‘அம்மா கூப்பிடறாங்க’ என்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அயனாவரம் சிறுமி!

இப்படித்தான் சிறுமி வீட்டுக்கு வரத் தாமதமான ஒவ்வொரு முறையும் அவள் எங்கேயோ பாதுகாப்பாக விளையாடி விட்டு வருவதாக சிறுமியின் தாய் நம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.
‘அம்மா கூப்பிடறாங்க’ என்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அயனாவரம் சிறுமி!

கடந்த வாரம் தனது அபார்ட்மெண்ட் வளாக பணியாளர்கள் 11 பேரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட அயனாவரம் சிறுமி குறித்த பகீர் செய்தியால் தமிழகமே கொந்தளித்துக் கிடந்தது. சிறுமியை சீரழித்த 11 பேரும் காவல்துறை விசாரணையின் பின் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்கள் குழு மூலமாக உடல் மற்றும் மனநலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சிறுமிக்கான மருத்துவப் பரிசோதனை தற்போது முடிவுற்ற நிலையில் அது குறித்த தகவல்கள் நாளை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படுமெனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மனநலம் குன்றியவர் என்றொரு செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வரும்நிலையில் மருத்துவர் குழுவின் பரிசோதனை முடிவுகள் அதைப் பொய்யாக்கியுள்ளது. சிறுமியின் ஐக்யூ அளவு 95 சதவிகிதமாக இருப்பதால் அவர் பூரண மனவளர்ச்சியுடன் தான் இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுவர்களைப் பொருத்தவரை அவர்களுக்கான ஐக்யூ லெவல் 85 முதல் 115 % வரை இருந்தால் அவர்கள் நல்ல மனநிலையுடன் இருப்பதாகக் கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அயனாவரம் சிறுமி விஷயத்தில் அச்சிறுமிக்கு தனக்கு நடந்த பாதிப்பு குறித்து விவரம் அறியாத நிலையே தற்போது வரை நீடிக்கிறதே தவிர, தான்  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறோம் என்பதையெல்லாம் அச்சிறுமி இதுவரை உணரவில்லை என்றே மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

சிறுமிக்கு செவித்திறன் குறைபாடு இருந்த காரணத்தால் தனது மகளை பிற இயல்பான குழந்தைகளுடன் விளையாட அனுமதிப்பதில் சிறுமியின் தாயாருக்கு மனத்தாங்கல் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் சிறுமியை தன்னோடும் பிறகு தனியாகவும் விளையாடப் பழக்கி இருக்கிறார். அப்படி விளையாடிப் பழகிய சிறுமியின் பொழுதுபோக்குகளில் ஒன்று அபார்ட்மெண்ட் லிஃப்டில் மேலும் கீழுமாக பயணிப்பது. இதை தன் தாயாரின் துணையுடன் சிறுமி பலமுறை பொழுதுபோக்காகச் செய்து வந்திருக்கிறார். சில சந்தர்பங்களில் இதைத் தொடர்ந்து கண்ட அபார்ட்மெண்ட் லிஃப்ட் ஆபரேட்டரான 60 வயது நபர், சிறுமியின் தாயாரிடம், சிறுமியை இனி தானே கவனித்துக் கொள்வதாகவும், அவள் லிஃப்டுக்குள் பத்திரமாக விளையாடுவாள், அதற்கு தான் பொறுப்பு என்று உறுதியாகவும், ஆறுதல் போலவும் கூறியதால் அதை நம்பிய சிறுமியின் தாயார் அவளை லிஃப்டில் விளையாட அனுமதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இப்படித்தான் சிறுமி வீட்டுக்கு வரத் தாமதமான ஒவ்வொரு முறையும் அவள் எங்கேயோ பாதுகாப்பாக விளையாடி விட்டு வருவதாக சிறுமியின் தாய் நம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி விட்டு வீடு திரும்பும் சிறுமி லிஃப்டில் தன் வீட்டுக்குச் செல்கையில் லிஃப்ட் ஆபரேட்டர் அல்லது இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றத் தயங்காத மிருகங்கள் ஒவ்வொருவரும் சிறுமியிடம், ‘அம்மா கூப்பிடறாங்க’ என்று சொல்லியே அபார்ட்மெண்ட்டின் வெவ்வேறு இடங்களில் இருந்த காலி வீடுகள் அல்லது உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய செய்தி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com