அது என்ன டிக்கிள் டிரக்? குட்டீஸ்களைக் கவரும் இதன் தகவல்கள் இதோ!

கடந்த ஒரு மாதமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பக்கம் மாலை நேரத்தில் குட்டீஸ்களின் வரவு அதிகரித்துள்ளது.
அது என்ன டிக்கிள் டிரக்? குட்டீஸ்களைக் கவரும் இதன் தகவல்கள் இதோ!


கடந்த ஒரு மாதமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பக்கம் மாலை நேரத்தில் குட்டீஸ்களின் வரவு அதிகரித்துள்ளது.  காரணம்,  சில்லென்று வீசும் கடற்காற்றுடன், அற்புதமாக  புதுரக சுவைகளுடன் நம் கண்முன்னே ஐஸ்கிரீம்களை தயாரித்து அளிக்கும் நடமாடும் 'டிக்கிள் டிரக்'  என்னும் ஐஸ்கிரீம் டிரக் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளதுதான். கல்லூரி நண்பர்களான பரத், ஜஸ்டின், சண்முக பாண்டியன்   எனும் மூன்று இளைஞர்கள்  இணைந்து இந்த ஐஸ்கிரீம் டிரக்கை ஆரம்பித்துள்ளனர்.  இது குறித்து பரத் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

‘நாங்கள் மூவரும் லயோலா கல்லூரியில்  விஸ்காம்  ஒன்றாகப் படித்தோம். பின்னர்  நான் எம்.பி.ஏ  படிக்க, அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். தற்போது, ஜஸ்டின் கேரளா  திரைத்துறையில் எடிட்டராகவும், சண்முக பாண்டியன் ஹைதராபாத் திரைத்துறையில் கலரிஸ்ட்டாகவும் இருக்கின்றனர். 

எனக்கு சிறுவயது முதலே  ஐஸ்கிரீம் என்றால் மிகவும் விருப்பம். மேலும் கார்ட்டூன் சேனல்  நிகழ்ச்சிகளில்  வரும்  ஐஸ் கிரீம் டிரக்கைப் பார்த்து மிகவும் ரசித்திருக்கிறேன்.  இதனால் சிறு வயதிலிருந்தே,  நான் வளர்ந்ததும்  நம்மூரில் இதுபோன்ற ஐஸ்கிரீம் டிரக்கைக் கொண்டு வர வேண்டும் என்று ஆசையிருந்தது.

தற்போது  படித்து முடிந்ததும் என்னுடைய ஆசையைப் பற்றி என் நண்பர்களிடம் கூறினேன். அவர்களுக்கும் அது பிடித்துப்போக  என் நண்பர்களும் என்னுடன் இணைந்து கொண்டார்கள்.   பணப்பிரச்னை  தீர்ந்து போக, ஐஸ்கிரீமை எப்படி  தயார் செய்வது,  புதுவகை ஐஸ்கிரீம்களை எப்படி தயார் செய்வது என நிறைய  ஆராய்ந்தேன்.  எனது தீவிர தேடலில் கௌசிக் எனும் மேட் செஃப் எங்களுடன் இணைந்தார்.  அவரிடம் நார்மல் ஐஸ்கிரீமாக இருக்கக் கூடாது. அதே சமயம் ஆரோக்கியமானதாகவும்,  புதுமையாகவும்  இருக்க வேண்டும் என்று  சொன்னேன். 

நீண்ட முயற்சிக்கு பின் பாப்சிகல்ஸ், நைட்ரிகல்ஸ், ஐஸ்கிரீம் சோடா,  ஐஸ் கிரீம் சண்டே  என  நான்கு புதுவிதமான ஐஸ்கிரீம்களைக் கண்டுபிடித்தார்.  இதில் பாப்சிகல்ஸ் என்பது குச்சி ஐஸ் வகையைச் சேர்ந்தது. இதில் குல்கந்து ஐஸ்கிரீம், லிச்சி ஐஸ்கிரீம், ஆரஞ்சு  என 10 வகை உண்டு. நைட்ரிகல்ஸ் என்பது நைட்ரஜனைப்  பயன்படுத்தி  தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்.  இந்த வகை ஐஸ்கிரீம் தற்போது நிறைய ஐஸ்கிரீம் கடைகளில் கிடைக்கிறது.  ஐஸ்கிரீம் சோடா இது லெமன் சோடாவுடன் ஐஸ் கிரீம் சேர்ந்தது.  ஐஸ்க்ரீம் சண்டே என்பது மோருடன் காராபூந்தி கலந்த - மிஸ்ட்ரி மோர், புதினா, எலுமிச்சையில் செய்யப்பட்ட- மேட் மொஜிட்டோ, மாம்பழத்தில் தயாராகும் - மெஸ்மரைசிங் மேங்கோ, சப்ஜா விதைகள் கொண்டு தயார் செய்யப்படும் - புளூ டுவிஸ்ட் மற்றும் சார்கோல் ஐஸ், பால்கோவா ஐஸ்கிரீம், கேரட் அல்வா ஐஸ்கிரீம், கோவா ஐஸ்கிரீம், திரட்டிப்பால் ஐஸ்கிரீம் என பல வகைகள் உண்டு. இந்த எல்லா வகையான ஐஸ்கிரீம்களிலும் எந்தவித சுவையூட்டும் பொருட்களோ, நிறமிகளோ சேர்க்காமல் பழவகைகளில் இருந்து  இயற்கையான ஃப்ளேவரை எடுத்து வித்தியாசமான வெரைட்டிகளில்  தயாரித்துள்ளோம். இந்த ஐஸ்கிரீம்களை மக்கள் கண் எதிரிலேயே தயாரித்துக் கொடுப்பதால், இது அனைவருக்கும் பிடித்துப் போனது. மேலும், இதன்  விலையும் 30 ரூபாயில் இருந்து 150  ரூபாய் மிகாமல் இருப்பதால் எங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. 

கடந்த வாரம் பெசன்ட் நகரில் எங்கள் ஐஸ்கிரீமை சுவைத்த ஒருவர் ஆவடியில் இருக்கும் அவரது நண்பரிடம் இது பற்றிச் சொல்ல,  எங்கள் ஐஸ்கிரீமை சுவைப்பதற்காகவே ஆவடியில்  இருந்து ஒரு குடும்பமே வந்திருந்தது. அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com