லைப்ரரி

புதுமைப் பித்தனின் ‘கண்ணாள் கமலாவுக்கு சொ.வி எழுதுவது’ கடிதத் தொகுப்பு விமர்சனம்!

கார்த்திகா வாசுதேவன்

புதுமைப்பித்தன்... ‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதையை எழுதியது இவர் தான் என்ற பெயர் நினைவில் பதியாமலே கல்லூரி நாட்களில் வாசித்துக் கடந்திருக்கிறேன். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வலைப்பதிவர்களும், வலைப்பதிவுகளும் ஆற்றிய கடமை ஈடு இணையற்றது. இல்லையேல் என் போன்றவர்கள் புதுமைப் பித்தனைப் பற்றி மேலும் விரிவாக அறிந்திருக்க இயலாமலே போயிருக்கும். 2006 ஆம் ஆண்டு வாக்கில் நானும் ஒரு வலைப்பதிவராக பரிணமித்து எழுதத் தொடங்கிய போது புத்தக விமர்சனம் எழுதுவதை ஒரு கடமையாகச் செவ்வனே செய்து கொண்டிருந்தேன். ஏனென்றால் போக்குவதற்குப் பொழுதுகள் என்னிடம் நிறைய இருந்தன

அப்போது. அப்படித்தான் புதுமைப்பித்தன், கு.அழகிரி சாமி, வைக்கம் பஷீர், லா ச ரா, எம் டி வி, தகழி, ஜெயந்தன், நாஞ்சில் நாடன், பொன்னீலன், கந்தர்வன், வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், போன்ற பல எழுத்தாளர்கள் புத்தக வாசிப்பு வாயிலாக எனக்கு அறிமுகமானார்கள். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள் வாசித்திருக்கிறேன். அன்றும், இன்றும், என்றும் என்னை ஈர்ப்பவை காஞ்சனை, ஒருநாள் கழிந்தது, பால்வண்ணம் பிள்ளை, செல்லம்மாள், பொன்னகரம் உள்ளிட்டவை. இலக்கியச் சுவை பற்றியெல்லாம் பெரிதாக அறிந்து கொள்ளும் முன் கல்லூரி விடுமுறை நாட்களில் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களாக இருந்த பெருமை தேவன், அகிலன், நா.பார்த்தசாரதி, கல்கி, சாவி, தி.ஜா, எஸ்.வி.வி, பிரபஞ்சன் உள்ளிட்டோருக்கு உண்டு. அவர்களைத் தாண்டி சில ஆண்டுகள் கடந்துதான் புதுமைப் பித்தனும், லா.ச.ராவும் அறிமுகமானார்கள்.

சமீபத்தில் புதுமைப் பித்தன் தன் ப்ரியமான மனைவி கமலாவுக்கு எழுதித் தீர்த்த கடிதத் தொகுப்பொன்றை வாசித்தேன். உபயம் உமா!

நாம் எத்தனையோ புத்தகங்களை வாசித்திருக்கலாம். அவற்றில் பலவும் மனதுக்கு நெருக்கமாகவும் இருந்திருக்கலாம். ஆனால், ஏதேனும் சில மட்டுமே வாழ்நாளில் மறக்க முடியாத புதுமையான அனுபவ பாடங்களைத் தரக்கூடிய படைப்புகளாக அமையும். 

எனக்கு அப்படி அமைந்தவை... தேவனின் ‘லட்சுமி கடாட்சம்’, சா.கந்தசாமியின் ‘சாயாவனம்’ சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’,  ஜோ.டி.குரூஸின் ‘கொற்கை’ நாவல்கள் மட்டுமே அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருக்கிறது  ‘கண்ணாள் கமலாவுக்கு சொ.வி எழுதுவது!’ கடிதத் தொகுப்பு.

புதுமைப் பித்தன் தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இது!

ஒவ்வொரு கடிதமும் கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி கதையாக சென்னையில் தனியே தவித்துக் கொண்டிருந்த அந்த ஏழை எழுத்தாளனின் ஜீவ மரணப் போராட்டத்தை அலுங்காமல் முன் வைக்கும் விதம் நெஞ்சில் முள் தைத்த உணர்வைத் தருகிறது. 

புதுமைப்பித்தனின் வாழ்க்கை என்பது... எழுத்தை மட்டுமே வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கான ஒரே பற்றுக்கோடாகக் கொள்ளும் நினைப்பிருக்கும் ஒவ்வொரு படைப்பாளிக்குமான அனுபவப்பாடம்.

மனைவி கமலாவை மணந்து சில மாதங்களிலேயே தன் தகப்பனார் வீட்டிலிருந்து அவரால் வலிந்து வெளியேற்றப்பட்டவரான சொ.விருதாசலம் எனும் புதுமைப் பித்தனின் இருதயம் அவரது வாழ்நாளிலேயே பலமுறை செத்து செத்துப் பிழைத்திருப்பது அவரது கடிதங்களில் நன்கு வெளிப்படுகிறது.

கணவன் இங்கே சென்னையில் பத்தியும் பத்தாத ஒரு பத்திரிகையாள உத்யோகத்தில் தொக்கி நிற்க... மனைவி அங்கே அம்மா வீட்டில் கணவருடன் சேர்ந்திருக்க வாய்க்காத பொருளாதார நெருக்கடியில் கூனிக் குறுகி வாழ்நாளைத் தள்ள இடையில் குஞ்சு பிறந்து கைக்குழந்தையாகவே இறந்தும் போகிறாள். குஞ்சுவின் இழப்பை சொ.வி தனது கடிதங்களில் விஸ்தரிக்கையில் மனம் கலங்குகிறது. குஞ்சுவாவது நிம்மதியாக இறைவனடி சேர்ந்தாள்... ஆனால், தினகரி... அப்பாவின் அருகாமையை உணராத குழந்தையாக தினகரி வளர்ந்து வந்த சூழல்களை சொ.வி எழுதிய கடிதங்கள் வாயிலாக நினைவிலோட்டிப் பார்க்கையில் கமலாவையும், சொ.வியையும் போலவே நமக்கும் ஆற்றாமையாகத்தான் இருக்கிறது. இந்தக் குழந்தை என்ன பாவம் செய்திருக்க முடியும்?! தந்தை அள்ளி அணைத்து, தட்டாமலை சுற்றி இறக்கி... சுட்டு விரல் பற்றி கடைத்தெருவைச் சுற்றிக்காட்ட அதைப் பேராவலுடன் காணும் ஆவல் அந்தக் குழந்தைக்கும் இருந்திருக்கலாம். ஆனால், தினகரிக்கு அதெல்லாம் ஈடேறியதாகத் தெரியவில்லை.  1938 முதல் 1948 வரை புதுமைப் பித்தன் தன் மனைவியுடன் அதிகம் சேர்ந்து வாழ்ந்திருந்ததாகத் தெரியவில்லை. இவர் சென்னையில் கமலாம்மாள் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்திலுமாக கடிதங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள்.

மனைவிக்கு  ஜம்பர் தைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் சரி, குழந்தைக்கு பிஸ்கட் டின் வாங்கி அனுப்புவதாக இருந்தாலும் சரி எல்லாமும் கடிதங்களின் வழியே தான் பண்டமாற்றாகிக் கொண்டிருந்தன. சென்னையில் பத்திரிகையாளராக வாழ்ந்த போதும் சரி, பாகவதரின் திரைப்படத்துக்கு வசனமெழுத புனேவுக்கு இடமாறுதல் அடைந்த போதும் சரி புதுமைப்பித்தனுக்கு வாழ்வு எப்போதுமே கொண்டாட்டமாகவே இருந்ததில்லை. விதி அவரை திண்டாடலுக்குரிய ஸ்திதியிலேயே வைத்திருக்க நினைத்தது.

கடிதங்கள் தோறும் மனைவிக்கு பணம் அனுப்ப நினைத்து முடியாமல் போன ஏக்கங்களும், அவற்றிற்கான மன்னிப்புக் கோரல்களும், மனைவியை சென்னைக்கு வரவழைத்து குழந்தையை ஆசை தீர தோளிலும், மடியிலும் ஏற்றிக் கொண்டு பாசத்தகப்பனாக வாழ ஏங்கிய குடும்பத்தலைவனின் பாசக்கனவுகளுமாகத்தான் நிரம்பி வழிகின்றன. ஆனால், சொந்த வாழ்வின் சோகங்கள் எதுவும் அவரது படைப்பாற்றலை சற்றும் பாதிக்கவில்லை. பல நேரங்களில் பாதிப்பு கண்கூடாகத் தெரிந்த போதும் ஏதிலியாகவே அவரால் தன் வாழ்வை வேடிக்கை பார்க்க முடிந்திருக்கிறது.

மொத்தத்தில் இந்தக் கடிதங்களை முழுதாக வாசித்து முடிக்கையில் அந்த எழுத்தாளனை முற்றிய காசநோய் வந்து அணைத்துக் கொள்கிறது.

பிறகு அவர் இணைந்து வாழத்துடித்த அந்த மனைவியும், குழந்தையும் என்ன ஆனார்கள் என்கிறீர்களா? ஆம், அவர்கள் புதுமைப்பித்தனுடன் இணைந்து வாழ காலம் அனுமதிக்கவில்லை என்பதா அல்லது புதுமைப்பித்தனின் பொருளாதார நெருக்கடி அனுமதிக்கவில்லை என்பதா? எப்படிச் சொல்வதாக இருந்தாலும் அவர்கள் ஒரு நிறைவான வாழ்வை வாழவில்லை என்ற தாக்கத்தையே இந்தக் கடிதத் தொகுப்பு ஏற்படுத்துகிறது. மொத்தத்தையும் வாசித்து முடிக்கையில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை என்றால் உங்கள் நெஞ்சு கல்நெஞ்சே தான்!

இலக்கிய ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இது முக்கியமானது.

புத்தகம்: கண்மணி கமலாவுக்கு சொ.வி எழுதுவது
தொகுப்பு: இளையபாரதி
பதிப்பகம்: வ.உ.சி பதிப்பகம்
விலை: ரூ 75.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT