154. துடைப்பக் கட்டை

பாசம். தனது பல்லாயிரம் கூர்நகக் கரங்களுடன் எப்போதும் கட்டியணைத்து நொறுக்கிக் கிழிக்கக் காத்திருக்கும் அகண்ட பெருமிருகம்.

நான் குருகுல வாசத்தில் இருந்த நாள்களில் ஒரு சம்பவம் நடந்தது. யாரோ ஒரு மனிதன் - எனக்கோ எங்கள் ஆசிரமத்தில் இருந்த பிறருக்கோ அவனை யாரென்றே தெரியாது. எங்கள் ஆசிரமத்துக்கு வருகிற வழியில் அவன் சாலையோரம் விழுந்து கிடந்தான். குடித்துவிட்டு விழுந்திருக்கலாம் என்று எண்ணி நாங்கள் உள்பட அந்தப் பக்கம் போன எல்லோருமே அவனைத் திரும்பத் திரும்பக் கடந்து சென்றோம். ஒரு நாள் முழுதும் அவன் அங்கேயே கிடந்தான். மறுநாளும் அவனை அதே இடத்தில் அதே கோலத்தில் கண்டபோதுதான் சந்தேகம் எழுந்தது. குருவிடம் நான்தான் அவனைக் குறித்துச் சொன்னேன். ‘எங்கே காட்டு?’ என்று அவர் என்னுடன் கிளம்பி வந்தார். அவனது நாடி பிடித்துப் பார்த்தார். பிறகு சுவாசம் இருக்கிறதா என்று பார்த்தார். அதன்பின் நெஞ்சில் காது வைத்து ஏதோ கேட்டார்.

‘இறக்கவில்லை. நன்றாகத்தான் இருக்கிறான்’ என்று சொன்னார்.

‘ஆனால் இப்படி அசையாமல் கிடக்கிறானே குருஜி?’

‘சரி அசைய வைப்போம்’ என்றவர், அந்தக் காட்டுப் பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளியாகப் பணியாற்றும் பசவய்யாவை அழைத்துவரச் சொன்னார். அவன் வந்ததும் அவனிடம் இருந்து சிறிது கஞ்சாவை வாங்கி ஒரு தாளில் கொட்டிக் கொளுத்திப் புகையச் செய்தார். அந்தப் புகையை அம்மனிதனின் நாசியை நோக்கிச் செலுத்தும் விதமாகக் கையால் கோதிக் கொடுத்தார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. ஓரிரு நிமிடங்களில் அவனிடம் அசைவுகள் தென்பட்டன. அவன் புரண்டு படுத்தான். பிறகு எழுந்து உட்கார்ந்துவிட்டான். சில தும்மல்கள் போட்டான். எங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அவன் வழியில் புறப்பட்டுச் சென்றான்.

‘இதற்கு இப்படியொரு சக்தி உண்டா?’ என்று நான் குருவிடம் கேட்டேன்.

‘கசக்கி, சாறெடுத்து நாசியில் விட்டால் இன்னும் விரைவாக வேலை செய்யும்’ என்று அவர் சொன்னார். அதன் அறிவியலுக்குள் நான் அப்போது செல்லவில்லை. ஒரு வைத்தியம் தெரிந்துகொண்ட மகிழ்ச்சி மட்டும் எனக்கு இருந்தது.

ஆனால், அம்மாவிடம் நான் அந்த வைத்தியத்தைப் பிரயோகித்தபோது நான் எதிர்பார்த்த பலன் எனக்குக் கிட்டவில்லை. அவளது நாசியில் நான் விட்ட கஞ்சா சாறு, விட்ட இடத்திலேயேதான் இருந்தது. சுவாசத்தில் நகர்ந்து வெளியேகூட வரவில்லை. அப்படி அது உருண்டு நகருமானால், அந்த மெல்லிய உறுத்தலில்கூட சிறு அசைவு உண்டாகலாம். அதுகூட நிகழாதது எனக்கு வியப்பாக இருந்தது.

‘என்ன?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘அவள் கண்விழிக்க விரும்பவில்லை’ என்று வினய் சொன்னான். எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. அதற்குமேல் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் நான் அறையை விட்டு வெளியேறிச் சென்றேன். வினய்யும் வினோத்தும் மேலும் சிறிது நேரம் அங்கே இருந்தார்கள். வினோத் மீண்டும் அவளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்.

‘அம்மா, வினய் வந்திருக்கிறான். அவனுடன் பேசு’.

பதில் இல்லை.

‘உனக்குக் கடைசி ஆசை என்று ஏதாவது இருந்தால் சொல். நிறைவேற்றி வைக்கிறோம்’.

பதில் இல்லை.

‘நாங்கள் மன்னிப்புக் கேட்டால் நீ மகிழ்ச்சி அடைவாய் என்றால் அதையாவது சொல்’ என்று வினய் சொன்னான். எனக்குச் சிரிப்பு வந்தது. ‘டேய், என்னையும் சேர்த்துக்கொள்’ என்று வெளியில் இருந்து குரல் கொடுத்தேன். மாமாவுக்கு நாங்கள் பேசிய விதமும் தொனியும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. எதேனும் ஒருவிதத்திலாவது நாங்கள் விடைபெறும்போது அவருக்கு ஒரு சிறு கசப்பை மிச்சம் விட்டுச்செல்ல ரகசியமாக மூவருமே விரும்புகிறோம் என்று தோன்றியது. யோசித்துப் பார்த்தால் அது அவசியமும்கூட. போதையைக் காட்டிலும் மிக எளிதில் பாசம் வசப்படுத்திவிடும். உறவு அல்லது உறவின்மை பொருட்டல்ல. பாசம். தனது பல்லாயிரம் கூர்நகக் கரங்களுடன் எப்போதும் கட்டியணைத்து நொறுக்கிக் கிழிக்கக் காத்திருக்கும் அகண்ட பெருமிருகம்.

அம்மா மிகத் தொடக்கத்திலேயே இதை உணர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் அப்பாவின் மீது காட்டிய பாசம்கூட எங்களுடனான நெருக்கத்துக்கு நடுவே அவள் கிழிக்க நினைத்த கோடாக இருக்கலாம். ஆனால் அந்த வயதில் அதெல்லாம் யோசித்ததில்லை. ஒரு புன்னகையைத் தனது நிரந்தரக் கையெழுத்தாக எங்கள் நினைவில் அவள் பதித்திருந்தாள். ஆனால் அண்ணாவும் வினய்யும் விட்டுச் சென்றபோது அவள் கதறிய கதறல் எனக்கு மறக்கவில்லை. அதை ஒரு நடிப்பாக என்னால் இந்தக் கணம் வரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. பாசம் இல்லாமல் அப்படியொரு அழுகை வராது. அப்படியொரு துக்கம் முட்டாது. வெடித்துக் கிளம்பாது. உண்மையில் இவள் யார்? என்னவாக இருந்திருக்கிறாள்? அல்லது ஏன் இவ்வாறு இருந்திருக்கிறாள்?

நான் கண்ணை மூடி அமர்ந்து அம்மாவைக் குறித்து தியானம் செய்யத் தொடங்கினேன். திருமணத்துக்கு முன்னால் அப்பாவுக்கு யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அது ஏற்கெனவே நடந்து முடிந்த திருமணத் தொடர்பாகவும் இருக்கலாம். அதன் பொருட்டு அம்மாவுக்கு அவரோடு பிணக்கு உண்டாகியிருக்கலாம். அந்தப் பெண் இறந்திருக்கலாம். அவளது பிள்ளைகளை வளர்க்கச் சொல்லி, அம்மாவிடம் அப்பா மன்றாடியிருக்கலாம். அம்மா சகித்துக்கொண்டு ஏற்றிருக்கலாம். ஆனால் அவள் ஒருநாளும் சகித்துக்கொண்டு வளர்த்த மாதிரி எனக்குத் தோன்றியதில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும்போதுகூட அப்படியொரு பாவனையை என்றுமே அவளிடம் கண்டதில்லை என்றுதான் தோன்றுகிறது. உலகிலுள்ள அனைத்து அம்மாக்களையும் போலத்தான் அவள் எங்களை வளர்த்தாள். பாசம். பரிவு. அன்பு. அக்கறை. கவனிப்பு. கண்டிப்பு.

ஆனால் என்னவோ ஒன்று இல்லாமல் இருந்ததோ? அதைத் திறமையாக எங்கள் கவனத்தின் கரங்களில் இருந்து அவள் மறைத்து வைத்திருந்தாளோ?

‘பிரத்தியேகத்தன்மை’ என்று ஒரு குரல் கேட்டது. நான் திகைத்துக் கண் விழித்தபோது வினய் என் அருகே அமர்ந்திருந்தான்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘நீ யோசிப்பதை ஊடறுத்தேன். ஒரே காடாத் துணியில் நான்கு மீட்டர் கிழித்து அப்பா நமக்குச் சட்டை தைத்தார். அதையேதான் அம்மா தனது நடவடிக்கைகளில் பிரதிபலித்தாள். இறந்தால் அழவேண்டும். இழந்தாலும் அழ வேண்டும். அவள் அண்ணாவுக்காக, எனக்காக, வினோத்துக்காக, உனக்காக மிச்சம் வைக்காமல் பகிர்ந்து அழுதாள்’.

‘ஐயோ!’ என்றேன்.

‘ஏற்க முடியவில்லையா?’

‘கேட்க முடியவில்லை. ஆனால் அப்பாவை அவள் மன்னித்ததன் நியாயம் பிடிபட மறுக்கிறது’.

‘மன்னிக்கவே இல்லையோ என்னவோ?’

‘மாமாவைக் கூப்பிடு’ என்று சொன்னேன். வினய் எழுந்து உள்ளே சென்று மாமாவை அழைத்து வந்து என் எதிரே உட்கார வைத்தான். அவனும் அமர்ந்துகொண்டான். வினோத் அறைக்குள் இருந்து எட்டிப் பார்த்தான். என்ன நினைத்தானோ, கதவை மூடிக்கொண்டு அவன் உள்ளேயே இருந்தான். இன்னொரு முறை அம்மா அவனிடம் பேசினால் எங்களை அப்போது அழைக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.

‘என்னடா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘மாமா, சிறிது மறைக்காமல் பேசலாம் என்று நினைக்கிறேன். அவசியமில்லை என்று நீங்கள் நினைத்தால் இப்போதே சொல்லிவிடலாம்’.

‘எதப் பத்தி?’

‘அப்பாவைப் பற்றி’.

‘என்ன தெரியணும் உங்களுக்கு?’

‘அப்பாவுக்கு இன்னொரு மனைவி இருந்தாளா?’

‘ஐயோ பகவானே’ என்று அவர் பதறி எழுந்துவிட்டார். ‘சன்னியாசியாடா நீ? வெளிய போடா!’ என்று கத்தினார்.

நான் அவரை அமைதிப்படுத்தினேன். ‘சரி விடுங்கள். உங்கள் அப்பாவைப் பற்றிச் சொல்லுங்கள்’.

‘அவரைப் பத்தி என்ன?’

‘அவருக்கு எத்தனை மனைவி?’

மாமா உண்மையிலேயே அதிர்ந்துவிட்டார். ‘இதோ பாருங்கோடா, நீங்க பேசறதெல்லாம் நன்னால்ல. எனக்குப் பிடிக்கலே. உங்கம்மா சாகக் கெடக்கறா. ஒண்ணு, அவ சாகறவரைக்கும் இருந்துட்டு, காரியத்த முடிச்சிட்டுப் போங்கோ. இல்லன்னா இப்ப என்னமோ ஒண்ண மூக்குல கொண்டுபோய் வெச்சேளே, அதை மொத்தமா அவ தொண்டைல அடைச்சி சாகடிச்சிட்டுப் போயிடுங்கோ. பெத்த பாவத்துக்கு அதுதான் அவளுக்கு லபிச்சதுன்னா இருந்துட்டுப் போகட்டும்’ என்று சொன்னார்.

வினோத் அவரை நெருங்கினான். அவர் கரங்களை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அவரை அன்போடு பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, ‘பண்ணாத பாவத்துக்கெல்லாம் தண்டனை இல்லை மாமா’ என்று சொன்னான்.

அவருக்கு அது புரியவில்லை. புரியாததே நல்லது என்று நான் நினைத்தேன். சில நிமிடங்களில் வாசலில் யாரோ வந்திருப்பது தெரிந்தது.

‘யாரு?’ என்று மாமா குரல் கொடுத்தார்.

‘நாந்தான் கேசவா’ என்று சொன்னபடியே பத்மா மாமி உள்ளே வந்தாள். நாங்கள் சட்டென்று எழுந்துகொண்டோம். மாமி எங்கள் மூவரையும் பார்த்தாள். ‘எப்படி இருக்கா?’ என்று கேட்டாள்.

‘இருக்கா. வாங்கோ’ என்று சொல்லிவிட்டு, மாமா அவளை அம்மா இருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றார். வினோத் சட்டென்று வினய்யை அழைத்துக்கொண்டு வாசலுக்குப் போனான்.

‘என்ன?’ என்று வினய் கேட்டான்.

‘எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும்’.

‘கொன்றுவிடச் சொல்கிறாயா?’

‘அது பிறகு. ரிஷியாகிவிட்டாள் என்று நீ நினைக்கும் சித்ராவிடம் உன்னால் மீண்டும் ஒருமுறை சென்று பேச முடியுமா?’

‘எதற்கு? அவளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை’.

‘ஒருவேளை தெரிந்திருந்தால்?’

‘என்னிடம் சொல்லியிருப்பாள்’.

‘நான் அப்படி நினைக்கவில்லை. அவள் அம்மாவிடம் பேசியிருக்கிறாள். என் மரணம் உன்னால் சம்பவிக்கும் என்று சொல்லியிருக்கிறாள். இத்தனை தூரம் நம்மை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தவளுக்கு நிச்சயமாக இதெல்லாமும் தெரிந்திருக்கும்’.

‘எதெல்லாம்?’

‘நாம் யாருக்குப் பிறந்தோம் என்பது. மாமா எங்கிருந்து வந்தார் என்பது’.

‘நமக்கு அது அவசியமா?’ என்று நான் கேட்டேன்.

அவன் ஒரு கணம் அமைதியாக யோசித்தான். ‘இல்லைதான். ஆனால் புத்தியில் இது நிறைந்திருக்கும்போது, என்னால் கிருஷ்ணனை நினைக்க முடியவில்லை’.

‘ஆக, கிருஷ்ணனைவிடக் குடும்பம் பெரிதாகிவிடுகிறது’.

‘அப்படி இல்லை. கிருஷ்ணனைவிடக் குப்பை அடர்த்தியானது’.

‘பெருக்கித் தள்ளு’ என்று வினய் சொன்னான்.

‘துடைப்பக்கட்டை இன்னும் வந்து சேரவில்லையே’ என்று வினோத் சொன்னான். நான் சிரித்தேன்.

‘அது ஒருவேளை நாளை வரலாம்’ என்று சொன்னேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com