யதி

134. கட்டங்களின் துரோகம்

பா. ராகவன்

‘என்னால் நம்ப முடியவில்லை விமல். ஊர் உலகமெல்லாம் எவ்வளவோ மாறியிருக்கிறது. ஆனால் திருவிடந்தை மட்டும் அப்படியே இருக்கிறது. கோயில் வாசலில் கண்ட சில கடைகளைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று வினோத் சொன்னான். எங்கள் சிறு வயதில் நாங்கள் பார்த்த தெற்கு வீதி எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது. கரி வழியும் பழைய ஓட்டு வீடுகள். சாலையற்ற சாலை. வழியெங்கும் எருமைச் சாணம். பாதி எரிந்த சைக்கிள் டயர் ஒன்று ஒரு வீட்டு வாசலில் கிடந்தது. அதைச் சுற்றி யாரோ சிறுவன் ஒன்றுக்கு அடித்துவிட்டு ஓடியிருக்கிறான். சம்பவம் நடந்து வெகு நேரம் ஆகியிருக்க முடியாது. நான் வினோத்தைப் பார்த்தேன். அவன் புன்னகை செய்தான்.

சிறு வயதில் நாங்கள் சிறுநீரில் இந்திய வரைபடத்தை வரைந்து பார்ப்பது எங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு. பள்ளிக்கூடத்தில் ஒருநாள் வினோத் அதனைச் செய்தபோது மகாலிங்கம் வாத்தியார் பார்த்துவிட்டார். அன்றைக்கு நான்கு பிரம்புகள் உடைகிற அளவுக்கு அவனுக்கு முழங்காலுக்குக் கீழே அடி விழுந்தது. குறைந்தது நூறு பேர் பார்க்க, அப்படி அடி வாங்கியது அவனுக்கு மிகுந்த துக்கம் அளித்தது. அதில் பல பேர் பெண்கள் என்பது மேலும் அவமானமாக இருந்தது. அன்று மாலை பள்ளி விட்டதும் வீடு திரும்பும் வழியில் ராஜமாணிக்க முதலியார் உப்பு குடோனின் பின்புறம் வினோத் சிறுநீர் கழிக்க ஒதுங்கினான். போனவனைக் காணோமே என்று சில நிமிட இடைவெளியில் நான் அங்கே போனபோது, வினோத் சிறுநீரில் ஓர் உருவம் வரைந்திருந்தான். மீசைதான் சரியாக வரவில்லை. ஆனால் அதைப் பார்த்ததுமே எனக்குப் புரிந்துவிட்டது. ‘பழி வாங்கிட்டேன்!’ என்று அவன் மகிழ்ச்சியுடன் சொன்னான்.

‘பாவம், நல்ல மனிதர். அவரிடம் கற்ற அடிப்படை ஆங்கிலம்தான் இன்றுவரை உதவுகிறது!’

பேசியபடி நடந்துகொண்டிருந்ததால், நாங்கள் சித்ரா வீட்டை தாண்டிச் சென்றுவிட்டதைக் கவனிக்கவில்லை. வினோத்தான் நினைவுபடுத்தினான். ‘அது அந்த வீடல்லவா? வாசலில் இன்னும் அந்தத் திருமண் சங்கு சக்கரப் படம் இருக்கிறது பார்’.

நாங்கள் மீண்டும் அந்த வீட்டை நோக்கித் திரும்பி நடந்தோம். புராதனமான அந்த வீட்டின் ஓட்டுச் சரிவின் கீழே வாசல் கதவின் இரு புறமும் திண்ணைகள் இருக்கும். திண்ணை தொடங்கும் இடத்தில் கையெட்டும் உயரத்தில் விளக்கு மாடங்கள் இருக்கும். பத்மா மாமி எங்கேனும் வெளியே செல்லும்போது வீட்டுச் சாவியை அங்கேதான் வைத்துவிட்டுப் போவாள். மாமாவோ, சித்ராவோ வீட்டுக்கு வந்தால் அங்கிருந்து சாவியை எடுத்துக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போவார்கள். யார் கண்ணிலும் எளிதில் படுகிறபடி சாவியை மாடத்தில் வைத்துவிட்டுப் போவதற்குப் பதில் கதவைப் பூட்டாமலேயே போய்விடலாமே என்று அம்மா ஒரு சமயம் பத்மா மாமியிடம் கேட்டாள்.

‘வெளில கிளம்பினா கதவ பூட்டணுங்கறது பழக்கமாயிடுத்து. மாத்திக்க முடியலே. அப்படியே கள்ளன் பூந்தான்னா, கொள்ளையடிச்சிண்டு போக உள்ள என்ன இருக்கு? ரெண்டு அழுக்குப் புடவை, அஞ்சாறு பாத்திரம், ஒரு படி அரிசி. பாத்தான்னா அவன் பாக்கெட்லேருந்து பத்து ரூபா எடுத்து வெச்சிட்டுப் போவான்’ என்று சொல்லிச் சிரித்தாள்.

‘உள்ளே போகலாமா?’ என்று கேட்டேன். வினோத் சிறிது தயங்கினான். வற்புறுத்த வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டேன். அவன் பேச வாயெடுக்கும் முன் வீட்டுக்குள் இருந்து பத்மா மாமி கழி ஊன்றி மெல்ல நடந்து வெளியே வந்தாள். நாங்கள் இருவரும் ஒதுங்கி நின்றுகொண்டோம். மாமி மெதுவாகத் தலையை உயர்த்தி, புருவங்களுக்கு மேலே ஒரு கையைக் குவித்து வைத்து எங்களைப் பார்த்தாள். ‘ஆரு?’ என்று கேட்டாள். வினோத் உடனே, ‘ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லிக் கைகூப்பினான். நடுங்கும் கரங்களைக் குவித்து பத்மா மாமி அவனை வணங்கினாள்.

‘ஆருன்னு தெரியல்லியே. வயசாயித்தோன்னோ? கண்ணும் தெரியல்லே, ஞாபகமும் இருக்கறதில்லே’ என்று சொன்னாள்.

நான் சட்டென்று, ‘அது இரக்கப்பட்டு இயற்கை அளிக்கும் வரம்’ என்று சொன்னேன். சிறிது புன்னகை செய்தேன்.

‘உள்ளே வரேளா?’ என்று மாமி கேட்டாள். நான் வினோத்தைப் பார்த்தேன். அவன் அதை மிகவும் விரும்பினான் என்று தோன்றியது. நாங்கள் பத்மா மாமியின் வீட்டுக்குள் சென்றோம்.

‘தூர தேசத்துலேருந்து வரேளா? யாத்ரீகாளா?’ என்று மாமி கேட்டாள்.

‘நான் விமலானந்த. இவர் குருஜி யது நந்தன தாஸ்’ என்று அறிமுகம் செய்துகொண்டேன்.

‘நான் குருவல்ல’ என்று வினோத் உடனே சொன்னான்.

‘அதனால் பரவாயில்லை. நீ இப்போது யது நந்தன தாஸாகவே இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை’.

எங்களை உட்காரச் சொல்லிவிட்டு பத்மா மாமி உள்ளே சென்று ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தாள். நான் குடித்தேன். வினோத் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

‘கோயிலுக்கு வந்தேளோ?’ என்று மாமி மீண்டும் கேட்டாள். அவளுக்கு என் அம்மாவின் வயதுதான். ஆனால் எப்படியோ இன்றும் நடமாடிக்கொண்டிருக்கிறாள். சுருங்கிக் கசங்கிவிட்டிருந்த முகமும் மொத்தமாக உதிர்ந்துவிட்டிருந்த புருவங்களும் நரம்புகள் ஓடுவது தெரிந்த தேகமும் அதில் இருந்த நடுக்கமும் காலம் விளையாடிய ஆட்டத்தின் மிச்சங்களாக இருந்தன. வீட்டில் அவளைத் தவிர யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி இந்தத் தள்ளாத வயதில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பாள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சட்டென்று வினோத் கேட்டான், ‘மாமா இல்லியோ?’

‘நீங்க அவருக்குத் தெரிஞ்சவரா? அவர் போயே ரொம்ப வருஷம் ஆயிடுத்தே’.

‘தனியாத்தான் இருக்கேளா?’

‘எப்பவும் தனிதான். அதுக்கென்ன?’ என்று மாமி சொன்னாள்.

‘இல்லே. சமைக்க கொள்ள...’

‘கோவுல்ல கேசவன்னு ஒருத்தர் இருக்கேர். மடப்பள்ளி பார்த்துக்கறவர். தெனம் ரெண்டு வேளை பிரசாதம் கொண்டுவந்து குடுத்துட்டுப் போவார். அத சாப்ட்டுண்டு, காப்பி மட்டும் போட்டுண்டு என்னமோ போயிண்டிருக்கு. இன்னும் காலம் வரல்லியே’ என்று சொன்னாள்.

வினோத் ஏதோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. அவனுக்குச் சிறிது அவகாசம் தருவதற்காக நான் மாமியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தேன். மாமி எங்களைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டாள். நான் மடிகேரியில் இருப்பதைச் சொன்னேன். வினோத் மேற்கு வங்காளத்தில் இருந்து வந்திருப்பதைச் சொன்னேன். சிறிது உற்று கவனித்துவிட்டு, அவன் இஸ்கான் சாமியாரா என்று மாமி கேட்டுவிட்டாள். நான் ஆம் என்று தலையசைத்தேன்.

‘ஆனா உங்கள பாத்தா அப்படித் தெரியல்லியே?’ என்று சொன்னாள். நான் சிரித்துக்கொண்டே, ‘நான் இஸ்கான் இல்லை’ என்று சொன்னேன்.

‘பின்னே? ரெண்டு பேரும் சிநேகிதாளா?’

இதற்கு என்ன பதில் சொல்வதென்று சிறிது யோசித்தேன். ஆம் என்றோ இல்லை என்றோ சொல்வது முறையாக இருக்காது என்று தோன்றியது. இதற்குள் வினோத் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவன் என்னைக் கைநீட்டித் தடுத்துவிட்டு, ‘மாமி, நான் இந்த ஊருக்கு இப்பொ வந்ததுக்கு ரெண்டு காரணம். அதுல ஒண்ணு உங்களைப் பார்த்து மன்னிப்புக் கேக்கறது’ என்று சொன்னான். அவள் சற்றும் எதிர்பாராத விதமாக நெடுஞ்சண் கிடையாக அவள் காலில் விழுந்தான். அவளது பாதங்களைத் தனதிரு கரங்களால் மூடிக்கொள்வதுபோலப் பற்றியபடியே பல விநாடிகள் அப்படியே கிடந்தான்.

மாமிக்கு ஒன்றும் புரியவில்லை. குனிந்து அவனை எழுப்பக்கூடத் தோன்றாமல் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருபது விநாடிகளாவது வினோத் அவளது பாதங்களைப் பற்றிக்கொண்டு இருந்திருப்பான். பிறகு அவனே மெல்ல எழுந்து கையைக் கூப்பிக்கொண்டு அவள் எதிரே நின்றான். அவன் முகத்தில் அதுவரை நான் காணாத தெளிவும் தீர்க்கமும் அப்போது தென்பட்டன.

‘உக்காருங்கோ’ என்று மாமி சொன்னாள்.

‘இல்லே. நான்..’ என்று அவன் ஏதோ சொல்லத் தொடங்கும்போது, ‘காப்பி சாப்பிடுவேளா? சன்னியாசிகளுக்கு காப்பி அனுமதி உண்டா?’ என்று கேட்டாள்.

‘பரவால்லே மாமி. காப்பியெல்லாம் வேண்டாம். நான் ஒரு பாவம் செய்தவன். சன்யாசிகள் பொதுவா மத்தவா கால்ல விழறது வழக்கமில்லே. ஆனா, இந்த ஜென்மத்துல நான் செய்து தீர்த்தாக வேண்டிய ரெண்டு மிச்சத்துலே இது ஒண்ணு’ என்று வினோத் சொன்னான்.

மாமி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘நீங்க வினோத்தா?’ என்று கேட்டாள்.

‘ஆமாம் மாமி’.

‘உக்காந்துண்டேள்னா எனக்கு சௌகரியம். நானும் உக்காருவேன். ரொம்ப நேரம் நிக்க முடியறதில்லே’ என்று சொன்னாள்.

நாங்கள் அங்கிருந்த பெஞ்சு ஒன்றை இழுத்துவந்து போட்டு அமர்ந்துகொண்டோம். ‘சந்தோஷம்’ என்று சொல்லிவிட்டு மாமி எங்கள் எதிரே உட்கார்ந்துகொண்டாள்.

‘உங்கம்மாவ பார்க்கத்தான் கிளம்பிண்டிருந்தேன். ரொம்ப முடியாம இருக்கான்னு கேசவன் சொன்னார். இன்னிக்கு ராத்தாண்டறது கஷ்டம்னார்’.

நாங்கள் அமைதியாக இருந்தோம்.

‘அம்மாவ பாத்தேளா?’

‘இன்னும் இல்லை மாமி. இனிமேத்தான் போகணும்’ என்று சொன்னேன்.

‘நீங்க ரெண்டாமவரா, நாலாமவரா?’

‘நான்தான் சின்னவன். விமல்’ என்று சொன்னேன்.

‘அவர்.. உங்கண்ணா?’

‘வினய் வருவான். மூத்தவன் வரணும். எப்ப வருவான்னு தெரியலே’.

‘என்னமோ. சன்யாசியானாலும் பெத்தவளுக்குக் கொள்ளி போட வரணும்னு நினைச்சேளே, சந்தோஷம். இல்லேன்னா பாவம் கேசவன்தான் அதையும் செய்வார்’ என்று சொல்லிவிட்டு, சட்டென்று என்ன நினைத்தாளோ, ‘கொள்ளி போடுவேள் இல்லியோ? அது ஒண்ணும் சாஸ்திர விரோதம் இல்லியே?’

‘அண்ணா செய்வான் மாமி’ என்று வினோத் சொன்னான்.

‘அப்பப்போ கேசவன்தான் வந்து பார்த்துண்டு, பேசிண்டு இருந்துட்டுப் போவேர். நீங்க நாலு பேரும் சன்னியாசி ஆயிட்டத ஊர்க்காராளால அந்தக் காலத்துல நம்பவே முடியலே. கேசவன் பொய் சொல்றார்னுதான் எல்லாரும் நினைச்சா. ஆனா எனக்குத் தெரியும். உங்க நாலு பேரோடதும் அந்த மாதிரி ஜாதகம்தான்’.

எனக்குத் தாங்க முடியவில்லை. சட்டென்று கேட்டுவிட்டேன், ‘தப்பா நினைச்சிக்காதிங்கோ. அந்த மாதிரி ஜாதகம்னு தெரிஞ்சப்பறம் ஏன் உங்க பொண்ணுக்கு இவனை நிச்சயம் பண்ணேள்?’

மாமி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு பேசத் தொடங்கியபோது தொண்டை அடைத்தது. அழுகை வந்தது. வினோத் அவளுக்குத் தண்ணீர் சொம்பை எடுத்துக் கொடுத்தான். வாங்கிக் குடித்துவிட்டு புடைவைத் தலைப்பில் வாயைத் துடைத்துக்கொண்டாள்.

‘உங்களுக்கு சொன்னா புரியுமோ புரியாதோ? ஒரு வைத்தியன்னா அவனுக்குத் தனக்குத் தானே நாடி பிடிச்சி வைத்தியம் பாத்துக்கத் தெரியாது. இன்னொரு வைத்தியன்கிட்டேதான் போவான். ஒரு அம்பட்டன் தனக்குத்தானே முடி வெட்டிண்டான்னா நன்னாவா இருக்கும்? இன்னொருத்தன்கிட்டேதான் தலைய குடுத்தாகணும். மீறி தானே பண்ணிப்பேன்னு பண்ணிண்டா இப்படித்தான் ஆகும்’.

‘நீங்க அதைச் செய்திருக்க வேண்டியதுதானே?’

‘செஞ்சேனே! அவளுக்கு நூறு இடத்துல வரன் பாத்தேன். ஒவ்வொரு தடவையும் ஜாதகத்த தூக்கிண்டு நாவலூர் வரதராஜ ஜோசியர் கிட்டேதான் ஓடுவேன். இது பொருந்தறது, இது வேண்டாம், இது அமைஞ்சிடும், இது முடிஞ்சிடும்னு அவரும் சொல்லிண்டேதான் இருந்தார். எங்க நடந்தது? ஒண்ணுமே நடக்கலே’.

‘அவர் சரியா பார்க்கலியா?’

‘அப்படியெல்லாம் சொல்றது தப்பு. ப்ராப்தம்னு ஒண்ணு உண்டு. ப்ராரப்த கர்மான்னு ஒண்ணு உண்டு. இந்த ரெண்டுக்கும் நடுவுல உள்ளதுதான் வாழ்க்கை’.

மாமி என்னை மிகவும் வியப்பூட்டிக்கொண்டிருந்தாள்.

‘சரி, அவர் பார்த்து சரியா அமையலை. வேற யார்ட்டயாவது போயிருக்கலாமே?’ என்று கேட்டேன்.

‘போயிருப்பேன். அந்த நேரத்துலதான் உங்கம்மா இவாளோட ஜாதகத்த கொண்டு வந்து குடுத்தா’.

‘இவன் சன்னியாசி ஆகப் போறவன்னு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குமே? எங்க எல்லாரோட ஜாதகத்தையும் நீங்க ஏற்கெனவே பார்த்திருக்கறதா மாமா சொல்லியிருக்கார்’.

‘அது நான் பண்ணின பாவம். நாலு பேரும் இப்படித்தான் போவேள்னு தெரிஞ்சும் உங்கம்மாட்ட நான் அதைச் சொன்னதில்லே. அவ மனச எதுக்குக் கஷ்டப்படுத்தணும்னு சொல்லாம இருந்துட்டேன். ஆனா எப்ப இவாளோட ஜாதகத்த எம்பொண்ணுக்குப் பாக்கச் சொல்லிக்கொண்டு வந்தாளோ அப்ப எனக்கு புத்தி மழுங்கிடுத்து’.

‘அப்படின்னா?’

‘நடந்துடும் நடந்துடும்னு வரதராஜன் சொன்ன எந்த வரனும் எம்பொண்ணுக்கு அமையலை. நடந்துடும்னு நானே நினைச்சதெல்லாம்கூட என்னென்னமோ காரணத்தால தட்டிப் போச்சு. ஜோசியமெல்லாம் பொய்யோன்னு அப்ப நினைக்க ஆரம்பிச்சுட்டேன். அதே மாதிரி இவாளும் சன்னியாசி ஆவார்னு ஜாதகம் சொன்னது ஏன் பொய்யாயிடப்படாது? அப்படி நினைச்சுண்டுட்டேன். இன்னொண்ணு, எப்படியாவது அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சிடணும்னு ஒரு வெறி. கல்யாணமாயிட்டா அப்பறம் எங்கேருந்து சன்னியாசி ஆறது? வேணுமானா எழுவது வயசுக்கப்பறம் ஜீயராகிப்பார்னு நினைச்சுண்டேன். அப்படி ஆனா சந்தோஷம்தானே? பெருமைதானே? விடுங்கோ. இதெல்லாம் பொண்ண பெத்தவாளுக்கு அனுபவிச்சே தீரவேண்டியது’.

அதற்குமேல் அவளிடம் என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. மிகவும் பாவமாக, பரிதாபமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதையெல்லாம் நினைவுகூர வைத்து அவதிப்படுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. என் மானசீகத்தில் பத்மா மாமியிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

சற்றும் எதிர்பாராவிதமாக வினோத் ஒன்றை அப்போது கேட்டான். ‘இதெல்லாம் விடுங்கோ. உங்க பொண்ணு அல்ப்பாயுசுல போவான்னு கூடவா உங்களுக்கு அவ ஜாதகம் சுட்டிக்காட்டலே?’

மாமி அவனை உற்றுப் பார்த்தாள். புன்னகை செய்தாள். சிரமப்பட்டு எழுந்து அவனருகே வந்தாள். வினோத் சட்டென்று எழுந்துகொண்டான்.

‘நீங்க உக்காருங்கோ’ என்று அவனை அமர வைத்துவிட்டு ’நான் உங்களைத் தொடலாமா?’ என்று கேட்டாள். வினோத் ஒன்றும் சொல்லாதிருந்தான். மாமி அவனது தலையை வருடினாள். கன்னங்களை வருடினாள். ஒரு தேவதையின் கனிவு அவள் கண்களில் புலப்பட்டது. எனக்கே அவளைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லத் தோன்றியது. எப்பேர்ப்பட்ட பெண்மணி! ஒரு மாபெரும் துரோகி இருபது வருடங்கள் தலைமறைவாக இருந்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறான். அவனிடம்கூட இப்படியொரு வாஞ்சையை வெளிப்படுத்த முடியுமா!

‘கேட்டது தப்புன்னா மன்னிச்சுடுங்கோ’ என்று வினோத் சொன்னான்.

‘நீங்க கேட்டதுல ஒரு தப்பும் இல்லே. தப்பெல்லாம் ஜாதகத்துலதான்’.

‘அப்படின்னா?’

‘என்னத்தைச் சொல்ல? ஜாதகப்படி அவளுக்கு ஆயுசு எழுபது வயசுக்கு மேலே. அவ போவான்னு நான் நினைச்சே பார்த்ததில்லே’ என்று சொன்னாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT