தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்: மதப்பிரச்சாரத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் உமாசங்கர் ஐஏஎஸ்!

தனது தலைவலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சிதியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் உமாசங்கர் ஐஏஎஸ். தனக்கான சிகிச்சைக்காக அங்கே சென்றவர் பிறகு தன் சிகிச்சையை மறந்து அங்கே இருந்த பிற நோயாளி
தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்: மதப்பிரச்சாரத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் உமாசங்கர் ஐஏஎஸ்!

தமிழகத்தைச் சார்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான உமா சங்கர் ஐஏஎஸ் தனது கிறிஸ்துவ பக்தியின் காரணமாக மீண்டுமொரு முறை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார். 2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் உமாசங்கர் ஐஏஎஸ். சமீப காலங்களில் உமாசங்கர் ஐஏஎஸ் அவரது மதப்பிரச்சாரங்கள் மற்றும் ஃபெய்த் ஹீலிங் (நம்பிக்கை சிகிச்சைமுறை) நம்பிக்கைகளால் தீவிரமான சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ‘சிதி’ தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த உமாசங்கர், அங்கேயும் தனது மதபோதனைகளைத் துவக்கி ஃபெயித் ஹீலிங் வேலைகளையும் தொடங்கவே உடனடியாக தேர்தல் ஆணையம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேற்றியதோடு மீண்டும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பியுள்ளது.

தனது தலைவலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சிதியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் உமாசங்கர் ஐஏஎஸ். தனக்கான சிகிச்சைக்காக அங்கே சென்றவர் பிறகு தன் சிகிச்சையை மறந்து அங்கே இருந்த பிற நோயாளிகளுக்கு மதபோதனையும், ஃபெய்த் ஹீலிங்கும் செய்யத் தொடங்கவே அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர் உமாசங்கரின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் பிறகே இந்தச் செய்தி ஊடகங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆயினும் இவ்விஷயத்தில், தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்களென அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலும் உமாசங்கர் ஐஏஎஸ் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசங்கர் ஐஏஎஸ் தனது கிறிஸ்தவ மதப்பற்றை எப்போதும் மறைத்ததில்லை. உலகறிய, ஊரார் அறியத்தான் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன. அவரது மதப்பிரச்சாரத்தின் தீவிரத்தனத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் டே ஆஃப் லார்ட் ஜீசஸ் (Day of Lord Jesus) எனும் யூடியூப் சேனலுக்குச் சென்று ஒருமுறை பார்வையிடலாம். அதையொட்டி பொதுமக்களிடம் இருந்து வந்த ஆட்சேபணைப் புகார்களின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. தன் மீதான நடவடிக்கை குறித்து உமாசங்கர் இதுவரை எவ்வித எதிர்ப்பையும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

1990 ஆம் ஆண்டு பேட்ச் இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளில் வென்று ஐ ஏ எஸ் அதிகாரியாகத் தேர்வானவர் உமாசங்கர் ஐஏஎஸ். அடிப்படையில் இந்து தலித் பிரிவைச் சார்ந்தவராக இருந்தபோதும் 2008 ஆம் ஆண்டில் கிறிஸ்தவராக மதம் மாறினார். ஒருகாலத்தில் சட்ட விரோதிகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான காரியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளில் முதன்மையானவர் எனப் பெயரெடுத்துக் கொண்டிருந்தவர் தற்போது தனது மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக சர்ச்சைக்குரிய வகையில் அடையாளம் காணப்பட்டு வருவது காலத்தின் கோலம். இயற்கைச் சீற்றங்களின் போது கடவுளின் சாபத்தால் தான் மக்கள் இத்தகைய இயற்கைச் சீற்றங்களுக்கு ஆளாக நேர்ந்தது என்று கருத்துத் தெரிவித்து சிக்கலில் மாட்டிக் கொண்டதோடு, அவ்வப்போது கிறிஸ்தவ மதத்தைப் போற்றுவதற்காக இந்து மதத்தை தூற்றியும் வந்தார்.

தனது மதபோதகத் தனத்துக்காக உமாசங்கர் ஐஏஎஸ் கண்டிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு, ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறு என்று அவரது மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு எச்சரிக்கையுடன் கூடிய தடை விதித்திருந்தது. கன்யாகுமரியில் பொது மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றக்கூடிய வகையிலான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார் எனக்கூறி உமாசங்கர் ஐஏஎஸ் அங்கிருந்த சிலரால் தாக்குதலுக்கு உள்ளானார். இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் நான் பணத்திற்காகவோ, அன்பளிப்புகளுக்காகவோ கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறேன்’ என்றார் உமாசங்கர் ஐஏஎஸ்.

உமா சங்கர் ஐஏஎஸ் தனிமனிதராக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் வரையில் அது அவரது அடிப்படை உரிமை சார்ந்த விஷயம். ஆனால், அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டு இப்படியான மதப்பிரச்சாரங்களில் ஈடுபடுவது தான் பலதரப்பிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com