யதி

153. புன்னகைக் காலம்

பா. ராகவன்

நான் கண்மூடியிருந்தேன். மூடிய என் விழிகளுக்குள் ஒரு சருகினைப் போல அம்மாவின் தோற்றம் அடர்ந்திருந்தது. அவள் என்னிடம் கண்ணைத் திறக்கவேயில்லை. வினோத்திடம் பேசியதைப் போலப் பேசவில்லை. அவள் கிடந்தாள். நான் அருகே இருந்தேன். அவ்வளவுதான். கூப்பிட்டுப் பார்க்கலாமா என்று சில முறை யோசித்தேன். ஏனோ வேண்டாம் என்று தோன்றியது. ஒரே ஒருமுறை அவள் தலையைத் தொட்டேன். பிறகு அவளது இடது கை சுண்டு விரலைத் தொட்டேன். நான் வந்திருப்பதை உணர்த்த அது போதுமென்று தோன்றியது. அவள் சுய நினைவில் இருந்தால் நிச்சயமாக அது தெரிந்திருக்கும். பார்க்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்று நினைத்திருந்தால் செய்திருப்பாள். ஆனால் அசைவற்று இருந்தாள். எனவே நானும் அமைதியாக அருகே அமர்ந்தேன். சுமார் ஒரு மணி நேரம் நான் அப்படியே இருந்தேன். அசையவில்லை. எழுந்து போகவில்லை. நானறிந்த அம்மாவின் வாசனை அப்போது அவளிடம் இல்லை. பல நாள்களாக மாற்றாத புடைவையின் நெடியும் மூத்திரப் பை நெடியும் கலந்த ஒரு நெடி அந்த அறையெங்கும் வீசியது. மாமா அந்த அறையில் பினாயில் தெளித்துத் துடைப்பார் போலிருக்கிறது. இந்த உலகில் சகிக்கவே முடியாத ஒரு வாசனையென்றால் அது பினாயிலின் வாசனைதான். மூத்திர வாடையைக்கூடச் சமாளித்துவிட முடியும். மூத்திர வாடையை மறைக்கத் தெளிக்கப்படும் பினாயிலின் வாடை குடல் வரை சென்று தாக்கும்.

அம்மாவுக்கு அதெல்லாம் இந்நாள்களில் பழகியிருக்கும். வீட்டில் இருந்த நாள்களில் அவள் படுத்தே நான் அதிகம் பார்த்ததில்லை. நாங்களெல்லாம் படுத்துறங்கும்வரை அவள் சமையல் கட்டிலேயேதான் வேலையாயிருப்பாள். பிறகு எப்போது முடித்துவிட்டு வந்து படுப்பாள் என்று தெரியாது. காலை கண் விழிக்கும்போதும் அவள் சமையல் கட்டில்தான் இருப்பாள். அப்போது காப்பி போட்டுக்கொண்டிருப்பாள். பகல் பொழுதுகளில் சிறிது கால் நீட்டி அமர்வது, கண்ணயர்ந்து போவது எல்லாம் என்றுமே அவளிடம் கிடையாது. எழுந்து குளித்து, புடைவை கட்டிக்கொண்டு பொட்டு வைத்துக்கொள்ளும்போது ஒரு புன்னகையைச் சேர்த்தெடுத்து முகத்தில் பொருத்திக்கொண்டு விடுவாள். இரவு வரை அது அங்கே அப்படியே நிலைத்து நிற்கும். அம்மா என்றால் அந்தப் புன்னகையும் அன்பும் மட்டும்தான்.

அன்புதானா அது? இப்போது எனக்கு அந்த சந்தேகம் வரத் தொடங்கியது. அன்பை ஒரு கடமையாக்கிக்கொள்ள முடியுமா. தவிர, எங்கள் விஷயத்தில் அது கடமையாகவும் அவசியமில்லை என்றே தோன்றியது. என்னவோ நிகழ்ந்திருக்கிறது. ஏதோ ஒரு ஞானம் அல்லது அஞ்ஞானத்தின் உச்சக்கட்டத் தலைவிரிகோல ஆட்டம். அப்பாவை அவள் பழிவாங்க நினைத்திருப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு நினைவு தெரிந்து ஒருநாளும் அவள் அப்பாவின் சொல் மீறியதில்லை. சுள்ளென்று முகம் காட்டியதில்லை. அதெல்லாம்கூட பாவனையாக இருக்கலாம். ஆனால் அப்பாவை நோக்கும்போதெல்லாம் அவள் பார்வையில் புலப்படும் மரியாதை கலந்த பரிசுத்தமான அன்பின் ஈரம் இன்னமும் என் நினைவில் உள்ளது. ஒரு துரோகம் அல்லது அதனை நிகர்த்த வேறெந்த விதமான தாக்குதலுக்குப் பிறகு அப்படியொரு பார்வை யாருக்கும் சாத்தியமில்லை.

ஒருநாள். அன்றைக்கு அம்மாவின் திருமண நாள். அண்ணா அப்போது வீட்டை விட்டுப் போயிருக்கவில்லை. அதற்கு அவன் ஆயத்தமாக ஆரம்பித்திருக்கிறான் என்பதுகூட வெளிப்பட்டிராத காலம். அன்று நான் அதிகாலை சீக்கிரமே உறக்கம் கலைந்து எழுந்துவிட்டேன். மணி பார்த்தபோது ஐந்தரைதான் ஆகியிருந்தது. இன்னும் சிறிது நேரம் தூங்கலாம் என்று எண்ணியபோது வாசலில் பேச்சு சத்தம் கேட்டது. இந்நேரத்தில் வாசலில் யார் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று எண்ணியபடியே எழுந்து சென்றேன். மாமாதான் அங்கே இருந்தார். எருமை ஓட்டிவந்து பால் கறந்து கொடுத்துவிட்டுப்போகிற தயாளனுடனும் அந்நேரத்தில் பேசுவதற்கு அவரிடம் விஷயம் இருந்தது. என்னைப் பார்த்ததும் ‘என்னடா எழுந்துட்டே?’ என்று கேட்டார்.

‘தூக்கம் போயிடுத்து’ என்று சொன்னேன்.

‘உங்கம்மா டிக்காஷன் போட்டு வெச்சுட்டுத்தான் போயிருக்கா. இரு வந்து காப்பி போட்டுத்தரேன்’ என்றார்.

‘அம்மா எங்க?’

‘அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குப் போயிருக்காடா. வந்துடுவா’ என்று சொன்னார்.

‘இவ்ளோ சீக்கிரமா?’

‘பின்னே? இன்னிக்கு அவாளுக்கு கல்யாண நாள் இல்லியா?’

திருமண நாள் என்பது ஒரு கொண்டாட்டத்துக்குரிய தினம் என்பதை அன்றுதான் நான் அறிந்தேன். அம்மாவும் அப்பாவும் கோயிலில் இருந்து வந்தபோது எனக்கு மிகவும் வியப்பாகிவிட்டது. அம்மா அன்றுவரை நான் கண்டிராத அழகைப் போர்த்திக்கொண்டிருந்தாள். புதிய புடைவையும் பளிச்சென்ற புன்னகையும் கை நிறைய வளையல்களும் கழுத்தில் ஒரு புதிய தங்கச் சங்கிலியும் அணிந்திருந்தாள். சட்டென்று அதுதான் என் கவனத்தைக் கவர்ந்தது.

‘ஏதும்மா?’ என்றேன்.

அம்மாவுக்கு ஒரே வெட்கமாகிவிட்டது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்துத் திண்டாடிப் போனாள்.

‘போனஸ் வந்ததுடா. அதுல வாங்கினது’ என்று அப்பா சொன்னார். அப்பாவுக்கு எப்போது போனஸ் வந்தது, அவர் எப்போது கடைக்குப் போனார், வாங்கி வந்ததை ஏன் யாரிடமும் அதுவரை காட்டவில்லை என்று அடுத்தடுத்து எனக்கு நிறையக் கேள்விகள் எழுந்தன. எல்லாவற்றைவிடவும் பெரிய வினா, அப்பா எங்கள் நால்வருக்கும் எதுவும் வாங்காமல் அம்மாவுக்கு மட்டும் என்று எதுவும் அதுவரை வாங்கி வந்ததில்லை. அம்மாவுக்கு ஒரு புடைவை வாங்கப் போனால்கூட எங்களுக்கு ஒரு கடலை மிட்டாய் பாக்கெட் உடன் வந்து சேரும். வெளியே எங்காவது போகும்போது அவளுக்கு ஒரு முழம் பூ வாங்கிக் கொடுத்தால், உடனே எங்களுக்கு ஆளுக்கொரு பன்னீர் சோடா வாங்கித் தருவார். புதிய ஆடைகள் என்பது பெரும்பாலும் தீபாவளிக்கு மட்டும்தான். துணிக்கடைக்குப் போனால் எங்கள் நான்கு பேருக்கும் டிராயர், சட்டைத் துணி எடுத்துவிட்டு, அதன்பிறகுதான் அம்மாவுக்குப் புடைவை என்று ஆரம்பிப்பார்.

அது எப்போதுமில்லாத வழக்கமாக எனக்குத் தோன்றியது. வினய் உறங்கி எழுந்ததும் அவனிடம் முதலில் சொன்னேன். ‘போய் அம்மா புடைவையப் பாரு. புதுசு’.

அவன் போய் பார்த்துவிட்டு வந்து வினோத்திடம் சொன்னான். பிறகு வினோத் அண்ணாவிடம் சொன்னான். ‘என்ன அதுனால?’ என்று அண்ணா கேட்டான்.

‘அப்பா அம்மாக்கு மட்டும்தான் புதுசு வாங்கியிருக்கா’.

‘கல்யாண நாள்னா அப்படித்தான்’.

‘இன்னிக்குத்தானா கல்யாணமாச்சு?’

‘அப்படி இல்லேடா வினோத். இதே மாசம், இதே தேதில கல்யாணம் ஆயிருக்கு அவாளுக்கு’.

‘பர்த் டேன்னா புதுசு வாங்குவா. இதுக்கெல்லாமா?’

‘அப்படித்தான் போலருக்கு’.

‘நமக்கு வாங்கலியே’.

‘நமக்கா கல்யாணமாச்சு?’

இருந்தாலும் எங்களுக்கு அது சமாதானமாகவில்லை. இதைப்போய் அப்பாவிடமோ, அம்மாவிடமோ கேட்கவும் தோன்றவில்லை. அன்றைக்கு சமையலில் அம்மா கூடுதலாக வடையும் கேசரியும் செய்திருந்தாள். சாப்பிடும்போதே வினோத், ‘என்னம்மா இன்னிக்கு விசேஷம்?’ என்று கேட்டான். மீண்டும் ஒருமுறை மாமா அவர்களது திருமண நாளை அறிவித்தார். எங்களுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. அதற்கு முந்தைய வருடங்களிலும் அதே போலத்தான் அந்நாள் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நினைவில் அது இல்லாதிருந்தது. இதே யோசனையுடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றோம்.

மாலை நாங்கள் வீடு திரும்பியபோது வீட்டில் அப்பாவும் அம்மாவும் இல்லை. எங்கே என்று கேட்டதற்கு, ‘வந்துடுவா. நீங்க காப்பிய சாப்ட்டுட்டு விளையாடப் போகலாம்’ என்று கேசவன் மாமா சொன்னார். நாங்கள் விளையாடி முடித்துவிட்டு வீடு வந்த பின்பும் அவர்கள் வரவில்லை. அண்ணாதான் மாமாவிடம் மீண்டும் கேட்டான். ‘எங்கே போயிருக்கா?’

‘திருப்போரூருக்கு’ என்று மாமா சொன்னார்.

அண்ணாவுக்கு அது ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. அப்பாவோ அம்மாவோ முருகர் கோயிலுக்குப் போகும் வழக்கமே இருந்ததில்லை. திடீரென்று என்ன இன்று முருகர் பக்தி?

பிறகு அவர்கள் வீடு திரும்பி, சாப்பிடும்போது பேசிக்கொண்டதில்தான் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் கோயிலுக்குப் போகவில்லை. திருப்போரூர் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போயிருக்கிறார்கள்.

‘நன்னாத்தான் எடுத்திருக்கான்’ என்று அம்மா சொன்னாள்.

‘எனக்கு அவ்வளவா பிடிக்கலை’ என்று அப்பா சொன்னார். ‘ஆனா பாட்டெல்லாம் நன்னாருக்கு’.

அது நிறம் மாறாத பூக்கள். பாரதிராஜா எடுத்திருந்த திரைப்படம். கேளம்பாக்கம் ராஜலட்சுமியில் திரையிடாமல் திருப்போரூரில் வெளியிட்டிருந்தார்கள். திருவிடந்தையில் இருந்து பஸ் பிடித்துத் திருப்போரூருக்குப் போய் நிறம் மாறாத பூக்கள் பார்த்துவிட்டுத் திரும்பிய அப்பாவும் அம்மாவும், அன்றைக்கு எனக்கு மிகவும் விநோதமாகத் தென்பட்டார்கள். இரவு படுக்கப் போகும்போது நான் வினோத்திடம், ‘டேய், அம்மா சரியில்லே. ரொம்ப கெட்டுப் போயிட்டா. அப்பாவ அவ லவ் பண்றா’ என்று சொன்னேன்.

‘சீ, படுத்துண்டு தூங்கு’ என்று அவன் என்னை அதட்டினான். ஆனால் சிறிது நேரம் கழித்து அவனும் வினய்யிடம் அதையேதான் வேறு சொற்களில் தெரியப்படுத்தினான். அதை நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

என்னையறியாமல் எனக்குச் சிரிப்பு வந்தது. மரணப் படுக்கையில் கிடக்கும் அம்மாவின் எதிரே உட்கார்ந்திருக்கும்போது இதெல்லாம் எப்படி நினைவுக்கு வருகிறது என்று வியப்பாக இருந்தது. ஒரு பெரிய சரித்திர நாவலின் முதல் ஐந்நூறு பக்கங்களை அவள் கிழித்து வைத்துக்கொண்டு மிச்சத்தைத் தைத்து எங்களுக்குப் படிக்கக் கொடுத்தாற்போலத் தோன்றியது. எப்படியானாலும் அம்மாவிடம் பேசிவிட வேண்டும்; அவளைப் பேச வைத்துவிட வேண்டும் என்று நினைத்தேன். இன்னதுதான் என்றில்லை. ஏதாவது. எது குறித்தாவது.

நான் மீண்டும் அவளை மெல்லத் தொட்டேன். அம்மா என்று கூப்பிட்டேன். அவள் கண்ணைத் திறக்கவில்லை. சிறிது தாமதித்து, ‘விமல் வந்திருக்கேம்மா’ என்று சொன்னேன். அப்போதும் அவள் கண்ணைத் திறக்கவில்லை.

‘சரி, நீ கண்ணைத் திறக்க வேண்டாம். அப்படியே பதில் சொல்லு. நாங்க மைதிலிக்குப் பொறந்தோமா, இல்லே உங்கக்காவுக்குப் பொறந்தோமா?’ என்று கேட்டேன்.

நான் கேட்டது வெளியே இருந்தவர்கள் காதில் விழுந்திருக்க வேண்டும். சட்டென்று வினய்யும் வினோத்தும் உள்ளே வந்தார்கள். என்ன என்பதுபோல என்னைப் பார்த்தார்கள். நான் அவர்களிடம் அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு, ‘அதுக்காகல்லாம் நாங்க வருத்தப்படப் போறதில்லே. உனக்குக் கர்மா பண்ணாம திரும்பிப் போகவும் போறதில்லே. ஆனா இதை மட்டும் சொல்லிடு. நாலு பேரும் ஒருத்தருக்குத்தான் பொறந்தோமா, இல்லே இங்க ரெண்டு அங்க ரெண்டுன்ற மாதிரி எடுத்துண்டு வந்தியா?’

அம்மா அப்படியேதான் கிடந்தாள். அசைவே இல்லை. நான் மூக்கருகே கையைக் கொண்டு சென்று வைத்துப் பார்த்தேன். சுவாசம் இருந்தது. இடது கையில் நாடி பிடித்துப் பார்த்தேன். ஓடிக் களைத்து நிற்கப்போகிற வேகத்தில்தான் அது இயங்கிக்கொண்டிருந்தது. சில விநாடிகள் யோசித்தேன். பிறகு வினய்யிடம் திரும்பி, ‘தவறாக எண்ணாதே. உன்னிடம் கஞ்சா மிச்சம் உள்ளதா?’ என்று கேட்டேன்.

‘எதற்கு?’ என்றான்.

‘இருந்தால் சிறிது கொடு’.

அவன் சிறிது தயங்கினான். பிறகு இடுப்பு மடிப்பில் சொருகி வைத்திருந்த பொட்டலத்தை எடுத்து அதில் இருந்து ஒரு சிட்டிகை எடுத்து என் உள்ளங்கையில் வைத்தான்.

‘அந்தத் தண்ணீர் சொம்பை எடு’ என்று வினோத்திடம் சொன்னேன். அவன் தண்ணீர் சொம்பை எடுத்தான்.

‘ஒரு சொட்டு எடுத்து இதில் விடு’.

என் உள்ளங்கையில் இருந்த கஞ்சாவின் மீது அவன் இரண்டொரு சொட்டுகள் நீர் விட்டான். நான் அதை அழுத்தித் தேய்த்தேன். இப்போது கேசவன் மாமா அறைக்குள் வந்தார்.

‘என்னடா பண்றே?’ என்று கேட்டார்.

நான் பதில் சொல்லவில்லை. அந்தச் சிட்டிகை கஞ்சாவைத் துவையல் மாதிரி விரலால் நசுக்கி அரைத்து ஓர் உருண்டை ஆக்கினேன். இன்னும் சில சொட்டுகள் தண்ணீர் விடச்சொல்லி, விரலுக்கு இடும் மருதாணி பதத்துக்குக் கொண்டுவந்தேன்.

‘என்ன பண்றேன்னு கேட்டேனே?’ என்று மாமா மீண்டும் சொன்னார்.

நான் அவரிடம் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டு, அந்தத் துவையலை அம்மாவின் நாசியருகே எடுத்துச் சென்று வைத்தேன்.

வினோத்தும் மாமாவும் புரியாமல் குழம்பி நிற்க, வினய் மட்டும் புன்னகை செய்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT