பிள்ளையார் சிலையைக் கரைத்தால் செடி வளரும்னு சொன்னா நம்பனும், இல்லேன்னா உங்களுக்கு ‘கிரீன் கணேஷா’ வைத் தெரியாதுன்னு அர்த்தம்!

சூழலைக் கெடுக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையார் பொம்மைகளை எப்படி பயன்பாட்டில் இருந்து அகற்றுவது என்று யோசித்ததின் விளைவு தான் இந்த கிரீன் கணேஷா’ பிள்ளையார் சிலைகள்
பிள்ளையார் சிலையைக் கரைத்தால் செடி வளரும்னு சொன்னா நம்பனும், இல்லேன்னா உங்களுக்கு ‘கிரீன் கணேஷா’ வைத் தெரியாதுன்னு அர்த்தம்!

விநாயகர் சதுர்த்தி வெகு நெருக்கத்தில் வந்து விட்டது. தமிழ்நாட்டில் பண்பாட்டு, கலாச்சார விழாவாக இருந்தாலும் சரி அரசியல் விழாவாக இருந்தாலும் சரி ஒவ்வொரு விழா முடிந்த பின்னும் அவற்றுக்கே உரித்தான வகையில் ஒவ்வொரு பிரச்னை தலைதூக்கும். தீபாவளி என்றால் பட்டாசு விபத்துகள், குப்பை, புகையால் சூழல் பாதிப்பு என்றால் விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் அதே விதமாக பிரமாண்டமான பிள்ளையார் சிலைகளை கடலுக்குள் மூழ்கடித்து கரைக்கும் பிரச்னையை ஒட்டி சூழலியல் போராளிகளின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விடும். இம்முறை அப்படிப்பட்ட பிரச்னைகள் எதுவும் வராமலிருக்க நிஜமான எக்கோ கிரீன் ஆர்கானிக் பிள்ளையார்கள் மார்கெட்டுக்கு வரவிருக்கின்றன.

பெங்களூரைச் சேர்ந்த வேளாண் அதிகாரி ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து ‘கிரீன் கணேஷா’ என்ற பெயரில் எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார் சிலைகளை வடிவமைத்துள்ளார். எக்கோ ஃப்ரெண்ட்லி என்ற பெயருக்கு இணங்க இந்த வகைப் பிள்ளையார்கள்; மார்கெட்டில் தற்போது அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பிற பிள்ளையார் சிலைகளைப் போன்று பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் செய்யப்படுவதில்லை. கிரீன் கணேஷா முற்றிலும் களிமண்ணால் தயாராகிறது. அதுமட்டுமல்ல சிலையின் உட்புறத்தில் களிமண்ணோடு தேங்காய் நார்க் கழிவுகள் சேர்த்து அடைக்கப்படுவதால் பூஜை முடிந்ததும் சிலையைக் கரைக்க கஷ்டப் படத் தேவையில்லை. இந்தச் சிலையில் அதை விட மிகப்பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா? சிலையின் உள்ளே வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப விதைப் பந்துகளையும் வைத்து உருவாக்கித் தருகிறார்களாம். சிலையின் உள்ளே வைக்கப்படும் விதைப்பந்து என்னவாக இருக்கவேண்டும் என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தைப் பொறுத்தது. அது மட்டுமல்ல சிலைக்கு வண்ணமடிக்க காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆர்கானிக் சாயங்களைப் பயன்படுத்தியும் இந்தச் சிலைகள் செய்து தரப்படும் என்கிறார்கள். 

பொதுவாக விநாயகர் சதுர்த்தி முடிந்த மூன்றாம் நாளில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் முதல் குட்டிக் குட்டி விநாகயகர் சிலைகள் வரை வரிசையாக சென்னை நகரின் தெருக்களையும், சாலைகளையும் அடைத்துக் கொண்டு கடலிலோ, ஆறுகளிலோ கரைக்க எடுத்துச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த ‘கிரீன் கணேஷா’ வை அப்படிக் கரைக்கத் தேவையில்லை. வீட்டின் முன்னால் மண் தரை இருந்தால் அங்கே ஒரு வாளி நிறைய நீர் நிரப்பி அதில் இந்த விநாயகரை வைத்து விட்டால் போதும் களிமண்ணில், இயற்கை வண்ணங்கள் கலந்து செய்த பிள்ளையார் என்பதால் சில மணி நேரங்களில் சிலை முற்றிலும் கரைந்து விடும். பிறகு அந்த நீரில் மேலும் மண் சேர்த்து அப்படியே உள்ளிருக்கும் விதை பந்துகளோடு தொட்டியிலோ அல்லது பிளாஸ்டிக் வாளியிலோ வளர்க்கத் தொடங்கலாம். ஒரே வாரத்தில் உள்ளிருக்கும் விதை முளைத்து நாம் விரும்பிய செடியோ, மரமோ தளிராக முகம் காட்டத் துவங்கி விடும். விநாயகர் சிலைகளில் இது ஒரு வரவேற்கத் தக்க புதுமையான கண்டுபிடிப்பு தான் இல்லையா?

சூழலைக் கெடுக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையார் பொம்மைகளை எப்படி பயன்பாட்டில் இருந்து அகற்றுவது என்று யோசித்ததின் விளைவு தான் இந்த கிரீன் கணேஷா’ பிள்ளையார் சிலைகள் என்கிறார் Grow share sustain எனும் பெயரில் இந்தப் பிள்ளையார் பொம்மைகளைத் தயாரிப்பவர்களில் ஒருவரான அபூர்வா ஜெய்ஸ்வால். ‘ விநாயகர் சதுர்த்தி முடிந்த பின்னர் கடற்கரையெங்கும் இறைந்து கிடக்கும் பிள்ளையார் பொம்மைத் துணுக்குகளைக் காணும் போது அதனால் சூழலுக்கு விளையும் கெடுதல்களை நினைத்து வருத்தமாக இருக்கும். பண்டிகையும், பூஜையும் சுவாரஸ்யமாக இருந்தாலும் பிறகு காணக் கிடைக்கும் இந்தக் காட்சிகள் நிச்சயமாக பூஜையில் சேர்த்தியில்லை.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு இணங்க முதற்கட்டமாக இவர்கள் 200 சிலைகளை இவ்விதமாகத் தயாரிக்கவிருக்கிறார்களாம்.இந்தப் புதிய ‘கிரீன் கணேஷா’ பிள்ளையார்களை வாங்க growsharesustain.com எனும் இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம். இவர்களது தயரிப்பில் 6 இஞ்ச் பிள்ளையார் விலை 220 ரூபாய் என்கிறார்கள். மார்கெட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிற பிள்ளையார் சிலைகளுடன் ஒப்பிடும் போது இது சகாயமான விலை தான் என்று தோன்றுகிறது. இந்த வருடமாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சூழலைக் கெடுக்காமல் முடிந்த அளவு எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்களை வாங்கி பூஜை செய்வோம் என உறுதியேற்போம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com