ரசிக்க... ருசிக்க...

ருசிருசியாய் கமகமக்கும் விதவிதமான சமையல் குறிப்புக்கள் உங்களுக்காக!

முத்துலஷ்மி மாதவ கிருஷ்ணன்

 தக்காளி வெங்காயம் தொக்கு

தேவையானவை:
 பெரிய வெங்காயம் -2
 நன்கு பழுத்த தக்காளி - 5
 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
 மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 வெந்தயம் அரை தேக்கரண்டி
 கடுகு - அரை தேக்கரண்டி
 உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
 பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
 கறிவேப்பிலை - சிறிது
 நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை : வெங்காயம் மற்றும் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக அரைக்கவும். (தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைக்கவும்). அரைத்த விழுதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் வெங்காய விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 7 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கவும். அவை நன்கு கெட்டியான பின் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். தொக்கின் மேலே எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

பனீர் குருமா

தேவையானவை:
 பனீர் - 150 கிராம்
 மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
 மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
 கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
 கஸþரி மேத்தி - 1 தேக்கரண்டி
 பிரிஞ்சி இலை -1
 சர்க்கரை - கால் தேக்கரண்டி
 கறிவேப்பிலை - 10
 கொத்துமல்லி இலை - சிறிது
 எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப
 அரைக்க:
 தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
 வெங்காயம் - 1
 தக்காளி - 2
 பச்சை மிளகாய் - 2
 கொத்துமல்லி இலை - சிறிது
 இஞ்சி - சிறிய துண்டு
 சோம்பு - 1 தேக்கரண்டி
 கிராம்பு - 3
 ஏலக்காய் - 3
 அன்னாசிப்பூ - 1
 பட்டை - சிறிய துண்டு
 முந்திரி பருப்பு-5

செய்முறை : தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். பனீரை விரும்பிய வடிவில் வெட்டி கொள்ளவும். தேங்காய் விழுது லேசாக வதங்கியதும் சிறிது நேரம் மூடிப் போட்டு வதக்கவும். வாணலியின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது 1 கிண்ணம் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும். பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். குருமா நன்கு கொதித்ததும் நறுக்கிய பனீரை சேர்த்து கலந்து கொள்ளவும். பின் கரம் மசாலா தூள் சேர்த்து மெதுவாக கிளறி விடவும். கடைசியாக சிறிது சர்க்கரை மற்றும் கஸþரி மேத்தி(காய்ந்த வெங்காயத்தாள்) சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும். கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

ப்ரோக்கோலி மசாலா

தேவையானவை:
 சிறிய ப்ரோக்கோலி -1
 வெங்காயம் -1
 இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
 சீரகம் - கால் தேக்கரண்டி
 மிளகாய்த்தூள் - முக்கால் தேக்கரண்டி
 மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
 தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
 கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
 சர்க்கரை - 1 தேக்கரண்டி
 ஃப்ரஷ் கிரீம் - 1 தேக்கரண்டி
 எண்ணெய்- 2 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப
 அரைக்க :
 வெங்காயம் -2
 தக்காளி -2
 பாதாம் -10

செய்முறை: குக்கரில் வெங்காயம், தக்காளி, பாதாம் சேர்க்கவும். தண்ணீர் விட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். பெரிய பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் ஆய்ந்து வைத்துள்ள ப்ரோக்கோலியைப் போட்டு மூடி வைக்கவும். பின் அதில் ஐஸ் கட்டிகள் போட்டு குளிர விடவும். 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டவும். வேகவைத்த வெங்காயம், தக்காளி, பாதாம் பருப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். குறைந்த தீயில் வைத்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். 2 நிமிடங்கள் வதக்கிய பின்னர் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சிறிது கொதித்த பின் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் தனியாத் தூள் சேர்த்து கிளறவும். பின் ப்ரோக்கோலியைச் சேர்த்து கிளறவும். தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பின் கஸýரி மேத்தி இலைகள், சீனி, ஃப்ரெஷ் கிரீம் மற்றும் 1/2 கப் தண்ணீர் விட்டு 10 - 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். மசாலாவின் மேலே எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்தால் போதும். சுவையான ப்ரோக்கோலி மசாலா தயார். ரொட்டி, புலவ், நாண் போன்ற உணவு வகைகளுக்கு சூப்பரான சைட் டிஷ்.

பீட்ரூட் குருமா

தேவையானவை:
 பீட்ரூட் - 1
 பச்சை மிளகாய் - 1
 கறிவேப்பிலை - 10
 பட்டை - சிறிய துண்டு
 மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
 கரம் மசாலா தூள்- 2 தேக்கரண்டி
 பால் - கால் டம்ளர்
 கொத்துமல்லி இலை - சிறிது
 எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 உப்பு - தேவையான அளவு
 அரைக்க:
 தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
 தக்காளி -2
 சோம்பு - 1 தேக்கரண்டி
 இஞ்சி - சிறிய துண்டு
 அன்னாசிப்பூ-1
 கிராம்பு -3
 முந்திரி பருப்பு - 5

செய்முறை: பீட்ரூட்டை நன்கு கழுவி கொள்ளவும். பின் தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். மிக்ஸியில் தக்காளி, சோம்பு, இஞ்சி, கிராம்பு மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர், தேங்காய்த் துருவல், முந்திரி பருப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்த பீட்ரூட்டை சேர்க்கவும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும். குருமா கொதிக்க ஆரம்பித்ததும் கரம் மசாலா தூள் மற்றும் பால் சேர்த்து லேசாக கொதித்ததும் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT