சில காலம் கூட நீடிக்காத சந்தர்ப்பவாத கூட்டணியை நோக்கி காங்கிரஸ் - ஜேட்லி விமர்சனம்

சந்தர்ப்பவாதத்துக்காக காங்கிரஸ் அமைக்கும் கூட்டணி சில காலம் கூட நீடிக்காது என்பதை கர்நாடக அரசியல் சூழல் மூலம் மக்கள் தெரிந்துகொண்டதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 
சில காலம் கூட நீடிக்காத சந்தர்ப்பவாத கூட்டணியை நோக்கி காங்கிரஸ் - ஜேட்லி விமர்சனம்

சந்தர்ப்பவாதத்துக்காக காங்கிரஸ் அமைக்கும் கூட்டணி சில காலம் கூட நீடிக்காது என்பதை கர்நாடக அரசியல் சூழல் மூலம் மக்கள் தெரிந்துகொண்டதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

இத்தகைய இடர்பாடுகளை முன்னாள் பிரதமர்கள் தேவெ கௌடா, ஐ.கே.குஜ்ரால், சரண் சிங், சந்திரசேகர் ஆகியோருக்கும் அக்கட்சி அளித்தது என்றும் அவா் கூறியுள்ளாா்.

காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியமைத்துள்ள குமாரசாமி, அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 

முதல்வர் பதவியை வகிக்கும் தாம் மகிழ்ச்சியாக இல்லை என்றும் ஆலகால விஷத்தை உண்ட ஈசனைப் போல சங்கடத்தில் உள்ளதாகவும் கண்ணீா் மல்கத் தெரிவித்தார்.
 
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, அந்த மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று இரு மாதங்களே ஆன நிலையில், குமாரசாமி வெளிப்படுத்திய கருத்து, அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அருண் ஜேட்லி திங்கள்கிழமை வெளியிட்ட முகநூல் பதிவில் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது:

கர்நாடகத்தில் கூட்டணி அரசின் முதல்வராக உள்ள குமாரசாமி, பொது இடத்தில் தனது மனக்குறையை கண்ணீர் மல்கத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது காங்கிரஸின் கடந்த கால செயல்பாடுகள் நினைவுக்கு வருகின்றன. 

ஒரே ஒரு குடும்பம் (நேரு வம்சாவளி) மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது காங்கிரஸ் கட்சி. 

ஒருவேளை வேறு எவரேனும் ஆட்சி செய்துவிட்டால், அவர்களை விரக்திக்குள்ளாக்கி, மக்கள் முன்பு அழவைப்பதையே அக்கட்சி வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தேவெ கௌடா, சரண் சிங், ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர் ஆகியோர் பிரதமராக இருந்தபோது இத்தகைய உத்தியையே காங்கிரஸ் கையாண்டது. 

தற்போது அதுதான் குமாரசாமி விஷயத்திலும் எதிரொலித்துள்ளது. மோடியை பிரதமர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நோக்கம். அதன் காரணமாகவே, கொள்கைகள் அற்ற சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கிறது. அவை சில காலம் கூட நீடிக்காது என்பது கா்நாடக அரசியல் சூழல் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

மாநில அளவிலேயே கருத்தொற்றுமை இல்லாத கூட்டணி, தேசிய அளவில் உருவெடுத்து எவ்வாறு தேசத்துக்கு நன்மை செய்ய முடியும்? பாஜகவுக்கு எதிராக காங்கிரஸுடன் கைகோத்துள்ள கட்சிகள் அனைத்துமே இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே இத்தகைய சந்தா்ப்பவாத முடிவை எடுத்துள்ளன. மாறாக, இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவதற்காக அல்ல என்று அந்தப் பதிவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com