உன்னோடு போட்டிபோடு!

போர் தந்த பரிசுகள்!

பெ.பெரியார் மன்னன்

உன்னோடு போட்டிபோடு! - 48

நான் படித்த உணர்வு மிகுந்த உள்ளத்தை உருக்கும் கதை ஒன்றைச் சொல்லவா?'' என்று செழியன் கேட்டவுடன், 
""சொல்லுங்க ஐயா, மத்தவுங்க சொல்லுறதுக்கும் நீங்க சொல்லுறதுக்கும் எத்தனையோ வேறுபாடு உண்டு. நீங்க துப்பாக்கிய தூக்குறவரு. அதுனால இப்பவே எங்களுக்குச் "சுடச்சுட' ஒரு செய்தி சொல்லுங்களேன்'' என்று தமிழையா சிலேடையாகக் கேட்க செழியன் கதையைத் தொடங்கினார்.
""நான் சொல்லப் போற இந்தக் கதை ரஷ்ய நாட்டில் வாழ்ந்த ஒரு இராணுவ வீரனின் கதை. தலைநகரான மாஸ்கோவுக்கு அருகில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும், மகனும் வசித்து வந்தார்கள். அது விவசாயக் குடும்பம். இளவயது மகன் மிக நல்லவனாகவும் தன் தாய் மீது மிகுந்த அன்பு கொண்டவனாகவும் ஊருக்கு நல்லது செய்பவனாகவும் வாழ்ந்து வந்தான். அத்தோடு அந்த கிராமத்திலேயே வாழ்ந்த ஒரு பெண்ணின் மீதும் அன்பு கொண்டிருந்தான். விரைவில் அவர்களது திருமணம் நடைபெற இருந்தது'' என்று செழியன் சொல்லிக் கொண்டு வந்தார். 
""அநேகமா இப்பதான் இந்தக் கதையில வில்லன் வரப் போறான். அதுவும் அவன் அந்த ஊர்ப் பண்ணையார் மகனாகத்தான் இருப்பான், அவன் குடிப்பான், கொலைசெய்வான், அந்த ஊரையே கொள்ளையடிப்பான். அதுமட்டுமல்ல, அவனுக்கு அந்தப் பொண்ணு மேல ஒரு கண்ணு அப்படித்தானே ஐயா'' என்று ஒரு பெரியவர் கேட்க, 
""ஆமா, உன் தலையில மண்ணு... தமிழ் சினிமா பார்த்துப் பார்த்து இப்படி ஆயிட்டீங்களே! நம்ம டைரக்டர் பாரதிராஜா ஆரம்பிச்சு வச்சது. ஏன்யா ஊருல நல்ல பண்ணையாரும் அவருக்கு ஒரு நல்ல மகனும் இருக்கவே மாட்டாங்களா?'' என்று மீசைக்காரர் கோபத்தோடு அந்தப் பெரியவரை அடக்கினார். 
லெப்டினென்ட் செழியன், அந்த இரண்டுபேர் பேச்சையும் ரசித்துக் கேட்டுவிட்டு, ""இல்லை நீங்கள் சொல்கிற மாதிரி எல்லாம் இந்தக் கதை இல்லை. ரஷ்யக் கதைகள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. கேட்டுக் கொண்டே வாருங்கள், இடையில் சந்தேகம் இருந்தால் நானே சொல்லி விடுவேன்'' என்று அவர்களைச் சமாதானம் செய்தார். 
உடனே தமிழ்மணி, ""நம்ம செழியன் சொல்றது உண்மைதான். தமிழ்ச் சிறுகதை உலகின் மன்னர்களாய் விளங்கிய புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்கள் ரஷ்ய இலக்கியங்களை நன்கு கற்றிருந்ததால்தான் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டு நின்றார்கள். அதனால் கதை கேட்கிற நீங்கள் சற்று நேரம் தொலைக்காட்சி பார்ப்பது போல் பேசாமல் அமர்ந்திருக்க வேண்டும் சரியா? இதோ சிறிய இடைவேளைக்குப் பின், செழியன் தொடர்கிறார்'' என்றார்.
""இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது ஜெர்மனியை ஆண்ட அடால்ஃப் ஹிட்லர் உலகத்தையே அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். பல வெற்றிகளையும் பெற்றார். ஆனால் ரஷ்ய நாட்டின் மீது படையெடுத்ததுதான் அவருடைய வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது. கடுமையான பனிப்புயல், அதில் இடைவிடாது போர். மாஸ்கோ நகரை 900 நாட்கள் ஏறத்தாழ 3 வருடம் ஜெர்மன் படைகள் முற்றுகையிட்டுச் சூழ்ந்திருந்தபோதும் ரஷ்யர்களை அடிமைப்படுத்த முடியவில்லை. ஒருவேளை உணவை மட்டும் உண்டு தங்கள் நாட்டைக் காத்தார்கள் ரஷ்யர்கள். அப்படியான வீரம் செறிந்த மக்கள் நிறைந்த நாடு ரஷ்யா. நம் கதைக்கு வருவோம். பெரும் யுத்தம் நடந்து கொண்டு இருந்தபோது கிராமத்தில் இருந்த இளைஞர்கள் எல்லாம் கட்டாயமாக இராணுவத்தில் போர் புரிய அழைக்கப்பட்டார்கள். நம் கதாநாயகனும் போருக்குப் புறப்பட்டான்'' என்று அவர் சொல்லிக்கொண்டு வர,
""ஐயா, இந்தக் கடுங்காப்பிய ஒரு மடக்குக் குடிச்சுக்கிட்டே கதையச் சொன்னீங்கன்னா உங்க தொண்டை வறலாம இருக்கும்'' என்று மீசைக்காரர் ஒரு கப்பில் கருப்பட்டிக் காப்பியை நீட்டினார். செழியனும் மகிழ்வோடு வாங்கி, ""நன்றி'' என்று சொல்லிவிட்டு, காபியைக் குடித்தார். அதற்குள் அத்தனை பேர் கையிலும் சுடச்சுட கருப்பட்டிக் காப்பி வந்து சேர்ந்தது.
""இளைஞர் பட்டாளத்துக்கு நன்றி'' என்று தமிழ்மணி பாராட்டினார். மீண்டும் தொடங்கினார் செழியன். ""போர்க்களத்துக்குச் சென்ற நம் கதாநாயகன் தன் தாய்க்குக் கடிதம் கூட எழுத முடியாத சூழலில் இருந்து வந்தான். ஓர் ஆண்டு ஆயிற்று, மகனிடம் இருந்து கடிதத்தை எதிர்பார்த்திருந்த தாயும், காதலனைப் பிரிந்த காதலியும் ஏக்கத்தோடு நாட்களை எண்ணிக்கொண்டு வாழ்ந்தனர். 
யுத்த களத்தில் அடிபட்டுக் கிடந்த தன் நண்பனைக் காப்பாற்றப் போன நம் கதையின் நாயகன் குண்டு வெடிப்பால் கொடுமையாகப் பாதிக்கப்பட்டான். நீண்ட நாள் சிகிச்சைக்குப் பிறகு அவன் கண்விழித்துப் பார்த்தபோது அவன் முகமே சிதைந்து போயிருந்தது. தன் கோர முகத்தைப் பார்த்த அந்த அழகிய இளைஞன் வாய்விட்டுக் கதற நினைத்தான், ஆனால் குரல் வரவில்லை. அப்போது அருகில் இருந்த அவனால் காப்பாற்றப்பட்ட நண்பன் வருத்தத்தோடு சொன்னான் ""நண்பா, இனி உன்னால் பேச இயலாது, என்னால் நடக்க இயலாது. போர் நமக்குத் தந்த பரிசுகள் இவைதான்'' என்றான்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு உருக்குலைந்து போன தன் முகத்தையும், பேச முடியாத தன் நிலையையும் எண்ணி வருந்திய நம் இளைஞன் தன் தாயையும், தன்னை மணந்து கொள்ளக் காத்திருக்கும் காதலியையும் காண வேண்டும் என்று நினைத்தான். இந்தநிலையில் இருக்கும் தன்னை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்றும் கலங்கினான்'' என்று செழியன் சொல்லிக்கொண்டு வரும்போதே அவர் குரலில் கலக்கம் ஏற்பட்டது.
கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் கண்கலங்கிப் போனோம். எப்போதும் கேள்வி கேட்கும் மீசைக்காரர் தலையைக் குனிந்தபடி கடல் மண்ணில் ஏதோ கோலம் போட்டபடி இருந்தார். சட்டென்று தொண்டையைச் செருமிக் கொண்ட செழியன் கம்பீரமாக மீண்டும் தொடங்கினார். 
""கிராமத்துத் தாயைக் காண நினைத்த நம் இளைஞன் ஒரு யோசனை செய்தான். தன் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினான். எப்படித் தெரியுமா? 

அன்புள்ள அம்மா,

நான் போர்க்களத்தில் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டதால் நீண்ட நாட்களாக உனக்குக் கடிதம் எழுத முடியவில்லை. இப்போது நான் நலமாக இருக்கிறேன். ஆனால் ஊருக்கு வர முடியாத சூழ்நிலை. எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும் அம்மா. என்னைப் போர்க்களத்தில் காப்பாற்றிய என் நண்பன் ஒருவன் நம் வீட்டுக்கு வருகிறான். போரின் கொடூரத்தால் அவன் முகம் சிதைந்து இருக்கிறது. அவனால் பேசவும் முடியாது. ஆனால் அம்மா அவன் உன்னைக் காண விரும்புகிறான். என்னைப் போலவே அவனை நீ பார்த்துக் கொள்ள வேண்டும் அவனும் உனக்கு ஒரு மகன்தான். செய்வாயா அம்மா?
என்று கடிதத்தை முடித்துத் தாய்க்கு அனுப்பினான். தாயிடம் இருந்து உடனே பதில் வந்தது. 
""மகனே உன் வருகையைத்தான் ஆவலோடு நான் மட்டுமில்லை, உன் தோழியும் இந்த ஊர் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பரவாயில்லை நீ உயிரோடு இருப்பதே எங்களுக்கு மகிழ்ச்சி. உன் நண்பனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்'' என்ற தன் தாயின் கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தன் ஊரை நோக்கி நம் இளைஞன் புறப்பட்டான். 
கிராமத்தை அவன் அடைந்தபோது ஊரே அவனை மனங்கலங்க வரவேற்றது. அச்சம் தரத்தக்க அவனது முகத்தைக் கண்டு யாரும் வெறுப்படையவில்லை. அவனால் பேச முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட அந்தத் தாய், ""கவலைப்படாதே மகனே! நீயும் என் மகன்தான். என் மகனின் உயிரை நீ காப்பாற்றியதாக என் மகன் கடிதத்தில் எழுதியிருந்தான். அவனின் உயிரைக் காத்த உனக்கு நன்றி. இது உன் வீடு'' என்று அவனை உபசரித்தாள்.
""அந்த இளைஞனின் காதலியும் அவனை வந்து பார்த்தாள். சைகையில் நலம் விசாரித்தாள். அவளைப் பார்த்தவுடன் அவனுக்குத் துக்கம் மேலும் அதிகமாயிற்று. சில நாட்கள் அங்கே இருந்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் போர்க்களத்திற்குப் புறப்பட்டான்.
சில நாட்கள் கழித்து அவன் தாயிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை படித்த நம் இளைஞன் கதறித் துடித்துவிட்டான். ஏன் தெரியுமா?'' என்று சற்றே கதையை நிறுத்திக் கேட்டார் செழியன். 
கதை கேட்டுக் கொண்டிருந்த யாரும் பதில் கூறவில்லை. அந்தச் சூழல், நிசப்தமான அந்த நள்ளிரவு, செழியன் சொல்லிக் கொண்டு வந்த கதைக்கு ஏற்ற சூழலைப் போலவே அமைந்திருந்தது. 
செழியன் மீண்டும் தொடங்கினார். ""அந்தக் கடிதத்தில் அந்தத் தாய் என்ன எழுதியிருந்தார் தெரியுமா? ""மகனே நம் வீட்டுக்கு வந்து சில நாட்கள் எங்களோடு தங்கி விடைபெற்றுச் சென்ற உன் நண்பன் நீ தான் என்பது எனக்குத் தெரியும். என் மனம் கலங்கக் கூடாது என்பதற்காக, நான் துக்கம் அடையக் கூடாது என்பதற்காக நீ உன்னை மறைத்துக்கொண்டு என்னைக் காண வந்தாய். உன்னால் பேச முடியாது, சிதைந்து போன உன் முகம் உன்னைக் காட்டிக் கொடுக்காது, எங்களால் உன்னை அடையாளம் காணமுடியாது என்று நினைத்துத்தானே நீ வந்தாய்?.
ஆனால் மகனே ஒன்றை நீ மறந்து விட்டாய். உன்னைப் பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்தெடுத்த எனக்கு உன் வாசனை தெரியாதா மகனே? உன் முக அழகிற்காகவா, உன் குரலுக்காகவா உன் மீது நாங்கள் பாசம் செலுத்தினோம். இல்லையடா மகனே, நீ உன்னை மறைத்தாலும் உனக்குள்ளிருக்கும் என் மகனை நான் அறிவேன். அடுத்தமுறை நீ நீயாகவே வா. நீ பெற்றிருக்கும் வீரத் தழும்புகள் நம் பரம்பரைக்கே கிடைத்த பெருமை. கலங்காதே மகனே... உன்னைப் பெற்றதால் நான் பெருமை அடைகிறேன். உன்னால் இந்த நாடு பெருமை அடைகிறது விரைவில் உன் வருகையை எதிர்பார்க்கும் உன் அன்புத் தாய்... என்று அந்தக் கடிதம் முடிந்திருந்தது'' எனச் செழியன் சொல்லி முடித்தார். 
கூட்டத்தில் சற்றே விசும்பல் ஒலி கேட்டது. எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ""இந்தக் கதையை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் யார் தெரியுமா?'' என்று செழியன் கேட்க...
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT