பெருங்கற்கால கண்ணாடி உருக்கு உலைக்கலன் கண்டெடுப்பு

திருக்கோவிலூர் அருகே பெருங்கற்கால கண்ணாடி உருக்கு உலைக்கலன்திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
பெருங்கற்கால கண்ணாடி உருக்கு உலைக்கலன் கண்டெடுப்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே பெருங்கற்கால கண்ணாடி உருக்கு உலைக்கலன்திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருக்கோவிலூரை அடுத்த வீரபாண்டி ஊராட்சிக்கு உள்பட்ட புலிக்கல் கிராம ஏரியின் தென்புறத்தில், குன்றுகள் நிறைந்த பகுதிகளில் பல இடங்களில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக வண்ண மணிகள், கை வளையல்கள் தயாரிக்கப் பயன்படுத்திய கண்ணாடி உருக்கு உலைக்கலன்கள் அதிகளவில் காணக்கிடைக்கின்றன. இந்த உலைக்கலன்களில் தயாரிக்கப்பட்ட உருக்கியப் பொருள்களின் சிதறல்கள் ஆங்காங்கே உடைந்த கருங்கற்களைப் போன்று, இறுகிக் காணப்படுகின்றன.

இப்பகுதியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் நாகரிக முதிர்ச்சியின் காரணமாக, வண்ண மணிகளால் செய்யப்பட்ட ஆபரணங்களையும், பல வண்ணங்களில் கை வளையல்களையும் செய்யும் உயரிய தொழில்நுட்பத்தையும் அறிந்திருந்தனர் என்பது, இங்கு கிடைக்கும் தொன்மைச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.

இதுகுறித்து தொல்லியல் துறை காப்பாட்சியர் அ.ரஷீத்கான் கூறியதாவது: இந்திய அளவில் முதல்முறையாக கண்ணாடி உருக்கு உளைக்கலன் கண்டறியப்பட்ட இடம் சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புடைய மொஹஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல் ஆகிய இடங்கள்தான். 

பின்னர், தமிழகத்தில் மதுரை மையப் பகுதியில் உள்ள பொருந்தல் என்றழைக்கப்படும் பாசிமேடு என்ற பகுதியில் 12 ஆயிரம் கண்ணாடி மணிகள் கண்டறியப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமணல் என்ற பகுதியிலும், மதுரை மாவட்டத்திலுள்ள கீழடி அகழாய்விலும் இதுபோன்ற கண்ணாடி உருக்கு உலைக்கலன்களும், கண்ணாடி மணிகளும் கண்டறியப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தற்போது புலிக்கல் கிராமத்தில் கண்ணாடி உருக்கு உளைக்கலன் கண்டறியப்பட்டுள்ளன. இது, இந்தப் பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com