யதி

156. கட்டவிழ்ப்பு

பா. ராகவன்

வாசலில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்த கேசவன் மாமா பதற்றமானார். ‘சனியனே, உள்ளயே வந்துடுத்து பாரேன்’ என்று பாய்ந்து அதைத் துரத்த ஓடினார். வாசல் படி ஏறி தாழ்வாரத்துக்கு வந்துவிட்டிருந்த நாய், தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்ததே தவிர, மாமாவின் மிரட்டலுக்கு மசியவில்லை. ‘ஏய், போ.. போ...’ என்று மாமா வெறுங்கையை ஓங்கி அதனிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அது மிரளவில்லை. போகவும் இல்லை. சற்று இடைவெளி விட்டுவிட்டு மீண்டும் குரைத்தது.

‘டேய் யாராவது இங்க வாங்கடா. இதைத் துரத்துங்கோ’ என்று மாமா அங்கிருந்து அழைப்பு விடுத்தார். வினோத் எழுந்து வெளியே சென்றான். அவனைக் கண்டதும் அது குரைப்பதை நிறுத்தியது. ஆனால் வெளியேறவில்லை. மாமா தன் முயற்சியை விட்டுவிடாமல் குனிந்து கல்லை எடுப்பதுபோல பாவனை செய்து பார்த்தார். அது வினோத்தின் காலருகே வந்து நின்றுகொண்டது. மீண்டும் குரைத்தது.

‘என்ன பிரச்னை?’ என்று வினய் கேட்டான்.

‘நாய் உள்ளே வந்துவிட்டது போலிருக்கிறது. மாமா தவிக்கிறார்’.

இப்போது அவன் எழுந்து வாசலுக்குப் போக, நானும் அவன் பின்னால் போனேன். எங்கள் மூவரையும் கண்டதும் நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு அங்கேயே உட்கார்ந்துகொண்டது.

‘ஒரு கட்டை எடுத்துண்டு வாங்கோடா’ என்று மாமா சொன்னார். நான் அந்நாயை உற்றுப் பார்த்தேன். ஒரு சிறு சந்தேகம் இருந்தது. அது முதல் நாள் நான் கோவளம் தர்கா அருகே கண்ட நாய் இல்லை. வேறொரு நாய்தான். ஆனால் பெண் நாய். அதன் வயிறெங்கும் குஷ்டம் வந்தாற்போல வெள்ளைத் திட்டுகள் இருந்தன. கால்களிலும் பின்புறமும் சேறு அப்பியிருந்தது. எங்கே புரண்டுவிட்டு வந்ததோ. நான் பின்புறம் சென்று ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வந்தேன்.

‘என்ன பண்ணப் போறே?’ என்று மாமா கேட்டார். நான் பதில் பேசாமல் வாளியைக் கீழே வைத்துவிட்டு அமர்ந்தேன். அதனிடம் வா என்று சொன்னேன். வினோத் அதைத் தொட்டு என் பக்கமாக நகர்த்தினான்.

‘கருமம் கருமம். இதை வெளிய கொண்டு போய்க் குளிப்பாட்டேன்?’ என்று மாமா மீண்டும் அலறினார். அவரால் அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. ‘என்னமோ பண்ணித் தொலை’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

நான் சேறு படிந்த அந்த நாயின் கால்களையும் பின்புறத்தையும் கையால் நீர் அள்ளிக் கொட்டிக் கழுவினேன். மீதமிருந்த தண்ணீரை அதன் முதுகிலேயே கொட்டினேன். வினய் சட்டென்று தன் இடுப்பில் கட்டியிருந்த காவித் துண்டை உருவிக் கொடுத்தான். அதனைக் கொண்டு நான் துடைத்தேன். வினோத் உள்ளே சென்று ஒரு பெரிய கோணிச் சாக்கை எடுத்து வந்தான். ஈரமாகிவிட்டிருந்த தரையில் அதைப் போட்டுத் துடைத்தான். பிறகு அந்தச் சாக்குப் பையையே மடித்து ஒரு ஓரமாகப் போட்டான். நாய் அதன் மீது சென்று அமர்ந்துகொண்டது.

வினய் அதன் அருகே சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். உடனே வினோத், ‘யார்?’ என்று கேட்டான்.

‘சொரிமுத்து என்று நினைக்கிறேன்’ என்று நான் சொன்னேன்.

‘நினைக்காதே. நாந்தான்’ என்று அவன் சொன்னான்.

‘அன்று வேறு வாகனத்தில் வந்தீர்கள். அதனால் சிறு குழப்பம்’.

‘வண்டியும் முக்கியமில்லே, வர்றவனும் முக்கியமில்லே. வந்த காரணம்தான் முக்கியம்’ என்று சொன்னான்.

‘அண்ணா இன்னும் வரவில்லை’ என்று சொன்னேன்.

‘தெரிஞ்சிது’ என்று சொல்லிவிட்டு வினய்யை உற்றுப் பார்த்தான். வினய்க்கு அது சங்கடமாக இருந்திருக்க வேண்டும். அமைதியாக நின்றிருந்தான். என்ன பேசுவது? அல்லது எதற்குப் பேச வேண்டும்? எதுவும் அவன் அறியாததாக இருக்க முடியாது. ஒருவேளை அறியாமல் இருந்திருந்தால் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. எனக்கும் சொரிமுத்துவுக்குமான ஓரிரு நாள் உறவை வினய் அவனோடு வாழ்ந்த வாழ்வோடு ஒப்பிடவே முடியாது. அவன் சொரிமுத்துவை நிறைய அறிவான். ஒரு விதத்தில் சொரிமுத்து அவனது முதல் குரு. கடைசிக் குருவும் அவனேதான். வகுப்புக்கு வந்துவிட்டுப் பாடமெடுக்காமல் திரும்பிவிட்ட ஆசிரியர்.

நான் இவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தபோது நாய் என்னைத் திரும்பிப் பார்த்தது. ‘பிரம்ம லிபி’ என்று சொரிமுத்து சொன்னான். தன் முன்னங்காலால் தனது சிறிய நெற்றியில் கோடிழுத்துக் காட்டியது.

‘ஆனால் எனக்கு யாரும் அப்படியொரு லிபியை எழுதியதாகத் தெரியவில்லை ஐயா’ என்று வினய் சொன்னான்.

‘எழுதாமலா இந்த அலைச்சல் அலைந்தாய்?’

‘பயனற்ற அலைச்சல். இலக்கற்ற அலைச்சல்’.

‘அது உன் எண்ணம். ஒவ்வொரு நதிக்கும் அதன் பாதை வகுக்கப்படுகிறது’.

‘சாக்கடைக்குமா?’

‘நகரும் எதுவும் நதியே. துர்நாற்றம் நீரின் பிழையல்ல’.

வினய் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு என்ன நினைத்தானோ, சட்டென்று வினோத்தை இழுத்து முன்னால் நிறுத்தி வணங்கச் சொன்னான். வினோத் உடனே சொரிமுத்துவின் எதிரே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி எழுந்தான். வினய் என்னிடம் ஏன் அப்படிச் சொல்லவில்லை என்று யோசித்தேன். சிரிப்பு வந்துவிட்டது. நாய் என்னை ஒருதரம் நிமிர்ந்து பார்த்தது. ஆனால் சொரிமுத்து ஒன்றும் சொல்லவில்லை. சில விநாடிகள் யாரும் பேசாத அமைதி தாழ்வாரத்தை நிறைத்துத் ததும்பிக்கொண்டிருந்தது. கேசவன் மாமா மீண்டும் வெளியே வந்துவிட்டால் சிக்கல் என்று எனக்குத் தோன்றியது. அதை வினய்யிடம் சொன்னபோது, ‘ஒன்றும் பிரச்னை இல்லை. அவர் வரும்போது இவர் பேசமாட்டார்’ என்று சொன்னான்.

‘நீ சித்ராவிடம் என்ன சொல்லிவிட்டு வந்தாய்?’ என்று சொரிமுத்து வினய்யிடம் கேட்டான். திடீரென்று இந்தக் கேள்வி வருமென்று வினய் எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. அவன் சிறிது தடுமாறினான்.

‘என்ன சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று அவனைப் பார்த்துக் கேட்டான்.

‘நான் கேட்டதற்குப் பதில் சொல்’.

‘குறிப்பாக நான் ஒன்றும் சொல்லவில்லை. அவள் வினோத்தைக் கொலை செய்யச் சொல்லிக் கேட்டாள். அதை நான் அவளுக்காகச் செய்து தந்தால் நான் விரும்பியதை அடைய முடியும் என்று சொன்னாள்’.

‘சரி’.

‘காமாக்யா தேவி காட்டாத கருணையை ஒரு பேய் காட்டியது என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நான் என் விருப்பங்களைத் துறந்து நெடுநாள் ஆகிறது’ என்று வினய் சொன்னான். நான் உடனே வினோத்தைப் பார்த்தேன்.

‘என் துறவு ஒரு பிழையில் தொடங்கியதும் நீங்கள் சொன்ன பிரம்ம லிபியால்தானா?’ என்று அவன் சொரிமுத்துவிடம் கேட்டான்.

‘உள்ளே போய் மாமாவைக் கேள். துறவே ஒரு பிழை என்று சொல்வார்’ என்று நான் சொன்னேன்.

‘ஆனால் உன் அம்மா அப்படிச் சொல்லமாட்டாள்’ என்று சொரிமுத்து சொன்னான். அம்மா எதைத்தான் சொன்னாள்? அவள் எங்களைக் கண்டு கண்விழித்தபோது ஏதாவது பேசுவாள் என்று மிகவும் எதிர்பார்த்தேன். வினோத்திடம் அவ்வளவு நீளக் கதை சொன்னவளுக்கு, மூன்று பேர் ஒன்றாக இருக்கும்போது பேசுவதற்கு ஒரு சொல்கூட இல்லாமல் போய்விட்டது. திரும்பத் திரும்ப அவளைப் பேசவைக்க நாங்கள் முயற்சி செய்து பார்த்தோம். தனது சுய கட்டுப்பாட்டை நகர்த்தி வைத்துவிட்டு வினோத் ஒரு படி இறங்கிச் சென்று, ‘அண்ணாவும் வினய்யும் மட்டும்தான் அந்த மைதிலிக்குப் பிறந்தார்களா? நாங்கள் இருவரும் உனக்குப் பிறந்தவர்களா?’ என்றுகூடக் கேட்டான். ‘அல்லது இவர்கள் இருவரையும் வேறு இடத்தில் இருந்து பறித்து வந்தாயா?’ என்று வினய் கேட்டான். அவள் வாய் திறக்கவேயில்லை. ஆனால் அந்தப் புன்னகை மாறவும் இல்லை. வெறுமனே இருந்தாள். வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வளவுதான்.

‘பேச வேண்டாம் என்று முடிவு செய்திருந்தால் பாதிக் கதையை நீ வினோத்துக்குச் சொல்லியிருக்க வேண்டாம்’ என்று நான் சொன்னேன். அதற்கும் பதில் இல்லை. எனக்குப் பொறுமை போய்விட்டது. ‘சரி, நாளை இரவு வரை இப்படியே இரு. பிறகு செத்துப் போகும்போது கூப்பிடு’ என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

‘ஏன் கோபித்துக்கொள்கிறாய்?’ என்று பின்னாலேயே வந்து வினய் கேட்டான்.

‘எனக்கென்ன கோபம்? அவள் பேச முடியாமல் இல்லை. பேச ஒன்றுமில்லாமலும் இல்லை. பேச வேண்டாம் என்று எண்ணியிருந்தால் இவனிடம் உளறியிருக்க வேண்டாம்’ என்று சொன்னேன்.

சொரிமுத்துவிடம் இதனைச் சொல்லி வினய் ஆதங்கப்பட்டான். நாய் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. ‘நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று நான் கேட்டேன்.

‘என்ன?’ என்று அவன் நிமிர்ந்தான்.

‘ஒரு நிமிடம் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்குள் போனேன். பெருமாள் படத்துக்குப் பின்னால் இருந்த அந்த ஓலைச் சுவடியை எடுத்துக்கொண்டு திரும்பியபோது மாமா பார்க்கிறாரா என்று கவனித்தேன். நல்லவேளை, அவர் அம்மாவின் அறைக்குள் இருந்தார். நான் உள்ளே வந்ததையோ, சுவடியை எடுத்துக்கொண்டு போனதையோ பார்க்கவில்லை. அந்த வரை நல்லது என்று எண்ணிக்கொண்டு வேகமாக வெளியே வந்தேன். சொரிமுத்துவின் முன்னால் அந்தச் சுவடியை வைத்தேன்.

அந்த நாய் அந்தச் சுவடியை ஒருமுறை முகர்ந்து பார்த்தது. பிறகு பின்னங்காலை முன்னால் கொண்டுவந்து அதை நகர்த்தியது.

‘இதில் என்ன எழுதியிருக்கிறது?’ என்று வினய் கேட்டான்.

‘அவன் என்ன சொல்லிவிட்டுப் போனானோ அதுதான்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘அதுதான் என்ன?’

‘உங்கள் வம்சத்தின் சரித்திரம்’.

‘நாலு வரி சரித்திரமா?’

‘ஆம். இதை விரித்தால் நான்கு நாள் நிறுத்தாமல் விளக்கம் சொல்லலாம்’.

‘எங்கே சொல்லுங்களேன்?’

‘எதற்கு?’

‘சும்மா தெரிந்துகொள்ளத்தான்’.

‘தெரிந்து என்ன செய்யப் போகிறாய்?’

‘ஒன்றுமில்லை’.

‘அதற்குத் தெரியாமலும் இருக்கலாமே?’

‘இதென்ன விளையாட்டு’ என்று வினோத் கேட்டான்.

‘ஒரு விளையாட்டுமில்லை. எனக்கு அதிகாரமுள்ளவற்றை என்னால் செய்ய முடியும். இல்லாததைப் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை’.

‘அப்படியானால் யார் இதைப் படித்துச் சொல்ல முடியும்?’

‘எதற்கு என்று கேட்டேன்’.

அதற்குமேல் அந்த நாயோடு வாதம் புரிவது வீண் என்று தோன்றிவிட்டது. நான் சுவடியை எடுத்துக்கொண்டேன். சட்டென்று வினய்தான் கேட்டான், ‘சரி, நீங்கள் வந்த காரணம்?’

நாய் இப்போது எழுந்து நின்றது. ‘இதைத்தான் நீ முதலில் கேட்டிருக்க வேண்டும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘தவறுதான். இப்போது சொல்லுங்கள்’.

‘இரு மரணங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று கொலையாகிவிடக் கூடாது என்று சொல்லத்தான் வந்தேன். அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய் சட்டென்று சொரிமுத்துவைத் தன் கைகளில் ஏந்தித் தூக்கினான். முகத்துக்கு நேரே வைத்துக்கொண்டு உற்றுப் பார்த்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. உடல் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. ‘என்ன?’ என்று நாய் கேட்டது.

‘எனக்கு உறவில்லை. பாசம் இல்லை. பந்தங்கள் கிடையாது. கடமை என்று ஒன்றுமில்லை. இலக்கு என்று நான் நினைத்துக்கொண்டிருந்ததும் இப்போது இல்லை. பிறப்பைக் குறித்தோ மரணத்தைக் குறித்தோ நான் சிந்திப்பதுமில்லை. இரண்டும் ஒன்றுதான். வலி தரக்கூடியது. எனக்கு இன்றுவரை வேறாகத் தெரிவதெல்லாம் ஒன்றுதான். என்றோ நீங்கள் என்னிடம் கொடுத்தனுப்பிய அந்த எள்ளுருண்டை. அதை மீட்க முடிந்துவிட்டால் எனக்குப் போதும்’ என்று சொன்னான்.

சொரிமுத்து இரு விநாடிகள் அவனை உற்றுப் பார்த்தான். பிறகு சட்டென்று துள்ளிக் குதித்துக் கீழே இறங்கியது. ‘உன் இடது கைக்கட்டை விரலில் இருந்து நீ இறக்கிவிட்ட இடாகினி வேறு யாருமல்ல. சித்ராவேதான்’ என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிப்போனான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT