கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் உருக்குலைந்தது நாகப்பட்டினம்!

கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் நகரம் முழுமையாக
கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் உருக்குலைந்தது நாகப்பட்டினம்!


நாகப்பட்டினம்: கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் நகரம் முழுமையாக சேதமடைந்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. 

கஜா புயலின் சூறைக்காற்றால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக ரயில் நிலையம் சின்னாபின்னமானது. ரயில் நிலையத்தின் மேற்கூரை, விளம்பர பேனர்கள் சூறைக்காற்றில் சேதமடைந்தன. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் நகரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலை ஒரங்களில் இருந்த மரங்கள் அனைத்து முறிந்து விழுந்துள்ளதால் வேதாரண்யத்திற்கு செல்ல முடியாத நிலையும். அங்கு இருப்பவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யம் நகர மக்கள் தவித்து வருகின்றனர். சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி அதிகாரிகள் வேதாரண்யம் நோக்கி சேதங்களை பார்வையிட சென்று வருகின்றனர். 

கஜா புயல் எச்சரிக்கையொட்டி அதிகம் பாதிக்கப்படும் எனக் கருதப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 44,087 பேர் 627 பொதுக் கட்டடங்களில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கஜா புயல் காரணமாக பாதிகப்பட்டுள்ள மாவட்டங்களில் மழை, காற்று நின்ற பிறகு மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக தொடங்கும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com