ஆசனம் 37. தனுர் ஆசனக் கிரியா

கிரியா என்றால் செயல்படுதல் என்று பொருள். தனுர் ஆசனத்தில் இருந்தபடி உடலை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அசைவு கொடுத்துச் செய்யக்கூடிய ஆசனம் என்பதால், இது தனுர் ஆசனக் கிரியா என்று அழைக்கப்படுகிறது.

யோக நீதிக் கதை

இயமம் (கட்டுப்பாடு)

சம்பளப் பண்டிகை

பல வருடங்களுக்கு முன்னால் ஏழைத் தீபாவளி, பணக்காரத் தீபாவளி என்று இரண்டு கொண்டாட்டங்கள் இருக்கும்.

எங்கள் வீட்டுக்கு வலது பக்கத்தில் ஒரு பெரிய கூரை வீடு. அந்தக் கூரை வீட்டுக்குள் பல கூரை வீடுகள் இருக்கும். அந்தக் கூரை வீடுகளில் வருடத்துக்கு ஒருமுறைதான் புத்தாடைகள் எடுக்கமுடியும். அந்தச் சிலநாட்கள்தான் இட்லி, வடை, இனிப்புத் தின்பண்டங்களைத் தொடமுடியும் என்ற அவல நிலை.

எங்கள் வீட்டுக்கு இடது பக்கமாக அன்னார்ந்து பார்க்கத்தக்க பெரும் செல்வந்தர் வீடு இருந்தது. அங்கு இட்லியும் வடைகளும் தின்னமுடியாமல் தெருவில் சிதறுண்டு கிடக்கும்.

எங்கள் நடுத்தர வீட்டில் சிறப்புப் பலகாரங்கள் தலைதூக்கும். ஆடைகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.

பட்டாசுப் புகை, பணக்காரர்களுக்குச் சாம்பிராணி! ஏழைகளுக்கோ சுடுகாட்டுப் புகை. எங்களைப் போன்ற நடுத்தரவர்க்கத்துக்கு வழிமறைக்கும் மேகக் கூட்டம்.

நான் கிராமத்தில் இருந்தபோது, அம்மா சமையல் அறையிலிருந்து அடுப்பைக் கொண்டுவந்து நடுவீட்டில் பற்றவைப்பார்கள். அப்போதே தீபாவளி களைகட்டிவிடும்!

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே சீடை, அதிரசம், முறுக்கு, சுருள் பூரிகளைச் சுட்டு அடுக்குவார்கள்.

சிறுபிள்ளைகளான நாங்கள், இடையிடையே கைகளை நீட்டி முறுக்கு, அதிரசம், சீடைகளை பதம் பார்ப்போம்.

*

நன்றாகப் படிக்கவைத்தது எவ்வளவு பெரிய தப்பாயிற்று என்று இப்போது தெரிகிறது.

திருச்சியில் பெயின்ட் கடை இருக்கிறது. மூன்று தலைமுறைக் கடை. அனைத்து முன்னணி பிராண்டு பெயின்டுகளுக்கும் நாங்கள்தான் டீலர்.

எங்கள் தாத்தா, எங்கள் தகப்பனாருக்காகக் கடையை அபிவிருத்தி பண்ணினார். எங்கள் அப்பா எங்களுக்காக அபிவிருத்தி செய்தார்.

எங்களைக் கடையில் உட்கார வைத்திருக்கலாம். என்னதான் வசதியிருந்தாலும், நாலு எழுத்துகளைப் பக்கத்தில் போட்டுக்கொண்டால்தான் கௌரவம் என்று படிக்கவைத்தார்.

பள்ளி, கல்லூரி இறுதித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள். குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே வேலைக்கு அலையும்போது நான் மட்டும் என்ன? அந்த மாணவர்களோடு நானும் ஒருவனாக அப்ளிகேஷன்கள் போட்டேன். வேலைக்குப் போக வேண்டிய கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இல்லாத எனக்கு உடனே ஒரு வேலைக்கான உத்தரவு வந்தது.

வீட்டுச் சாப்பாடு சாப்பிடுபவனுக்கு ஹோட்டல் அயிட்டங்கள் வந்தால் விடுவானா? வேலையில் சேர சென்னைக்கு வந்தேன். நல்ல வேலை. சம்பளமும் கைநிறைய.

திருச்சியில் அப்பா கடையைப் பார்த்துக்கொள்கிறார். வருமானம் கொட்டுகிறது. எண்ணுவதற்குதான் ஆள் இல்லை. அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்த அம்மாவும் பாட்டியும், இப்போது காசு பணத்தைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்குக் கிடைத்த வேலை எதிர்வீட்டு நண்பன் விஸ்வநாதனுக்குக் கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். அவனோ படிக்க வசதியில்லாமல் பாதிக் கிணறு தாண்டி எங்கள் பெயின்ட் கடைக்குள் வந்து விழுந்துவிட்டான்.

சென்னையில் எனது சம்பளம் மாதம் ஒரு லட்சம். எங்கள் கடையில் வேலை பார்க்கும் விஸ்வநாதனுக்கு என் தகப்பனார் தரும் சம்பளம் பத்தாயிரம் ரூபாய்.

சொந்தக் கடை வருமானம் லட்சக்கணக்கில். எனக்கும் லட்ச ரூபாய் சம்பளம். பணம் பணத்தோடுதான் சேரும். இனம் இனத்தோடுதான் சேரும். ஆனால், ஏழையும் பணக்காரனும் சேர முடியாது.

சேர்ந்த ஒரே வருடத்தில் எனக்கு டபுள் போனஸ், இரண்டு லட்சம்! ஆனால், விஸ்வநாதன் எங்கள் கடையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகாததால் போனஸ் கிடையாது. அப்பாவின் சட்டம்!

ஒரு வருடத்துக்கு மேல் யாருமே கடையில் நிற்க முடியாது. நின்றால் உட்கார நேரிடும். உட்கார்ந்தால் போனஸ் தந்தாக வேண்டும். அதனால், ஏதாவது குற்றம் சுமத்தி வேலையை விட்டு அப்பா அனுப்பிவிடுவார். தெரிந்தவன், பக்கத்து வீட்டுக்காரன் என்ற இரக்கமெல்லாம் இல்லை. எவனா இருந்தால் எனக்கென்ன, சட்டம் சட்டம்தான் என்பார். ஆனால், மானஸ்தர்.

நீ சம்பாதிக்கிற பணத்தை நான் கையால தொடமாட்டேன். உனக்கு வருடத்துக்கு ரெண்டு லட்சம் போனஸ். என் கடையில எனக்கு மாசா மாசம் ரெண்டு லட்சம், தெரிஞ்சுக்கோ என்பார்.

போனஸ் பணத்தில், ஒரு லட்சத்துக்குப் பட்டாசுகள். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஆடை ஆபரணங்கள். இருபத்தஞ்சாயிரத்துக்கு நண்பர்களுக்கு விருந்து. இருபதினாயிரம் ரூபாய்க்கு நெய்யில் தயாரிக்கப்பட்ட ஸ்வீட் பாக்கெட்டுகள். எல்லாவற்றையும் சுமந்துகொண்டு, திருச்சிக்கு விமானத்தில் வந்து இறங்கினேன்.

விமான நிலையத்துக்கு நண்பன் விஸ்வநாதன் வந்திருந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவன், என் சூட்கேஸ்களை காருக்குள் திணித்தான்.

வீட்டுக்கு வந்து இறக்கியதும், முதல் வேலையாக விஸ்வநாதனுக்கு இரண்டு ஸ்வீட் பாக்கெட்டுகளை எடுத்து நீட்டி, நாளைக்கு தீபாவளி. ஜாலியா சாப்பிடுடா என்றேன்.

அவன் ஒன்றை மட்டும் பெற்றுக்கொண்டு, போதும்டா இரண்டும் ஒரே பாக்கெட்தானே. எவ்வளவு ஸ்வீட்டுடா தின்ன முடியும். திகட்டிடும் என்று திருப்பிக் கொடுத்தான்.

பரவாயில்லை, வச்சிருந்து சாப்பிடு என்றேன்.

எத்தனை நாள் வச்சிருந்தாலும் அதே ஸ்வீட்தானே என்றான்.

அடுத்து, இரண்டு பட்டாசுப் பாக்கெட்டுகளை எடுத்து நீட்டினேன்.

அதிலும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டான்.

தீபாவளிக்கு டிரெஸ் எடுத்தாச்சா என்று கேட்கும்போது அப்பா வந்துவிட்டார். அவருக்கு அதெல்லாம் பிடிக்காது.

விஸ்நாதனைப் பார்த்து முறைத்தபடி, நீ எதுக்கு இன்னும் இங்க நிக்கிறே. கடைக்கு போய் வேலையப்பாரு என்று விரட்டிவிட்டார்.

விடிந்தால் தீபாவளி. அப்பா அவனுக்கு போனஸ் தரவில்லை என்பதை அவன் முகவாட்டமே காட்டியது. எனக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது, அடக்கிக்கொண்டேன்.

சீசன் பிஸினஸ். நல்ல வியாபாரம். உடம்பெல்லாம் ஒரே வலி. டயர்டா இருக்கு. சரி, அது போகட்டும். சென்னைல வேலை எல்லாம் எப்படி. ஜாலியா இருக்கா? என்றபடி களைப்போடு சோபாவில் சாய்ந்தார் அப்பா.

நான் ஒரு முடிவுக்கு வந்து பேசினேன்.

நான் வேலைய விட்டுடலாம்னு இருக்கேன்.

ஏன்டா? என்றார், அதிர்ச்சியோடு.

பிசினஸ உங்களால தனியா பாக்க முடியல. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பாத்துக்கறேன்.

ஆமாங்க, அதான் சரி. இவனுக்கும் கல்யாணம் பண்ணிவெக்கணும் என்றபடி வந்தார் அம்மா.

கடையை மூடிவிட்டு சாவியோடு விஸ்வநாதன் வந்தான். நான் இன்னியோட வேலையை விட்டு நின்னுக்கறேய்யா. கோயம்புத்தூர்ல வேலைக்கு கூப்பிடறாங்க. சம்பளம் பத்தலை. தப்பா எடுத்துக்காதீங்க என்றபடி சாவியை நீட்டினான்.

நான் அந்த சாவியை வாங்கியபடி, என்னடா விச்சு, ரெண்டு பாக்கெட் ஸ்வீட்டும் பட்டாசும் கொடுத்தப்போ வேணான்னு சொன்னே. இப்போ சம்பளம் மட்டும் பத்தலேன்னு சொல்றியே என்றேன், கிண்டலாக.

அவன் பதில் சொல்லமுடியாமல் விழித்தான்.

டேய், இனிமே நான்தான் கடைய பாத்துக்கப்போறேன். நீ எங்கயும் போக வேணாம். நீ இருந்தா எனக்கும் துணையா இருக்கும். எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாத என்றபடி, அப்பாவுக்குத் தெரியாமல் கண்களைச் சிமிட்டினேன்.

**

ஆசனம்

தனுர் ஆசனக் கிரியா

கிரியா என்றால் செயல்படுதல் என்று பொருள். தனுர் ஆசனத்தில் இருந்தபடி உடலை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அசைவு கொடுத்துச் செய்யக்கூடிய ஆசனம் என்பதால், இது தனுர் ஆசனக் கிரியா என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை

முன்-பின் ஆட்டம்

  • விரிப்பின் மீது குப்புறப் படுத்துக்கொண்டு கால்கள் இரண்டையும் இரண்டு கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு, தலை மற்றும் முழங்கால்களை மேல்நோக்கித் தூக்கி, வில்லின் நாணை இழுப்பதுபோல் செய்ய வேண்டும்.

  • அதேநிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்க வேண்டும்.

  • அப்போது உடல் முன்னும் பின்னுமாக லேசாக அசையும். அதையே தூண்டிவிட்டு இன்னும் வேகமாக முன்னும் பின்னுமாக ஆட்ட வேண்டும்.

  • பிறகு கைகளை விடுத்து, கால்களைக் கீழே பரப்பிவைத்து மகராசனத்தில் கைகளை மடக்கி, நெற்றியை அதன் மீது வைத்து ஓய்வு எடுக்கவும்.

  • பின்னர் மீண்டும் அதேபோல் உடலை முன்னும் பின்னும் ஆடவும்

பக்கவாட்டு ஆட்டம்

  • மீண்டும் கால்களைப் பிடித்து, தனுர் ஆசனத்தில் நின்று அப்படியே வலதுபக்கமாகப் பக்கவாட்டில் சாயவும். வலது தோள்பட்டை, வலது புஜம், வலது கை, வலது கால் வரை வலதுபக்கத் தரையில் படிய வேண்டும். தலையை உயர்த்தியே வைத்திருக்க வேண்டும். ஆசனம் செய்து முடிக்கும் வரை தலை தரையில் படவே கூடாது.

  • அப்படியே இடது காலை விசையுடன் உயரத் தூக்கி மறுபக்கமாகப் பக்கவாட்டில் (இடதுபக்கம்) சாயவும். இடது தோள்பட்டை, இடது புஜம், இடது கை, இடது கால் வரை இடதுபக்கத் தரையில் படிய வேண்டும். தலையை உயர்த்தியே வைத்திருக்க வேண்டும்.

  • பின்னர் மகராசனத்தில் நன்றாக ஓய்வு எடுக்கவும்.

பலன்கள்

  • உடல் முழுவதும் வேகமான ரத்த ஓட்டம் நடக்கும். அதனால், எல்லா சுரப்பிகளும் தூண்டுப்பட்டு, சுரப்பி நீர்கள் நன்றாகச் சுரக்கும். அதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் பிறக்கும்.

  • தலைக்கு நிறைய ரத்த ஓட்டம் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகும்.

  • வயிற்றுப்பகுதி தசைகள் நன்றாக விரிவடைந்து அழுத்தப்படுவதால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கப்பெற்று, பித்தநீரும், இன்சுலினும் அதிகம் சுரப்பதால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாவதுடன், மீண்டும் வராமல் தடுக்கப்படுகிறது.

  • தினமும் இந்த ஆசனத்தை தவறாமல் செய்ய வேண்டும்.

வீடியோ / புகைப்படம்: பிரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com