யதி

132. கலவரம்

பா. ராகவன்

அதிகாலை ஐந்து மணிக்கு வினய் எங்களை எழுப்பினான். ‘விடிவதற்குமுன் நான் அந்த நீலாங்கரை சாமியைப் போய்ப் பார்த்துவிட விரும்புகிறேன்’ என்று சொன்னான். எங்களுக்கு அதில் பெரிய சுவாரசியம் இல்லை என்பதால் சரி, போய்வா என்று அவனை மட்டும் அனுப்பிவிட்டு, நாங்கள் கடற்கரையிலேயே இருந்தோம். கிளம்பும்போது வினோத் அவனிடம், ‘உண்மையிலேயே உனக்கு கஞ்சா அவ்வளவு அவசியமா?’ என்று கேட்டான்.

‘சொன்னேனே, தவத்தில் இருக்க அது அவசியம். புத்தியை நேர்க்கோட்டில் நிறுத்துவதற்கு’.

அவன் போனபின் வினோத் என்னைப் பார்த்து, ‘அப்புறம் அது எப்படித் தவமாகும்?’ என்று கேட்டான்.

‘என்ன பிரச்னை உனக்கு? மன ஒருமை என்பதுதான் மூலாதாரம். மன ஒருமைக்கு கஞ்சாவைப் பயன்படுத்துவது காலகாலமாக இருந்து வரும் வழக்கம்தானே?’

‘எனக்கு இது புரியவில்லை. இம்மாதிரியான தவங்களை நான் அறிந்ததில்லை. எங்களுக்கு இது கற்றுத்தரப்படவில்லை’ என்று சொன்னான்.

‘பிரச்னையே அதுதான். நீ சொல்லிக் கொடுத்து வளர்ந்த குழந்தை. அவன் காட்டுச்செடியைப் போலத் தானே முளைத்து வேர்விட்டு வளர்ந்தவன். அவனைப் புரிந்துகொள்வது சிறிது சிரமமாகத்தான் இருக்கும்’.

‘எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது’ என்று வினோத் சொன்னான்.

‘பயப்படாதே. அவன் போதைக்காகக் கஞ்சா குடிப்பதில்லை. போதத்தில் திளைக்க அதை ஒரு தொடக்கக் கருவியாகப் பயன்படுத்துகிறான். அவனால் எந்தத் தீங்கும் நேராது’.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, 67தகன நேரத்தில் அவன் போதை மயக்கத்தில் விழுந்துகிடப்பது போன்றதொரு சித்திரம் என் மனத்தில் எழுகிறது. இது மிகவும் கலவரம் அளிக்கிறது’ என்றான்.

‘அப்படியே இருந்தால்தான் என்ன? அம்மா ஒன்றும் எழுந்து வந்து திட்டப்போவதில்லை’.

‘ஆனால் மாமாவால் அதைத் தாங்க முடியாது’.

‘நம்மிடத்தில் இனி அவரால் எதையும் தாங்க முடியும். கவலையை விடு. நாம் எப்போது வீட்டுக்குப் போகலாம்?’ என்று கேட்டேன்.

‘ஆம். போக வேண்டியதுதான். ஐந்து நிமிடம் இருக்கிறாயா? நான் குளித்துவிட்டு காலை ஜபத்தை முடித்துவிட்டு வருகிறேன்?’ என்று கேட்டான். நான் சரி என்று சொன்னதும் அவன் தனது மேல் அங்கியைக் கழட்டி வைத்துவிட்டுக் கடலுக்குள் இறங்கினான். சூரியன் உதிக்கத் தொடங்கியிராத வானம் கருநீலமும் சிவப்பும் கலந்து ஓர் இரவு விளக்கைப் போலச் சுடர்ந்தது. வினோத் அலைகளிடம் தன்னைக் கொடுத்து இங்குமங்குமாகச் சிறிது நேரம் மிதந்துவிட்டுக் கரைக்கு வந்து, ‘நீயும் குளிக்கலாமே?’ என்று கேட்டான்.

‘பழக்கமில்லை’ என்று சொன்னேன்.

‘எது, குளிப்பதா?’

‘கடலில் குளிப்பது. மீண்டும் வீட்டுக்குப் போயும் இரண்டாம் முறை குளிக்க வேண்டுமல்லவா?’

‘ஆனால் இது ஓர் அனுபவமல்லவா?’

‘நீ குளிப்பதைத்தான் பார்த்தேனே. அது போதும்’ என்று சொன்னேன். அவன் சிறிது நேரம் வெறும் உடம்புடன் காற்றில் நின்றான். காய்ந்தபின், ஒரு துண்டால் துடைத்துக்கொண்டு மீண்டும் வேறு உடை அணிந்துகொண்டான். மறக்காமல் கிழக்குப் பார்த்து அமர்ந்து தன் பைக்குள் இருந்து கோபி சந்தனக் கட்டியை எடுத்து, கண்ணாடி பார்க்காமல் சரியாக நடு நெற்றியில் வரைந்துகொண்டான். ‘இன்னும் ஐந்து நிமிடங்கள்’ என்று சொல்லிவிட்டு, கடலைப் பார்த்து பத்மாசனமிட்டு அமர்ந்து கண்மூடி ஜபிக்கத் தொடங்கினான். 

நான் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். இம்மாதிரியான எந்த நியமங்களும் எனக்கு எக்காலத்திலும் இருந்ததில்லை என்பது மிகுந்த ஆசுவாசமாக இருந்தது. அவனது கண்டத்தில் இருந்த துளசி மணிகூட எனக்கு உறுத்தும். விரல்களில் நான் மோதிரம் அணிவதில்லை. மணி மாலைகளைத் தொடுவதில்லை. என் அங்கியின் பாக்கெட்டில் பணமோ, துண்டுக் காகிதமோ, வேறெதுவோ எப்போதும் வைப்பதில்லை. உடலின் சுமையை மீறி இன்னும் எதற்குச் சேர்ப்பது?

ஒரு சமயம் - அந்த நாளை என்னால் மறக்க முடியாது. கர்நாடகத்து அரசியல் பிரமுகர் ஒருவர் எனக்கு ஒரு சிறு கைத்துப்பாக்கியை அன்பளிப்பாகக் கொடுத்தார். 

‘இது எதற்கு?’ என்று கேட்டேன்.

‘வைத்துக்கொள்ளுங்கள். என்றாவது உங்கள் பாதுகாப்புக்கு உதவுமல்லவா? தவிர இது உள்ளங்கை அளவே உள்ள துப்பாக்கி என்பதால் பாக்கெட்டில் போட்டு எடுத்துச் சென்று விடலாம்’ என்று சொன்னார். நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. மிகவும் வற்புறுத்தி அந்தத் துப்பாக்கியை என்னிடம் திணித்துவிட்டார். 

கர்நாடகத்தில் அப்போது ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த தமிழர்களின் குடியிருப்புகளைக் கன்னடர்கள் தேடித் தேடிச் சூறையாடிக்கொண்டிருந்தார்கள். சில கன்னட அரசியல்வாதிகளின் அனுக்கிரகத்துடன் ரவுடிகள் நிகழ்த்திக்கொண்டிருந்த அந்தப் போராட்டத்தின் நிழல் கலவரமாக உருப்பெற்று மடிகேரியில் விழத் தொடங்கியபோது, நான் ஊர் வந்து இறங்கியிருந்தேன். எனது ஆசிரமத்துக்குச் செல்லும் பாதையை அடைத்துவிட்டிருப்பதாகச் சொன்னார்கள். சுற்றுப் பாதையில் போக வேண்டும் அல்லது போலீசார் அமைதியை நிலைநாட்டும்வரை அமைதி காக்க வேண்டும் என்று தெரிந்தது. எனக்கு இரண்டிலுமே விருப்பமில்லாதபடியால், காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். என்னுடன் என் ஆசிரமத் தோழர்கள் இரண்டு பேர் வந்தார்கள்.

பாதி வழி கடக்கும்வரை எந்தப் பிரச்னையும் எங்களுக்கு ஏற்படவில்லை. திடீரென்று எங்கிருந்தோ ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டு ஒரு கூட்டம் முண்டியடித்து ஓடி வந்தது. அவர்களிடம் கனத்த தடிகள் இருந்தன. ஒரு சிலர் அரிவாள் வைத்திருந்தார்கள். அவர்களது கோபாவேசத்தைக் கண்டதும் என்னுடன் வந்த நண்பர்கள் நிலைகுலைந்துவிட்டார்கள். அவர்கள் கன்னடர்கள்தாம் என்றாலும் நான் தமிழன் அல்லவா? சட்டென்று யாராவது ஏதாவது கேட்டால் எனக்கு உடனே கன்னடத்தில் பதில் சொல்ல வராது. தமிழில்தான் ஆரம்பிப்பேன். இரண்டாவது வரியில் என்னால் கன்னடத்துக்குப் போய்விட முடியும் என்றாலும், என் கன்னட உச்சரிப்பே என்னை ஒரு தமிழனாகக் காட்டிக்கொடுக்கக்கூடியது.

‘குருஜி நீங்கள் வாயைத் திறக்காதீர்கள்’ என்றார் ஒரு நண்பர்.

‘மௌன விரதம் என்று சொல்லிவிடுகிறோம்’ என்று இன்னொருவர் சொன்னார்.

‘இதெல்லாம் எதற்கு? நடப்பது நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு நான் அமைதியாக அவர்களை எதிர்கொள்பவன்போல அவர்களை நோக்கியே நடக்க ஆரம்பித்தேன்.

கூட்டத்தில் சிலர் என்னை அறிந்திருந்தார்கள். எத்தனையோ வருடங்களாக மடிகேரியிலேயே வசிப்பவனை உள்ளூர்க்காரர்களுக்கா தெரியாது? அந்தக் கணத்தில் நான் உள்ளூர்க்காரனாக அவர்களுக்குத் தெரிகிறேனா, ஒரு தமிழனாகத் தெரிகிறேனா என்பதுதான் விஷயம். என் நண்பர்கள் மிகவும் அச்சம் கொண்டிருந்தார்கள். ஏதாவது இசைகேடாக நடந்தால் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

நெருங்கிவிட்ட கூட்டம் என் முன்னால் நின்றது. அவர்கள் தமிழகத்துக்கு எதிராகச் சில கோஷங்களை எழுப்பினார்கள். கர்நாடகத் தமிழர்கள் அத்தனை பேரும் உடனே காலி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். என்னைத் தாக்குவதா வேண்டாமா என்பதில் அவர்களுக்குச் சிறு தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கத்தை முற்றிலும் நீக்கிவிட என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

சட்டென்று என் அங்கியின் பாக்கெட்டில் கையைவிட்டு அந்த அரசியல் பிரமுகர் எனக்குக் கொடுத்த துப்பாக்கியை வெளியே எடுத்தேன். அவர்கள் கண்ணுக்குத் தென்படும்படியாக அதை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தேன். பிறகு அதை மலைச் சரிவில் விட்டெறிந்துவிட்டு, அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். இதன்பின் நிகழ்ந்ததுதான் விநோதம். அந்த ரவுடிக் கும்பல் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு, மீண்டும் கோஷம் எழுப்பியபடி என்னைக் கடந்து போக ஆரம்பித்தது.

என் நண்பர்களுக்கு இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. ‘குருஜி, அந்தத் துப்பாக்கியை நீங்கள் அவர்கள் முன் நீட்டியிருந்தால் தலைதெரிக்க ஓடியிருப்பார்கள். ஏன் தூக்கியெறிந்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.

‘எதற்கு அவர்கள் ஓட வேண்டும். நடந்தே போனால் போதாதா?’ என்று பதிலுக்குக் கேட்டேன்.

‘ஆனாலும் ஒரு நல்ல ஆயுதத்தை இழந்துவிட்டீர்கள்’.

‘இல்லையே. அது தன் கடமையைச் செய்துவிட்டல்லவா போனது?’

‘மீண்டும் ஒருமுறை அவர்கள் நம்மை நோக்கி வந்தால்?’

நான் சிரித்தேன். ‘இம்முறை மேலங்கியைக் கழட்டி எறிவேன்’ என்று சொன்னேன். ‘ஒரு துப்பாக்கி இருந்தால் மட்டும்தான் வாழமுடியும் என்றிருந்தால், இயற்கை நம்மைப் படைக்கும்போதே ஒரு துப்பாக்கியுடன் படைத்திருக்கும். இடையில் வந்து சேரும் எதுவும் நிரந்தரமல்ல’ என்று சொன்னேன்.

அன்றிரவு மெக்சிகோவில் இருந்து கேம்போ என்னைத் தொலைபேசியில் அழைத்தான். அவனது ஆயுத உற்பத்தித் தொழிலில் என் மூலமாக நிகழ்ந்த முதலீட்டின் முதல் விளைச்சலாக, இந்திய மதிப்புக்கு ஐந்நூறு கோடி ரூபாய் தயாராக உள்ளதாகத் தெரிவித்தான். அதை எவ்வாறு அனுப்பிவைக்க வேண்டுமென்று கேட்டான். அனுப்பவேண்டாம், அப்படியே மீண்டும் முதலீடாக்கிக்கொள் என்று சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகருக்கும் கையோடு போன் செய்து தகவல் தெரிவித்தேன். அவருக்குத் தேர்தலின்போது பணம் வந்தால் போதும். தேர்தல் வர அப்போது நெடுங்காலம் இருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT