யதி

133. உருண்டு போனவை

பா. ராகவன்

கிழக்கு கடற்கரைச் சாலை என்பது எங்களுக்கு ஒரு வியப்புக்குரிய பாதையாகவும் நம்ப முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் போடப்பட்ட ஒன்றாகவும் தெரிந்தது. கடல் மட்டும் இல்லாது போயிருந்தால், சாலையின் அந்தப் புறத்திலும் அடுக்குமாடிக் கட்டடங்கள் நிறைந்திருக்கும் என்று தோன்றியது. என் சிறு வயதில் அம்மாதிரி தார் போடப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாலைகளை நான் கண்டதில்லை. திருப்போரூரில் இருந்து அடையாறு போகும் பேருந்துப் பாதைகூட, என்றோ தெளிக்கப்பட்ட தாரின் மிச்சங்களை மட்டுமே கொண்டிருக்கும். பெரும்பாலும் குண்டும் குழியுமான சாலைதான். இந்தக் கிழக்கு கடற்கரைச் சாலை இருக்கும் இடம் அப்போது ஒரு பெரிய மண் மேடு. இரு புறமும் சவுக்குத் தோப்புகள் அடர்ந்து நிறைந்திருக்கும். சவுக்கு மரங்களின் இடுக்குகள் வழியே கோலத்துக்கு வைத்த புள்ளிகளைப்போலக் கடல் தெரியும். இது ஒரு பெரிய பிராந்தியமாகும் என்று அன்றைக்கு யாராவது சொன்னால்கூட நம்பியிருக்க மாட்டேன்.

சவுக்குக் காடுகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன என்று வினோத் வருத்தப்பட்டான். கடலை ஒட்டிய நிலப்பரப்பெங்கும் ஏராளமான தனியார் விடுதிகளும் கேளிக்கை அரங்குகளும் ஆக்கிரமித்திருந்தன. மகாபலிபுரத்தை நெருங்க நெருங்க இது இன்னும் அதிகரிக்கும் என்று தோன்றியது. நாங்கள் திருவிடந்தையை நெருங்கியபோது ஊர் முகப்பில் ஒரு பெரிய அலங்கார வளைவு இருப்பது தெரிந்தது. ‘நான் ஊரை விட்டுப் போனபோதுகூட இது இல்லை’ என்று வினோத் சொன்னான். நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழி என்றொரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. வழியெங்கும் ஏராளமான கடைகள் நிறைந்திருந்தன. வெளியூர் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துமிடத்தில் டோக்கன் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ‘பெருமாள் பாப்புலர் ஆகிவிட்டார்’ என்று சொன்னேன்.

‘ஆனால் இந்தக் கோயிலுக்கு ஒரு கோபுரம் கட்டலாம் என்று இன்னும் யாருக்கும் தோன்றவில்லை பார்’ என்றான் வினோத். கரி படிந்த மதில் சுவர் அப்படியே இருந்தது. கோயில் வாசலில் தொல்லியல் துறையின் கல்வெட்டு ஒன்று புதிதாக வைக்கப்பட்டிருந்தது. கிட்டே நெருங்கும்போதே நாலைந்து பெண்கள் மாலைகளையும் அர்ச்சனைத் தட்டுகளையும் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள். நாங்கள் திரும்பிப் பார்த்தபோதுதான் எங்களுக்குத் திருமணம் சார்ந்த பிரார்த்தனை ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தார்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தேன். சிறு வயதில் நான் பார்த்த முகங்களில் நினைவில் இருக்கும் எது ஒன்றாவது யாருடனாவது பொருந்துகிறதா என்று தேடினேன். அவ்வளவு எளிதில் எதுவும் கண்டுபிடிக்கக்கூடியதாக இல்லை. வினோத் புன்னகை செய்தான். அவனுக்கு அது புரிந்தது. ‘மறக்க முடியவில்லை அல்லவா?’ என்று கேட்டான்.

‘நான் எதையும் மறக்க விரும்புவதில்லை வினோத்’ என்று பதில் சொன்னேன்.

வினய் மிகத் தீவிரமாகச் சித்ராவை ஒருதலையாகக் காதலித்துக்கொண்டிருந்த நாள்களில் கோயிலுக்கு வெளியே உள்ள இந்த மண்டபத்துக்குத்தான் அடிக்கடி வந்து உட்கார்வான். சித்ராவின் தோழிகள், அவளது பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் அந்தப் பக்கம் கடந்துபோனாலும் இழுத்துவைத்து ஓரிரு வார்த்தைகளாவது பேசுவான். அப்போது மட்டும் அவன் முகம் புன்னகை பூத்திருக்கும். எனக்கு அது நெடுநாள் சந்தேகம். சித்ராவைக் கூப்பிட்டு வைத்துப் பேசினால்கூடப் பரவாயில்லை. அவளது அம்மாவைத் தேடிப் போய்ப் பேசினான் என்றால் அறிவாளி என்றே சொல்லிவிடலாம். எதற்கு அவளது தோழிகளையும் அடுத்த வீட்டுக்காரர்களையும் குறிவைக்கிறான்?

எனக்கு அது நெடுநாள் புரியவேயில்லை. ஒரு சமயம் வினய்யிடமே இதைக் கேட்டுவிட்டேன்.

அவன் உடனே, ‘நீ எப்ப பாத்தே?’ என்று பதிலுக்குக் கேட்டான்.

‘எத்தனையோ முறை பார்த்தேன். அதுவா முக்கியம்? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்’ என்று விடாப்பிடியாக நின்றேன்.

அன்று வினய் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் சித்ராவின் தோழிகளிடம் சித்ராவைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. ஊர் நிலவரம், படிப்பு நிலவரம், கோயில் உற்சவ விவரங்கள், கேளம்பாக்கம் ராஜலட்சுமி திரையரங்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குறித்த தகவல், தையூரில் யாரோ ஒரு மாமி பாட்டு கிளாஸ் ஆரம்பித்திருக்கும் விவரம், அன்று காலை தினத்தந்தியில் படித்த ராசிபலன், கன்னித்தீவு இம்மாதிரியான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவேன் என்று அவன் சொன்னான்.

‘இதெல்லாம் எதற்கு?’

‘குறிப்பிட்ட காரணம் கிடையாது விமல். அவர்கள் சித்ராவுடன் பேசும்போது நான் சொன்ன தகவல்களில் ஏதேனும் ஒன்று வெளிப்பட்டுவிடும். யார் சொன்னது என்று சித்ரா கேட்டால் என் பெயரைச் சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொருவராக தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் சித்ராவுக்குள் என் பெயரைச் சொருகிக்கொண்டே இருப்பார்கள் அல்லவா? அதற்குத்தான்’.

எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவன் தனது காதலில் அன்று மிகவும் தீவிரமாக இருந்தான். சித்ராவிடமே நேரில் பேசலாமே என்று நான் ஓரிரு முறை சொல்லிப் பார்த்தேன். அவன் அதற்கு மிகவும் தயங்கினான். பிறகுதான் எனக்குப் புரிந்தது. அது தயக்கம்கூட இல்லை. மனத்துக்குள் மட்டுமே அவன் சித்ராவுடன் வாழ விரும்பியிருக்கிறான். அவளை விரும்பியதன் எளிய அடையாளங்களை ஆங்காங்கே தூவிவிட்டு, அதனோடே திருப்தியடைந்திருக்கிறான்.

ஒருநாள், நான் திடுக்கிடும்படியாக ஒன்றைச் சொன்னான். ‘விமல்! நேற்றிரவு நான் சித்ராவின் தாவணியை உருவி எறிந்துவிட்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு கடற்கரையில் நெடுந்தொலைவு உருண்டு சென்றேன். என் நெஞ்சைத் தொட்டுப் பார். அரை மணி நேரம் அவளது மார்பகங்கள் இங்கேதான் புதைந்திருந்தன’ என்று சொல்லித் தன் சட்டையை அவிழ்த்துக் காட்டினான்.

‘உருண்டது தவிர வேறொன்றும் நடக்கவில்லையா?’ என்று நான் கேட்க விரும்பினேன். ஆனால் சட்டென்று ‘சின்னப்பையன் அப்படியெல்லாம் பேசக் கூடாது’ என்று சொல்லிவிடும் அபாயம் இருந்தது. நான் சின்னப் பையனாக இல்லை என்பதை அவன் அறிந்தே இருந்தான். அதனால்தான் சித்ராவைப் பற்றிப் பலமுறை என்னிடம் பேசினான். இருந்தாலும், சில சமயங்களில் நான் அவனது தம்பி என்பதும் வயதில் மிகவும் இளையவன் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்துவிடும்.

இன்னொரு நாள் கோயிலில் தாயார் சன்னிதியின் பின்புறம், சித்ரா அடிப்பிரதட்சிணம் செய்துகொண்டிருந்தபோது அவளை இழுத்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டதாகச் சொன்னான். ‘பத்மா மாமி பெரிசா ஆசாரம் பேசுவாளே.. கிஸ் பண்ணும்போது அவ வாய்ல வெங்காய ஊத்தப்பம் வாசனை அடிச்சிது’ என்று அப்போது சொன்னான்.

ஒரு முத்தத்துக்கு அப்பால் அடித்த வெங்காய ஊத்தப்ப வாசனை வரை அவனால் ஒரு கற்பனை வாழ்வை சிருஷ்டித்து அதற்குள் வாழ்ந்துகொள்ள முடிந்தது.

அப்போதெல்லாம் எனக்கு அண்ணா சொல்லும் கபிலர் கதைகளும் வினய் சொல்லும் சித்ரா கதைகளும் ஒரே ரகமானவையாகவே தோன்றும். இரண்டுமே புனைவுகள். இரண்டுமே சுவாரசியமானவை. இரண்டுமே இருவர் வாழ விரும்பிய வாழ்வு. ஆனால் அது நடக்காது என்று அப்போது நினைத்தேன். அண்ணா எப்படியோ தன் வழியில் அதைக் கண்டெடுத்துச் சென்றுவிட்டான். வினய்தான் வீணாய்ப் போனான்.

எண்ணிப் பார்த்தபோது பெருமூச்சு வந்தது. ‘என்ன?’ என்று வினோத் கேட்டான். ஒன்றுமில்லை என்று சொன்னேன். அவனிடம் இந்தத் தகவல்களைச் சொல்ல வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. சித்ராவே செத்துப் போய்விட்டாள். வினோத் சன்னியாசியாகவே ஆகிவிட்டான். இன்னொரு சன்னியாசி, சித்ராவை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் மனத்துக்குள் கட்டி உருண்டிருக்கிறான் என்று சொல்வதில் என்ன இருக்கிறது? இதை வினய்யே அவனிடம் சொன்னால் பிரச்னை இல்லை என்று தோன்றியது. ஆனால் சொல்லி என்ன ஆகப் போகிறது?

‘சரி, வீட்டுக்குப் போகலாம்’ என்று வினோத் சொன்னான்.

‘போகலாம். தெற்கு வீதியைச் சுற்றிக்கொண்டு போகலாமா?’ என்று கேட்டேன். என்னை மீறிச் சிரித்திருக்கிறேன் போலும். வினோத்தும் புன்னகை செய்தான்.

‘அதற்கென்ன? போகலாம்’ என்று சொன்னான். தெற்கு வீதியில்தான் சித்ராவின் வீடு. இப்போது அங்கே யார் இருப்பார்கள்? சித்ராவின் அம்மா இருந்தால் என் அம்மாவின் வயதுதான் அவளுக்கும். சித்ராவின் மரணத்துக்குப் பின் அந்தக் குடும்பம் என்னவாகியிருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. ஊரைவிட்டே அவர்கள் போயிருக்கலாம். அந்த வீட்டுக்கு வேறு யாரேனும் குடி வந்திருக்கலாம். அவர்களுக்கு நடந்த சம்பவமெல்லாம் தெரியாமலே இருக்கலாம். இருப்பினும் நான் வினோத்திடம், ‘ஒருவேளை அவளது அம்மா உயிருடன் இருந்து, உன்னை அடையாளம் கண்டுகொண்டு சட்டையைப் பிடித்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டேன்.

அவன் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னான், ‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பேன். என்னைக் கல்லால் அடித்துக் கொல்ல நினைத்தாலும் செய்யலாம் என்று சொல்லுவேன்’.

நான் அவனைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டேன். ‘நீ ஒரு நல்ல சன்னியாசி’ என்று சொன்னேன்.

நாங்கள் தெற்கு வீதி வழியே நடக்க ஆரம்பித்தோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT