ஸ்பெஷல்

வாடகைத்தாய்... ஒப்பந்தத்தில் இருக்கையில் சொந்தக்குழந்தை பிறந்தால், அந்தத் தாய் தன் குழந்தைக்கான உரிமையை மீட்பது எப்படி?!

கார்த்திகா வாசுதேவன்

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெஸிக்கா ஆலன் எனும் பெண்மணி, உள்ளூரிலிருந்த வாடகைத்தாய் ஏஜன்ஸி ஒன்றின் மூலமாக சீனாவைச் சார்ந்த லியுஸ் தம்பதிகளுக்கு வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தர ஒப்புக் கொண்டு அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதற்காக லியுஸ் தம்பதிகள் ஜெஸிக்காவுக்கு 30,000 அமெரிக்க டாலர்களை கட்டணமாக நிர்ணயித்து ஜெஸிக்காவுக்கு அளித்தனர். கலிஃபோர்னியாவில் பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட சட்ட ரீதியான அனுமதி உண்டு. எனவே ஜெஸிக்கா தனக்கு முன்பே இரு ஆண்குழந்தைகள் இருந்த நிலையில் ஆரோக்யமான நிலையில் இருந்த தந்து கருப்பையை சீனத்தம்பதிகளுக்கு வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுத்தர ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனக்குக் கிடைத்த தொகையில் தன்னுடைய கணவர் வார்டெல் ஜாஸ்பர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசிப்பதற்கான சொந்த வீடு ஒன்றை வாங்கிக் கொள்வதும், தனது இரு மகன்களை உடனிருந்து வளர்க்கும் பொருட்டு வேலையை விட்டு விடுவதும் ஜெஸிக்காவின் விருப்பமாக இருந்தது. அதன்படி சீனத்தம்பதிகள் அளித்த கட்டணத்தில் அவர் தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு வாடகைத்தாயாக அவர்களது கருவை ஏற்று குழந்தை பெற்றுத்தர தயாரானார்.

ஒப்பந்தப்படி கருவை ஜெஸிக்காவின் கருப்பையில் செலுத்திய பின் ஆறாவது வாரத்தில் எடுக்கப் பட்ட ஸ்கேன் பரிசோதனையில் ஜெஸிக்காவின் கருவில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் வாயிலாக இதை உறுதியாக அறிந்து கொண்ட சீனத்தம்பதிகளுக்கு மேலும் சந்தோசமாகி விட்டது. இரட்டைக் குழந்தைகள் இரட்டைச் சந்தோசமளிக்க அவர்கள் ஜெஸிக்காவுக்கு அளித்த கட்டணத்திற்கு மேலாக மேலும் 5000 அமெரிக்க டாலர்களைக் கூடுதலாக அனுப்பி வைத்து விட்டு பேராவலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கினர். 38 வது வாரத்தில் ஜெஸிக்காவுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகள் ஒப்பந்தப்படி உடனடியாக அவற்றின் பயலாஜிக்கல் பெற்ரோரான சீனத்தம்பதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதனால் தான் பெற்றெடுத்த அந்த இரு குழந்தைகளையும் பார்க்கும் வாய்ப்பு ஜெஸிக்காவுக்கு கிடைக்கவில்லை. அவருக்குத் தெரிந்த ஒரே தகவல் பிறந்த இரு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என்ற தகவல் மட்டுமே!

ஆனால், குழந்தைகளை தங்களுடன் எடுத்துச் சென்று விட்ட திருமதி. லுயிஸ் ஒரு மாதம் கடந்த நிலையில் அந்தக் குழந்தைகளின் புகைப்படத்தை ஜெஸிக்காவுக்கு அனுப்பி இருந்தார். ஏனெனில், இரு குழந்தைகளும் வெவ்வேறு சாயல்களுடனிருந்தன. மேக்ஸ், மைக் என்று பெயரிடப்பட்டு வளர்ந்து வந்த அந்தக் குழந்தைகளில் மைக்கின் சாயல் சீனத்தம்பதிகளைப் போலிருந்தாலும் மேக்ஸின் சாயல் அவர்களைப் போல இல்லை. அது அப்படியே ஜெஸிக்காவைப் போல இருந்தது. அதனால் தான் ‘இரு குழந்தைகளும் வெவ்வேறு சாயலில் இருப்பது ஏன்? உனக்கு அதன் பொருள் விளங்குகிறதா?’ என்ற குறிப்புடன் திருமதி. லியுஸ், ஜெஸிக்காவுக்கு குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பி இருந்தார்.

குழப்பத்தை தீர்த்துக் கொள்ள பிறந்த இரு குழந்தைகளுக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப் பட்டது. சோதனையின் முடிவில் மைக்கின் டி என் ஏ மூலக்கூறுகள் லியூஸுடன் ஒத்துப் போயின. மேக்ஸ் முழுக்க முழுக்க ஜெஸிக்காவின் உதிரத்தில் பிறந்த அவரது சொந்தக் குழந்தை என்று நிரூபணமானது. மேக்ஸ் தனது சொந்தக் குழந்தை என மருத்துவரீதியாக நிரூபணம் ஆனதும் ஜெஸிக்கா, குழந்தையைக் கோரி நீதிமன்றம் சென்றார். கலிஃபோர்னியாவில் வாடகைத்தாயில் குழந்தை பெற்றுத்தரும் முறைக்கு சட்ட ஒப்புதல் இருந்தாலும், இம்மாதிரி ஒப்பந்த காலத்தில் வாடகைக் குழந்தையோடு சேர்ந்து சொந்தக் குழந்தையும் பிறந்து விட்டால் என்ன விதமான சட்ட ரீதியான அணுகுமுறைகளுக்கு உட்பட வேண்டும் என்பது குறித்து எந்த விளக்கங்களும் முன்னுதாரணங்களும் வாடகைத்தாய் ஒப்பந்த சட்டத்தில் இல்லை. ஆனால், பிறந்த குழந்தைகளில் ஒன்று தனது சொந்தக் குழந்தை என்று தெரிந்த பிறகு எந்தத் தாயால் தான் அந்தக் குழந்தையை விட்டுத்தர முடியும்? சீனத்தம்பதிகளிடமிருந்து தனது சொந்தக் குழந்தையை மீட்பதற்கான சட்டப் போராட்டத்தில் இறங்கினார் ஜெஸிக்கா.

இதற்கிடையில், ஜெஸிக்காவின் கருப்பையில் கருமுட்டைகளும், விந்தணுக்களும் செலுத்தப்பட்டது தொடங்கி நடத்தப்பட்ட அத்தனை மருத்துவ சோதனைகளும் மீண்டும் மருத்துவர்களால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வாடகைத்தாயின் கருவில் சொந்தக் குழந்தையும் சேர்ந்து பிறந்து விட்ட அதிசயத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இத்தனைக்கும் நடுவில் ஜெஸிக்காவும் அவரது வாழ்க்கைத்துணைவரான வார்டெலும் அளித்த வாக்குமூலத்தில் வாடகைத்தாய் ஒப்பந்த காலத்தில் கணவருடனான தாம்பத்ய உறவின் போது ஆணுறை அணிந்து கொண்டு தான் உறவு கொண்டதாக இருவரும் தெரிவித்திருந்தார்கள். பிறகெப்படி சொந்தக் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியானது இவ்வழக்கில். 

சட்டப்போராட்டம் மட்டுமல்ல மிகச் சிக்கலான உளவியல் போராட்டத்தின் பின் தற்போது இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. கடைசியில் லுயுஸ் தம்பதிகள் மேக்ஸை தத்தெடுப்பு முறையில் ஜெஸிக்காவிடம் ஒப்படைக்க சட்டரீதியாக ஒப்புக் கொண்டனர். சும்மா இல்லை... வாடகைத்தாய் ஒப்பந்தத்தில் நேர்ந்து விட்ட இந்த குழப்படிக்கு 22,000 அமெரிக்கா டாலர்களை இழப்பீட்டுத் தொகையாகப் பெற்றுக் கொண்டு, தத்தெடுப்பு முறையில் மேக்ஸை ஜெஸிக்காவுக்கு விட்டுத்தர லுயிஸ் ஒப்புக் கொண்டார். அதன் படி தனது சொந்தக் குழந்தையை கடைக்குப் போய் பொருட்களை விலைக்கு வாங்குவதைப் போல சீனத்தம்பதிகளிடம் இருந்து பெருந்தொகை கொடுத்து மீட்டுக் கொண்டுள்ளார் ஜெஸிக்கா.

உலகம் முழுவதிலும் பல நாடுகளில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வழக்கம் பெருகி வரும் இந்நாட்களில் இப்படியொரு வித்யாசமான வழக்கு சர்வ தேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு மட்டுமல்லாமல் வாடகைத்தாய் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மேம்படுத்த வேண்டியதின் அவசியத்தையும் உணர்த்தும் விதமாக பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Article courtesy: Smita agrawal

Thanks to mycityforkids.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT