தண்ணீர் டிரம்முக்கு பூட்டுப் போட்டு பாதுகாக்க வேண்டிய நாள் வந்துடுச்சு! எங்கே தெரியுமா?!

இப்போதெல்லாம் எங்களிடம் இருக்கும் தங்க, வெள்ளி நகைகளைக் காட்டிலும் தண்ணீர் டிரம்களைப் பற்றித்தான் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம். அவற்றைப் பாதுகாப்பது தான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது
தண்ணீர் டிரம்முக்கு பூட்டுப் போட்டு பாதுகாக்க வேண்டிய நாள் வந்துடுச்சு! எங்கே தெரியுமா?!

ராஜஸ்தான் மாநிலத்தின் பரசுராம்புரா கிராமத்தில் தான் இந்த அவலம் நடந்தேறியிருக்கிறது. அங்கே மக்கள் தங்கள் வீடுகளின் வெளியில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கும் டிரம்களுக்கு பூட்டுப் போட்டு, காவலுக்கு ஆள் வைத்தெல்லாம் பாதுகாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம் தீவிரமாக நிலவும் தண்ணீர் பற்றாக்குறை. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் வாயிலாக அவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் கிடைத்தால் கூட இப்படி ஒரு அவலமான நிலை தங்களுக்கு வந்திருக்காது என அக்கிராம மக்கள் நொந்து கொள்கிறார்கள்.

45 டிகிரியில் வாட்டி வதைக்கும் இந்தக் கோடை ராஜஸ்தான் மக்களை இப்படித்தான் பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. சும்மாவே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் ராஜஸ்தானின் புறநகர்ப்புற கிராமங்களில் கோடையும் சேர்ந்து கொள்ள தண்ணீர்ப்பற்றாக்குறை பற்றிச் சொல்லியா தெரிய வேண்டும். பற்றாக்குறை காரணமாக ஒருவர் சேகரித்து வைத்த தண்ணீரை பிறர் அபகரிக்க நினைத்து அதனால் சில தகராறுகளும் வந்து சேர... மத்யஸ்தம் செய்து வைத்து ஓய்ந்து போன கிராமப் பஞ்சாயத்தினர் ஒரு கட்டத்தில், ஊர் மக்களிடம், ‘தயவு செய்து நீங்கள் தண்ணீர் சேகரித்து வைத்துள்ள டிரம்களுக்கு பூட்டுப் போட்டுப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், காவலுக்கு ஆள் வைத்து வேண்டுமானாலும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை அளிக்கவே, அதைத்தான் இப்போது அந்த மக்கள் பின்பற்றி வருகின்றனர். 

இப்போதெல்லாம் எங்களிடம் இருக்கும் தங்க, வெள்ளி நகைகளைக் காட்டிலும் தண்ணீர் டிரம்களைப் பற்றித்தான் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம். அவற்றைப் பாதுகாப்பது தான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார்கள் பரசுராம்புரா கிராம மக்கள்.

இந்நிலை ராஜஸ்தான் கிராமங்களில் மட்டுமல்ல, ஹிமாச்சல் பிரதேஷ், மத்தியப் பிரதேஷ், உத்தரகாண்ட், சட்டீஸ்கர், உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை இப்படியொரு நிலை வரவில்லை என்று சொல்லி விட முடியாது.

நகரங்களில் கோடையில் கடுமையாகத் தண்ணீர் பஞ்சம் நிலவும் காலங்களில் அபார்ட்மெண்டுகளின் வாட்டர் டேங்குகளை அதனதன் உரிமையாளர்கள் பூட்டுப் போட்டு பாதுகாப்பு செய்து கொள்வது இங்கும் கூட சில இடங்களில் நிகழ்ந்த கதையே. கிராமங்களில் தண்ணீர் டிரம்களுக்குப் பூட்டுப் போட்டு பாதுகாக்கும் அவலம் இன்னும் இங்கு வரவில்லையென்றாலும் கூட தண்ணீர்க்குடங்களை நிரப்ப பெண்களுக்கிடையே சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து நிலவரம் கலவரமான பல்வேறு சந்தர்பங்கள் இங்கேயும் உண்டு.

எல்லாமும் எதற்காக? தண்ணீருக்காகத் தான்.

இதோ இன்று வரை தமிழகம், கர்நாடகாவுடன் குடுமிப்பிடி சண்டையாக முட்டிக் கொண்டு நிற்பதும் அதே தண்ணீருக்காகத் தான். ஆகவே ராஜஸ்தான் மக்களின் நிலை நமக்கும் வராதென்று என்ன நிச்சயம்?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com