ரயில் ஓட்டுநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது; எங்கள் மீது தவறு இல்லை: அமைச்சர் மனோஜ் சின்ஹா பேட்டி

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில்
ரயில் ஓட்டுநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது; எங்கள் மீது தவறு இல்லை: அமைச்சர் மனோஜ் சின்ஹா பேட்டி


புதுதில்லி: பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது, ரயில்வே துறையின் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

அமிருதசரஸ் நகரில் உள்ள ஜோரா பதக் பகுதியில் தசரா விழா கொண்டாட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் மாலை நடைபெற்ற விழாவில் திரளானோர் பங்கேற்றனர். ரயில் தண்டவாளத்தையொட்டி உள்ள மைதானத்தில் ராவண வதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதைக் காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். நிற்பதற்குக்கூட இடம் இல்லாமல் நெருக்கடியாக இருந்தது. இதனால், அருகில் இருந்த தண்டவாளத்திலும் மக்கள் நின்றுகொண்டு ராவண வதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஜலந்தர் நகரிலிருந்து அமிருதசரஸ் நோக்கி அவ்வழியே ரயில் வந்துகொண்டிருந்தது.

ராவண வதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததாலும், இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததாலும் ரயில் வந்துகொண்டிருந்தது அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுக்கு தெரியவில்லை. ரயில் வந்துகொண்டிருந்த சப்தமும் அவர்களுக்கு கேட்கவில்லை. இந்த நேரத்தில் ரயில் மோதியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 61 பேர் உயிரிழந்தனர். சுமார் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரே நேரத்தில் எதிரெதிர் புறத்தில் இரு ரயில்கள் வந்துகொண்டிருந்தால் பலரால் தப்பிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்துக்கு ரயில் ஓட்டுநரின் அலட்சியத்தாலும், ரயில் அதிகவேகத்தில் வந்ததுதான் காரணம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், அமிருதசரஸ் நகரில் உள்ள ஜோரா பதக் ரயில்விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ரயில்வே துறை காரணமில்லை. ரயில்வேயின் தவறுமில்லை. ரயில்வே துறைக்கு தசாரா விழா நடத்துவது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. ஆதலால், ரயில்வே துறையின் பக்கம் எந்தவிதமான தவறும் இல்லை. அதேசமயம், ரயில் ஓட்டுநர் விதிமுறைப்படியே செயல்பட்டுள்ளதால், அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது.

எதிர்காலத்தில் ரயில்வே இருப்புப்பாதைக்கு அருகே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்பதில் மக்கள் இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்திருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார். 

மேலும், வழக்கமான விசாரணைகள், ரயில்வே பாதுகாப்பு தொடர்பான பணிகள், நிர்வாக ரீதியான விசாரணைகள் விதிமுறைப்படி நடக்கும். விபத்து நடந்த இடத்தில் வளைவான பகுதி இருப்பதால், அங்கு மெதுவாகச் செல்லும்படி ஓட்டுநருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவர் அந்த இடத்தில் மெதுவாகவே வந்துள்ளார். ஆதலால், அவர் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கமுடியும் என திட்டவட்டமாக தெரிவித்தார் அமைச்சர் சின்ஹா.

ஏற்கனவே, ரயில்வே தண்டவாளம் பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது தொடர்பாக எந்தவொரு தகவலும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என ரயில்வே தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com