130. நாயர்

உலக சரித்திரத்தில் எந்த ஒரு துறவியும் தன் உறக்கத்தில் வரும் கனவுகளை உண்மையாக எடுத்துச்சொன்னதாக நான் அறிந்ததில்லை. நானும்கூடச் சொன்னதில்லை.

கங்காதரன் கிளம்பிப் போனபின் நாங்கள் நெடுநேரம் கடற்கரை மணலில் படுத்துக் கிடந்தோம். பகல் முழுதும் நல்ல வெயில் அடித்திருக்க வேண்டும். கடல் காற்றின் குளுமையை ஊடுருவி மணல் பரப்பின் வெதுவெதுப்பை உணர முடிந்தது. எனக்கு தர்கா வரை போய் வரலாம் என்று தோன்றியது. கோவளத்தில் கால் வைத்தது முதல் எனக்கு அந்தப் பக்கிரியின் நினைவுதான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. நான் ஓடிப்போவேன் என்று சொன்ன மனிதர். திருவானைக்கா சித்தனுடன் அவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுடன் தொடர்பு இருந்திருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு கண்ணில் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். என்னை, வினய்யை, வினோத்தை நெருக்கமாகக் கவனித்திருக்கிறார்கள். தற்செயலாகவோ, திட்டமிட்டோ பறவை உதிர்த்த எச்சம் போல எங்களை மறந்து போய்விட்டார்கள். ஒருவேளை அவர்கள் விரும்பிய வழியில் நாங்கள் போயிருந்தால் தொடர்பு நிலைத்திருக்குமோ என்னவோ. ஆனால் நாளை என்ன ஆவோம் என்று அறிந்த மனிதர்களுக்கு நாங்கள் இப்படித்தான் ஆவோம் என்பது தெரியாமலா இருந்திருக்கும்?

படுத்திருந்த என் சகோதரர்களை நான் திரும்பிப் பார்த்தேன். இருவருமே நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். வினய் தார்ப்பாய்ச்சிக் கட்டிய அரை வேட்டியுடன் அப்படியே மல்லாக்கக் கிடந்தான். மேல் சட்டை இல்லை. கீழே போட்டுக்கொள்ளச் சொல்லி வினோத் கொடுத்த துண்டைக்கூட மறுத்துவிட்டான். பசியும் அலைச்சலும் தவமும் கஞ்சாவுமாகச் சேர்ந்து அவனது தேகத்தை ஒரு துணி மூடிய எலும்புக்கூடாக்கியிருந்ததைக் கண்டேன். எந்த இடத்திலும் பிடித்துக் கிள்ளமுடியாத உடல். கடல் காற்றின் குளுமை எனக்குக் கணம் தோறும் சிலிர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால் அவன் சிறிதும் அசையாமல் ஒரு பொருளைப் போலக் கிடந்தான். மாறாக வினோத், ஒரு குழந்தையைப் போலச் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். ஒரு காவித் துண்டை மப்ளர் போலக் கழுத்து முதல் தலைவரை காது மறைத்துச் சுற்றிச் சொருகிக்கொண்டு, கைகளை இறுக்கி மூடிக்கொண்டு அவன் உறங்குவதைப் பார்க்கவே சிரிப்பாக இருந்தது. மெல்லிய குறட்டைச் சத்தமும் கேட்டது. உறக்கத்தில் யாரும் துறவியாக இருப்பதில்லை. எப்படி உறங்கும்போது யாரும் ராஜனாகவும் இருப்பதில்லையோ அப்படி. ஆனால் கட்டறுத்துப் பொங்கும் மனம், உறங்கும்போது துறவிகளை எப்படித் துன்புறுத்தும் என்று எளிதில் விளக்கிவிட முடியாது. உலக சரித்திரத்தில் எந்த ஒரு துறவியும் தன் உறக்கத்தில் வரும் கனவுகளை உண்மையாக எடுத்துச்சொன்னதாக நான் அறிந்ததில்லை. நானும்கூடச் சொன்னதில்லை.

உறங்கத் தொடங்குவதற்கு முன்னால் இதை நான் குறிப்பிட்டபோது, ‘அதனால்தான் நான் உறங்குவதற்கு முன் ஆயிரத்தெட்டு முறை கிருஷ்ண ஜபம் செய்துவிட்டுப் படுப்பேன். கனவு வராது’ என்று வினோத் சொன்னான். நான் சிரித்துக்கொண்டேன். கனவில் கண்ட ஓர் ஒளிதான் அவனை இத்தனை தூரத்துக்கு இழுத்துச் சென்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துவிடாதிருக்க எத்தனை மெனக்கெட்டிருப்பான்! அது கனவாக இருந்துவிடக்கூடாது என்று எவ்வளவு நாள் வேண்டிக்கொண்டிருந்திருப்பான்! எனக்கென்னவோ வினோத் கிருஷ்ண பக்தர்களோடு போய்ச் சேர்ந்ததைக் காட்டிலும் ராமலிங்க அடிகளாரிடம் சரணடைந்திருந்தால் இன்னமும் உருப்பட்டிருப்பான் என்று தோன்றியது.

இனி எண்ணி என்ன? அவரவர் ரேகைகளின் அழியாத வழித்தடங்கள் இட்டுச் செல்லும் எல்லைகளின் விளிம்பை நோக்கி ஓடத்தொடங்கி எத்தனையோ காலமாகிவிட்டது. திரும்பிப் பார்க்கவும் நின்று மூச்சு விட்டுக்கொள்ளவும் அவகாசம் இருப்பதில்லை, பெரும்பாலும். பாதையைப் பரிசீலிப்பதற்கு விருப்பம் என்ற ஒன்று யாருக்கும் இல்லை. கிருஷ்ணனிடம் பேரம் பேசி, காமரூபிணியைச் சரிக்கட்ட விரும்புவதாகச் சொன்ன வினய்யின் நேர்மையை நான் மிகவும் ரசித்தேன். அவன் வேறு என்னவாக இருந்தாலும் அவன் வினய்யாக இருக்க முடியாது என்று தோன்றியது. அவன் ஏன் வினய்யாக இருக்கிறான் என்பது வேண்டுமானால் விடையற்ற பெருவினாவாக இருக்கலாம்.

நான் எழுந்துகொண்டேன். உறங்குபவர்களைக் கலைக்க விருப்பமின்றி தர்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எத்தனை வருடங்கள் ஓடியே போய்விட்டன! திருவானைக்காவில் இருந்து நான் அண்ணாவைத் தேடிக்கொண்டு தென்காசிக்குக் கிளம்பும்போதுதான் கடைசியாகக் கோவளம் பக்கிரியை நினைத்தேன். வாழ்வில் அவரைத் திரும்ப நினைவுகூர எனக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. வினய்யைச் சந்தித்தபின், அவனது கதையைக் கேட்டபோதுதான் மீண்டும் அவரது நினைவு வந்தது. மனிதர் நிச்சயம் காலமாகியிருப்பார் என்றுதான் தோன்றியது. என் சிறு வயதில் நான் அவரைச் சந்தித்தபோதே அவருக்கு சொரிமுத்துச் சித்தன் வயதுதான் இருக்கும். அவர் பெயர் சம்சுதீன் என்பதே சொரிமுத்து சொல்லித்தான் எனக்குத் தெரியும். இடைப்பட்ட காலத்தில் அவர் அம்மாவைத் திரும்பச் சந்தித்திருப்பாரா? எங்களைப் பற்றிப் பேசியிருப்பாரா? இதுதான் எங்கள் விதி என்று அவளுக்குத் தெரிவித்திருப்பாரா? அம்மா அதை எப்படி உள்வாங்கியிருப்பாள்?

சராசரிகளின் இயல்பான எழிலைக் கொண்ட குணம்தான் அம்மாவுக்கு. எந்த வகையிலும் இன்னொரு பெண்ணில் இருந்து அவளை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. மனைவி ஆனதால் கடமைகள். அம்மா ஆனதால் பாசம். ரேஷன் கார்டில் குடும்பத் தலைவி ஆனதால் பொறுப்புகள், சுமைகள். சுமந்து முடித்து இறக்கி வைத்துவிட்டுப் படுத்துவிட்டாள். இன்றைய தினம் விடிந்து, இருண்டு மீண்டும் ஒருநாள் விடிந்து இருளும்போது போய்ச் சேர்ந்துவிடுவாள். வழியனுப்பி வைப்பதற்கு எத்தனை வழிகள் கடந்து வரவேண்டியிருக்கிறது.

தர்கா அருகே நான் போய்ச் சேர்ந்தபோது காற்றின் வேகம் கூடியிருந்தது. யாருமற்ற மணல் பரப்பில் இருளில் கரைந்து நடப்பது சுகமாக இருந்தது. ஒன்றிரண்டு நாய்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஏனோ இல்லை. எனக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. எத்தனையோ இடங்களில் எவ்வளவோ முறை இம்மாதிரி இருளில் தனியே நடந்திருக்கிறேன். எங்கும் வாழும் நாய்கள், எப்போதும் இரவில் நடமாட்டம் கண்டால் குரைக்கும் நாய்கள் ஏனோ என்னைக் கண்டு குரைப்பதில்லை. இது ஒருமுறை இருமுறையல்ல. லட்சம் முறை எனக்கு நடந்திருக்கிறது. எனது சீடர்களே இதை அடிக்கடிச் சொல்லி வியப்பார்கள். எந்த நாயும் குரைக்காது. யாரையும் எச்சரிக்க நினைக்காது. என்னை மிரட்டப் பார்க்காது. இத்தனைக்கும் நான் நாய்களுடன் சிநேகமானவனெல்லாம் இல்லை. யாருக்குமே நான் சிநேகிதனில்லை. என்னைத் தவிர. ஒரு ஆபத்தற்ற உயிரினம் என்று நாய்கள் உணரும் விதத்தில் என் தோற்றத்தில் ஏதோ ஒன்று இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஒரு சமயம் மடிகேரியில் இருட்டில் தெரியாமல் ஒரு நாயை மிதித்தே விட்டேன். அப்போதுகூட அது லேசாக முனகிக்கொண்டு நகர்ந்து ஓடியதே தவிர, பதிலுக்குத் தனது எதிர்ப்பைக் காட்டவில்லை. என் சிறு வயதுகளில் கோவளம் தர்காவுக்கு வரும்போதெல்லாம் அங்கு ஏழெட்டு நாய்கள் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். தர்காவுக்கு வந்துவிட்டுப் போகும் பக்தர்கள், பொறை பிஸ்கட் வாங்கிப் போடுவார்கள். அது இல்லாவிட்டாலும் கடலோரக் கருவாட்டுத் துண்டுகளுக்காக அவை அந்த இடத்தை விட்டு நகரவே நகராது.

எங்கே போய்விட்டன அந்த நாய்களும் அவற்றின் வம்சமும்? நான் தர்காவைச் சுற்றிக்கொண்டு முன்பக்கம் வந்தேன். யாருமில்லை. வெறும் அமைதியும் அதை மூடிய இருளும் மட்டுமே நிறைந்திருந்தது. நான் அங்கே சிறிது நேரம் அமரலாம் என்று நினைத்தேன். ஏனோ சம்சுதீனின் நினைவு திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. அவர் ஒரு சித்தர் என்பது இறுதிவரை அந்தப் பிராந்தியத்தில் வசித்த யாருக்கும் தெரியாது என்பது வியப்பாக இருந்தது. ஒரு தர்கா வாசல் பிச்சைக்காரனாகவே இருந்துவிட்டுப் போயிருக்கிறார். ஒருவேளை நான் ஊரைவிட்டுப் போன பிற்பாடு தெரிய வந்திருக்கலாம். அநேகமாக அது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. அம்மாவே அவரை வயிற்று வலிக்கு மந்திரிக்கும் பக்கிரியாக மட்டும்தான் எண்ணியிருந்தாள். வீட்டுக்குப் போகும்போது அம்மாவிடம் சம்சுதீனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒருவேளை அம்மா பேசும் நிலையில் இருந்தால் நிச்சயம் அவரைப் பற்றிச் சொல்வதற்கு அவளிடம் கொஞ்சமாவது இருக்கும் என்று தோன்றியது.

ஒரு பத்து நிமிடங்கள் அங்கு அமர்ந்திருந்துவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தேன். இப்போது என்னெதிரே ஒரு நாய் வந்தது. நான் புன்னகை செய்தேன். அப்படியே அசையாது நின்றேன். அதுவும் என் எதிரே வந்து நின்றது. என்னை உற்றுப் பார்த்தது. இருளில் அந்த நாயின் கண்கள் கருநீலத்தில் பளபளத்தன. ‘நான் போகவேண்டும், வழியை விடு’ என்று சொல்லிவிட்டு நான் நடக்க ஆரம்பித்தபோது, ‘உன் அண்ணன் வந்துட்டானா’ என்று அது கேட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com