தீர்க்க தரிசனம்!...

"மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. "நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்' என்று நான் பாடினால் இருக்கின்ற இந்த ஆட்சியில் ஏழைகள் வேதனைப்பட்டுக் 
தீர்க்க தரிசனம்!...

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-18:

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் வரும் பாடலுக்காக நான் சென்சார் அதிகாரியைப் பார்த்துக் கேட்டதற்குக் காரணம் ஒன்றுண்டு. "நமது கொடி' என்ற வார்த்தையை சென்சார் வெட்டிவிட்டால் என்ன செய்வது என்று எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னபோது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்.

"எங்க வீட்டுப் பிள்ளை' படத்திற்கு வாலி எழுதிய ஒரு பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டாமலே ஒலிப்பதிவு செய்து விட்டார்களாம். இருந்தாலும் படமாக்கப்படுவதற்கு முன்பு சென்சார் அதிகாரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டார்களாம் கம்பெனியின் பொறுப்பாளர்கள். தயாரிப்பாளர் நாகிரெட்டி, அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் உடன் இருந்திருக்கிறார்கள்.

நான் அரசனென்றால்
என் ஆட்சியென்றால் - இங்கு
ஏழைகள் வேதனைப் படமாட்டார்

இதுதான் வாலி அந்தக் காட்சிக்கு எழுதிய பல்லவி, அதை சென்சார் அதிகாரி மாற்றச் சொல்லிவிட்டார். அதன் பின் நாகிரெட்டி அவர்கள் வாலியை அழைத்து வேறு பல்லவி எழுதச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரிடம் இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு அதன்பிறகு எழுதுகிறேன் என்று எம்.ஜி.ஆரைச் சந்தித்து நிகழ்ந்ததைச் சொல்லியிருக்கிறார் வாலி.
""இது ரொம்ப அக்கிரமம்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். ""ஆம் அண்ணா. நம்ம படம் என்றால் சென்சார் ரொம்ப அக்கிரமம்தான் செய்கிறார்கள்'' என்று வாலி சொல்ல, ""நான் சென்சாரைச் சொல்லவில்லை வாலி, நீங்கள் எழுதிய வரிகளைத்தான் அக்கிரமம் என்கிறேன்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டு அவரே விளக்கியிருக்கிறார்.

"மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. "நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்' என்று நான் பாடினால் இருக்கின்ற இந்த ஆட்சியில் ஏழைகள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் வரும்? இதை எப்படி சென்சார் அனுமதிப்பார்கள்? ஏன் இந்தப் பாடலை என்னிடம் காட்டவில்லை''யென்று கோபப்பட்டிருக்கிறார். அதன் பிறகு மாற்றி எழுதப்பட்ட பாடல் தான்...
நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
என்ற பாடல்.
இதை விளக்கமாக எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்ன காரணத்தால் தான் பாடல் ஒலிப்பதிவிற்கு முன்பே நாமும் நாம் எழுதிய பாடலை சென்சார் அதிகாரியிடம் காட்டி சம்மதம் பெற்றால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அப்போது சென்சார் அதிகாரியாக இருந்த ராகவனிடம் காட்டி ஒப்புதல் பெற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் "துக்ளக்' பத்திரிகையில் "எனக்குள் எம்.ஜி.ஆர்.' என்று வாலி எழுதிய கட்டுரையிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அது புத்தகமாகவும் வந்திருக்கிறது.
என்னுடைய இந்தப் பாடல் ஈழத்தமிழர்கள் மிகவும் விரும்பும் பாடல். அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எழுச்சியை உண்டாக்கிய பாடல் என்று கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக கனடா நாட்டு வானொலியில் பணியாற்றும் ஒரு நண்பர் அடிக்கடி இதைக் கூறுவார். பாடல் இதுதான்.
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்...
ஒற்றுமையால் பகைவர்களை ஓடவைப்போம்
உழைப்பாலே நம்நாட்டை உயர்த்தி வைப்போம்...
என்று தொடங்கி
கோட்டையிலே நமதுகொடி பறந்திட வேண்டும்
கொள்கைவீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்...
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடைமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்...
என்று தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும்.
வீரம் உண்டு வெற்றி உண்டு
விளையாடும் களம் இங்கே உண்டு
வா வா என் தோழா...
என்று வருகின்ற இறுதிச் சரணத்தில்,
பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலியினம் நீயெனில் பொருதிட வாராய்...
என்றொருவரி வரும். இந்த வரியைச் சொன்னவரே எம்.ஜி.ஆர்.தான். இதற்குப் பதில் வேறொன்று எழுதியிருந்தேன். அதை மாற்றிச் சொல்லி இந்த வரியைச் சொன்னவர் அவர்தான். அவர் சொல்லும் போது "புலியினம் நீயெனில் போருக்கு வாராய்' என்று தான் அவர் சொன்னார்.
""எங்கள் பாண்டிய நாட்டுப் பகுதியில் போருக்கு வா என்று சொல்வதற்குப் பதில் பொருதிப் பார்ப்போம் வா என்று சொல்கிற பழக்கம் உண்டு. அதனால் பொருதிட வாராய் என்று வைத்துக் கொள்ளலாம்'' என்றேன். அவரும் சரியென்று சொல்லிவிட்டார். அதனால் "பொருதிட வாராய்' என்று எழுதினேன்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது சில காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடலுக்கு இலங்கை அரசு தடை விதித்தது என்று கேள்விப் பட்டேன். இப்போது இல்லை.
நமது அகில இந்திய வானொலியில் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற எம்.ஜி.ஆர். படப் பாடல்களை ஒலிபரப்புவதில்லை. அதுபோல் தொலைக்காட்சியிலும் அவர் சம்பந்தப்பட்ட படங்களையோ அல்லது அவரை நினைவு கூர்வதுபோல் வருகிற பேட்டிகளையோ ஒளிபரப்புவதில்லை.
இவர்கள் ஒளிபரப்பாவிட்டால் தியேட்டர்
களில் அவர் நடித்த படத்தைப் பார்க்க மாட்டார்களா? அல்லது பிரச்சாரக் கேசட்டுகளில் பாடல்
களைக் கேட்கமாட்டார்களா?
இதைக் கேட்டுத் தான் மக்கள் ஓட்டுப் போடுகிறார்களா என்றால் இல்லை. தேவையில்லாத விதிமுறைகளையெல்லாம் தேவையைப் போல் வைத்துக் கொண்டிருக்கிறது வானொலியும், தொலைக்காட்சியும். நான் தனியார் தொலைக்காட்சியைச் சொல்லவில்லை. சென்னைத் தொலைக்காட்சி அதாவது தூர்தர்ஷனைச் சொல்லுகிறேன். இதை மாற்ற வேண்டும்.
அரசாங்கமே ஒவ்வொரு கட்சிக்கும் இவ்வளவு நேரம் என்று பிரச்சாரத்திற்காக தொலைக்காட்சியில் இடம் ஒதுக்கும் போது, அரசியல் சம்பந்தமுள்ள நடிகர்கள் படங்களை மட்டும் ஏன் தடைசெய்ய வேண்டும்?
இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் எழுதினேன். அதில் ஒன்றுதான் மேற்கண்ட பாடல். அந்தப் பாடலைப் பற்றி ஒரு கூட்டத்தில் அமைச்சர் காளிமுத்து பேசினார். எம்.ஜி.ஆரும் மேடையில் அமர்ந்திருந்தார்.
""கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் என்று தலைவர் படத்தில் முத்துலிங்கம் பாடல் எழுதியிருந்தார். அவர் எழுதியது போல் கோட்டையிலே நமது கொடிதான் இன்று பறந்து கொண்டிருக்கிறது. கவிஞர்களின் தீர்க்க தரிசனம் பலிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு'' என்று பேசினார். அவையோர் கையொலி செய்தனர். எம்.ஜி.ஆர். சிரித்தபடி அதை வரவேற்றார். அந்தப் படத்தில் நான் எழுதிய மற்றொரு பாடல்.
வீரமகன் போராட
வெற்றிமகள் பூச்சூட
மானம் ஒரு வாழ்வாக
வாழ்வுநதி தேனாக
முன்னேறுவோம் நம்நாட்டையே
முன்னேற்றுவோம்...
என்ற பாடலும்
மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு - புகழ்
மணத்தோடு கதிர்போல வாழிய நீடு
சங்கம் கண்ட சரித்திரநாடு - எங்கள்
சந்தனத் தமிழுக்கு வேறேது ஈடு
என்றொரு நாட்டியப் பாடலும் எழுதினேன்.
"அன்புக்கு நானடிமை' என்ற பாடலைப் போலவே "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை' என்ற பாடலும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடல். பட விநியோகஸ்தர்களுக்கு இந்தப் பாடலையும், பி.எஸ். வீரப்பாவோடு போடும் சண்டைக் காட்சியையும் மட்டுமே
எம்.ஜி.ஆர். காண்பிக்கச் செய்தார்.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com