உங்கள் மகிழ்ச்சிக்கான ஒரே ஒரு வழி என்ன?

சென்னையில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை முதல் அந்தி மாலை வரை குளுமையான சூழ்நிலை நிலவி வருகிறது.
உங்கள் மகிழ்ச்சிக்கான ஒரே ஒரு வழி என்ன?

சென்னையில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை முதல் அந்தி மாலை வரை சில்லென்ற குளுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் குளிருடன் அடர்ந்த மேகமூட்டமும் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து சில பகுதிகளில் மென் தூறல் மழையும் பெய்தது. 

வழக்கத்தை விட இந்த ஆண்டு பனிப்பொழிவும் குளிரும் அதிகமாக உள்ளது. இந்தப் பருவ மாற்றத்தால் இந்த மாதத்தின் பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாட முடிகிறது. சென்னையைப் பொருத்தவரையில் வெயில், கோடை வெயில், கடும் வெயில், சுட்டெரிக்கும் கத்திரி வெயில் என்று நீண்ட கோடைக் காலமும், அதிரடியான மழைக்காலமும் இருப்பதால் வெளியில் அதிகம் செல்ல முடியாமல் அவதிப்படுவார்கள். இந்த ஆண்டின் முடிவில் பருவ மாற்றம் ரம்யமான சூழ்நிலையில் உள்ளது அனைவருக்கும் மகிழ்வளிக்கக் கூடியது.

பனி காலங்களில் பகல் சீக்கிரம் முடிவடைந்துவிடும் என்பது போல் தோன்றும். நாம் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க நினைத்தாலும் மெல்லிய குளிர் நம்மை போர்வைக்குள் சுகமாக உறங்கிக் கிடக்கச் செய்யும். இந்த சீசனில் குழந்தைகளை காலையில் எழுப்பி பள்ளிக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சில குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை அடைப்பு, ஜுரம் போன்ற பிரச்னைகள் வந்து சேரும். தினமும் சுடுநீரை குடிக்கக் கொடுப்பது நல்லது. இந்த சீசனை மட்டுமல்ல வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அனுபவிக்க ஆசைப்பட்டால் உடல் ஆரோக்கியம் எதைவிடவும் முக்கியம் என்பதை மனத்தில் பதிய வைத்துவிட வேண்டும்.

இந்த சீசனில் இன்னொரு ஏகாந்தம் இசை மற்றும் திரைப்படங்கள். இசை ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மார்கழி இசைவிழாக்கள் கொண்டாட்டமாக இருக்கும். இன்னொரு புறம் திரை ஆர்வலர்களுக்கு உலக சினிமா திரையிடல்கள் மகிழ்வளிக்கும். போலவே புத்தகப் பிரியர்களுக்கு ஜனவரி 10-ம் தேதி வரவிருக்கும் புத்தகக் கண்காட்சி மிகவும் முக்கியமானதாகும்.

பனிக் காலத்தில் அதி காலை எழுந்து ஒரு கோப்பை காபியுடன் உங்கள் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டே, தோட்டத்தில் உலவியபடியோ அல்லது மொட்டை மாடிக்குச் சென்றோ காபி குடித்திருக்கிறீர்களா? இந்த பூலோகத்தில் சொர்க்கம் எதுவென்பதை அப்போது உணர்வீர்கள்.

ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து தியானம் எதுவும் கற்கவேண்டாம். அந்தக் காபியுடன் உங்கள் கண்முன் நிகழும் இயற்கையின் அதியத்தை உள்ளார்ந்து உணர்ந்தால் போதும், மெய் சிலிர்த்துப் போவீர்கள்.

சூடான காபியின் இதமும், பனியின் குளிர்ச்சியும், ஒரு சிறிய பறவையின் கீச்சுக் குரலும், எங்கோ தொலைவிலிருந்து கேட்கும் ஆலய மணியோசையும் அந்த நொடியை அர்த்தமுள்ளதாக்கிவிடும்.

வாழ்க்கை என்பது எதற்கு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது? தினமும் அரக்க பரக்க ஓடி ஓடி சம்பாதிக்க மட்டுமா? ஒவ்வொருவருடன் அக்கப்போர் புரிவதற்கும், பொன்னான நேரங்களை மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டும் அழித்துக் கொள்வதற்காக மட்டுமேயா? நிச்சயம் இல்லை. நம்மைச் சுற்றி உள்ள இயற்கையை நம்மில் ஒரு பகுதியாக உணர்வதற்குத்தான்.

பிரபஞ்சத்தின் ஒரு துகளாக உள்ள நாம் அதன் எல்லையற்ற தன்மையை ஒரு நொடிப் பொழுதேனும் உண்மையில் உணர்ந்தால் அதுவே நம் வாழ்க்கையில் ஆகச் சிறந்த மெய்க் கணம். அத்தகைய முழுமையான கணங்களின் தொகுப்பே ஆனந்தத்தின் பிறப்பிடம்.

வாழ்க்கையை நன்கு உணர்ந்து வாழ, புரிந்துணர்வுடன் எல்லாவற்றையும் அணுக முதலில் நமக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். நாம சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்தால்தான் நம்மைச் சுற்றியுள்ளவர்களை அதே போல வாழச் செய்ய முடியும்.

விழிப்புணர்வுடன் இன்று நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். எது நிலையான இன்பம்? எந்தக் கேள்வியிலிருந்தும் நம் தேடலைத் தொடங்கலாம். ஆனால் அவற்றின் ஒரே முடிவு சொல்லிப் புரிய வைக்க முடியாது ஏகானுபவம். அதுவே ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் கண்டைய வேண்டிய ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com