முக்கியச் செய்திகள்

லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! சொன்னவர்களும், செய்து காட்டியவர்களும்!

RKV

உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை, பொதுமக்கள் தங்களது காலணிகளால் அடிக்க வேண்டும் என்று அந்த மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்திருப்பது சா்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பைரியா தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மக்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ளதை கண்டிக்கும் வகையில், சுரேந்திர சிங் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை அத்தகைய அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் விதமாக இவ்வாறு கூறினார். 

அப்போது பலியாவில் அவா் தனது ஆதரவாளா்கள் மத்தியில் அவா் பேசியதாவது...

அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால், அப்போது அவரது குரலை பதிவு செய்யுங்கள். அந்த குரல் பதிவை என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள். தங்களது கடமையை அரசு அதிகாரிகள் முறையாகச் செய்யவில்லையெனில், முதலில் அவரது முகத்தில் ஒரு அறை விடுங்கள். அப்படியும் அவா் பிடிவாதமாக இருந்தால், அவரது முகத்தில் காலணியால் அடியுங்கள் என்றார் சுரேந்திர சிங்.

அவரது இந்த கருத்து, உத்தரப் பிரதேசத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, தமது கருத்து குறித்து சுரேந்திர சிங் எம்எல்ஏ விளக்கமளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது, ‘மக்கள் நலனை மனதில் கொண்டே நான் அவ்வாறு கூறினேன்; மக்கள் நலனுக்காக நான் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்’ என்பதாக இருந்தது.

சுரேந்திர சிங் தெரிவிக்கும் கருத்துகள் அடிக்கடி சா்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். உத்தரப் பிரதேச மாநிலம், கைரானா மக்களவைத் தொகுதி, நூா்புா் சட்டப் பேரவை தொகுதி இடைத் தோ்தல் முடிவு வெளிவந்த பிறகு சுரேந்திர சிங் பேட்டியளித்தபோது, முதல்வா் யோகி ஆதித்யநாத் அரசில் இருக்கும் அமைச்சா்களால் தான், இடைத் தோ்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தது என குற்றம்சாட்டியிருந்தார். இந்த அமைச்சா்களை பதவி நீக்கம் செய்யவில்லையெனில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அழிவை சந்திக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

ஊழல் அரசு அதிகாரிகளை செருப்பால் அடிக்கச் சொன்ன தெலங்கானா முதல்வர்...

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இதே விதமான எச்சரிக்கையொன்றை பொதுமக்களிடையே விட்டு பரபரப்பைக் கிளப்பிய மற்றுமொரு அரசியல் தலைவரும் இந்தியாவில் இருக்கிறார். அவர் தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ்.

அவரும் கூட ‘ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்’  எனக் கடந்தாண்டு மக்களிடம் ஊழலுக்கெதிரான ஆவேசத்தைக் கிளப்பியிருந்தார்.

கடந்தாண்டு அக்டோபரில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலில் டிஆர் எஸ் கட்சி சார்பிலான சங்கம் வெற்றி பெற்றது.

அப்போது அந்த வெற்றியையொட்டி நடத்தப்பட்ட வெற்றிவிழா பொதுக்கூட்டத்தில் டிஆர் எஸ் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான சந்திர சேகர் ராவ் கலந்து கொண்டார்.

உயர் அதிகாரிகள் குறித்து தொழிலாளர்கள் பல்வேறு குறைகளை கூறினார்கள். நிறுவனத்தின் மெடிக்கல் போர்டில் ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டினர். நிறுவனத்தின் குடியிருப்பில் இடம் வேண்டும் என்றால் லஞ்சம் என பரவலாக ஊழல் இருப்பதாக கூறினார்கள்.

இதையடுத்துப் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலங்கானா போகு கனி கர்மிகா சங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட பின், மக்கள் தங்களுக்கான நலன்களை பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது துரதிருஷ்டவசமானது என்றார். அதோடு இதுநாள் வரை தொழிலாளர்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

புதிய மாநிலம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை தினந்தோறும் சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் சிங்கரேணி தொழிலாளர் பிரச்னையில் கவனம் செலுத்த முடியவில்லை என தொழிலாளர்களிடம் விளக்கம் அளித்து விட்டு லஞ்சம் கேட்கும் ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என்றும் லஞ்சத்தை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆவேசமாகப் பேசினார் தெலங்கானா முதல்வர்.

முதல்வர் சந்திர சேகர் ராவின் பேச்சு, அதிகாரிகளிடையே மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஆவேசத்தைக் கிளறும் வகையில் இப்படிப் பேசி வருவது சரியானதா? ஊழல் அதிகாரிகளை தண்டிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?! அரசின் பொறுப்பல்லவா? அப்பாவி பொதுமக்கள் அதிகார பலம் படைத்த ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை செருப்பால் அடித்து விட்டால் பிறகு அவர்களுக்கு நேரக்கூடிய ஆபத்துகளுக்கு யார் பொறுப்பு?!

அரசியல்வாதிகளின் அதிரடியான இந்தத் தூண்டுதல் குறித்து சாமானியர்களின் கருத்து என்னவாக இருக்கும்?

தினமணி வாசகர்கள் தங்களது கருத்துகளை இங்கே பதிவு செய்யலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட இரு சம்பவங்களிலும் பாஜக எம் எல் ஏ சுரேந்தர் சிங்கும், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவும் ஊழல் அரசியல்வாதிகளைத் தான் செருப்பால் அடிக்கும்படி கூறியிருக்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் பற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் ஊழல் அரசியல்வாதி எனத் தான் கருதிய அமைச்சர் ஒருவரை செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர் செருப்பால் தாக்கிய செய்தியையும் நீங்கள் அறிந்திருக்க நேரிட்டிருக்கலாம். அது நடந்தது 2009 ஆம் ஆண்டில். 

ஷூ தாக்குதலுக்கு உட்பட்ட அரசியல்வாதி அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். 

ப.சிதம்பரம்  மீதான ஷூ வீச்சுக்கான காரணம்...

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம். 

அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார். அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார். ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, போதும்...போதும் நிறுத்துங்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்கலாம், ஏற்க மறுக்கலாம் அல்லது மேலும் விசாரிக்க உத்தரவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்றார் சிதம்பரம். ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை. 

இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன். மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார். ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். 

அப்போது அவர்களிடம் ஜர்னைல் சிங்கை 'ஜென்டிலாக' நடத்துங்கள்... இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம் என்றார். உடனடியாக விடுவிப்பு: ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 

பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. அதே பாணியில் ப.சிதம்பரம் மீதும் ஷூ வீசப்பட்டது. ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். பிரஸ்மீட்டிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், ‘நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அணுகுமுறை தவறாக ‌இருந்திருக்கலாம். இதை எந்தப் பத்திரிக்கையாளரும் செய்யக் கூடாது. ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். டைட்லரை விடுவித்தது சீக்கியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. இது ஒரு எரியும் பிரச்சனை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை’ என்றார். இவர் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை கவர் செய்யும் ரிப்போர்டராகவும் உள்ளார். 

சிதம்பரத்தின் மீது ஷூ வீசிய நிருபருக்கு அகாலிதளம் ரூ. 2 லட்சம் பரிசு...

ப.சிதம்பரத்தின் மீது ஷூ வீசிய நிருபருக்கு, அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தது. அத்தகைய சூழலில் அன்று, காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த ஜர்னைல் சிங் பேசுகையில், ‘நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறேன். ஆனால், சிபிஐ அறிக்கை குறித்து மத்திய அரசும் சிதம்பரமும் யோசித்துப் பார்க்க வேண்டும்’ என்றார். ‘இந்தப் பிரச்சனை தொடர்பாக வேறு வழியில் போராடியிருக்கலாமே?!’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எந்த வகையில் போராடச் சொல்கிறீர்கள். இந்தப் பிரச்சனையில் 25 வருடமாக இதே தானே நடந்து கொண்டிருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

2008 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம்...

2008 ஆம் வருடத்தில் ஒரு நாள், ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார். 

அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார். 

‘ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார். முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குனிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது. 2ன்வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது. இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சில வீரர்கள், நிருபரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை பேச விடாமல் மடக்கிப் பிடித்தபடி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு செருப்படி சம்பவங்களிலுமே அத்தகைய தாக்குதலில் ஈடுபட்டவர்களது இன்றைய நிலை என்ன என்பது குறித்து போதிய தகவல்கள் கிடைத்தபாடில்லை.

வகையாக மாட்டியிருந்தால் நிச்சயம் சங்கு ஊதியிருப்பார்கள். சில அரசியல் தலைவர்கள் தங்களது பெருந்தன்மையைப் பறைசாற்றிக் கொள்வதற்காக அப்படிப்பட்டவர்களை மன்னித்து விட்டார் போல நடிப்பதும் உண்டு. என்ன இருந்தாலும் அதற்குப் பின் உஷாராக இருந்தே ஆக வேண்டிய நிலையை அவர்கள் தேடிக்கொண்டார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT