லைப்ரரி

விழியன் உமாநாத்தின் ‘ஜூபிடருக்குச் சென்ற இந்திரன்’ புத்தக விமர்சனம்!

கார்த்திகா வாசுதேவன்

விழியனின் சிறார் கதைகள் இன்றைய குழந்தைகளுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம் என்று கூடச் சொல்லலாம். எல்லாக்கதைகளுமே மிகக் கவனத்துடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான குதூகல உணர்வைச் சிறிதும் கலைத்து விடக்கூடாது என்பதோடு நீதிபோதனா நெடியும் அடித்து விடக்கூடாது என்பதில் அவர் கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது.

முதலில் அவருடனான நேர்காணலின் பின்னரே அவரது தொகுப்புகளை வாசிக்கும் ஆர்வம் மிகுந்தது என்று சொல்லலாம். தற்போது விழியன் கிட்ஸ் ஸ்டோரிஸ் (Vizhiyan kids stories) எனும் வாட்ஸ் அப் குழுமத்தில் இணைந்துள்ளதால் இவரது கதைகள் ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப் வழியாக நம்மை வந்தடைந்து விடுகின்றன. அப்புறமென்ன? தினமும் இரவுகளில் குழந்தைகளுக்கு என்ன கதை சொல்வது? என்று மூளையைக் குடைந்து கொண்டு திணற வேண்டியதில்லை. நான் இந்தக் குழுமத்தில் இருந்து வரும் கதைகள் அனைத்தையுமே என் மகள்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அருமையான கதைகள் மட்டுமல்ல. நம்மையும் நமது குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் சென்று விடக்கூடிய கதைகளாகவும் இருக்கின்றன.

மேற்கண்ட ‘ஜூபிடருக்குச் சென்ற இந்திரன்’ தொகுப்பில் முனியம்மா பாட்டி கதை, சதுர்த்தி, பரோட்டா லட்சுமி, மழைநாள் ஒன்றில் உள்ளிட்ட கதைகள் செண்டிமெண்ட்டாகவும் சிறுவர்களை ஈர்க்கக் கூடிய வகையில் அமைந்திருந்தன. என் மகள் குறிப்பிட்ட இடைவெளியில் முனியம்மா பாட்டி கதையை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்லி கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள். பள்ளிப்பிள்ளைகளுக்கு சாப்பாட்டுக்கூடை சுமக்கும் முனியம்மா பாட்டியின் பசி குறித்தும் சிந்திக்க ஒரு குட்டிப்பெண்ணால் முடிகிறது. அப்பாவின் பணி மாறுதல் காரணமாகப் பள்ளியை விட்டு வெகு சீக்கிரத்தில் விலக இருக்கும் அவள் தனது இரக்க உணர்வை பள்ளியின் பிற சகாக்களிடம் பரவ விட்டுச் செல்ல பிறகு பாட்டியால் தினமும் பசியுடன் கூட சுமக்க நேராமலாகிறது என்பது நிச்சயம் குழந்தைகள் அறிய வேண்டிய உணர்வே! இன்னொரு உயிர் பசித்திருக்கையில் நாம் மட்டும்  ‘உண்பது’ மட்டுமல்ல ‘உணவை வீணாக்குவதும்’ தவறு! என்பதையும் குழந்தைகள் மனதில் ஆழப்பதிய வைக்கும் கதை இது.

சதுர்த்தி கதையில் கடைசியில் நண்பர்களான கிறிஸ்தவக் குழந்தைகளுக்கு பிள்ளையார் சிலையை பரிசாக அளித்த சிறுவன் மணியிடம் அவனது பெற்றோர்;

‘டேய், அவங்க வீட்ல விநாயகரை பார்த்து ஏதாச்சும் திட்டிட போறாங்க மணி’ என்று எச்சரிக்கையில்;

சிறுவன் மணியின் பதில்;

‘நம்ம வீட்ல ஒரு வருஷமா மேரி மாதா ஃபோட்டோ இருக்கு... இதுவரைக்கும் நீங்க கண்டுபிடிச்சீங்களா..? என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக கொழுக்கட்டைகளுடன் ஓடி விடுவதாகக் கதை முடிவது எனது பள்ளிப் பருவத்தை எனக்கு நினைவூட்டியது.

ஆரம்பப் பள்ளிக்காலங்களில் கிறிஸ்தவப் பள்ளியில் படிக்கையில் அங்கு தாற்காலிகமாக வேலைக்கு வரும் பயிற்சி டீச்சர்கள் அனைவருமே கிறிஸ்தவ மிஷனரிகளில் படித்து வெளிவந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களது கைகளில் குழந்தை ஏசுவைக் கையிலேந்திய மேரிமாதா உருவப்படம் பொறித்த சிவப்பு நிற  மோதிரம் அணிந்திருப்பார்கள். கூடுதலாக சில சார்வாள்ஸ் சில்வரில் சிலுவை டாலரும் அணிந்திருப்பார்கள். அவர்களைப் பார்த்துக் காப்பியடித்து நானும், என் சினேகிதிகளும் அதே மாதிரி வாங்கி அணிய வேண்டுமென்றெல்லாம் கற்பனை செய்திருக்கிறோம். சில சமயங்களில் அவர்கள் தரும்  ஏசு கிறிஸ்து ஸ்டிக்கர்களைக் கொண்டு வந்து வீட்டு பூஜையறையில் கண்ணுக்குத் தட்டுப்படாத இடங்களில் ஒட்டி வைத்து தினமும் சிலுவையிட்டுக் கொண்டு பிரார்த்தனை செய்த அனுபவங்கள் உண்டு. சில சமயம் ஸ்ரீராம ஜெயம் எழுதுவதைப் போல ‘ஏசுவின் ரத்தம் ஜெயம்’ என்று 1000 முறை எழுத முற்பட்டதுண்டு. அதெல்லாம் ஆரம்பப் பள்ளிக்காலங்கள். அப்போது அதையெல்லாம் அப்போது குடும்பத்தில் ஒருவரும் தட்டிக் கேட்டதுமில்லை. தெரிந்தும் தெரியாதது போலக் கடந்து விடுவார்கள். இந்தப் புரிதல் இப்போது இருக்கும் பெற்றோருக்கும் உண்டா! என்று தெரியவில்லை. முந்தைய தலைமுறைப் பெற்றோருக்கு இருந்த பெருந்தன்மை இப்போதும் இருந்தால் சந்தோஷம்!

ஏனென்றால் அந்தத் தலைமுறையினருக்கு தூர்தர்ஷன் சேனல் நல்லதை மட்டுமே நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும், விளம்பரங்களாகவும் காட்டிக் கொண்டிருந்தது. இன்றைய மெகா சீரியல்களில் காட்டப்படும் அளவுக்கு வன்முறைக் காட்சிகளைப் பார்த்து வளர்ந்தவர்கள் அல்ல 80 களில் பிறந்த தலைமுறையினரும் அவர்களது பெற்றோரும்.

நிற்க! விழியனின் ‘சதுர்த்தி’ கதை நம்மை எங்கெல்லாம் அழைத்து சென்று விட்டது பாருங்கள்.

இதே விதத்தில் தான் அவரது பிற கதைகளும் இருக்கின்றன.

இந்தத் தொகுப்பு தவிர... விழியன் கிட்ஸ் ஸ்டோரிஸ் வாட்ஸ் அப் கலெக்‌ஷனில் தினமும் ஒரு கதையாக நிறையக் கதைகள் நம்மை வந்தடைகின்றன. இரவுகளில் குழந்தைகளுக்கு கதை சொல்லித் தூங்க வைக்கும் பழக்கம் கொண்ட பெற்றோருக்கு இது மிகப்பயனுள்ளதாக இருக்கிறது. கதைக்காக திண்டாட வேண்டாம் பாருங்கள். நல்ல நல்ல நேர்மறைச் சிந்தனைகளை சிரமமின்றி விதைக்கக்கூடிய சிறார் கதைகள் வாசிக்கும் போதே நம்மைப் புன்னகைக்கத் தூண்டுகின்றன.

உங்களுக்கும் பிடிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வாங்கி வாசித்து விட்டு அவரவர் குழந்தைகளிடம் கதைகளைப் பகிருங்கள்.

நூல்: ஜூபிடருக்குச் சென்ற இந்திரன்
ஆசிரியர் : விழியன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் (Books for Children)
விலை: ரூ 50.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT