யதி

139. பத்து கிராம்

பா. ராகவன்

கோவளம் கடற்கரையில் இருந்து திருவிடந்தை எல்லையைத் தொட்டு கடலோரமாகவே வினய் நடந்துகொண்டிருந்தான். என்னவோ திடீரென்று ஓர் எண்ணம் எழுந்து, கடற்கரையை அடுத்த சவுக்குத் தோப்புக்குள் நுழைந்து அதன் வழியே நடக்க ஆரம்பித்தான். முதல் நாள் வினோத் பேசியதில் இருந்து அவனால் விடுபடவே முடியவில்லை. எத்தனை நம்பிக்கை அவனுக்கு! எவ்வளவு திட சித்தமுடன் தனது நம்பிக்கையை என்னுள் விதைக்கப் பார்க்கிறான்! நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பக்தி கூட அவசியமில்லை. கிருஷ்ணனின் நாம ஜபம் போதும்.

இந்தச் சொற்கள் திரும்பத் திரும்ப அவனை நிலைகொள்ளாமல் செய்துகொண்டிருந்தன. வாழ்வில் அவனளவு முட்டி மோதியவர்கள் இருக்க முடியாது. அவனளவு அடிபட்டவர்களும் இருக்க முடியாது. தோல்வியும் பசியும் அர்த்தநாரி. அவன் அப்படித்தான் பல்லாண்டுக்காலங்களைக் கழித்திருக்கிறான். ஒரு கல் தடுக்கி ஞானம் சித்திக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் புரண்டோடிய பின்பு, வசியத்தின் மோகனப் புன்னகையில் வாழ்வை முடிந்து வைத்துக்கொள்ளப் பார்த்தான். அதுவும் நடக்கவில்லை. தெய்வங்களும் தேவதைகளும் சாத்தான்களும் பிரம்ம ராட்சதர்களும் இடாகினிப் பேய்களும் குட்டிச் சாத்தான்களும் ஒன்று சேர்ந்து கைவிட்ட பின்பு அவன் தற்கொலைக்கு முயற்சி செய்தான். அதிலும் தோற்ற பின்பு பிச்சை எடுத்துப் பிழைக்க ஆரம்பித்தான். பசியை மறக்க கஞ்சா குடிக்கத் தொடங்கி, துக்கம் தவிர்க்க அதையே உணவாக்கிக்கொண்டான்.

வாழ்வில் செய்து பார்க்க மிச்சம் ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தபோது அவனது கொதிப்புகள் அடங்கத் தொடங்கின. தன்னை மறைத்துக்கொண்டு தண்டகாரண்ய வனத்தில் அவன் சில காலம் வேட்டையாடி உண்டு வாழ்ந்துகொண்டிருந்தான். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, காளஹஸ்திக்குப் போய்ச் சேர்ந்தான். கோயில் வாசலில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு தினமும் சிவனை வழிபட்டு வரலானான். கிடைக்கும் பிரசாதங்களை மட்டும் உண்டு, எந்த வேண்டுகோளுமின்றி சிவனைக் கும்பிட்டுக்கொண்டிருந்தது சற்றுத் திருப்தியாக இருந்தது. ஒரு கட்டத்தில் அது அலுத்து, அடுத்த இடம் தேடத் தொடங்கியபோதுதான், அம்மாவின் மரணம் நெருங்கிக்கொண்டிருக்கும் குறிப்பு சூட்சுமமாக அவனுக்குக் கிடைத்தது. காளஹஸ்தியில் இருந்து ரேணிகுண்டா வரை நடந்து வந்து டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறினான்.

வினோத்தை சந்திக்கும்வரை மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணமே அவனுக்கு இல்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டு நேபாளத்துக்குப் போய்விடலாம் என்று எண்ணியிருந்தான். அங்கு சென்றும் செய்ய ஒன்றும் உத்தேசமில்லை. சும்மா தோன்றிய எண்ணம்தான். நேபாளத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு எங்காவது மலை உச்சியில் இருந்து விழுந்து உயிரை விட்டுவிடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் கிருஷ்ண ஜபம் மட்டுமே அவன் எண்ணியவற்றைக் கொண்டு வந்து தரும் என்று வினோத் சொன்னதை ஒரு பரீட்சார்த்தமாகவேனும் செய்து பார்த்துவிட மிகவும் விரும்பினான்.

காலை விடியும் முன்னரே அவன் உறக்கம் கலைந்து எழுந்துவிட்டான். நேரே கடலுக்குள் இறங்கி முங்கிக் குளித்தான். ஈரம் சொட்டச் சொட்ட நீலாங்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பத்து கிராம் கஞ்சா அவனுக்குப் போதும். ஒரு நாள் முழுதும் பசி தாகமின்றி ஜபத்தில் உட்கார்ந்துவிடலாம். ஏழு மணிக்குள் வைத்தியரிடம் பேசி வேண்டியதை வாங்கிக்கொண்டு திரும்பிவிட வேண்டும் என்று எண்ணித்தான் கிளம்பினான். திருவிடந்தை சவுக்குத் தோப்பிலேயே அமரவும் அவன் எண்ணியிருந்தான். ஆனால் வைத்தியர் வீட்டுக்கு அவன் போய்ச் சேர்ந்தபோது மணி ஏழரை ஆகிவிட்டது. மிகவும் மெதுவாக நடந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டான்.

வைத்தியர் வீட்டு வாசலில் அவரது மாணவர்கள் இரண்டு பேர் சில மூலிகைகளை முறங்களில் பரப்பி வெயிலில் உலர்த்திக்கொண்டிருந்தார்கள். வினய்யைக் கண்டதும் என்ன என்று கேட்டார்கள். சாமியைப் பார்க்க வேண்டும் என்று வினய் சொன்னான். ‘ஒரு நிமிடம் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு அவர்கள் உள்ளே போனார்கள்.

வினய் அந்த வீட்டின் வாசலில் நின்றிருந்தான். சிறிது நேரத்தில் சாமி தடியூன்றி வெளியே வந்தார்.

‘யாரு?’ என்று கேட்டார்.

வினய் தன் பெயரையோ அடையாளத்தையோ தெரிவிக்கவில்லை. மாறாக, மிகவும் நேரடியாக, ‘எனக்குச் சிறிது கஞ்சா வேண்டும். ஆனால் நான் போதை அடிமை அல்ல’ என்று சொன்னான்.

சாமி அவனை உற்றுப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, ‘போ, போ’ என்று சைகை செய்துவிட்டு உள்ளே போய்விட்டார். வினய் கிளம்பவில்லை. அவர் வீட்டு வாசலிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். தன் மனத்தைக் குவித்து அவர் வீட்டுக்குள் கஞ்சா எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தான். அது அந்த வீட்டின் மாடியில் இருந்த ஓர் அறைக்குள் பல்வேறு விதமான மூலிகைப் பொடிகள் அடங்கிய டப்பாக்களுக்கு நடுவே ஒரு துணியில் பந்து போல முடிந்து வைக்கப்பட்டிருந்தது.

இப்போது உள்ளிருந்து சாமியின் சீடன் ஒருவன் மீண்டும் வெளியே வந்தான். வினய் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு, ‘அவர் உங்களைப் போகச் சொல்லிவிட்டார்’ என்று சொன்னான்.

‘இங்கே வா’ என்று அழைத்து, ‘இந்த வீட்டின் மாடியறையில் சிவப்பு நிறத் துண்டில் சுற்றி கால் கிலோ கஞ்சா இருக்கிறது. நீயே அதில் இருந்து சிறிது கிள்ளிக் கொண்டு வந்து கொடுத்தால் நான் போய்விடுவேன். இல்லாவிட்டால் கால் கிலோவும் நஷ்டமாகும்’ என்று சொன்னான்.

அந்தப் பையன் பயந்துவிட்டான். வேகமாக மீண்டும் வீட்டுக்குள் சென்றான்.

சில விநாடிகளில் வெளியே வந்தவன், ‘சாமி உங்களை உள்ளே கூப்பிட்டார்’ என்று சொன்னான்.

வினய் எழுந்து வீட்டினுள் சென்றான்.

வீடு மிகவும் இருட்டாக இருந்தது. சுவர்கள் அனைத்தும் மிகப் புராதனமாகப் பாழடைந்து போய்க் கிடந்தன. உத்தரத்து மரக் கட்டைகள் எப்போதும் உடைந்து விழுந்துவிடும் போலிருந்தன. திருவிடந்தை வீட்டைப் போலவே முன்கட்டு, தாழ்வாரம், முற்றம், முற்றத்தின் இரு புறமும் தலா ஒரு அறை, பின்புறம் சமையல் கட்டு, அதனையடுத்த தோட்டம் என்ற அமைப்பு. ஒரே வித்தியாசம், சாமியின் வீட்டில் மாடி அறை ஒன்று இருந்தது. அது சிறியதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த அறையினைச் சுற்றி ஓடு வேய்ந்த தாழ்வாரம் இருந்தது. நல்ல காற்று வரும் என்று வினய் எண்ணிக்கொண்டான்.

அவன் உள்ளே போனபோது சாமி முற்றத்தை அடுத்த நடையோடியின் ஓரமாக ஒரு பலகையை முதுகுக்குச் சாய்மானமாகக் கொடுத்து அமர்ந்திருந்தார். செல்லியம்மன் கோயிலில் அவன் பார்த்த ரங்கநாத ஆச்சாரியோ, தெரிந்த வேறு யாருமோ அப்போது அங்கே இருக்கவில்லை. அவனைக் கண்டதும் சாமி, ‘உட்கார்’ என்று சொன்னார்.

வினய் அவர் எதிரே அமர்ந்தான்.

‘என்னா வோணும்?’

‘கஞ்சா’.

‘எதுக்கு?’

‘பத்து கிராம் போதும் எனக்கு. இன்னிக்கு ஒருநாள் சோறில்லாம உக்காரணும். அதுக்குத்தான்’.

‘யாரு நீ?’

என்ன சொல்லலாம் என்று அவன் சிறிது யோசித்தான். பிறகு, ‘ரேணிகுண்டாலேருந்து வரேன். அதுக்கு முன்ன காளஹஸ்தில இருந்தேன்’ என்று சொன்னான்.

‘பார்த்தா சன்னியாசியா தெரியலியே?’

‘அதெல்லாம் தெரியாது’.

‘சித்து தெரியுமோ?’

‘அது உங்களுக்குத் தேவையில்லாத சங்கதி. உங்ககிட்டே சிவ மூலிகை இருக்கு. எனக்கு அதோட தேவை இருக்கு. கொஞ்சம் குடுத்தா போதும். போயிடுவேன்’ என்று சொன்னான்.

சாமி சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு தனது சீடனை அழைத்து கண்ணால் ஜாடை காட்டினார்.

சீடன் உள்ளே சென்று ஒரு தட்டில் நான்கு இட்லிகளும் தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடியும் வைத்து எடுத்து வந்து அவன் எதிரே வைத்தான்.

‘சாப்பிடு’ என்று சாமி சொன்னார்.

அவன் மறுக்காமல் அந்த இட்லிகளைச் சாப்பிட்டான். தண்ணீர் குடித்தான். தட்டிலேயே கை கழுவிவிட்டு தட்டை எடுத்துச் சென்று பின்புறம் தொட்டி நீரில் கழுவிக் கொண்டு வந்து சீடனிடம் கொடுத்தான். மீண்டும் சாமி எதிரே வந்து அமர்ந்து, ‘கொண்டுவர சொல்றிங்களா?’ என்று கேட்டான்.

ஆனால் அவன் வருவதற்குள் கஞ்சா மூட்டை இறங்கி வந்திருந்தது.

சாமி அதை அப்படியே பிரித்து அவன் எதிரே வைத்தார். ‘எவ்வளவு வேண்டும்?’ என்று கேட்டார்.

‘பத்து கிராம் போதும்’ என்றவன் தனது வலக்கரத்தின் மூன்று விரல்களைப் பயன்படுத்தி சிறிது எடுத்தான். கண்ணுக்கு நேரே வைத்துப் பார்த்து, ‘சரியா இருக்கும்’ என்று சொன்னான்.

‘இது இங்கே இருக்குன்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது?’ என்று சாமி கேட்டார்.

‘தரிசனம்’ என்று வினய் சொன்னான்.

‘வேறே என்னல்லாம் தெரியும்?’

‘ஒண்ணுமில்லே. நான் போகலாமா?’

சாமி மீண்டும் அவனை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘போதையோடு மாத்ரு கர்மா செய்யக் கூடாது’ என்று சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT