இரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுகிறீர்களா? ஒரே ஒருமுறை 4 - 7 - 8 மெத்தட் முயற்சித்துப் பாருங்களேன்!

ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும் போது ஒரு மனிதனால் என்ன தான் முயற்சித்தாலும் அந்த நினைவுகளில் இருந்து விடுபட்டு உடனடியாகத் தூங்க முடிவதில்லை.
இரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுகிறீர்களா? ஒரே ஒருமுறை 4 - 7 - 8 மெத்தட் முயற்சித்துப் பாருங்களேன்!

சிலருக்குப் பகல் முழுவதும் உட்கார நேரமில்லாமல் செய்து கொண்டே இருக்க ஓயாது வேலைகள் இருந்திருந்தாலும் கூட இரவானால் ஆய்ந்து, ஓய்ந்து போய் அக்கடாவெனத் தூங்கவே முடிவதில்லை. நடு இரவைத் தாண்டியும் தூக்கம் வராமல் பாயைப் பிராண்டிக் கொண்டும், கட்டில், மெத்தை எனில் மெத்தையை நொந்து கொண்டும், ஒழுங்காகத் தூங்க முடியாமல் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டே இருப்பார்கள்.

இதனால் பிரச்னை அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் தான். இவர்கள் தூக்கமின்றி புரண்டு, புரண்டு படுப்பதால் அருகில் இருப்பவர்களுக்கும் அசெளகர்யமாகி அவர்களது அருமையான தூக்கமும் இவர்களால் கெட்டுக் குட்டிச்சுவராகி விடும். சிலருக்குத் தூக்கம் கெட்டால் அவ்வளவு தான் மகா கோபம் வரும். அவர்கள் இதுநாள் வரை பிறத்தியாருக்குத் தெரிந்து விடக்கூடாது என மறைத்து வைத்திருந்த மகா ருத்ரமூர்த்தி, மகா காளி விஸ்வரூப தரிசனமெல்லாம் அப்போது தான் பிரத்யட்சமாக வெடித்துக் கொண்டு வெளிவரும்.

அப்புறமென்ன நட்ட நடு ராத்திரியில் தூங்கமுடியாததற்காகவும், தூக்கத்தைக் கெடுத்ததற்காகவும் என ஒருவர் மாற்றி, ஒருவர் வாக்குவாதத்தில் இறங்கி மல்லுக்கட்டி மொத்தக் குடும்பத்தினரின் தூக்கத்தையும் கெடுத்து விட்டு குடும்ப குருஷேத்திர யுத்தத்தின் மத்தியில் விடிய, விடிய சம்பூர்ண ராமாயணம் படிக்க வேண்டியது தான்.

சரி, இத்தனை பிரச்னைகளுக்கும் என்ன தான் தீர்வு?

நாளை மற்றொரு நாளே கதையாக, தினமும் இந்தத் தொல்லை தொடர்ந்தால் முதலில் உடல்நலம் கெடுவதோடு, பிறகு குடும்பத்தில் அனைவரது மனநலமும் கெடும். அப்புறம் இரவு நேரம் வந்தாலே, ஏனடா வருகிறது?! என்று குடும்பமே புலம்பி நொந்து கொள்ளத் தோன்றும். 

இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் என்னவெல்லாம் செய்யலாம்? 

சிலர் இரவில் தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பாக ஒரு டம்ளர் பால் அருந்தி விட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள், அருமையாகத் தூக்கம் வரும் என்கிறார்கள்.

சிலரோ, தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான வெந்நீரில் கால்களை 15 நிமிடங்கள் மூழ்க வைத்து துடைத்து விட்டுப் பிறகு தூங்கச் சென்றால் அது நிம்மதியான தூக்கத்துக்கு உத்தரவாதமளிக்கும் என்கிறார்கள்.

சிலரோ இரவில் 8 மணிக்கு முன்னதாக மிகக் குறைவாக உண்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்கிறார்கள்.

சிலரோ தூங்கச் செல்லும் முன் 20 நிமிடங்கள் மிதமான நடைபயிற்சியில் ஈடுபட்டு விட்டு, பிறகு வெது வெதுப்பான வெந்நீரில் குளித்து விட்டு தூங்கச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டீர்கள் எனில் நன்றாகத் தூக்கம் வரும் என்கிறார்கள்.

அய்யோடா!... அதெல்லாம் செய்து பார்த்தாகி விட்டது. எதுவும் வொர்க் அவுட் ஆகவே இல்லை. இப்போதும் எங்களால் இரவானால் நிம்மதியாக முழு உறக்கம் கொள்ளவே முடிவதில்லை என்று தீனமாக அலறுபவர்களுக்கு தூக்க மாத்திரை ஒன்று தான் கதியா?

அடடா... அது ஆபத்தானது, வேண்டவே வேண்டாம்... தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனையோ, பரிந்துரைகளோ இன்றி அதையெல்லாம் முயற்சித்துப் பார்த்து விடாதீர்கள். அப்புறம் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டு பிறகு தூக்க மாத்திரை இன்றி தூங்குவதே முடியாது என்று ஆகி விடும். இது விபரீதமான முடிவு.

அதற்குப் பதிலாக, தூங்குவதற்கு என படுக்கைக்குச் சென்ற பின், கால், கைகளை நிச்சலனமாக நீட்டி விரித்துப் படுத்துக் கொண்டு கண்களை மிருதுவாக மூடி.. புருவ மத்தியில் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு அதையே எண்ணிக் கொண்டு அப்படியே ஆழ்ந்த தூக்கத்தில் அமிழப் பாருங்கள். முதலில் சில நொடிகள் இது கஷ்டமாக இருந்தாலும் நேரமாக, ஆக உங்களையே அறியாமல் நீங்கள் தூங்கி விடக்கூடும். என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இரவில் நீடித்த உறக்கம் பெற இது ஒரு உபாயம்.

இது வொர்க் அவுட் ஆகவில்லை என்றால், சில மருத்துவர்கள், ஒன்று முதல் உங்களால் எத்தனை வரை முடியுமோ அத்தனை எண்களை எண்ணிக் கொண்டே உறங்குங்கள் என்கிறார்கள்.

இந்த முறையும் ஓரளவுக்கு தூங்க உதவலாம். ஆனால், நடுவில் தூக்கம் கலைந்து விட்டால் மீண்டும் ஒன்றிலிருந்து தொடங்கி எண்ணிக் கொண்டே தூங்க முயற்சிப்பது மிகுந்த ஆயாசம் தரும் செயல்!

அடச்சே! பிறகு எப்படித்தான் நிம்மதியான உறக்கத்தைப் பெறுவதாம் என்று சலித்துக் கொள்கிறீர்களா?

அதற்கும் ஒரு உபாயம் இருக்கத்தான் செய்கிறதாம்...

அதை 4 - 7- 8 மெத்தட் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலே குறிப்பிட்ட அத்தனை முறைகளையும் விட இது எளிமையானது.

ஒன்றுமில்லை, தூங்குவதற்காக படுக்கைக்குச் சென்று விட்டீர்களா? அவ்வளவு தான் யோகாவில் சவாசனம் என்றொரு ஆசன முறை உண்டு. அதற்குப் படுப்பதைப் போல மொத்த உடலையும் படுக்கையில் நேராகக் கிடத்திக் கொண்டு முதலில் நாசியால் ஆழமாகத் தொடர்ந்து 4 வினாடிகளுக்கு மூச்சை உள்ளே இழுக்க மட்டும் செய்யுங்கள். அடுத்த 7 வினாடிகளுக்கு உள்ளிழுத்துக் கொண்ட மூச்சுக் காற்றை வெளியேற்றாமல் அப்படியே நுரையீரலுக்குள் வைத்திருந்து 7 வினாடிகள் முடிந்த கணத்தில் தொடர்ந்து 8 வினாடிகளுக்கு மிக நிதானமாக உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வாய் வழியாக வெளியிடுங்கள். இந்த முறையை ஓரிரு முறை தொடர்ந்து செய்து பழகுங்கள். (வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியேற்றுகையில் உங்களது படுக்கையறை தூசற்றுத் தூய்மையாகப் பராமரிக்கப் படுகிறதா? என்பதை சோதித்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமை, அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த முறை பலனளிக்காது) இந்த முறையில் தூங்க முயற்சி செய்தால் நிச்சயம் அதனால் பலனுண்டு. ஏனெனில், மேலே சொன்ன பிற முயற்சிகளைக் காட்டிலும் இதில் என்ன அனுகூலம் என்றால்? இம்முறையில் மனித நரம்பு மண்டலம் அமைதிப் படுத்தப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது மனிதனுக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் பிரதானமானது ஸ்ட்ரெஸ் என்று சொல்லக் கூடிய உளவியல் சிக்கல்களே! ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும் போது ஒரு மனிதனால் என்ன தான் முயற்சித்தாலும் அந்த நினைவுகளில் இருந்து விடுபட்டு உடனடியாகத் தூங்க முடிவதில்லை. பகலில் அல்லது முந்தைய நாட்களில் நடந்த விஷயங்களையே நினைத்துக் கொண்டோ அல்லது மனதில் தேவையற்ற பிரச்னைகளைப் போட்டு குழப்பிக் கொண்டோ இருப்பார்கள். இதற்குக் காரணம் ஸ்ட்ரெஸ்ஸின் போது மனித உடலில் அதிகப்படியாகச் சுரக்கக் கூடிய அட்ரீனலின் ஹார்மோன். நரம்பு மண்டலங்களைத் துரிதப்படுத்தி தேவையற்ற பதட்டமான மனநிலையை உண்டு பண்ணும். இதனால் தான் இரவில் களைப்பான நிலையிலும் கூட தூக்கம் வராமல் அவஸ்தைப்பட நேரிடுகிறது.

ஆகவே இந்த விஷயத்தில் முதலில் அமைதிப்படுத்தப் பட வேண்டியது அட்ரீனலின் சுரப்பியைத் தான். அந்த வேலையை இந்த 4 - 7 8 மெத்தட் மிக அருமையாகச் செய்யும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்களும், மருத்துவர்களும்.

காசா, பணமா?! மேற்கண்ட அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்து தோல்வி கண்டவர்கள் இதையும் ஒருமுறை முயற்சித்துத் தான் பார்க்கலாமே. நன்றாகத் தூங்க முடிந்தால் பரம நிம்மதி தானே!

முயற்சித்துப் பாருங்கள். தூக்கமாத்திரைகள் எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் இம்மாதிரியான எத்தனை முயற்சிகளை மேற்கொள்வதென்றாலும் அதில் எந்த அபத்தமும் இல்லை.

Article reference & concept Courtesy: PROVIDR.COM& General knowledge

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com