யோகம் தரும் யோகம்

ஆசனம் 35. கூர்மாசனம்

கே.எஸ். இளமதி

அஷ்டாங்க யோகம்
தியானம்

 
யோக நீதிக் கதை
“காடு”பாடி ரயிலடி
சார் உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு… அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க. போய்ப் பாருங்க…


இந்த வார்த்தைகளை எப்போது கேட்போம் என்ற ஏக்கத்திலேயே தூங்கிப்போன கனிஷ்கர், திடீரென்று கண் விழித்து, வெறுமையை உணர்ந்தான்.
அதே மனநிலையில்தான் அவன் மனைவி நிவேதாவும் இருந்தாள்.


இருவருக்கும் திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைப் பாக்கியம் இல்லை என்ற ஒரு குறைதான் அவர்களுக்கு.


அன்று காலை, அலுவலகத்துக்குப் போக தயாராகிக்கொண்டிருந்த கனிஷ்கரிடம் வந்தாள் நிவேதா.


என்னங்க…


என்ன…


ஒரு விஷயம். நாள் தள்ளிப்போய்டுச்சி என்று முகச் சிவக்கச் சொன்ன நிவேதாவை, ஏய்… என்றபடி மகிழ்ச்சியுடன் அவளை அணைத்துக்கொள்ள வந்தவனை தடுத்தாள்.


உஸ்… இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். தெரிஞ்சுதா… என்று தடுத்தவளின் கன்னத்தை லேசாகத் தட்டி முத்தமிட்டுவிட்டு அதே மகிழ்ச்சியுடன் அலுவலகம் புறப்பட்டான் கனிஷ்கர்.


எத்தனை ஆண்டு காத்திருப்பு. அன்று அலுவலக வேலையில் மிகவும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்ட கனிஷ்கர், மாலையில் கை நிறைய இனிப்புகளுடன், பூவுடனும் வீடு திரும்பினான்.


காலிங் பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தான்.


கதவைத் திறந்த நிவேதா, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்துகொண்டாள்.


அவள் முகத்தைப் பார்த்த கனிஷ்கருக்கு முகம் வாடியது. கையில் இருந்த இனிப்பையும், பூவையும் டேபிள் மேல் வைத்துவிட்டு, என்ன ஆச்சு என்றான்.
சோகத்தில் இருந்த நிவேதாவின் கண்களில் இருந்து கண்ணீர்.


பதறியவனாக அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் முகத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்தான்.


மத்தியானம் தலைக்குக் குளிச்சிட்டேங்க…


மனம் உடைந்து, அப்படியே சோபாவில் சரிந்தான் கனிஷ்கர்.


அவன் நிலையை காணச் சகிக்காமல் அங்கிருந்து நகர்ந்தாள் நிவேதா.

வீடே மயான அமைதி.


திடீரென்று தன் நிலை உணர்ந்தவனாக, நிவேதாவைத் தேடினான்.


அவளைக் காணவில்லை.


சுற்றுமுற்றும் பார்த்தான்.


வீடு முழுக்கத் தேடினான்.


எந்த அறையிலும் இல்லை.


மாடிக்கு ஓடினான்.


அமாவாசை இருளில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த நிவேதாவிடம் வந்தான்.
தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.


நிவேதா… ஏன் அழற. இப்ப என்ன நடந்துபோச்சி… ஒன்னும் இல்ல… என்று அவளை சமாதானப்படுத்தினான்.


அருகில் உட்கார்ந்த அவன் மடியில் தலையை சாய்த்துக்கொண்டு அழுதாள்.
திடீரென்று அவள் கன்னத்தில் ஒரு கண்ணீர்த் துளி.


டக்கென்று எழுந்து பார்க்க, கனிஷ்கரும் அழுதுகொண்டிருந்தான்.
என்னங்க நீங்க. என்னை சமாதானப்படுத்திட்டு நீங்க அழுதுகிட்டிருக்கீங்க… அழாதீங்க…


அவளுக்கு அவனும், அவனுக்கு அவளும் ஆறுதல் சொல்லிக்கொண்டார்கள்.
ஊர்ல கல்யாணம் காட்சின்னு போகும்போதெல்லாம் எல்லாரும் என்ன விசேஷம் ஒன்னும் இல்லியான்னு கேக்கறாங்க. நமக்கு அப்பறம் கல்யாணம் ஆனவங்கள்லாம் குழந்தை குட்டின்னு செட்டில் ஆயிட்டாங்க. நமக்கு மட்டும் ஏங்க. சொத்தக்காரங்க கேக்கறதுக்கு பதில் சொல்ல முடியல. நாளை கழிச்சி ஊருக்கு வேற போகனும்… சொந்தக்காரங்களுக்குப் பயந்து போகாம இருந்தாலும் தப்பு, போனாலும் தப்பு… என்ன பண்றதுன்னே தெரியல.


என்னாலதான உங்களுக்கு இந்த அசிங்கமெல்லாம். உங்களுக்கு ஒரு குழந்தைய பெத்துத் தரமுடியாதவளா ஆயிட்டேனே… என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள்.


திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவளாக, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, வேணாங்க. எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இருக்கறதவிட நான் செத்துப்போயிடறேன்…


அதிர்ந்தான் கனிஷ்கர்.
நான் போனதுக்குப் பிறகு நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க…
நீ இல்லாம நான் மட்டும் எப்படி இருக்க முடியும். நானும் உன்கூடவே செத்துப்போறேன்…
கொஞ்ச நேரம் அங்கே வெறுமை.


நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் நிவேதா.
நிவேதா அவன் முகத்தை கேள்விக்குறியோடு பார்த்தாள்.


ஆமா நிவேதா. நீ செத்துப்போய் நானோ, நான் செத்துப்போய் நீயோ இந்த உலகத்துல இருந்து சொந்தக்காரங்களுக்கு நடுவுல கஷ்டப்பட வேணாம். செத்துப்போறதா இருந்தா நாம ரெண்டு பேருமே ஒண்ணா செத்துப்போவோம்…
நிவேதா முகத்தில் பிரகாசம், தெளிவு.
ஆமாங்க, நீங்க சொல்றதுதான் சரி.
சரி கெளம்பு.


எங்கங்க?
ஜோலார்பேட்டைக்கு பக்கத்துல காஞ்சனமலைக்குப் பின்னால உச்சிப் பாறை ஒண்ணு இருக்கு. அங்கபோய், மலையில இருந்து குதிச்சி செத்துப்போயிடுவோம்…


சரிங்க என்றபடி இருவரும் வீட்டுக்குள் வந்தனர்.
எங்கள் முடிவுக்கு யாரும் காரணம் அல்ல என்று எழுதிக் கையெழுத்திட்டு, டைரியின் அடியில் வைத்துவிட்டுப் புறப்பட்டார்கள்.


சேலம் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தனர். இருவர் முகத்திலும் சலனமில்லை.
வழியில், அரக்கோணத்தில் ஒரு சிறுவனோடு வயதான தம்பதிகள் இவர்கள் அருகே வந்து உட்கார்ந்தனர்.


அந்தச் சிறுவன் துருதுருவென்று இருந்தான். சிறிது நேரத்தில் இவர்களுடன் அந்தச் சிறுவன் ஒன்றிவிட்டான்.


தனக்கும் ஒரு குழந்தை பிறந்திருந்தால் எப்படியெல்லாம் விளையாடுவான் என்று நிவேதா கற்பனை செய்து பார்த்தாள். அவனைப் பார்த்துக்கொண்டே புன்னகையோடு கண்ணீர் சிந்தினாள்.


இன்னும் சிலமணி நேரத்தில் இந்த உலகத்தை விட்டே போகப் போகிறோமே என்று எண்ணிக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
ஏம்மா அழறே… சிறுவனோடு வந்த பெண்மணி கேட்டாள்.


பேச்சை மாற்றுவதற்காக, இவன் உங்க பேரனா? என்றாள் நிவேதா.
அந்தத் தம்பதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
இவன் எங்க பேரன் இல்லம்மா, எங்க புள்ள…


கனிஷ்கருக்கும் நிவேதாவுக்கு அதிர்ச்சி
என்னது, இவன் உங்க பிள்ளையா?


ஆமாம்மா. எங்களுக்கு லேட் மேரேஜ். பத்து வருஷமா பிள்ளை இல்லை. ஊர் உறவு மூஞ்சில முழிக்கமுடியல. ரெண்டு பேரும் மனசு வெறுத்து காஞ்சனமலைக்கு போய் குதிச்சிடு செத்துடலாம்னு இதே ரயில்ல ஜோலார்பேட்டைக்குப் போய்க்கிட்டு இருந்தோம். அரக்கோணத்துல ஏறுன வயசான ஒருத்தர் எங்ககிட்ட பேச்சு குடுத்தார். எங்க பிரச்னைய சொல்லி, எதுக்காக காஞ்சமலைக்குப் போறோங்கறதையும் சொன்னோம்.
அவர் புரிஞ்சுக்கிட்டாரு.


வாழ்க்கைய வெறுத்த கோழைங்க போற இடம் அந்த காஞ்சனமலை. ஒருத்தரோட வாழ்க்கை என்னிக்கு முடியும்னு யாராலயும் சொல்ல முடியாது. அதுக்குள்ள என்னன்ன நடக்கும்னும் சொல்ல முடியாது. இன்னும் பத்து வருஷமோ இருபது வருஷமோ கழிச்சு உங்களுக்கு ஒரு குழந்தை வர்றதுக்கு விதி இருக்குன்னா, அதுக்கு முன்னாலேயே நீங்க செத்துப்போயிட்டா, அந்தக் குழந்தைய நீங்க கொன்னதுக்குச் சமம்னு சொன்னாரு. எங்களுக்கு பகீர்னு ஆயிப்போச்சி.


கனிஷ்கரும் நிவேதாவும்கூட அதைக் கேட்டு அதிர்ந்துபோயினர்.
வாரிசு வேணும்னு நினைக்கிறீங்க. ஆனா, அது உங்ககிட்ட வர விடாம தடுத்துடப் போறீங்களே. இது நியாயமான்னு கேட்டார். நாங்க ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டோம்.


உங்க முடிவை மாத்திக்கிட்டு, பொறக்கப்போற குழந்தைக்காக தியானம் பண்ணுங்கன்னு சொன்னார்.


நாங்க இதுவரைக்கும் தியானம் பண்ணதில்லையேன்னு சொன்னோம்.
அது ஒரு பெரிய விஷயமில்லை. வரப்போற பிள்ளையைப் பற்றி கனவு காணாம, உனக்கு நான் பிள்ளை, எனக்கு நீ பிள்ளைன்னு மனப்பூர்வமாக நம்பி, புருஷனும் பொண்டாட்டியும் ஒத்துமையா ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா இருங்க. அதுதான் தியானம். அப்பறம் பாருங்கன்னு காட்பாடியில இறங்கிப் போயிட்டார்.


நாங்களும் அப்பவே எங்க முடிவை மாத்திக்கிட்டு எங்க ஊருக்குப் போயிட்டோம். அவர் சொன்ன மாதிரியே இருந்தோம். அடுத்த வருஷமே இவன் பொறந்துட்டான் என்றார் அந்தப் பெரியவர்.
அவர் மேலும் தொடர்ந்தார்.


பார்க்கறவங்களுக்கு இவன் எங்க பேரன். பழகினவங்களுக்கு இவன் எங்க பிள்ளை. எங்களைப் பொறுத்தவரை, எங்க பிள்ளையும் இவன்தான், பேரனும் இவன்தான். நாங்க இப்ப சந்தேஷமா இருக்கோம். மத்தவங்களைப் பத்தி எங்களுக்குக் கவலையில்லை. ரயில்ல வந்து எங்க மனச மாத்தி காட்பாடியில இறங்கிப்போன அந்த தாத்தா மனுஷன் இல்ல, அவர் காடுபாடி! அதாவது, கடவுள் மனிதர்.


அவர்கள் சொன்னதைக் கேட்டு, கனிஷ்கரும் நிவேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.


காட்பாடியில் ரயில் நின்றது. கனிஷ்கரும் நிவேதாவும் இறங்கிவிட்டார்கள்.
எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதே தியானம்!


**
ஆசனம்

கூர்மாசனம்


பெயர்க் காரணம்
கூர்ம என்றால் ஆமை. முன்பக்கமாகக் குனிந்து தரையில் படிவதால், ஆமைபோல் தோற்றம் இருக்கும். அதனால், இதற்கு கூர்மாசனம் என்று பெயர்.


செய்முறை
விரிப்பின் மீது அமர்ந்து, இரண்டு கால்களையும் அகலமாக விலக்கிவைக்கவும்.
முன்பக்கமாகக் குனிந்து, இரண்டு கைகளாலும் இரண்டு கால்களின் விரல்களைத் தொடவும். மார்புப் பகுதி தரையில் படிவதுபோல் இருக்க வேண்டும்.


பின்னர், கைகளை இரண்டு முழங்கால்களுக்கும் அடியில் நுழைக்கவும்.
அதே நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும்.


பின்னர் அப்படியே சுவாசத்தை உள்ளிழுத்தபடி, கைகளை உயர்த்திக்கொண்டே உடலை நிமிர்த்தி அமரவும்.


சற்றே இளைப்பாறிவிட்டு மீண்டும் ஆசனத்தைத் தொடரலாம்.


 
பலன்கள்
உடல் தரையோடு படிவதால், முதுகுத் தண்டுவடமும் படிகிறது. அதனால் மூளைக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.


நுரையீரல்கள், இதயம் ஆகியவை தரைமட்டமாக வைக்கப்படுவதால் அதிகப்படியான ரத்த ஓட்டத்தைப் பெறுகின்றன.


சிறுகுடல், பெருங்குடல் மற்றும் சிறுநீரகங்கள் அழுத்தம் பெறுகின்றன.

 
வீடியோ - சிவகாமி
புகைப்படம் – சுகன்யா / சந்தோஷ் தம்பதிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT