ஐயோ இதென்னா பேய் மாதிரி இருக்கான்னு நினைச்சீங்கன்னா... அப்புறம் நிச்சயம் வருத்தப்படுவீங்க!

தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் தன்னம்பிக்கைப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழும் லிஸ்ஸி, இந்த உலகம் தன்னை அடைத்து வைக்க நினைக்க சிறையிலிருந்து தனது தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே
ஐயோ இதென்னா பேய் மாதிரி இருக்கான்னு நினைச்சீங்கன்னா... அப்புறம் நிச்சயம் வருத்தப்படுவீங்க!

லிஸ்ஸி வெலாக்யூஸ்...

இந்தப் பெண்ணை நீங்கள் இதற்கு முன்பு இணையத்தில் எங்கேனும் பார்த்திருக்கலாம்.

பார்த்ததும் முதல் பார்வையில் உங்களுக்குத் தோன்றிய உணர்வை ’ ஐயோ இதென்ன பேய் மாதிரி இருக்கா... இந்தப்பொண்ணு’ என்று உடனடி கமெண்ட்டாக நீங்கள் வெளிப்படுத்தி இருப்பீர்களானால் பின்னர்  அவரைப் பற்றி முழுதாகத் தெரிய வருகையில் நிச்சயம் குற்ற உணர்வில் தவிக்க நேரிடலாம். லிஸ்ஸியின் கதை அத்தகையது.

லிஸ்ஸி பிறந்தது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில். ரீட்டா மற்றும் க்வாடாலூப் வெலாக்யூஸ் தம்பதியின் மூத்த மகள் லிஸ்ஸி. லிஸ்ஸி தவிர அவர்களுக்கு மேலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவரான லிஸ்ஸி... ஒரு குறைப்பிரசவக் குழந்தை. மருத்துவர் விதித்த கெடுவுக்கு 4 வாரங்களுக்கு முன்பாகவே பிறந்து விட்டார் என்கிறார் அவரது தாயார் ரீட்டா. பிறக்கும் போது வெறும் 1.219 கிலோகிராம் தான் லிஸ்ஸியின் மொத்த எடை. லிஸ்ஸிக்குப் பிறக்கும் போதே ‘மார்ஃபனாய்ட் - புரோகராய்ட் - லிப்போடிஸ்ட்ரோபி சிண்ட்ரோம்’ எனும் குறைபாடு இருந்திருக்கிறது. இந்தக்குறைபாட்டின் காரணமாக லிஸ்ஸியின் உடல் கொழுப்பை சேமிக்கவும், உடல் எடையைக் கூட்டவும் மறுத்தது. இதனால் லிஸ்ஸிக்கு பிற குழந்தைகளைப் போன்ற இயல்பான தோற்றம் கிடைக்காமல் அவரது வயதொத்த பிற குழந்தைகள் இவரைக்கண்டு பயந்து ஒதுக்கும் நிலைக்கு லிஸ்ஸி ஆளாக நேர்ந்தது.

தன் வயதொத்த பிற குழந்தைகள் மட்டுமல்ல அக்கம், பக்கத்தார், நெருங்கிய உறவினர்கள் எனப் பலர் வெறுத்து ஒதுக்கிய போதும் லிஸ்ஸி மனம் தளரவில்லை. 2012 ஆம் ஆண்டு இறுதி வரையில் டெக்ஸாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்யூனிகேஷன் ஸ்டடிஸ் எனும் பாடப்பிரிவை எடுத்து பயின்று பட்டம் பெற்றார். பிறப்பால் ரோமன் கத்தோலிக்க வகுப்பைச் சார்ந்தவரான லிஸ்ஸி, தனது நிலை கண்டு பிறர் தன்னை ஒதுக்கும் போது மனம் துவண்டாலும் ‘இது எனக்கென கடவுள் உருவாக்கியதொரு பிரத்யேகப் பாறையாக இருக்கலாம். அங்கே இருந்து கொண்டு தனிமையில் எனது கடவுளை நான் பிரார்த்தித்து அவரை அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன்’ என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொள்வதும் வழக்கம்.

மருத்துவ மொழியில் கூற வேண்டுமென்றால்... லிஸ்ஸிக்கு இருந்த குறைபாடு அவருக்கு முன்பு வேறு யாருக்குமே  இருந்ததில்லை எனலாம். நோய்க்கான மருந்தென்பது நோய் இருந்தால் தானே கண்டுபிடிக்கப் படக்கூடும். லிஸ்ஸியைப் பொருத்தவரை அவருக்கிருந்த குறைபாடு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடையே மிக, மிக வித்யாசமான ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு முதலில் லிஸ்ஸியின் உடல்நிலையில் இந்த குறைபாட்டின் காரணமாக நேர்ந்த மாறுபாடுகளை எல்லாம் அவதானிக்க வேண்டியிருந்தது. முதலில் நோய் என்னவென அறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அதற்கென ஒரு சிகிச்சையை கண்டறிய முடியும். ஆனால், லிஸ்சி விஷயத்தில் அது கடினமான ஒன்றாகி விட்டது. மருத்துவர்கள் ஆரம்பத்தில் லிஸ்ஸியிடத்தில் கண்ட மிக மிக ஆறுதலான விஷயம் என்னவென்றால் அது அவரது அயராத நம்பிக்கை மட்டுமே! லிஸ்ஸிக்கு மட்டுமல்ல அவரது அம்மா ரீட்டாவுக்கும் அந்த நம்பிக்கை மிக அதிகமாகவே இருந்தது. 

லிஸ்ஸியின் அம்மா தன் மகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், வாஞ்சையும் தான் லிஸ்சியை இன்று உலகமே நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு திடமான பெண்ணாக உருவாக்கியிருக்கிறது. தோற்றத்தைப் பொருத்தவரை லிஸ்சிக்கு இந்த உலகம் வரையறுத்த அழகு கிட்டாமல் போயிருக்கலாம். ஆனால், லிஸ்ஸி, இந்த உலகை எதிர்கொள்ள தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நேர் கொண்ட பார்வை மற்றும் திமிர்ந்த ஞானச் செறுக்கு உள்ளிட்ட இரு அற்புத குணங்களால் உலக அழகிகளைக் காட்டிலும் பேரழகியாகத் தெரிகிறார். அழகாய்ப் பிறக்காமல் போனது லிஸ்ஸியின் குற்றமல்ல. அதற்காக தான் அசிங்கமாக இருக்கிறோம் என்று கருதிக் கொண்டு வீட்டில் மூலையில் முடங்கவும் லிஸ்ஸி தயாராக இல்லை. பரந்து விரிந்திருக்கும் உலகில் தன்னை உணர்ந்து நட்பாக்கிக் கொள்ள பலர் இருக்கலாம் என்ற நம்பிக்கையே லிஸ்ஸியை திடம் கொள்ளச் செய்தது. அந்த திடத்தை லிஸ்ஸிக்குள் ஊட்டி வளர்த்தவர் அவரது அம்மா ரீட்டா.

இன்று லிஸ்ஸி உலகின் தலைசிறந்த (மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்களில்) ஊக்கமூட்டும் பேச்சாளர்களில் ஒருவர். அவரது முதல் ஊக்க உரை நிகழ்ந்த இடம் ஒரு பார்பிஷன் மாடலிங் ஆக்டிங் ஏஜென்ஸி. 2014 ஆம் ஆண்டு லிஸ்ஸியின் முதல் ஊக்க உரையைக் கேட்டவர்கள் இந்தப் பெண்ணுக்குள் இத்தனை திறமையா! என அசந்து நின்றார்கள். சிறுமியாக இருக்கையில் தன் தோற்றத்தின் காரணமாக தன்னை வெறுத்து ஒதுக்கியவர்களை எதிர்கொள்ளத் திணறிய போது தனக்குள் ஊற்றெடுத்த அந்த நம்பிக்கைக்கு அப்போது நன்றி சொல்லிக் கொண்டார் லிஸ்ஸி. தன் மீது பரிதாபப்படக்கூட ஆளின்றி உலகின் அசிங்கமான பிறவியாகத் தன்னை தன்னைச் சுற்றியிருந்தவர்கள் ஒதுக்கிய போது தனக்குள் அவர் கேட்டுக் கொண்ட ‘ஏன்? தன்னை மட்டும் இப்படி ஒதுக்க தான் காரணமில்லையே?! எனும் தன்னிரக்கமான கேள்விக்கான விடையத் தேடி புறப்பட்ட லிஸ்ஸி. இன்று அதற்கான பதிலைப் பெற்று விட்டதோடு தன்னை ஒதுக்கியவர்களையும் தன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் ஒரு கணம் தலை குனிந்து குற்ற உணர்ச்சியில் உறையவும் செய்து விட்டார். அதுவே லிஸ்ஸியின் வெற்றி!

லிஸ்ஸிக்கு இடது கண்ணில் பார்வைத்திறன் இல்லை. வலது கண்ணின் பார்வைத்திறனும் அவருக்கு 4 வயதாயிருக்கையில் பாதியாகக் குறைந்து போனது. தாயின் கருவறையில் இருக்கையில் வரக்கூடிய பிரசவகாலக் குறைபாடுகளில் (neonatal progeroid syndrome) ஒன்றாக லிஸ்ஸியின் குறைபாடு அடையாளம் காணப்பட்டாலும் அதற்கென பிரத்யேக சிகிச்சைமுறைகளென எதுவும் இதுவரை கண்டறிய முடியாமலிருப்பினும் அந்தக் காரணங்கள் எதுவும் லிஸ்ஸியின் பற்களையோ, உடலுக்குள் இருக்கும் எலும்புகளின் வலிமையையோ பாதிக்கவில்லை. உடலளவில் லிஸ்ஸி வலிமையானவராகவே இருக்கிறார்.

2006 ஆம் ஆண்டில் ‘உலகின் அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்’ எனும் தலைப்பில் லிஸ்ஸி யூ டியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டார். வெளியிட்ட கையோடு, தோற்றத்தைக் காரணமாக வைத்துப் பலரும் இந்த சமூகத்தால் ஒதுக்கப்படும் நிலையை எதிர்த்து பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையைப் புத்தகமாக்கி அதை ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் வெளியிட்டார்.

அதையடுத்து இரண்டாண்டுகளுக்குப் பின்  ‘அழகாக இருங்கள், நீங்கள் நீங்களாகவே இருங்கள்’ எனும் தலைப்பின் கீழ் இரு புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அந்த இரு புத்தங்கள் வாயிலாக லிஸ்ஸி தனது கதையையே உலகறியச் செய்தார் என்பதோடு, தன்னைப் போல ஒதுக்கப்பட்டவர்களாக உணரக்கூடியவர்களின் பிரச்னைகளுக்கு ஆலோசனைகளையும் அப்புத்தங்கள் வாயிலாக லிஸ்ஸி வழங்கினார். அந்தப் புத்தகங்கள் லிஸ்ஸியின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதோடு, எது நிஜமாகவே நம்மை அழகானவர்களாக உணரச் செய்யும், கடவுள் நமக்களித்த பிரத்யேக அன்பளிப்புகளை நாம் எவ்விதம் அடையாளம் கண்டு கொண்டு அவற்றின் மூலமாக நமது வாழ்வின் உன்னதங்களை அடையாளம் காணக்கூடும் என்பதற்கான விடைகளையும் சொல்லக்கூடியதாகவும் அவை அமைந்தன.

தனது புத்தகம் எழுதும் பணியோடு சேர்ந்து 2014 ஆம் ஆண்டு வாக்கில் லிஸ்ஸி, TEDxAustinWomen Talk எனும் பெயரிலான யூ டியூப் வீடியோவொன்றில் ‘உங்களை நீங்கள் எப்படி வரையறுத்துக் கொள்கிறீர்கள்?’ எனும் தலைப்பில் ஒரு ஊக்க உரையையும் நிகழ்த்தினார். இந்த வீடியோவானது சுமார் 54 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிக அருமையான வரவேற்பைப் பெற்றது.

அது வெறும் தொடக்கம் மட்டுமே... தொடரும் வருடங்களிலும் தனது எழுத்துப் பணியை லிஸ்ஸி விடவில்லை. 2015 ஆம் ஆண்டில் ‘A Brave heart' எனும் ஆவணப் படத்தில் தோன்றி நடித்தார். 

2017 ஆம் ஆண்டில் ‘அன்பாக இருப்பதில் தைரியம் கொள்ளுங்கள்’ எனும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார்.

தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் தன்னம்பிக்கைப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழும் லிஸ்ஸி, இந்த உலகம் தன்னை அடைத்து வைக்க நினைக்க சிறையிலிருந்து தனது தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே பற்றுக்கோலாகக் கொண்டு தன்னைத் தானே தப்ப வைத்துக் கொண்ட மிகச்சிறந்த தன்னம்பிகைப் போராளியாக அடையாளம் காணப்படுகிறார்.

உலகம் எப்போதும் உயிர்ப்புடனும், இயக்கத்துடனும் மட்டுமே தொடர்புடையதே தவிர, தன்னிரக்கத்தில் உழன்று குன்றிப் போவதற்கான இடமல்ல இது என லிஸ்ஸி தான் உணர்ந்ததோடு தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் இதன் மூலமாக உணரச் செய்திருக்கிறார்.

இப்போது என்ன சொல்கிறீர்கள்? லிஸ்சியைப் பற்றி மட்டுமல்ல இப்படித் தோற்றம் கொண்ட எவரையுமே பார்த்த மாத்திரத்தில் கருத்துச் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் எதையாவது சொல்லி விட்டு பிறகு அவர்களது போராட்டக் கதையை அறிந்த பின் குற்ற உணர்வு கொள்வதே நமக்கு வேலையாகிப் போயாச்சு! என்பீர்களோ?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com