அமேஸான் அலெக்ஸா அக்கவுண்ட்ல இந்தக் கிளி செஞ்சு வச்ச வேலையைப் பாருங்க பாஸ்!

மரியன் வேலைக்குக் கிளம்பிச் சென்ற பின் அவரது அமேஸான் அலெக்ஸா அக்கவுண்டை ரோக்கோ கிளி இயக்கத் தொடங்கி இருக்கிறது. அது ஒரு ஷாப்பிங் அக்கவுண்ட்.
அமேஸான் அலெக்ஸா அக்கவுண்ட்ல இந்தக் கிளி செஞ்சு வச்ச வேலையைப் பாருங்க பாஸ்!

ஆப்ரிக்காவின் சாம்பல்நிற கிளிகள் அவற்றின் மிமிக்ரி திறமைக்காக உலகம் முழுதும் கொண்டாடப்படக் கூடியவை. இந்த சாம்பல் நிறக்கிளிகளுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் ஏராளம்.

அப்படியொரு சாம்பல் நிறக் கிளி சமீபத்தில் செய்த காரியத்தைக் கேள்விப்பட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

பூனை தலை மறைந்ததும் எலி தன் வேலையைக் காட்டத் தொடங்கி விடும் என்றொரு பழமொழி சொல்வார்களே... அப்படித்தான் ஆகியிருக்கிறது மரியன் விஸ்னெவ்ஸ்கியின் வாழ்க்கையில் அந்த நாள் அனுபவம்.

மரியனுக்கு தனது சாம்பல் நிறக்கிளி ரோக்கோவின் மீது ப்ரியம் அதிகம். அந்தப் ப்ரியம் எப்படிப்பட்டதென்றால். ரோக்கோ முதலில் இருந்த இடம் பறவைகள் சரணாலயம். அங்கு தான் மரியன் பணிபுரிந்து வந்தார். அந்த சரணாலயத்தில் பேசும் கிளியான ரோக்கோவின் பேச்சு மிகவும் கொச்சையாக இருந்த காரணத்தால் அதை சரணாலயத்திலிருந்து விடுவித்து காட்டிற்குள் எங்காவது விட்டு விடலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். அச்சூழலில் ரோக்கோ மீது கொண்ட ப்ரியத்தின் காரணமாக அதைக் காட்டில் கைவிடக்கூடாது நானே என் வீட்டில் வைத்து வளர்த்துக் கொள்கிறேன் என்று உற்சாகமாக ரோக்கோவை ஆக்ஸ்ஃபோர்ட்ஷயரில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றவர் மரியன்.

ரோக்கோ விஷமத்தனமான பறவையாக இருந்த போதும் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு தனது எஜமானியைப் புரிந்து கொண்டு வேலையிலிருந்து ஓய்ந்து போய் மரியன் வீடு திரும்பும் நேரத்தில் மிக அருமையான இசையை வீட்டில் தவழவிட்டு அதை விட அருமையான டான்ஸ் ஆடித் தன்னை மகிழ்விக்கும் அளவுக்கு அது புத்திசாலியானதும் கூட என்கிறார் மரியன்.

இப்படியே சென்றிருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், திடீரென ஒருநாள் என்ன ஆயிற்று தெரியுமா?

மரியன் வேலைக்குக் கிளம்பிச் சென்ற பின் அவரது அமேஸான் அலெக்ஸா அக்கவுண்டை ரோக்கோ கிளி இயக்கத் தொடங்கி இருக்கிறது. அது ஒரு ஷாப்பிங் அக்கவுண்ட். உலகில் அம்மா, அப்பா தவிர மற்றெல்லா பொருட்களையும் அதில் வாங்கிக் குவிக்கலாம். அந்த அக்கவுண்டுக்குள் நுழையக் கற்றுக் கொண்டிருந்த ரோக்கோ... அதில் தனக்குப் பிடித்த அத்தனை பொருட்களையும்... தர்பூசணி, உலர் பழங்கள், பிரக்கோலி, ஐஸ்க்ரீம், லைட் பல்ப்,  பட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கிக் குவித்து விட்டது. மாலை பணியிலிருந்து வீடு திரும்பிய மரியன் தனது அமேஸான் அலெக்ஸா அக்கவுண்டைச் சோதித்த போது மயக்கம் வராத குறை!

அதிர்ச்சியுடன் ரோக்கோ ஆர்டர் செய்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி டெலிட் செய்து விட்டு பிறகு தான் ஓய்ந்து போய் அமர முடிந்தது அவரால். 

ரோக்கோவின் குறும்புத் தனங்களுக்கு இது முதல் உதாரணம் அல்ல. இது போல பலமுறை தனது பொறுப்பாளர்களைத் திணறடித்திருக்கிறதாம் இந்த சாம்பல் நிறக்கிளி.

ரோக்கோ தன்னை இப்படி ட்ரில் வாங்கினாலும் கிளியின் மீது கொண்ட ப்ரியத்தால் மரியன் என்ன சொல்கிறார் தெரியுமா?

அட அதெல்லாம் ரோக்கோவின் குறும்பு... அதைச் சகித்துக் கொண்டு பார்த்தால் ரோக்கோ ஒரு புத்திசாலிப் பறவை. என்று உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார்.

சரிதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com