யதி

129. மருந்து

பா. ராகவன்

நள்ளிரவு வரை நாங்கள் செல்லியம்மன் கோயில் வாசலிலேயேதான் கிடந்தோம். எழுந்து வீட்டுக்குப் போகவே தோன்றவில்லை. கோயில் வாசலில் கால் நீட்டி உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் மூன்று பரதேசிகள் யார் என்று விசாரிக்க அந்தப் பக்கம் யாரும் வரவும் இல்லை. பூசாரி கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கிளம்பும்போது எங்களைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினார். என்ன நினைத்தாரோ, அருகே வந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போய்விட்டார். வினய் நெடு நேரம் அண்ணாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறானோ என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் திரும்பத் திரும்ப எனக்குத் தோன்றியது இதுதான். வினய் ஒரு விதத்தில் அண்ணாவைக் காட்டிலும் பெரிய சன்னியாசி. தெரிந்தும் தெரியாமலும் அவன் செய்த தவறுகள் நிறைய இருக்கலாம். ஆனால் அனைத்திலிருந்தும் அவனால் மிக எளிதாக வெளியேறிவிட முடிந்திருக்கிறது. இதை ஏன் அவனால் உணரமுடியவில்லை?

‘இல்லை. என்னால் பெண்ணிலிருந்து வெளியேற முடியவில்லையே?’ என்று அவன் சொன்னான்.

‘தினமும் இன்பம் துய்ப்பவன் போலல்லவா பேசுகிறாய்?’

‘இதுவரை முப்பது முறை நான் புணர்ந்திருக்கிறேன். ஆனால் அந்த நினைவு இப்போதுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது’.

‘அது பரவாயில்லை. இப்போது ஒரு பெண் அகப்பட்டால்?’

‘நிச்சயமாக ஏறிட்டுப் பார்க்கமாட்டேன்’.

‘அதைத்தான் சொல்கிறேன். நீ முப்பது முறை பார்த்துவிட்டதால்தான் இது உனக்கு சாத்தியமாகிறது. ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். தப்பித்தவறி வினோத் ஒரு பெண்ணிடம் அகப்பட்டுக்கொண்டால் கிழவனாகும்வரை விடமாட்டான்’.

வினோத்துக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை. என்ன சொல்லி என் வாயை அடைக்கலாம் என்று யோசித்து, ‘நீ சன்னியாசியோ இல்லையோ, நீ ஒரு சரியான வைஷ்ணவன்’ என்று சொன்னான்.

நான் சிரித்துவிட்டேன். ‘சேச்சே. நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போகும்ரை சுகபோகம் அனுபவித்துவிட்டு சன்னியாச ஆசிரமத்தை ஏற்பது எனக்கு உடன்பாடல்ல. நடு வயதுக்குள் அனைத்தையும் ருசித்து முடித்துவிட வேண்டும்’ என்று சொன்னேன்.

‘ஒன்று கவனித்தாயா? நாம் நான்கு பேருமே வைணவக் குடும்பத்தில் பிறந்து வைணவத்தை விட்டு வெகுவாக விலகி வந்துவிட்டோம்!’

‘ஆம் வினோத். எனக்கு உட்காரும்போதுகூட சாய்ந்து உட்காரப் பிடிக்காது. முதுகு வலிக்கும்வரை நேராக உட்கார்ந்துவிட்டு, வலிக்க ஆரம்பிக்கும்போது படுத்துவிடுவேன்’ என்று சொன்னேன்.

‘சரி நாம் எப்போது வீட்டுக்குப் போவது?’ என்று வினய் கேட்டான்.

‘என்ன அவசரம்? விடியட்டுமே?’ என்று வினோத் சொன்னான். ஒரு முழு நாள் கழிந்து அடுத்த நாள் இரவுதான் அம்மா காலமாவாள் என்று அவன் சொல்லியிருந்ததை நானும் எண்ணிக்கொண்டேன். இரு நாள் முன்னதாக வீட்டுக்குப் போவதற்கு என்னவோ போல இருந்தது. பாசம் அல்லது அதைப் போன்ற எந்த ஒரு உணர்வும் மனத்தில் எட்டிப் பார்க்கவில்லை என்பது நிம்மதியாக இருந்தது. வினய், வினோத் இருவருமே அப்படித்தான் சொன்னார்கள். என் கவலையெல்லாம் ஒன்றுதான். ஒரு மரணத்தை அருகே இருந்து வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதை இந்த உலகம் ஒருபோதும் விரும்பாது. ஒரு துளி கண்ணீரையாவது அது கேட்கும். நான் கண்ணீருக்கு எங்கே போவேன்?

‘நமக்குச் சேர்த்து கேசவன் மாமா அழுவார் கவலைப்படாதே’ என்று வினய் சொன்னான்.

‘ஆம். அவர் நம்மை நினைத்தும் அழுவார்’ என்றான் வினோத்.

‘நல்ல மனிதர். சுத்த ஆத்மா. அழுதுவிட்டுப் போகட்டும். நாம் ஏன் இங்கே உட்கார்ந்திருக்க வேண்டும்? சிறிது தூரம் நடந்து கடற்கரைக்குப் போய்விடலாமே?’ என்று கேட்டேன். இருவரும் எழுந்துகொண்டார்கள். ஆளரவமற்ற சாலையில் நாங்கள் மூவரும் கோவளம் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழி முழுதும் என்னென்னவோ பேசிக்கொண்டே போனோம். நாங்கள் பேசுவதற்கு இவ்வளவு இருக்கிறது என்பதே எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. வினோத், மாயாப்பூரில் இருந்த அனுபவங்களைச் சொன்னான். அங்கிருந்து அவனை பெங்களூருக்கு அனுப்பியபோது, கொழும்பில் இருந்து அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டதற்குத் தண்டனையாக ஒரு வாரம் அங்கே யாருமே அவனுடன் பேசவில்லை. பிறகு தலைமை சன்னியாசியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சகஜ நிலைக்கு மீட்டிருக்கிறான்.

‘எங்களுக்கு கிருஷ்ணன் வேறு ஒழுக்கம் வேறல்ல’ என்று வினோத் சொன்னான். பேசியபடி நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது எதிரே கங்காதரன் வந்தான். ‘நீங்க இன்னும் வீட்டுக்குப் போகலியா?’ என்று கேட்டான்.

நான் வெறுமனே சிரித்தேன். ‘நீ எங்கே போய்விட்டு வருகிறாய்?’ என்று வினோத் கேட்டான்.

‘சாமி வரச் சொல்லியிருந்திச்சி. போயிட்டு வர நேரமாயிருச்சி. பஸ்ஸு கிடைக்காம ஒரு லாரி புடிச்சி வந்தேன்’ என்று சொன்னான்.

‘இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனால் உன் மனைவி திட்டமாட்டாளா?’

‘சேச்சே. சாமிய பாத்துட்டு வரேன்னு சொன்னா ஒண்ணியும் சொல்லமாட்டா’.

எனக்கு அந்தச் சாமியைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஒரு நாட்டு வைத்தியராக ஸ்கவுட் ஆசிரியர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலம்தான் எப்படி மனிதர்களை சாமியாக்கிவிடுகிறது!

‘அவர் லேசுப்பட்ட ஆளில்ல பாத்துக்கோ. அவருகிட்டே நூறு கோடியோ, நூத்தம்பது கோடியோ சொத்து இருக்குன்னு ஊருக்குள்ள பேச்சு இருக்குது’ என்று கங்காதரன் சொன்னான்.

சித்த வைத்தியரிடம் நூறு கோடி சொத்தா?

இதைக் கேட்டதும் கங்காதரன் சுவாரசியமாகிவிட்டான். சாமியைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

அவர் நம்ப முடியாத அளவுக்கு நல்ல மனம் படைத்தவர். ஆயிரம் இரண்டாயிரம் என்றாலும் அவன் கேட்கும்போதெல்லாம் பணம் தர மறுக்காத சாமி. அவரது வைத்தியசாலையின் பின்புறக் கூரைச் சரிவில் கிளிக்கூண்டுக்குப் பக்கத்தில் சொருகியிருக்கும் பச்சை நிற சுருக்குப் பையை என்றாவது ஒருநாள் எடுத்துப் பார்த்துவிட வேண்டும் என்று கங்காதரனுக்கு அங்கே போகும்போதெல்லாம் தோன்றும். சாமி அதிலிருந்துதான் பணத்தை எடுக்கும். எப்போது அதில் பணம் வைக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கேட்கும்போதெல்லாம் அதிலிருந்தே எடுக்கும். காது குடையும் பேப்பர்ச் சுருள் மாதிரி சுருட்டி வைக்கப்படும் ஐம்பதுகளும் நூறுகளும்.

சாமிக்குப் பிரம்புக்கூடையில் பணம் வருகிறது என்று ஊருக்குள் ஒரு பேச்சு இருக்கிறது. யார் கொண்டுவருகிறார்கள் என்று யாருக்கும் தெரிந்ததில்லை. யாரிடமிருந்து வருகிறது என்றும் தெரிந்ததில்லை. வைத்தியசாலையில் அவன் பிரம்புக்கூடைகளையும் பார்த்ததில்லை. அகன்ற விசாலமான காரை பூசிய வீடு. முன்பக்கத்துத் தாழ்வாரத்தில்தான் சாமி இருக்கும். செப்பும் தாமிரமும் பூசிக்கொண்டு அதனைச் சுற்றியிருக்கும் கிண்ணங்களெல்லாம் உண்மையில் தங்கக்கிண்ணங்கள் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. அதுவும் ஊர்ஜிதமாகாத வதந்திதான். சாமி அவற்றில் கலர் கலராக மருந்துகளைக் குழைத்து வைத்துக்கொண்டு வருகிறவர்களுக்கெல்லாம் கண்ணை மூடி மந்திரம் சொல்லி ஆ திறக்கச் சொல்லி வாயில் ஒரு ஸ்பூன் விடும். சிஷ்யர்கள் இருக்கிறார்கள். வீட்டின் இரண்டாம் கட்டு இருட்டில், பிறவி எடுத்ததே மருந்து இடிக்கத்தான் என்பதுபோல் எப்போதும் இடித்துக்கொண்டிருக்கிற பையன்கள். சாமி அவர்களுடன் அதிகம் பேசி கங்காதரன் பார்த்ததில்லை. அவர் மூலிகை பறிக்க ஏதாவது மலைப் பகுதிக்குக் கிளம்பிப் போகும்போது, சிஷ்யர்கள் உலகைப் பார்க்க வருவார்கள். அகப்படும் சந்துகளில் ஒதுங்கி நின்று அவசரமாக சொக்கலால் ராம்சேட் பீடி குடிப்பார்கள். நாலு இழுப்பு இழுத்துவிட்டு, கற்பூரவல்லி இலைகள் நாலை மென்றபடி திரும்பி வருவார்கள்.

பறிக்கும் மூலிகைகளை சாமி ஈரத் துணியில்தான் முடிந்து எடுத்து வரும். வைத்தியசாலையின் கம்பியடித்த முற்றத்தில் அவற்றை மொத்தமாகக் கொட்டி, இனம் பிரித்துக் காயவைக்கும். மருந்து இடிப்பது ஒரு வேள்வி என்று அடிக்கடி சொல்லும். ஒருவேளை சாமி ரகசியமாக கஞ்சா பயிரிட்டு விற்கிறதோ என்று கங்காதரனுக்கு அடிக்கடி தோன்றும். வைத்தியசாலைக்குப் போகும்போதெல்லாம் மூலிகைகளை உற்று உற்றுப் பார்ப்பான். எடுத்துக் கசக்கி முகர்ந்து பார்ப்பான். ஓரிரு சமயங்களில் கையில் கொஞ்சம் அள்ளி வந்து தனியே பிரித்தும் ஆராய்ந்திருக்கிறான்.

இன்றுவரை எந்த யூகமும் சாமி விஷயத்தில் மெய்யென்று நிரூபணமானதில்லை.

கங்காதரன் தன்னிஷ்டத்துக்குப் பேசிக்கொண்டே எங்களோடு நடந்து வந்தான். இன்றிரவு நிச்சயம் அவனும் வீடு போய்ச் சேரப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. விடிந்ததும் தனக்கு நிச்சயமாக சாமியை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று வினய் அவனிடம் கேட்டுக்கொண்டான்.

‘அதுக்கென்ன, போலாம். ஆனா எதுக்கு?’

‘எனக்கு கஞ்சா வேண்டும்’ என்று வினய் சொன்னபோது, கங்காதரன் மிரட்சியுடன் அவனைப் பார்த்தான்.

‘பயப்படாதே. கொஞ்சம் போதும்’.

‘அவரு அதெல்லாம் வெச்சிருக்கறதில்லைன்னுதான் நினைக்கறேன்’.

‘அது பரவாயில்லை. ஆளைப் பார்த்தால் அவரிடம் உண்டா இல்லையா என்று நான் கண்டுபிடித்துவிடுவேன்’ என்று வினய் சொன்னான்.

‘அதெப்படி கண்டுபிடிப்பே? எத்தினியோ வருசமா நான் சாமிகூட இருக்கேன். அவருக்குப் பணம் எங்கேருந்து வருதுன்னே என்னாலயே கண்டுபிடிக்க முடிஞ்சதில்ல தெரியுமா?’

‘அப்படியா?’

‘இதக் கேளு. ஒருக்கா செல்லியம்மன் கோயில் பூசாரி, சாமியோட கணக்குப்பிள்ளைய மடக்கி இந்த சமாசாரத்த கேட்டாப்டி’.

‘எந்த சமாசாரம்?’

‘அட பணம் வர்ற சமாசாரம்தான். முழுக்கக் கேளு’ என்றான். அதற்குமேல் நாங்கள் அவன் பேச்சில் குறுக்கிட விரும்பவில்லை.

சாமிக்கு மருந்து பிசினஸ் தவிர வேறெந்தத் தொழிலும் இல்லை என்று அவரது கணக்குப் பிள்ளை சூடம் அணைத்து சத்தியம் செய்திருக்கிறார்.

‘யோவ், பயப்படாதய்யா. நான் யாராண்டயும் சொல்லமாட்டேன். சும்மா ஒரு இதுக்குதான் கேக்குறது. நாட்ல எந்த மருந்து விக்கிற வைத்தியனத் தேடி காருலயும் தேருலயும் பணக்காரங்க வருதாங்க? சிட்டுக்குருவி லேகியம் வாங்க வாரவன்னாக்கூட திருட்டு முழி காட்டிக்குடுத்துரும். அப்பிடி அதுதான் தேவைன்னு நினைக்கறவன் வேலக்காரன அனுப்பாம அவனேவா காரு ஏறி வரப்போறான்? சாமி என்ன தம்பிய இளுத்தி வெச்சி சர்ஜரி பண்ணி பெரிசாக்கியா விடுதாரு? தபாரு.. நாலாநாள் நைட்டு ரெண்டு மணிக்கு குவாலிஸ்ல ஆறு பேர் வந்தாங்கல்ல? அவுங்க யாரு? அத்த மட்டுமானா சொல்லிடு’.

‘நீ ரெண்டு மணிக்கு அங்க எதுக்கு வந்த?’ என்று கேட்டார் கணக்கப்பிள்ளை.

‘மோகினி புடிச்சி இட்டாந்துச்சி. அதா முக்கியம்? ஆறு பேர் வந்தாங்கல்ல? கையில பெருசா சூட்கேசு இருந்திச்சில்ல? அதுக்குள்ளார பணம்தான?’

அவர்கள் பபுவா நியூகினியாவிலிருந்து வந்த கப்பலில் இருந்து மூலிகை எடுத்து வந்தவர்கள்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டுக் கணக்கப்பிள்ளை திரும்பிப் பாராமல் போய்விட்டார்.

மறுநாள் கங்காதரனைத் தற்செயலாகப் தையூர் சந்தையில் பார்த்தபோது இதைச் சொல்லிப் புலம்பினார்.

‘நாட்ல நல்லவனா ஒருத்தன நடமாட விடமாட்டேங்குறானுக கங்காதரா. சாமி சொக்கத் தங்கம். முப்பது வருசமா அதுங்கூட இருக்கேன். ஒரு தப்புதண்டா கிடையாது. அதிர்ந்து ஒரு வார்த்த பேசாது. தா உண்டு, மருந்துக உண்டு, சூரணம் உண்டு, வெளக்கு வெச்சா திருவருட்பா உண்டுன்னு கெடக்குது. பெரிய எடத்து மனுசங்கள்ளாம் பாக்க வாராகன்னா, அது சாமியோட வித்தைக்கு இருக்கற மகிமை. ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்க. சோறு போடறவனையும் சொஸ்தமாக்குறவனையும் சுத்திவர எப்பமும் ஒரு கூட்டம் இருக்கத்தாஞ்செய்யும். இந்த ரெண்டுதாண்டா எல்லாத்துக்கும் அடிப்படெ. இது புரியல நம்மூரு சோம்பேறிகளுக்கு’.

கங்காதரன் வேறுபுறம் திரும்பிச் சிரித்துக்கொண்டான். முப்பது வருடங்களாகக் கூட இருக்கும் கணக்குப் பிள்ளைக்கு மட்டுமல்ல. சாமிக்கு இரண்டு வருஷம் தள்ளிப் பிறந்த அதன் தம்பிக்குக்கூட சாமியைப் பற்றி ஏதும் தெரியாது. தனக்கு மட்டும் தெரியுமா என்ன? கொஞ்சம் தெரியும். தன்னைப் போல் சிலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருக்கும். அந்தச் சிலர் யார் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் தெரியாது. தனக்கு, தன்னைத் தவிர வேறு யார் யார் என்று இன்றுவரை தெரியாதது போல. யாருக்கும் முழுக்கத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுத்தமாகத் தெரியாது. ரங்கநாத ஆச்சாரிக்குக் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் கண்டுபிடிக்க முடியாது. செவிட்டு முண்டம். கேட்கிற எதுவும் காதில் விழாது. சாமியின் உத்தரவுகளை மட்டும் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போய்விடும். சாமி பெரிய ஆள்தான். ரங்கநாத ஆச்சாரி மாதிரி ஒரு ஆளைத் தனது பர்சனல் அசிஸ்டெண்டாக வைத்துக்கொள்ள வேறு யாருக்குத் தோன்றும்?

கங்காதரன் இன்னும் என்னென்னமோ சொல்லிக்கொண்டே இருந்தான். பிறகு திடீரென்று வீட்டு ஞாபகம் வந்து, ‘நாளைக்கிப் பாப்பம்டா’ என்று சொல்லிவிட்டுப் போனான்.

‘விமல், நீங்கள் இருவரும் விடிந்ததும் வீட்டுக்குப் போய்விடுங்கள். நான் நீலாங்கரை சென்று அந்த சாமியைப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று வினய் சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT