லைப்ரரி

மைதிலி ராசேந்திரனின் ‘கலைஞரின் இந்தி எதிர்ப்பு போராட்டம்!’ நூல் அறிமுகம்!

கார்த்திகா வாசுதேவன்

கருணாநிதி இந்தியை எதிர்த்தார்...

ஏன் எதிர்த்தார்?

இன்று வரையிலும் கருணாநிதியின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ எமோஷனலாகத் தானே பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன் வைத்து வருகிறோம். அப்படி அல்லாமல் உரிய வகையில் அதன் உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் நாம் எப்போதாவது அணுகியிருக்கிறோமா?

அப்படி அணுகவேண்டுமாயின் நமக்கு தமிழகத்தில் நிகழ்ந்த மொழி ஆதிக்கப் பின்னணி குறித்து ஏதேனும் சிற்றளவிலாவது விஷய ஞானம் இருக்க வேண்டும். அப்படியல்லாது போயின் நம்மால் இந்த மொழிப்போரை நேர்மையான விதத்தில் உள்வாங்கிக் கொள்ள முடியாது. தமிழகத்தில் மொழிப்போரின் பின்னணியை, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியைப் பற்றி பூரணமாகவும் வரிசைக்கிரமமாகவும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தை வாசித்தால் நிச்சயம் தெளிவு கிடைக்கும்.

இது எழுதப்பட்ட வருடம் 1990. ஆனால் இப்போது ஆண்டு 2018. இன்றுவரையிலும் கூட இந்தி திணிப்பு குறித்த அச்சம் நம்மை விட்டு விலகுவதாக இல்லை.

காரணம் இந்தி திணிப்பு என்பது மாநில சுயாட்சி அதிகாரங்களையும், மாநில ஆட்சிமொழிக்கான சுருங்கச் சொல்வதென்றால் தாய்மொழிக்கான மரியாதைகளையும் தேயச் செய்து விடக்கூடியதாகவும் தேன் தமிழை சிறுகச் சிறுக மக்கள் புழக்கத்தில் இருந்து ஒழித்துக் கட்டும் விதத்திலுமாக அமைந்திருப்பதாக மக்கள் நம்புவதால் தான் இத்தனை கடுமையான எதிர்ப்புணர்வு இன்றளவும் மக்களிடையே நிலவுகிறது.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் முதல் புற்றீசல்களைப் போல பெருகி வரும் புதுப் புது சிறு அரசியல் கட்சிகளும் கூட தமிழர்களின் மொழிப்பற்றையும், மொழியார்வத்தையும் மொழி வெறியாக்கி அரசியல் லாபம் பெறவே சதா முனைந்து கொண்டிருக்கின்றன. அவர்களில் பலருக்கும் கூட தமிழகத்தில் மொழிப்போரின் துவக்கம் எதுவெனத் தெளிவாகத் தெரிந்திருக்குமோ என்னவோ?!

இன்னும் சிலர் நினைத்துக் கொள்கிறார்கள் இந்தி எதிர்ப்பு என்பது ஏதோ கருணாநிதி தான் முதன்முதலாகத் துவக்கி வைத்தார் என! அப்படி இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் வாயிலாக அடையாளம் பெற்றவர் கருணாநிதி என்று சொல்ல வேண்டும். அது தான் சரி.

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதை விட இந்தி திணிப்பு போராட்டம் என்று சொன்னால் உத்தமமாக இருக்கும். தமிழகத்தில் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜாஜி தலைமையிலான அரசு இந்தியை ஆட்சி மொழியாக்கும் ஆர்வத்தில் இருந்தது. அவர்கள் மும்மொழித் திட்டத்தை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களது ஆசைப்படி பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஓட்டு வித்யாசத்தில் இந்தி ஆட்சிமொழியாகவும் ஆக்கப்பட்டது. இந்தியை ஆட்சி மொழியாக்கி விட்ட பின் அதை மாநிலங்கள் வரை உறுதிப் படுத்தாமல் இருந்தால் எப்படி?

விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவான போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவற்றின் தாய்மொழி ஆட்சிமொழியாகவும் இந்தியும், ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டு மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் வேகம் ராஜாஜிக்கு மிகுந்திருந்தது. ஆனால், அவரது விருப்பத்துக்கு அப்போது தான் தமிழகத்தில் முளைவிட்டு கிளைத்துக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் குறுக்கே நின்றன.

முடிவில் சுதந்திரத்துக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் ஏறிய அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ராஜாஜியின் மும்மொழிக் கொள்கையை ரத்து செய்து விட்டு மாநில சுய அதிகாரங்களை உறுதிப் படுத்தும் விதத்தில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்தினார். இப்படிச் செல்கிறது மொழிப்போர் வரலாறு.

இதற்கான பந்தற்கால் ஊன்றப்பட்டது திமுக காலத்தில் அல்ல, அதற்கும் முந்தைய திராவிடக் கழக காலத்திலும் அல்ல அவர்களுக்கும் முந்தைய நீதிக்கட்சி காலத்திலும் அல்ல... அதற்கும் முந்தைய ஆண்டுகளில் 1917 ஆண்டைய தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்,  1914 ஆம் ஆண்டைய திராவிடக் கூட்டுறவு சபை என 1914 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தில்க் மொழிப்போருக்கான விதை தூவப்பட்டு விட்டது.

ஆனால் அந்தக் காலகட்டத்து தமிழக மக்களின் மனமென்னும் வறண்ட பூமியில் ஊன்றப்பட்ட அந்தக் காய்ந்து முற்றிய விதை சாறு பிடித்து மழை ஈரம் உறிஞ்சி முளை விட்டுக் கிளைக்க அதற்கு திராவிட உரம் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் தான் இன்றும் கூட மொழிப்போரின் மொத்த அடையாளமாக திராவிடக் கட்சிகள் கருதப்படுகின்றன. ஏனெனில் அதை உரமிட்டு வளர்த்தவர்கள் திராவிடத் தலைவர்களே!

இப்படிப்பட்ட எண்ணற்ற தரவுகளைத் தருகிறது மேற்கண்ட புத்தகம். தமிழகத்தில் நிகழ்ந்த மொழிப்போர் குறித்தும், அதில் கலைஞரின் பங்கு குறித்தும் அறிய விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தை ஒரு முறை வாசிப்பது உத்தமம்.

இந்த புத்தகம் மின்னூலாக இணையத்தில் தமிழ் டிஜிட்டல் லைப்ரரியில் கிடைக்கிறது. விருப்பமிருக்கிறவர்கள் தரவிறக்கி வாசித்துக் கொள்ளலாம்.

அதற்கான இணைப்பு... http://tamildigitallibrary.in

நூல்: கலைஞரின் இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஆசிரியர்: மைதிலி ராசேந்திரன்
வெளியீடு: அகவி 
விலை: ரூ 30
முகவரி: அகவி
486, நாதன் இல்லம், 46 வது தெரு, 9 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை- 83
தொலைபேசி: 4821205

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT