‘ஹெர்பல் சிகரெட்’ தீங்கு விளைவிக்குமா? 

இவை உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காதவை எனும் லேபிளுடன் மார்கெட்டில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அது பொய். அப்படியான உண்மைகள் எதுவும் இதுவரை ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபணமாகவில்லை.
‘ஹெர்பல் சிகரெட்’ தீங்கு விளைவிக்குமா? 

ஆம்... தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எப்போது தெரியுமா? அது சிகரெட்டில் பயன்படுத்தப்படும் போது. புகைக்கும் பழக்கத்தை நிறுத்தவும், புகைபிடித்தலால் உண்டாகும் ஆரோக்யக் கேட்டினை தவிர்க்கவும் ஹெர்பல் சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட எலெக்ட்ரானிக் சிகரெட் போலத்தான். புகைப்பழக்கத்தை படிப்படியாக நிறுத்தும் மனநிலையைத் தூண்ட வேண்டுமெனில் இத்தகைய சிகரெட்டுகளைப் பயன்படுத்தத் தொடங்குங்கள் என்ற அறிமுகத்துடன் மார்கெட்டில் அறிமுகமாயின இந்த இ - சிகரெட்டுகள் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள். ஆனால் அவற்றால் புகைப்போர் மற்றும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா என்றால்? நிச்சயமாக இல்லை. அது மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதைப் போலத்தான் இந்த ஹெர்பல் சிகரெட்டுகளின் பலனும் இருக்கப் போகிறது. அத்துடன் இவை உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காதவை எனும் லேபிளுடன் மார்கெட்டில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அது பொய். அப்படியான உண்மைகள் எதுவும் இதுவரை ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபணமாகவில்லை. சொல்லப்போனால் புகையிலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிகரெட்டுகள் போலவே தான் இவையும் கேன்சர் மற்றும் சுவாசக் கோளாறுகளை உண்டாக்குகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆயுர்வேத மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி நுரையீரலுக்குத் தீங்கு விளைவிக்காத தன்மை கொண்ட ரோஜா இதழ்கள், க்ரீன் டீ இலைகள், ஸ்பியர்மிண்ட் இலைகள்,  லெமன்கிராஸ் எனப்படும் மூலிகைப்புல், துளசி இலை போன்ற மூலிகை இலைகளைக் பேப்பர் ரோலில் சுருட்டித் தயாரிக்கப்படுபவையே ஹெர்பல் அல்லது ஆர்கானிக் சிகரெட்டுகள். இவற்றில் பயன்படுத்தப்படும் மூலிகைகளுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான ஃப்ளேவர்கள் கிடைக்கின்றன. ஆனால் நிச்சயமாக இவற்றின் மூலப்பொருட்களில் நிகோட்டின் அல்லது அதை உண்டாக்கத் தேவையான புகையிலை பயன்படுத்தப்படவில்லை. என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.

சரி அதனால் இவை தீங்கற்றவை எனக் கருத முடியுமா?

இல்லை... இவையும் தீங்கு விளைவிக்கக் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். இது மூலிகை இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் சிகரெட்டுகளாகவே இருந்த போதும் இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் புகையில், புகையிலை மூலமாகத் தயாரிக்கப்படும் சிகரெட்டில் இருந்து வெளியேறக்கூடிய புகையிலிருப்பதாகக் கருதக்கூடியதை விட அதிக அளவில் கேன்சர் உண்டாக்கக்கூடிய நச்சுப்பொருட்கள் இருப்பதாக இது தொடர்பான மருத்துவ ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஹெர்பல் சிகரெட்டுகளில் கணிசமான அளவு கார்பன் மோனாக்ஸைடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கொரியாவில் நடைபெற்ற மருத்துவ ஆய்வொன்றில் ஹெர்பல் சிகரெட்டுகள் சிலவகை தார் ஃபில்டருடன் வடிவமைக்கப்படுகையில் அவற்றின் நச்சு வடிகட்டும் தன்மை வெறும் 30% மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தெரிய வருவது என்னவென்றால் ஹெர்பல் மற்றும் ஆர்கானிக் சிகரெட்டுகள் என்ற பெயரில் மார்கெட்டிலும், இணையத்திலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள சிகரெட்டுகள் எந்த விதத்திலும் உடலுக்கு நன்மை தரக்கூடியவை அல்ல. அவையும் புகையிலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிகரெட்டுகளைப் போலவே மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவையே என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com