ஸ்பெஷல்

பள்ளமான வீட்டை ஜாக்கி கொண்டு உயர்த்தும் புது தொழில்நுட்பம் மதுரையில் அறிமுகம்!

கார்த்திகா வாசுதேவன்

மதுரையில்  2600 சதுர அடி வீடு ஒன்று சாலை உயர்த்தப்பட்டதன் காரணமாக 1 அடிக்கு புதைந்து பள்ளமானது. இந்த வீட்டை இடிக்காமலும், பழமை மாறாமலும் அப்படியே 6 அடிக்கு தொழில்நுட்ப உதவியின் மூலம் உயர்த்தும் வேலை நடைபெற்று வருகிறது. மதுரையில் இதுவரை இப்படியொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடுகள் உயர்த்தப்பட்டதில்லை என்பதால் மதுரை மக்களை இந்தச் செயல் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டித்தேவர் 1993 ஆம் ஆண்டு மதுரை கெல்லீஸ் நகரில் 2600 சதுர அடி கொண்ட இந்த வீட்டை மேல்தளத்துடன் கட்டியுள்ளார். நாளடைவில் அடிக்கடி சாலைகள் புனரமைக்கப்பட்டதில் சாலையிலிருந்து வீடு 1 அடிக்குப் பள்ளமானது. மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து சோதனைக்குள்ளாக்கும் அளவுக்கு வீடு பள்ளமானது. இதனையடுத்து ஆண்டித்தேவரின் பேரன் வீட்டை பழமை மாறாமல் புதுப்பிக்க எண்ணி ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழில்நுட்பக் குழுவினரை நாடினார். அவர்கள் வீட்டை அப்படியே 6 அடி உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து வீட்டின் உரிமையாளரான அம்ரேஷ் கூறுகையில்;  ‘முதலில் வீட்டை இடித்துக் கட்டும் எண்ணமிருந்ததாகவும், ஆனால், வீட்டை ஆராய்ந்த பொறியாளர்கள் வீட்டின் கட்டுமானம் பலமாக இருப்பதால் இன்னும் 25 வருடங்களுக்கு இந்த வீடு திடமாக இருக்கும் என்று கூறியதோடு வீட்டுக்கு எவ்வித சேதாரமுமின்றி அப்படியே உயர்த்தும் தொழில்நுட்பம் இருக்கிறது. வட இந்தியாவில் பலர் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டை உயர்த்தி இருக்கிறார்கள். நீங்களும் அந்த முறையையே பின்பற்றலாம் என்று கூறவே... நான் அதற்கான வேலையில் இருக்கிறேன். சென்னையில் இரண்டு மூன்று லிஃப்டிங் கட்டுமான நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் ஃபேக்டரிகளை லிஃப்ட் செய்யும் முறைகளை நேரில் கண்டபின்னர் தான் லிஃப்டிங் தொழில்நுட்பத்துக்கு ஒப்புக் கொண்டதால் தற்போது வீட்டை ஜாக்கிகள் வைத்து உயர்த்தும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

லிஃப்டிங் தொழில்நுட்பத்தில் வீட்டை உயர்த்தும் பாணியைப் பரிந்துரைத்த பொறியாளர் அன்பில் தர்மலிங்கம் பேசுகையில், ’முதலில் வீட்டை புதுப்பிப்பது தான் நோக்கமாக இருந்தது, ஆனால், நாங்கள் வந்து பார்க்கையில் வீடு ஸ்ட்ராங்காக இருந்தது, தரைத்தளத்தில் 1 அடி பள்ளமானது ஒன்று தான் குறை என்பதால் அதை மட்டுமே லிஃப்டிங் தொழில்நுட்பம் கொண்டு உயர்த்தி விட்டால் போதுமே என்று தோன்றியது. இதற்கான செலவும் நியாயமானது தான் என்பதால் நாங்கள் அதைப் பரிந்துரைத்தோம். முதலில் வீட்டு உரிமையாளர்களுக்கு இதில் நம்பிக்கையில்லை. ஆனால், நாங்கள் அவர்களிடம் வட இந்தியர்கள் இந்த தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தி வருவதைக் கூறி அவர்களுக்கு தெளிவாக விளக்கமளித்து ஒப்புக் கொள்ள வைத்து வீட்டை தரையில் இருந்து உயர்த்தத் தொடங்கி இப்போது 4 அடி உயர்த்தி விட்டோம். கூடிய விரைவில் வேலை வெற்றிகரமாக முடிந்து விடும் என்றார்.

வீட்டை தரையிலிருந்து உயர்த்தும் வேலையில் 37 பணியாளர்கள் மற்றும் 200 ஜாக்கிகளின் உதவியோடு ஒவ்வொரு பக்கவாட்டிலும் இருந்து ஒவ்வொரு அடியாக உயர்த்தி வருகின்றனர். கீழே பள்ளமாக இருக்கும் பகுதியில் செங்கல் மற்றும் சிமெண்ட்டைக் கொண்டு கட்டுமானம் எழுப்பப் பட்டு வருகிறது. மதுரையில் முதல்முறையாக இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையில் பல வீடுகள் பள்ளத்தில் இருப்பதால் இம்மாதிரியான புது தொழில்நுட்பத்தின் மூலமாக அந்த வீடுகளை எல்லாம் மீட்டெடுக்கலாம் என்பது நகர மக்களுக்கு ஆறுதலான விஷயமாக உள்ளதாகப் வேடிக்கை பார்த்த பொதுமக்களில் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஒருமாதத்துக்குள் வீட்டை 6 அடிக்கு உயர்த்தி விட முடியும் என்று கூறும் கட்டுமானப் பொறியாளர்கள், இதனால் வீட்டுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வராது என உத்தரவாதமளித்திருக்கின்றனர்.

நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT