ஃபேஷன்

1000 டாட்டூக்களுடன் ஒரு அப்பா! ‘நான் வித்யாசமானவன் என்பதே எனக்குப் பெருமை’: மார்சலோ டிசோஸா!

கார்த்திகா வாசுதேவன்

டாட்டூ போட்டுக் கொள்வது இன்றைய ஃபேஷன் அல்ல. டாட்டூக்கள் இட்டுக் கொள்வது பல்லாண்டுகளாகவே புழக்கத்தில் இருப்பது தான். இப்போது மாடர்ன் ஆர்ட் போல வரைந்து கொள்கிறார்கள். நமது அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் மீன், கும்பம், நெளி கோலங்கள், துளசி மாடம், முதலை, பிறை, தீபம், என  பாரம்பர்ய சித்திர வடிவங்களை தடக்கை, முன்கை, முழங்கால், தோள்பட்டை, முதுகு, புறங்கைகள் என பச்சை குத்திக் கொண்டார்கள். இரண்டுக்கும் பெரிய வித்யாசங்கள் ஏதும் இல்லை.

என்ன ஒரு சின்ன வித்யாசம் என்றால், இன்று ஃபேஷன் ட்ரெண்டுக்கு ஏற்றார்போல வண்ணங்களையும் டாட்டூக்களில் பயன்படுத்துகிறார்கள். அன்று வெறும் பச்சை மச்சம் குத்திக் கொள்வது மட்டுமே வழக்கம். அது கூட நம் நாட்டில் மட்டுமே, கிரீக்கிலும், ரோமிலும் வண்ண மச்சங்கள் புழக்கத்தில் இருந்ததாகத் தகவல்.

டாட்டூ குத்திக் கொள்வதிலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு டேஸ்ட். 

சிலர் தோள்பட்டையில் டாட்டு இட்டுக் கொள்வார்கள்.

சிலர் பெங்களூரு டேய்ஸ், ஃபகத் பாசில் போல், அகன்ற முதுகு முழுவதுமாக மிகப்பெரிய டாட்டூ இட்டுக் கொள்கிறார்கள்.

பெண்களில் சிலரோ புதுமைப் பெண்களாகக் காட்டிக் கொள்ள மகாகவி பாரதியை டாட்டு இட்டுக் கொள்கிறார்கள்.

இன்னும் சில பெண்களோ, பிக்பாஸ் பிரபலங்களான ஓவியா, காயத்ரிக்களைப் போல தண்டுவடத்தின் மேற்பகுதி, அல்லது கழுத்தின் இடப்புறம், வலப்புறம், தோள்பட்டை என எங்காவது டாட்டூ இட்டுக் கொள்கிறார்கள்.

இதெல்லாம் நமக்கு சாதாரணமாகக் காணக் கிடைக்கக் கூடிய காட்சிகள். ஆனால், இங்கே பாருங்கள், ஒரு மனிதர் தன் உடலின் 97% பாகத்திலும் முழுக்க டாட்டூக்களை இட்டு நிரப்பியிருக்கிறார். இது நிச்சயம் வித்யாசமானது தானே!

இதோ, அவரைப் பற்றி அவரே என்ன சொல்லிக் கொள்கிறார் என்று பாருங்கள்.

‘என் பெயர் மார்சலோ டிசோஸா ரிபெய்ரோ (Marcelo de Souza Ribeiro) . இன்றைய தேதிக்கு மார்சலோ பிபாய் (Marcelo Bboy) என்று சொன்னால் உலகில் அனேகம் பேருக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நான் என் 15 வயதில் என்னுடலில் முதல் டாட்டூ போட்டுக் கொண்டேன். அதென்னவோ தெரியவில்லை, அன்று முதல் டாட்டூ மீது பைத்தியமானேன். முதல் டாட்டூ போட்டுக் கொண்டது முதலே நான் டாட்டூ பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு அந்த துறையில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கி விட்டேன். அடிப்படையில் நான் ஒரு நடன ஆசிரியர். பிரேசில், ரியோ டிஜெனிரோவில் தெருக்களில் நடனமாடக் கற்றுத் தரும் ஆசிரியராக இயங்கிக் கொண்டிருக்கிறேன். அத்துடன் ஹிப் ஹாப் உலகத்திலும் நான் இயங்கிக் கொண்டிருப்பதால் என் முதல் டாட்டூவே Hip Hop எனும் வாசகத்தை உடலில் பதித்துக் கொள்வதாக அமைந்து விட்டது. 

அடுத்ததாக என் மகளின் பெயரை எனது ஒரு பக்கத் தோள்பட்டையில் டாட்டூவாகப் பதித்துக் கொண்டேன். இந்த இரண்டு டாட்டூக்களைப் பதித்துக் கொண்டது தான் நினைவிலிருக்கிறது. அதற்குப் பிறகு என் உடலை நான் பார்த்துக்கொண்ட போது எனக்கே தெரியாமல் ஏராளமாக டாட்டூ போட்டுக் கொள்ளத் தொடங்கி இருந்தேன். எந்த டாட்டூ எப்போது? எப்படி? எதற்காகப் போட்டுக் கொண்டேன் என்பதையே கண்டறிய முடியாத வண்ணம் இப்போது என் உடல் முழுவதும் கவனியுங்கள் முழு உடலும் டாட்டூக்களால் நிரம்பி வழிகிறது. 

ஆம், நான் என் பற்கள், கண் இமை, கண் விழித்திரை என எந்தப் பாகத்தையும் விட்டு வைக்கவில்லை. எல்லா இடங்களிலும் டாட்டூக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. எண்ணிப்பார்த்தால் 1000 டாட்டூக்களைத் தாண்டி இருப்பேன் என்று நிச்சயமாக நம்புகிறேன். என் உடலின் 97% பகுதி டாட்டூக்களால் நிரம்பியுள்ளது. சொல்லப்போனால் இதன் காரணமாக என் உடல் அமைப்பு மாறிப்போனதால் ஏழெட்டு முறை சிலிக்கான் அறுவை சிகிச்சைகளுக்கும் உட்பட வேண்டியதாயிற்று. ஏனென்றால் நாக்கின் உள்ளண்ணம், கண்களின் விழித்திரை, காது மடல்கள், பற்களின் அமைப்புகளை டாட்டூக்கள் வரைந்து மாற்றிக் அமைத்துக் கொள்வதற்கு சிலிக்கான் சர்ஜரிகள் தேவைப்பட்டன. 

உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொள்வது பிறருக்கு வித்யாசமாகத் தோன்றி இருக்கலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை என் அம்மாவும், அப்பாவும் எனக்கு ஆதரவாகவே இருந்தனர். இப்போது நானும் ஒரு அப்பா எனக்கு 6 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உண்டு. சொன்னால் ஆச்சர்யப் படுவீர்கள், 8 மாதத்தில் ஒரு பேரனும் கூட இருக்கிறான் எனக்கு. சிலர் என்னிடம் கேட்கிறார்கள், உன் குழந்தைகள் உன்னைக் கண்டு பயந்து போக மாட்டார்களா? இப்படி விகாரமாக டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறாயே என்று?! அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் பதில் ஒன்றே! என் குழந்தைகள் என்னைப் பார்த்து பயந்ததே இல்லை. அவர்கள் பிறந்தது முதல் என்னுடனே வளர்கிறார்கள், நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம். எனவே நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே  என்னை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு எப்போதுமே பிரச்னை இருந்ததில்லை. என் உடலில் உள்ளங்கால், உள்ளங்கை என மிகச்சிறிய அளவிலான இடம் மட்டுமே இன்னமும் டாட்டூ இடாமல் மீந்துள்ளது. அந்த இடங்களிலும் எதிர்காலத்தில் நான் டாட்டூ இட்டுக் கொள்ளமாட்டேன் என்று சொல்ல முடியாது. சீக்கிரமே அந்த இடங்களையும் நான் டாட்டூக்களால் நிரப்பிக் கொள்வேன் என்று நம்புகிறேன். 

டாட்டூக்கள் போட்டுக் கொள்வதென்றால் அளவில்லாமல் செலமாகுமே என்று பலர் கேட்கிறார்கள். இல்லை, என்னைப் பொருத்தவரை என் உடலில் முக்கால்வாசி டாட்டூக்களை நான் என் கையால் மட்டுமே போட்டுக் கொண்டேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். என் கண்விழித்திரை மற்றும் நாக்கு, உள்ளண்ணம் உட்பட நானே தான் என் கையால் டாட்டூ இட்டுக் கொண்டேன்.

என் கண்விழித்திரையில் டாட்டூ இட்டுக் கொண்டது எப்படி என்றால்?  ஒருநாள் மதியம் நான் என் வீட்டின் குளியலறைக்குச் செல்லும் போது திடீரெனத் தோன்றியது, கண்களின் டாட்டூ இட்டுக் கொண்டால் என்ன என்று, உடனே டாட்டு இங்க் எடுத்துக் கொண்டு குளியலறையைத் தாழிட்டேன். விழித்திரையில் துளையிடும் போது மிகுந்த கவனத்துடன் இருந்தும் டாட்டூ இங்க் விழித்திரை முழுவதுமாகப் பரவி விட்டது. இப்போது விழித்திரை வெண்மையாக இல்லை. பாவை போல கரு நிறத்தில் வித்யாசமாக இருக்கிறது அந்த டாட்டூ. அதைத் தவிர என் பற்களில் நான் செய்த மாற்றம் மற்றும் டாட்டூவைக் கண்டு, இதென்ன காட்டேரி மாதிரி பற்கள், இதைக் கண்டு உன் கேர்ள் ஃப்ரெண்டு பயந்து அலறி விடமாட்டாளா? முத்தமிடத் தடையாக இருக்காதா? இந்த பற்கள் என்றெல்லாம் வேடிக்கையாகக் கேள்வி எழுப்புகிறார்கள். என் பற்கள் எங்கள் முத்தத்திற்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. சொல்லப்போனால் என் கேர்ள் ஃப்ரெண்டின் கவனத்தை ஈர்க்கவே செய்கிறது என்பேன் நான்.

முதல்முறை என் கேர்ள் ஃப்ரெண்டு கூட என்னிடம், இப்படித்தான் கேட்டாள், இந்தப் பற்களுடன் முத்தமிட்டுக் கொண்டால் எப்படி இருக்கும் என நாங்கள் இருவரும் எங்களது விடியோ சாட்டிங்கில் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தோம். என் கேர்ள் ஃப்ரெண்டு என்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத் தயாரான போது, அவளைப் பலர் தடுத்தார்கள். என்னைப் பற்றி, என் தோற்றத்தைப் பற்றி அவளிடம் விமர்சித்தார்கள். ஆண்கள் அழகழகான பெண் தோழிகளைத் தேடும் போது, நீயும் கொஞ்சமாவது சுமாரான பையனைத் தேர்ந்தெடுக்கலாமே? ஏன் இப்படி ஒரு விகாரமான டாட்டூ பைத்தியத்தைப் போய் பாய் ஃப்ரெண்டாகத் தேர்வு செய்திருக்கிறாய்? என்று அவளை அதைரியப்படுத்தியவர்கள் அனேகம் பேர். ஆனாலும், அவள் என்னையே தேர்ந்தெடுத்தாள், அவளுக்கு எனது குற்றமற்ற மனம் மட்டுமே பெரிதாகத் தெரிந்தது. எனவே நாங்கள் இணைந்து வாழ்கிறோம். பலரும் என்னை கெட்டவன் என்றும் சாத்தான் என்றும் விமர்சிக்கிறார்கள். இறந்த பின் நான் நரகத்துக்குத் தான் செல்வேன் என்று கூட சபிக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் அலட்டிக் கொள்ளத் தயாரில்லை. 

நான் எனக்குப் பிடித்த விஷயத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் யாருக்கு என்ன இடைஞ்சல்?! ஒரு பக்கம் என்னை சிலர் விகாரமாக நினைக்கிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் வித்யாசமான மனிதன் என்று சேர்ந்து நின்று செல்ஃபீ எடுத்துக் கொள்கிறார்கள். எனக்கு நான் வித்யாசமானவன் என்ற அடையாளமே திருப்தி அளிப்பதாக இருப்பதால் அதையே தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் தான் இந்த உலகத்தில் ஒன்றே போல பிறக்கிறார்கள், இருக்கிறார்கள், வாழ்கிறார்கள், மடிகிறார்கள். நான் சற்று வித்யாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆசையை நிறைவேற்றும் தைரியம் எனக்கிருந்தது. இதோ என்னிஷ்டப்படியே என் டாட்டூக்களுடன் நிம்மதியாக வாழ்கிறேன் என்று சிரிக்கிறார் மார்சலோ.’

என்ன விதமான மனிதர் இவர்?

இவர் மட்டுமல்ல, இப்படிப் பட்ட வித்யாசமான ஆசைகள் கொண்ட, அல்லது இயற்கையிலேயே வித்யாசமான பிறவிகள் கொண்ட பலரைப் பற்றியும் இந்த யூடியூப் தளத்தில் காண முடிகிறது. அவர்களைப் பற்றிய ஏராளமான கதைகளும், செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன இங்கு. ஆர்வமிருப்பவர்கள் ஒரு முறை அந்தப் பக்கம் போய் பாருங்கள்.

அந்த வித்யாசம் என்பது இயற்கையாக அமைந்ததாகவும் இருக்கலாம், அல்லது தாங்களே விரும்பி ஏற்படுத்திக் கொண்டதாகவும் இருக்கலாம். சேனலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். இவர்களை எளிதாக மதிப்பிட்டு விடத் தேவையில்லை. ஏனெனில், இவர்களில் பலர், பிறவியிலேயே குறைபாடுகளுடன் பிறந்து விட்ட மாற்றுத்திறனாளிகள் பலருக்கு ரோல்மாடல்களாகத் திகழ்கிறார்கள். வாழ்வின் மீதான ஆசையைத் தூண்டு குறைகளுடன் பிறந்து விட்டதொன்றும் தங்களது குறையல்ல, அந்தக் குறையையே தங்களால் நிறையாக மாற்றிக் கொள்ள முடியும். நிறைகுடங்களாக உலகையே வலம் வர முடியும். எனும் நம்பிக்கையைத் தூண்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே மனதில் வெறுமை தோன்றும் போது இந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT