ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும்: முகமது ஜாவத் ஜாரிப்

ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரிப்
ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும்: முகமது ஜாவத் ஜாரிப்


ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரிப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நவம்பர் மாதத்துக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மீறி இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். 

மேலும், அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து ஈரானிய எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்கத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களைப் பொருத்தவரையில் 80 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றன. அதில், 14 சதவீதம் ஈரானிலிருந்து இறக்குமதியாகிறது.

இந்த நிலையில், சர்வதேச நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா அடுத்த மாதம் ஈரானின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும். அல்லது அதன் இறக்குமதியை கணிசமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இது, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களது கச்சா எண்ணெய் தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளை அதிலும் முக்கியமாக சவூதி அரேபியா மற்றும் ஈராக்கில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும் என்று மூடிஸ் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. கடந்த வாரம் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்த விவகாரத்தில் விலக்கு அளிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார். 

இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரிப் இடையே சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய முகமது ஜாவத், ஈரானிடம் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் எண்ணெய் இறக்குமதி தொடரும் எனவும், இந்த ஒத்துழைப்பு எரிசக்தி துறையிலும் தொடரும் எனவும் தெரிவித்தார். 

மேலும், இந்தியாவின் நம்பகத்தன்மை உள்ள தரமான எரிசக்தி வினியோகஸ்தராக ஈரான் எப்பொழுதும் இருந்து வருவதாகவும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா தொடரும் எனவும் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com