ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!

இந்தப் பாடல் "மணிப்பூர் மாமியார்' என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல்தான். இதுவும்  பிரபலமான பாடல். ஆனால் படம் வெளிவரவில்லை. பாடல் இசைத்தட்டாக வெளிவந்து பிரபலம் ஆனது.
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!

"ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே'' என்ற தலைப்பில் நான் எழுதிய திரைப்படப் பாடல்கள் பற்றியும் அவற்றை எழுதும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் அதுபோன்று பல கவிஞர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொகுத்துச் சொல்ல இருக்கிறேன்.

"ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே
அலைபாயுதே மனம் ஏங்குதே
ஆசைக் காதலிலே''

இந்தப் பாடல் "மணிப்பூர் மாமியார்' என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல்தான். இதுவும்  பிரபலமான பாடல். ஆனால் படம் வெளிவரவில்லை. பாடல் இசைத்தட்டாக வெளிவந்து பிரபலம் ஆனது. இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன் பாணியில்  மலேசிய வாசுதேவனும், சைலஜாவும் பாடியது.

1500 பாடல்களுக்குமேல் படங்களில் எழுதியிருக்கிறேன். அதில் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அதனால் இத் தொடரின் மூலம் உங்களுடன் என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வேன் என்று எண்ணுகிறேன்.


சொற்பொழிவு வாளை சுழற்றத் தெரியாதவன் அரசியல் மேடையை அலங்கரிக்க முடியாது. எழுத்தாயுதங்களை எடுத்தாளத் தெரியாதவன் பத்திரிகைக் களத்தில் பவனி வர முடியாது. மெட்டுக்குப் பாட்டெழுதும் ஆற்றல் இல்லாதவர்கள் திரைப்பாட்டு உலகில் நிலைத்து நிற்க முடியாது. இத்தகு ஆற்றல் ஓரளவு உள்ளவர்களில் நானும் ஒருவன்.

நான் பாட்டுத்தேரில் பவனி வருவதற்குப் பச்சைக்கொடி காட்டியவர் கதாசிரியர் பாலமுருகன். இவர் "பட்டிக்காடா பட்டணமா', "ராமன் எத்தனை ராமனடி', "எங்கள் தங்கராஜா', "வசந்த மாளிகை' போன்ற நடிகர் திலகம் சிவாஜி நடித்த பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியவர்.

ஆனால் என் தேருக்கான சக்கரங்களை வலிவுள்ளதாக்கி நான் சென்று கொண்டிருந்த ஒற்றையடிப் பாதையை ராஜபாட்டையாக மாற்றிக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

பாலமுருகனும் இயக்குநர் மாதவனும் என்னைப் படத்துறைக்கு அறிமுகப்படுத்தினர். எம்.ஜி.ஆர். அத்துறையில் என்னை வளர்த்துவிட்டார். என் பாட்டுப் பயணச் சந்திப்புகள் பற்றிக் கூறத்தொடங்குமுன் எனது பயணம் எங்கிருந்து ஆரம்பமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

ஆண்டுக்குச் சிலமுறையேனும் ஆகாயத்தில் கருமேகங்கள் தென்படுகிறதா என அண்ணாந்து பார்க்கும் மாவட்டம் எங்கள் சிவகங்கை மாவட்டம். சாயம் பூசாமலே உதடுகள் சிவந்திருக்கும் பெண்களைப் போலே வண்ணம் பூசாமலே மண்ணெல்லாம் சிவப்பு மயமாகக் காட்சியளிக்கும் சீமை சிவகங்கைச்சீமை.

அந்தச் சிவகங்கைக்கு அருகில் தீப்பெட்டியை உரசாமலே தீப்பிடித்துக் கொள்ளும் அக்கினிப் பிரதேசங்கள் உண்டு. அதற்குக் கிராமங்கள் என்று பெயர். அங்கே கோடைகாலத்தில் நெருப்புப் பெட்டி தேவையில்லை. காய்ந்த சருகுகளை வெயிலில் போட்டாலே போதும் தானாகத் தீப்பற்றிக் கொள்ளும். அந்த அளவு கந்தக பூமி.

அப்படிப்பட்ட கிராமங்களில் "கடம்பங்குடி' என்பதும் ஒன்று. அங்கே இந்தியத் திருநாட்டில் சுதந்திர தீபம் தோன்றுவதற்கு ஐந்து இளவேனிலுக்கு முன் அவதரித்தவன் நான். என் தாய் பெயர் குஞ்சரம். தந்தை பெயர் சுப்பையா சேர்வை.

சிறுவயதிலேயே கவிதை உணர்வு எனக்குள் இருந்ததை என் எட்டு வயதில் உணர்ந்தேன். என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது.

சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத தாய்மார்கள் பாடுகிறார்களே தாலாட்டுப் பாடல்கள். அதற்கு இணையான கவிதை இலக்கியங்கள் உலக மொழிகளில் இருக்காது என்பது என் கருத்து.

"மல்லிகையால் தொட்டில் இட்டா
 எம்புள்ளே மேலே
 வண்டுவந்து மொய்க்கு மின்னு
 மாணிக்கத்தால் தொட்டிலிட்டா
 எம் புள்ளையோட
 மேனியெல்லாம் நோகுமின்னு
 வயிரத்திலே தொட்டிலிட்டா
 வானிலுள்ள
 நட்சத்திரம் ஏங்குமின்னு
 நெஞ்சத்திலே தொட்டிலிட்டேன்
 நித்திலமே நீயுறங்கு
 பொன்னே உறங்கு பூமரத்து வண்டுறங்கு
 கண்ணே உறங்கு கானகத்துச் செண்டுறங்கு''
என்று என் தாய் பாடுவார்.

இதைக் கேட்கும் காலத்தில் எனக்கு வயது எட்டு. இதைப்போல நானும் குளத்தைப் பார்க்கையில், அலையைப் பார்க்கையில், கொக்கு, குருவிகளைப் பார்க்கையில் அன்றிலைப் பார்க்கையில் (இன்றைக்கு அன்றில் என்ற பறவை இனமே அழிந்து போய்விட்டது) பனைமரங்களைப் பார்க்கையில் நானே இட்டுக்கட்டி ஏதாவது பாடிக்கொண்டிருப்பேன். இப்படித்தான் சிறுவயதில் பாட்டுணர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது கம்பராமாயணத்தின் சில பாடல்கள் மனப்பாடப் பகுதியாக இருந்தன. அவை படிக்கப் படிக்கச் சுவையாக இருந்தன. இதுவே இப்படிச் சுவை தருமானால் கம்பராமாயணம் முழுவதும் படித்தால் எப்படி இருக்கும் என்று நூலகத்திற்குச் சென்று படிக்கத் தொடங்கி கம்பராமாயணம் முழுவதையும் படித்துவிட்டேன்.

ஆரம்பத்தில் பொருள் தெரிந்து படிக்கவில்லை. சொல்லோசை தரும் இன்பத்தால் ஈர்க்கப்பட்டுப் படித்தேன். அதன் பிறகுதான் பொருளுணர்ந்து படித்தேன். கம்பராமாயணம்,சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களைப் படித்த பிறகுதான் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.

என் தாய் பாடிய தாலாட்டுக்குப் பிறகு எனக்குள் கவிதை உணர்வை அதிகம் ஊட்டியது கம்பராமாயணம்தான். அதில் முந்நூறு பாடல்கள் அப்போதே மனப்பாடமாகத் தெரியும்.

நான் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்தபோது "ஆயிரம் கண்ணுடையாள்' என்ற படத்திற்கு ஒரு தாலாட்டுப் பாடலை என் தாயார் பாடிய கருத்திலே எழுதியிருந்தேன். நாட்டியப் பேரொளி பத்மினி பாடுவதுபோல் அக்காட்சி இடம்பெற்றது.

"வைகைக்கரை மீனாட்சியோ
 வாசல் வந்த காமாட்சியோ
 தெக்குச் சீமைக் காத்து வந்து
 தொட்டில் கட்டித் தாலாட்டுது''

என்று ஆரம்பமாகும். இந்தப் பாடலின் சரணத்திலேதான் என் தாயார் பாடிய கருத்தை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் போட்ட மெட்டுக்கேற்பக் கொஞ்சம் மாற்றி எழுதினேன்.

"மல்லிகையால் மெத்தையிட்டா
 வண்டுவந்து மொய்க்குமின்னு
 மாணிக்கத்தால் மெத்தையிட்டா
 மேனியெல்லாம் நோகுமின்னு
 வைரங்களால் மெத்தையிட்டா
 நட்சத்திரம் ஏங்குமின்னு
 நெஞ்சத்திலே மெத்தையிட்டேன்
 நீலக்குயில் நீ தூங்கம்மா''
என்று எழுதினேன்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பாடல் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் ஒலிப்பதிவு ஆகும்போது டைரக்டர் கே. சங்கர், "தயாரிப்பாளர் ஏதோ வார்த்தையை மாற்றச் சொல்கிறார் என்னவென்று கேள்' என்றார்.

உடனே தயாரிப்பாளர், "படத்தின் முதல் ரீலிலேயே இந்தப் பாடல் வருகிறது. இதுதான் படத்தின் முதல் பாடல். எடுத்த உடனே "நீ தூங்கம்மா'' என்று பாடினால் படமே தூங்கிவிடும். ஆகவே ஆடம்மா, ஓடம்மா என்று மாற்றலாமா' என்றார்.

"தூங்க வைப்பதற்குத்தான் தாலாட்டுப் பாடல். எழுந்து ஆடவைப்பதற்கு யாராவது தாலாட்டுப் பாடல் பாடுவார்களா? அல்லது ஓடவைப்பதற்குத்தான் பாடுவார்களா?

"தூங்கம்மா என்ற வரி வந்தால் படம் தூங்கிப் போய்விடும் என்கிறீர்கள். ஓடம்மா என்ற வரி வந்தால் தியேட்டரை விட்டுப் படம் சீக்கிரம் ஓடம்மா என்று சொல்வதுபோல் ஆகிவிடாதா?' என்று கேட்டேன்.

"அப்படியென்றால் ஆடம்மா' என்று போடலாமே என்றார். சரி, பணம் போடுபவர் சொல்கிறார். அவர் நம்பிக்கையை ஏன் கெடுக்க வேண்டும் என்று "நீ ஆடம்மா'' என்று மாற்றி எழுதினேன். வாணி ஜெயராம்தான் இந்தப் பாடலைப் பாடினார்.

தயாரிப்பாளர் சென்டிமென்ட்படி படம் தியேட்டரில் அதிக நாள் ஆடியிருக்க வேண்டுமல்லவா? இல்லை. இரண்டே வாரத்தில் பெட்டிக்குள் ஆடிச் சுருண்டு விழுந்துவிட்டது. இதுதான் சினிமா சென்டிமென்ட். எதிலும் ஓரளவிற்குத்தான் சென்டிமென்ட் பார்க்க வேண்டும். இது சினிமாவுக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்கும்தான்.

கவிஞர் முத்துலிங்கம்

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com