துவிட்டேன். பக்தியில் கனிந்த அவனது முகம் கிட்டத்தட்ட கிருஷ்ணனின் முகத்தைப் போலவே தெரிந்தது’.

வினய் புன்னகை செய்தான்.

‘ஆனால் முகத்தில் என்ன இருக்கிறது? கிருஷ்ணன் ஒரு அயோக்கியன். அவனது பக்தன் மட்டும் எப்படி யோக்கியவானாக இருப்பான்?’ என்று சித்ரா கேட்டாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com