யதி

159. தாயும் ஆனவள்

பா. ராகவன்

‘பட்டாச்சாரியார் பின்னால் வருகிறாரா?’ என்று நான் கேசவன் மாமாவைக் கேட்டேன்.

‘ஏன்?’

‘தாயார் சன்னிதி பூட்டியிருக்கிறதே’.

‘வரச் சொன்னால் வருவார்’ என்று சொன்னார்.

‘நீங்கள் வரச் சொல்லவில்லையா?’

அவர் என்னைச் சற்று சந்தேகத்துடன் பார்த்தார். ‘சொல்லட்டுமா?’' என்று கேட்டார். ‘பரவாயில்லை இருக்கட்டும்’ என்று வினய் சொன்னான்.

‘இல்லை, வரச் சொல்லுங்கள்’ என்று நான் தீர்மானமாகச் சொன்னேன். மாமா என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.

‘உனக்குத் தாயாரைச் சேவிக்க வேண்டுமா?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லை. தாயார் சன்னிதிக்குள்ளேதான் நீ உன் மானசீகத்தில் சித்ராவை இழுத்துச் சென்று முத்தமிட்டதாகச் சொன்னாய். எனக்கு அந்த இடத்தை எட்டியாவது பார்க்க வேண்டும்’.

அவன் சிரித்தான். ‘எதற்கு?’ என்று கேட்டான்.

‘உனக்குத் தாயாரும் சித்ராவும் வேறு வேறல்ல என்பதை நான் அறிவேன். பேயாக நீ பார்த்தவளைத் தாயாகப் பார்க்க முடிகிறதா என்றொரு சிறு இச்சை’.

‘என் மானசீகத்தில் நான் அவளைத் தொட்டபோது அவளைத் தாயாகக் கருதியதில்லை. அந்தத் தொடுதல் நிகழ்ந்ததனால்தான் அவள் எனக்குத் தாயும் ஆனாள்’.

கேசவன் மாமா, பட்டாச்சாரியாரை அழைத்து வந்து சன்னிதியைத் திறக்கச் சொன்னார். அவர் என்னை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். ‘இவர்தான் கடைசியா?’ என்று கேட்டார்.

‘ஆமா. விமல். இப்ப விமலானந்தனாம்’.

‘சன்னியாசிகள் ஈசியா பேர் செலக்ட் பண்ணிண்டுடறா’ என்று பட்டர் சொன்னார்.

‘பெயரில் தொடங்கி அனைத்திலும் ஆனந்தம் சேர்ந்தால் அதுதான் சன்னியாசம்’ என்று சொன்னேன். ‘வாங்கோ’ என்று சொல்லிவிட்டு, அவர் சன்னிதிக்குள் சென்று எரிந்துகொண்டிருந்த விளக்கைத் தூண்டிவிட்டு, நெய் ஊற்றி, மேலும் சிறிது வெளிச்சம் சேர்த்தார்.

மிகச் சிறு வயதுகளில் நான் பார்த்த கோமளவல்லித் தாயார் அப்படியேதான் இருந்தாள். அவள் சன்னிதியும் அதே கறுப்பும் அழுக்குமாகத்தான் இருந்தது. பட்டர் அர்ச்சனையை ஆரம்பித்தார். நான் தாயாரையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறு வயதில் நான் அம்மாவுக்கு இந்தத் தாயாரின் முகஜாடை இருப்பதாக நினைத்திருக்கிறேன். பிறகு பள்ளிக்கூடத்தில் என்னுடன் படித்த டெய்சி ராணி என்ற பெண்ணுக்கு இதே முகம் அமைந்திருப்பதாகத் தோன்றியிருக்கிறது. வெகு காலம் கழித்து மடிகேரியில் சந்தித்த ஒரு பெண்ணிலும் நான் கோமளவல்லியைக் கண்டிருக்கிறேன். சிலைகள் உருப்பெற்று எழும் தருணங்கள் மிகவும் அபூர்வமானவை. அது பிரமைதான். ஆனால் அது அளிக்கும் பரவசம் நிகரற்றது. எங்கோ பார்த்தாற்போலத் தெரிகிறதே என்று உள் மனத்தில் ஒரு புள்ளியாகத் தோன்றும் எண்ணம் பரபரவென்று விரிவடைந்து எங்கே, எங்கே என்று தேடித் திரிந்து இறுதியில் இந்தச் சன்னிதிக்குள் வந்து முட்டிக்கொண்டு நிற்கும்.

‘காண்கிற அனைத்து உருவங்களும் இதுவாகத் தோன்றினால் அலைச்சல் நின்றுவிடும்’ என்று வினய் சொன்னான். நான் புன்னகை செய்தேன். பட்டர் அர்ச்சனையை முடித்துவிட்டுக் கற்பூரம் காட்டினார். குங்குமம் கொடுத்தார். கிளம்பும்போது, ‘இருப்பேளோல்யோ?’ என்று கேட்டார். இதற்கும் நான் வெறுமனே புன்னகை மட்டும் செய்தேன். கேசவன் மாமா, பட்டர் கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பியபோது, அவரோடு ஏதோ பேசிக்கொண்டு நகர்ந்து போனார். அநேகமாக, நாளைய தினத்தைக் குறித்த முன்னறிவிப்பாக இருக்கும். நான் வினய்யுடன் கோயிலைச் சுற்றிக்கொண்டு வாசலுக்கு வந்தபோது, கங்காதரன் வேக வேகமாக முன் மண்டபம் தாண்டி வந்துகொண்டிருக்கக் கண்டேன். வினோத் அப்போதும் கோயில் வாசலிலேயே பத்மா மாமியுடன் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்தேன். மாமியைச் சுற்றி இப்போது நான்கைந்து பெண்கள் சூழ்ந்திருந்தார்கள். மாமி அவர்களிடமெல்லாம் வினோத்தைக் காட்டி அவன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் வைணவத் துறவிதான். ஆனால் அது திருவிடந்தை அறியாத வேறொரு வைணவம். ‘ஶ்ரீசூர்ணம் இட்டுக்க மாட்டேளா?’ என்று ஒரு மாமி வினோத்திடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் சிரித்து சமாளித்துக்கொண்டிருந்ததை ரசித்தபடியே நான் அவனைத் தாண்டி வெளியே போனேன்.

வேகமாக நெருங்கிய கங்காதரன், ‘உங்கண்ணன் வந்துட்டானா?’ என்று என்னிடம் கேட்டான்.

‘இல்லை’ என்று சொன்னேன்.

‘எப்ப வரான்?’

‘யாருக்குத் தெரியும்?’ என்று வினய் சொன்னான்.

‘அவன் வந்ததும் எனக்குத் தகவல் சொல்லு’ என்றான் கங்காதரன்.

‘அப்படி என்ன அவசரம்?’ என்று நான் கேட்டேன்.

‘சாமி கேட்டுச்சி. காலைலேருந்து ரெண்டு மூணு தடவ கேட்டுருச்சி’.

‘எதற்கு? இவனுக்காவது உன் சாமியிடம் கஞ்சா வாங்கும் காரணம் இருந்தது. அவனுக்கு என்ன இருக்கப் போகிறது?’

‘எனக்குத் தெரியல சாமி. சாமி சொன்னதத்தான் சொன்னேன்’ என்று என்னையும் சாமியாக்கிச் சொன்னான். நான் சிரித்துவிட்டேன்.

‘கங்காதரா, நீ என்னை சாமி என்றெல்லாம் குறிப்பிட வேண்டாம். விமல் என்றே அழைக்கலாம்’.

‘வாய் வரமாட்டேங்குதே. டிரெஸ்ஸு படுத்துது’ என்று அவன் சொன்னான்.

நான் வினய்யைப் பார்த்தேன். சிரித்தேன். அவனும் சிரித்தான். ‘அப்ப என் டிரெஸ்ஸு?’ என்று கேட்டான்.

‘இது டிரெஸ்ஸா? கோவணத்தவிட கொஞ்சம் பெரிசா இருக்குது. அவ்ளதான்’ என்று சொன்னான். ஏதோ நினைத்துக்கொண்டவனாக மீண்டும் ஒருமுறை அண்ணா வந்ததும் தனக்குத் தகவல் சொல்லும்படிக் கூறிவிட்டு, தன் வீட்டு முகவரியையும் சொல்லிவிட்டுப் போனான்.

எனக்கு வியப்பாக இருந்தது. அண்ணாவின் வருகையை இத்தனை பேர் எதிர்பார்க்கிறார்கள் என்றால், அம்மாவின் மரணம் இவ்வளவு பேருக்கும் முன்னறிவிக்கப்பட்டிருக்குமா? அப்படியென்ன அவளது சாவுக்குச் சிறப்பு?

‘சொரிமுத்து இங்கே வந்ததை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை’ என்று வினய் சொன்னான்.

‘யார் கண்டது? சம்சுதீன் பாயும் இங்கேயே எங்காவது சுற்றிக்கொண்டிருக்கலாம்’.

‘தவறு செய்துவிட்டோம். சொரிமுத்துவிடமே சம்சுதீனைப் பற்றிக் கேட்டிருக்கலாம்’.

‘உனக்கு அவரைப் பழக்கம் உண்டா?’

‘பெரிய பழக்கமெல்லாம் இல்லை. சொரிமுத்து சொல்லக் கேள்விதான். ஆனா உனக்குப் பழக்கம் உண்டல்லவா?’

‘ஆம். நானும் வீடு தங்கமாட்டேன் என்று முதல் முதலில் சொன்ன மனிதர்’.

சட்டென்று வினய் ஏதோ நினைத்துக்கொண்டு, ‘டேய், டேய் கங்காதரா’ என்று கத்திக்கொண்டே அவன் போன வழியில் ஓடத் தொடங்கினான். சரி போய்விட்டு வரட்டும் என்று நான் வினோத் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தேன். இப்போது அங்கே மேலும் ஏழெட்டு மாமிகள் சேர்ந்திருந்தார்கள்.

‘உள்ளே போய் உக்காரலாமே மாமி?’ என்று யாரோ ஒரு கிழவி, பத்மா மாமியிடம் சொன்னாள்.

‘பரவால்லே. இங்கேயே இருக்கேன்’.

‘இது வாசலை அடைச்சிண்ட மாதிரி இருக்கே’.

‘அதனால பரவால்லே. என்ன பெரிய கூட்டம் அம்மறது இங்கே? இருட்டற நாழிக்கு ரெண்டு மூணு பேர் வந்தாலே அதிகம்’ என்று பத்மா மாமி சொன்னாள். அவளது தீர்மானத்தின் வலுவை நான் மிகவும் ரசித்தேன். தனது உள்ளுணர்வின் அடிச்சுவட்டில் நடந்துகொண்டிருக்கிற பெண்மணி. இன்று அவள் அம்மாவைப் பார்க்க வந்தபோதுதான் மனத்தில் பட்டிருக்க வேண்டும். தனது தினங்களும் எண்ணப்படுவதை அவள் ஒரு தரிசனமாக உணர்ந்திருக்கக்கூடும். எனக்கென்னவோ அம்மாவும் அவளும் பேசி வைத்துக்கொண்டு இறுதி தினத்தைத் தீர்மானித்திருக்கக்கூடும் என்று தோன்றியது. பிரச்னை ஒன்றுமில்லை. மாமிக்குக் கொள்ளி போடத் தயார் என்று ஏற்கெனவே வினோத் சொல்லியிருக்கிறான்.

நான் சட்டென்று மாமியிடம், ‘நீங்க அம்மாட்ட கடேசியா எப்ப பேசினேள்?’ என்று கேட்டேன்.

‘ஏன் பேசாம என்ன? இன்னிக்கு உங்காத்துக்கு வந்தப்போகூட பேசினாளே?’

நான் வினோத்தைப் பார்த்தேன். அவன் அமைதியாக இருந்தான்.

‘பேச்சு போயிடுத்துன்னு மொத்தமா சொல்லிட முடியாது பாத்துக்கோங்கோ. அப்பப்ப ரெண்டொரு வார்த்த பேசறா. சட்டுனு கண்ண மூடிண்டுடறா. உள்ளுக்குள்ள என்ன பண்றதோ என்னமோ, யாருக்குத் தெரியும்?’

‘சரி. இன்னிக்கு என்ன பேசினா?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘பிள்ளைகள்ளாம் வந்திருக்கான்னு சொன்னா. பாத்தேன் மாமின்னேன். எழுந்துபோய் ஒருவாய் சாத்துஞ்சாம் பண்ணிப் போட முடியாம இருக்கேனேன்னா. அதுக்கு என்ன பண்ண முடியும் மாமின்னேன். மூத்தவன் வந்தான்னா கண்ண மூடிண்டுடுவேன்னு சொன்னா’.

நான் வினோத்திடம், ‘போகலாமா?’ என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. மாமியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பேசிக்கொண்டிருந்த மற்ற பெண்கள் உள்ளே போய்விட்டு வந்துவிடுவதாகச் சொல்லிக்கொண்டு போனார்கள். நான் மாமியின் அருகே அமர்ந்தேன். அவள் கையைத் தொட்டேன். அவள் பாசமுடன் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

‘முடிவு பண்ணிட்டேளா?’

‘ஆமா? பின்னே? இப்பத்தான் இவர்ட்டே சொல்லிண்டிருந்தேன்’ என்று வினோத்தைக் கைகாட்டினாள்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என் சிறு வயதுகளில் எட்டு முப்பது காண்டீபன் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் கூட்டம் ஒன்று இருந்தது. பெரும்பாலும் காய்கறி வியாபாரிகள். முட்டை வியாபாரிகள். உப்பு லோடு எடுத்துச் செல்கிற சிறு வணிகர்கள். எட்டு முப்பதுக்கு காண்டீபன் பஸ் வந்தே தீரும் என்று நம்பி சரக்கை எடுத்துக்கொண்டு கேளம்பாக்கம் முருகைய நாடார் கடை வாசலுக்கு வந்து நிற்பார்கள். அதற்கு முந்தைய ஏழு நாற்பது வண்டியோ, அதனை அடுத்த ஒன்பது இருபது வண்டியோ சரக்கு ஏற்றாது. எட்டு முப்பது சர்வீஸ் மட்டும்தான் சரக்குகளுக்கானது. எத்தனை எத்தனை வருடங்கள்! மழையோ புயலோ, சாலை சரியாக இருக்கிறதோ இல்லையோ, வழியில் ஏதேனும் கலவரம் என்று யாராவது சொன்னாலுமேகூட எட்டு முப்பது காண்டீபன் வராமல் போகாது. சரக்குகளை ஏற்றாமல் செல்லாது. காண்டீபன் பஸ் சர்வீஸ் செயல்பட்டுக்கொண்டிருந்த வரை, பிராந்தியத்தில் சரக்கு வாகனம் என்ற ஒன்று நுழைந்து நான் கண்டதில்லை. அப்படியொரு நம்பிக்கை மக்களுக்கு அந்தப் பேருந்தின் மீது இருந்தது.

அப்படியொரு நம்பிக்கையல்லவா பத்மா மாமிக்குத் தனது மரண வாகனத்தின் மீது உள்ளது?

‘சரி சொல்லுங்கோ. எப்போ?’ இம்முறை நான் கேட்டேன்.

மாமி பதில் சொல்லும் முன் வினோத் எழுந்து என்னைத் தனியே அழைத்துச் சென்றான்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘விடு. அதைப்பற்றி அவளிடம் பேசாதே’.

‘ஏன்?’

‘அவளை இன்றிரவு நான் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவேன்’.

‘யார் வீட்டுக்கு?’

‘அவள் வீட்டுக்குத்தான்’.

நான் மாமியை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். ‘வருவாள் என்று தோன்றவில்லை’ என்று சொன்னேன்.

‘வருவாள்’ என்று வினோத் சொன்னான். நான் புன்னகை செய்தேன். ‘சரி முயற்சி செய்து பார்’ என்று சொல்லிவிட்டு, வினய் வருவதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT