லைப்ரரி

‘மானசரோவர்’ இன்னும் வாசிக்கலையா அது அசோகமித்திரனுடைய மாஸ்டர் பீஸ் ஆச்சே!

கார்த்திகா வாசுதேவன்

அசோகமித்திரனை வாசிக்கும் போது எனக்கொரு பழக்கமிருக்கிறது. கதையை அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்ததாகவே எண்ணிக்கொண்டு வாசிக்கத் தொடங்கி விடுகிறேன். ஒற்றன், கரைந்த நிழல்கள் இரண்டையும் வாசிக்கும் போது அப்படித்தான் நேர்ந்தது. அதுவே தான் மானசரோவருக்கும். இது ஒருவகையில் தப்பர்த்தமாக இருக்கலாம். ஆனால், அப்படி நேர்வதில் தான் கதாசிரியரின் வெற்றியுமிருப்பதாகத் தோன்றுவதால் அதை அப்படியே விட்டு விடலாம்.

மானசரோவர்... பல நண்பர்கள் பல்வேறு தருணங்களில்... இன்னும் வாசிக்கலையா... இன்னும் வாசிக்கலையா... அது அசோகமித்திரனோட மாஸ்டர் பீஸ் ஆச்சே! என்று சிலாகித்துத் தள்ள நானும் ஒருவழியாக நேற்று மானசரோவரை வாசித்து முடித்தேன்.

சில படைப்புகளுக்கு சிலவகை சுதந்திரங்கள் தானாகவே அமைந்து விடும்.

சில படைப்புகள் அவ்வித சுதந்திரத்தை தாமாகவே வலியப் பிடுங்கிக் கொள்ளத்தக்கவை.

நேற்று விடுமுறை நாள்... மகள்களுக்கு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டமென்பதால். அவர்கள் காலையிலேயே பள்ளியில் ஆஜர். காலை பத்து பத்தரைக்கு மேல் வீடு வெறிச்சிட்டிருந்த நேரத்தில் மானசரோவரைக் கையில் எடுத்தேன். வாசித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கையில் சரியாக 3 மணி. எவ்வித இடையூறுகளும் இன்றி ஒரு படைப்பை வாசித்து முடிக்க அஸ்வினி தேவர்கள் ஆசிர்வதித்திருக்க வேண்டும்.

தொடக்கம் முதல் இறுதி வரை மானசரோவரைக் கையிலிருந்து கீழிறக்க விடாமல் தடுத்தது யார்?

சத்யன் குமாரா?

கோபால்ஜியா?

அவர்கள் உலவும் சினிமா உலக விவரணைகளா? படைப்பாளியின் மிக மிக எளிய மொழியாளுமையா? இன்னும் என்னவாகவே, என்னென்னவாகவோ இருந்து விட்டுப் போகலாம்.

ஆனால், கதை மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்ததென்னவோ உண்மை.

சத்யன்குமார் கோபால்ஜியைப் பின்தொடரும் உத்வேகத்திற்கு அவன் இழந்து விட்ட குடும்பம் காரணமாக இருக்கலாம். கோபால்ஜி சத்யன்குமாருடனான உறவை பட்டுப் படாமலும் தொடர்வதைப் பார்க்கையில் அந்த மனிதனின் மேல் மிகப்பெரிய மரியாதை வரும் அதே நேரத்தில் கோபமும் கொப்பளிக்கத்தான் செய்தது. இது கையாலாகதவர்களின் செயல். இப்படித்தான் பல நேரங்களில் நாமெல்லோருமே கூட இருந்து விடுகிறோம். செய்ய நினைப்பதைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய முடிவதில்லை. அதற்காகக் கொஞ்சம் முயன்றிருந்தால் ஒருவேளை அது நல்லவிதமாக அதாவது நாம் விரும்பும் விதமாகவே முடிந்திருக்கலாம். ஆனால் நாம் அப்படிச் செய்வதில்லை. பல நேரங்களில் நாம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைத்தான் வாழ்வனுபவங்களாக தேக்கி வைத்து நமது அடுத்த சந்ததிகளுக்கும் பரவ விடுகிறோம். இது சரியா, தவறா என்ற ஆராய்ச்சியைத் தாண்டி அப்படித்தான் வாழ்ந்து தீர்க்க வேண்டியதாகிறது என்பது தான் மானசரோவரின் ஒற்றைச் செய்தி.

கோபால்ஜிக்கு தன் மகளை நினைத்து தீரா மனவேதனை. ஆனால், மனைவி, அம்மா, மாமியார் என்று வீட்டுப்பெண்களை மீறி மகளது வாழ்வை வேறுவிதமாக்கிக் காட்ட இயலாத கையாலாகத் தனத்தினால் அவர் பெரும்பாலும் மெளனித்திருக்க வேண்டியவராகிறார். கோபால்ஜியின் மனைவிக்கு அவரொரு இயல்பான கணவரில்லையோ என்பதைத் தாண்டியும் சினிமாத்துறையின் மீதான கற்பனை அச்சங்கள் மிகுந்திருப்பது தெரிகிறது. இல்லாததையும், பொல்லாததையும் கற்பனை செய்து கொண்டு சாமான்ய மனிதர்களுக்கு கூட எப்போதாவது கிட்டி விடக்கூடிய குடும்ப குதூகலம், புருஷ சாமர்த்தியம் எனும் சிற்றின்ப விஷயங்களில் அந்தம்மாள் அதிகமும் நிராசையாகி கணவரிடத்தில் மூர்க்கவதியாகி சமூகத்தில் பைத்தியமாகிறாள்.

கோபால்ஜியைப் பற்றி என்ன சொல்வது?

சித்தர் ஓங்கி ஒரு அறை விட்டுச் சொல்வதைப்போலவா?

அல்லது சத்யன்குமாரைப் பற்றித்தான் என்ன சொல்வது?

உன் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத போது உன்னால் எப்படி பிறர் வாழ்வில் பொறுப்பெடுத்துக் கொண்டு விளையாட முடிகிறது? என்று ஓரிடத்தில் சர்வதேசப் புகழ் பெற்ற மகாநடிகன் சத்யன் குமாரைப் பார்த்து சாமான்யனான சவுண்டு ரெகார்டிஸ்ட் ராமநாதன் முகத்திலறைந்தாற் போல கேள்வி கேட்பான். அப்படித்தான் கேட்கத் தோன்றும். ஆனாலும் வாழ்க்கை என்றால் அப்படியும் சிலர், இப்படியும் சிலர்.

இதை எந்தத் தராசு கொண்டு அளப்பீர்கள்?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கவலைகள்... அன்றாடப் பாடுகள். அத்தனையையும் தீர்த்து வைப்பது ஒன்று தான் தெய்வத்தின் கடமை என்று கோயில்களுக்கு முட்டி மோதுகிறோம்.

ஆனால், மீண்டும், மீண்டும் செய்ய வேண்டியவற்றை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யத் தவறி விடுகிறோம். அதற்கான பலனாக அவகாசத்தில் உட்கார்ந்து ஜம்பகம் போல குரோதம் பொங்க மாய்ந்து மாய்ந்து அழுகிறோம். அதென்ன பெயர் ஜம்பகம்?!

செண்பகம் தெரியும். ஷண்பகம் என்றும் கூட கேள்விப்பட்டதுண்டு. அசோகமித்ரனின்... கோபால்ஜியின் ஜம்பகம் புதிது.

மனிதனுக்கு மனப்பிறழ்வு வந்து விட்டால் அவன் செய்வதெல்லாமும் அவன் வாழ்வுக்கு மட்டுமல்ல அவனை வேடிக்கை பார்ப்பவரின் வாழ்விற்குமே கூட புதிய தரிசனங்களே!

அப்படியொரு புதிய தரிசனம் மானசரோவரில் கிட்டக்கூடும்.

இந்தப் பூமிப்பந்து எங்கோ பால்வெளியில் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அது கண்ணுக்குத் தெரியாத ஒரு கற்பனை அச்சில் நின்று தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. கண்ணுக்குத் தெரியாத அந்த கற்பனைப் பிணைப்புகள் ஷணம் பிசகினாலும் எல்லாமும் அதோகதி தான் பல்லாண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதெல்லாமும் பூகோளம் மட்டுமே என்று யார் சொன்னது? மானுடவியலும், மனநலவியலும், மனித வாழ்க்கைப் புதிர்களும் கூட அந்த எல்லையில் நின்று புரிந்து கொள்ளப்பட வேண்டியவையே என்று சொல்லாமல் சொல்கிறது மானசரோவர்.

மானசரோவர் நிச்சயம் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய படைப்புகளில் ஒன்று.

நாவலில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம் என்றால் நிச்சயமாக அது கோபால்ஜியோ, சத்யன் குமாரோ அல்ல... வேறு யாராக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை அது கோபால்ஜியின் மனைவி ஜம்பகமாகவோ அல்லது கிடைக்கக் கூடிய பலன்களுக்கு ஏற்ற வகையில் மனிதர்களுடைய முக்கியத்துவத்தை கூட்டவோ குறைக்கவோ தெரிந்த தயாரிப்பாளர் ரெட்டியாகவோ இருக்குமோ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

மானசரோவர் சியாமளா தேவி போல ஒரு நம்பிக்கையான ஆள் அனைவரின் அருகிலும் இருக்கலாம். ஆனால், அவளை எத்தனை பேர் கீழ்பார்வை பார்த்து எள்ளி நகையாடாமல் நம்பிக்கையோடு அணுகியிருப்போம் என்றால் அப்படி ஒருவருமிருக்க வாய்ப்பில்லை.

வாழ்க்கை சதா அப்படிப் பட்டவர்களாலும், இப்படிப்பட்டவர்களாலும் நிரம்பித் தளும்பியவாறே ஊர்ந்து கொண்டிருக்கிறது.

இடையில் பரபரப்புக் கூட்டவே சித்தர்கள் தேவைப்படுகிறார்கள். மானசரோவரில் சித்தர் வரும் பகுதியை அமானுஷ்யம் என்று பலர் சொல்கிறார்கள்.

பெற்ற மகனை மறப்பிறழ்வுக்கு ஆட்பட்ட நிலையில் தலையணையால் அழுத்தி அம்மாவே கொலை செய்வது. அது தெரிந்தும் அதைப்பற்றி ஆயிரம் மனவருத்தங்கள் இருந்தும் வெளியில் காட்டிக் கொள்ளாத இறுக்கமான மனநிலை கொண்ட அப்பா. உற்ற நண்பனாகக் கருதும் ஒருவரது மனைவியையே கையைப் பிடித்து இழுக்கத் துணியும் புகழேணியின் உச்சியில் இருக்கும் பிரபல நடிகன். 
அவனை மனதுக்கு நெருக்கமானவனாக எண்ண அஞ்சும் கோபாலன் எனும் அப்பிராணி. 

அந்த கோபாலன் ஆஞ்சநேயரைத் தஞ்சம் அடைந்து தன்னை உணர்ந்து கொண்டார் என்பதும் ஒரு மாயை தான்.

இவர்கள் எல்லோரும் மானசரோவரில் அல்ல எங்கு சென்று முங்கி எழுந்தாலும் அவர்களது உடல் மட்டுமே அதில் முழுகி எழுந்ததாக அர்த்தமாகிறதே தவிர... மனம் எதிலும் முழுகாமல் விச்ராந்தியாக எங்காவது அலைந்து கொண்டு தான் இருக்கும்.

நிம்மதி என்பதும், குற்ற உணர்வு நீங்குதல் என்பதும், பேரமைதி என்பதும் ஒரு பொய்யான நிலைப்பாடு.

எல்லாமும் அப்படியப்படியே தான் தொடர்ந்து நீடிக்கின்றன.

இமயமலையின் மானசரோவர் போல!

நூல்: மானசரோவர்

ஆசிரியர்: அசோகமித்திரன்

வெளியீடு: காலச்சுவடு

விலை: ரூ 240 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT