யார் இந்த டீசல் ராணி?

டீசல் ராணி மாதிரியான ஏழை, எளிய மக்களுக்கு அவர்களது உயிரை மீட்டுத் தர உதவுவதே; ‘அறம் செய்து பழகு’ எனும் டெலிமெடிசின் பிரச்சாரத்தின் நோக்கம் என்கிறார்கள்.
யார் இந்த டீசல் ராணி?

கடந்த சில மாதங்களாக அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு விளம்பரம் கொஞ்சம் கவனம் ஈர்ப்பதாக இருந்தது. காரணம் அதில் வரும் வயதான பெண்மணி, அவர், விளம்பரத்தில் தன் பெயரை ‘டீசல் ராணி’ என்று குறிப்பிடுவார். பல நாட்களாக இந்த டீசல் ராணியைப் பற்றி இணையத்தில் தேட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்ததில் இன்று தான் அவரைப்பற்றியும் அந்த விளம்பரம் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரைப் பற்றிச் சொல்வதற்கு முன்; முதல் முறை இந்த விளம்பரத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது; இதென்ன மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் கூட விளம்பரம் தேவைப்படுகிறதா? மதுரையின் பாரம்பரியமிக்க அடையாளங்களில் ஒன்றான இம்மாதிரியான ஒரு மருத்துவமனை கூட தனது எதிர்கால வளர்ச்சிக்கு தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பித்தான் இருக்கிறதா? என்று தோன்றி மறைந்தது. மீனாட்சி அம்மன் கோயிலைப் போலவே, மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் விளம்பரங்கள் தேவையற்றவை இதெல்லாம் காலத்தின் கோலம் என்று தோன்றியது. ஆனால், இன்று டீசல் ராணியைத் தேடும் போது தான் தெரிய வந்தது. அது மருத்துவமனைக்கான விளம்பரம் அல்ல; ‘டெலிமெடிசின்’ என்ற அவர்களது கிராமப்புற மருத்துவ சேவைத்திட்டத்துக்கான விளம்பரம் என்று. ‘அறம் செய்து பழகு’ என்ற தலைப்பில் அவர்கள் இது போன்ற நிஜ சம்பவங்களை வீடியோ பதிவாக்கி தங்களது அதிகாரபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். பாராட்டப் பட வேண்டிய திட்டம் தான்.

ஏனெனில், தமிழகத்தில் எளிதில் மருத்துவ வசதி கிடைக்காத வகையில் இன்னும் பல கிராமங்கள் உள்ளன. நகரங்களைப் போல ஆபத்துக்கு உடனடி ஆம்புலன்ஸ் வசதிகளோ, தடுக்கி விழுந்தால் மருத்துவமனை வசதிகளோ அந்தக் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பது தொடங்கி கிராமந்தோறும் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட போதுமான மருத்துவர்கள் மட்டுமல்ல ஒரே ஒரு மருத்துவர் மட்டும் கூட இருக்க  வாய்ப்பில்லை எனும் நிலையே இப்போதும் பல இடங்களில் நீடித்து வருகிறது. 

டீசல் ராணி, அந்த ஊரில்... தனித்து வாழும் பெண்மணி. டீசல் கேன்களைச் சுமந்து கொண்டு, அந்த ஊரிலிருக்கும் மக்களுக்கு டீசல் விற்று தன் வயிற்றுப்பாட்டை பார்த்துக் கொள்கிறவர். காசு விஷயத்தில் டீசல் ராணி ரொம்பவே கறார் என்பதால், அவருக்கு சொந்தக்காரர்கள் சகவாசமே இல்லாமல் போய்விட்டது. ஊர்க்காரர்களுக்கும் டீசல் ராணி என்றால் அவர் ஒரு சவடால் பெண்மணி என்ற அளவுக்கே பரிச்சயம். சொந்தங்கள் தான் இல்லையே தவிர டீசல் ராணியைச் சுற்றி எப்போதுமே ஆதரவற்ற குழந்தைகள் சில சுற்றிக் கொண்டிருக்கும். ஆத்திர, அவசரத்துக்கு அவர்கள் தான் டீசல் ராணிக்குத் துணை. இப்படிச் சென்று கொண்டிருந்தது டீசல் ராணியின் வாழ்க்கை. டீசல் ராணிக்குத் திடீரென ஒரு நாள் நெஞ்சு வலி வரவே... அப்போதும் அவருக்காக வருத்தப்பட்டது அந்த ஆதரவற்ற குழந்தைகள் தான்.. அவர்களில் ஒருவனான பாலு என்ற சிறுவன், தனது பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சேர்மன் குருஷங்கரிடம், டீசல் ராணிக்காக மட்டுமல்ல, அவரைப் போல, கிராமப் புறங்களில் போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் திண்டாடும் ஏழை, எளிய மக்களுக்காக மருத்துவர்களும், மருத்துவமனைகளும் என்ன செய்யவிருக்கின்றன? என்ற கேள்வியை எழுப்புகிறான். அப்போது அந்தச் சிறுவனிடம்; கிராமப்புற மக்களுக்காக ‘டெலிமெடிசன்’ என்றொரு சிறப்பான மருத்துவத் திட்டத்தை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கையிலெடுத்துச் செயல்படுத்தி வரும் விஷயத்தை அவர் கூறுகிறார். 

டெலிமெடிசின் என்றால் என்ன?

இது சற்றேறக்குறை மொபைல் ஹாஸ்பிடல் டெக்னிக் தான். அதாவது போதிய மருந்து, மாத்திரைகள் வசதிகளோடும், தேர்ந்த செவிலியர்களோடும் கிராமப்புறப் பகுதிகளுக்கென மொபைல் ஹாஸ்பிடல்கள் அமைத்து, தேவைப்படும் மக்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளும் போது உடனடியாக அவர்களை அடைந்து அவர்களுக்குத் தேவையான சேவைகள் வழங்குவது என்பதே இதன் கான்செப்ட். அதாவது ஆம்புலன்ஸ்கள் போலவே வேன்களில் மொபைல் ஹாஸ்பிடல்களை இயக்குவது. இந்த மொபைல் ஹாஸ்பிடலுக்குள் இணைய வசதியும் செய்யப்பட்டிருப்பதால், அதிலிருக்கும் செவிலியர்கள், உதவி தேவைப்படும் நோயாளிகளின் நோய்த்தன்மையைப் பொறுத்து இணையம் வாயிலாகவே மதுரையில் இருக்கும் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று சிறப்பான சிகிச்சைகளை வழங்க முடியும் என்கிறது மருத்துவமனையின் அதிகார பூர்வ விளம்பரப் பதிவு. அப்படி மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் டெலிமெடிசின் திட்டத்தின் மூலமாக; தனது இதயத்தில் இருந்த 10 அடைப்புகள், அறுவை சிகிச்சை முறையில் அகற்றப்பட்டு சிகிச்சைக்குப் பின் மறுபடி ஜனித்து வந்தவர் தான் டீசல் ராணி.

டீசல் ராணி மாதிரியான ஏழை, எளிய மக்களுக்கு அவர்களது உயிரை மீட்டுத் தர உதவுவதே; ‘அறம் செய்து பழகு’ எனும் டெலிமெடிசின் பிரச்சாரத்தின் நோக்கம் என்கிறார்கள்.

இதன் மூலமாக கிராமப் புற மக்களின் மருத்துவக் கனவுகள் நனவாகுமானால் இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய திட்டமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com