கார்பைடு ரசாயன ஆபத்தில்லாத சரியான மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? 

மாம்பழங்களின் மேல்தோல் சுருங்கி, அவற்றில் கரும்புள்ளிகள் சில தோன்றத் தொடங்கி விட்டதென்றால் அத்தகைய பழங்கள் உடனடியாக உண்பதற்குத் தோதானவை என்று அர்த்தம். அதற்கு மேல் நாட்களைக் கடத்தினால் அந்தப் பழங்கள்
கார்பைடு ரசாயன ஆபத்தில்லாத சரியான மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? 

மாம்பழங்கள் சுவையாக இருந்தால் வெறுப்பவர் யார்? எல்லோருக்குள்ளும் இருக்கிறது சுவையான மாம்பழ தாகம். ஆனால் இப்போது சந்தைக்கு வரும் மாம்பழங்கள் சுவையாக இருக்கின்றன. கார்பைட் கல் வைத்துப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் சுவையை எதிர்பார்ப்பது கூட மடத்தனம். கடந்த ஆண்டு கூட ஓரளவுக்கு மாம்பழ சீசனான மே, ஜூன் மாதங்களில் கடைகள் தோறும் ஓரளவுக்கு மாம்பழங்கள் குவிந்திருந்தன. அவை சுவையானவையா? சுவையற்றவையா? என்பது தாண்டி கண்களுக்குக் குளிர்ச்சியாக கடைகள் தோறும் ரகம், ரகமாக மாம்பழங்கள் அடுக்கப்பட்டிருந்த காட்சி கண்களுக்கு விருந்தாகின. ஆனால், பாருங்கள் இந்த ஆண்டு இதோ மே முதல் வாரம் கடந்து விட்டது. இப்போதும் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக குவியல், குவியலாக மாம்பழங்களைக் காண முடியவில்லை.

மாந்தோப்புகள் நிறைந்த தேனி மாவட்டத்தில் கூட மாம்பிஞ்சுகளைத் தான் காண முடிகிறதே தவிர கொத்துக் கொத்தாக கைக்கெட்டும் தூரத்தில் சிக்கும் மாம்பழங்களைக் காணவே முடியவில்லை. இது ஒரு மாம்பழப் ப்ரியையான என் போன்றோருக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அதற்காக மாஸா, ஸ்லைஸ் பழரச விளம்பரங்களில் மூளைச் சலவை செய்யப்படுவதற்கேற்ப அவற்றை வாங்கிக் குடித்தா என் மாம்பழ தாகத்தைப் போக்கிக் கொள்ள முடியும். எனக்கு இந்த சீசன் முடிவதற்குள் மாம்பழச்சாறு முழங்கையில் வழிய வழிய மாம்பழம் சாப்பிட்டே ஆக வேண்டும். ஒருவேளை இந்த ஆசை சீசன் முடிவதற்குள் ஈடேறலாம்.

சரி இப்போது கார்பைடு ஆபத்தில்லாத சரியான மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி எனப் பார்க்கலாம்...

  • மாம்பழங்களை மாம்பழ சீசனில் மட்டுமே வாங்கி உண்பதே சாலச் சிறந்தது. இன்றைய இணைய உலகில் எப்போது வேண்டுமானாலும் எதையும் ஆர்டர் செய்து பெற்று விடலாம் எனும் முயற்சியில் சீசன் இல்லாத போது கூட மாம்பழங்களும், பலாப்பழங்களும், தர்பூசணிகளும் கிடைக்கக் கூடும். ஆனால் அவற்றை சீசன் இல்லாத காலகட்டங்களில் அழுகாமல் பாதுகாக்க என்னென்ன விதமான ரசாயனங்களைத் தடவி, குளிப்பாட்டிப் பாதுகாக்கிறார்கள் என்பதெல்லாம் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டவை. எனவே அந்தந்த சீசனில் விளையும் பழங்களை மட்டுமே அவ்வப்போது வாங்கி உண்ணப் பழகுங்கள். அந்த வகையில் மாம்பழங்கள் வாங்கிச் சுவைக்க ஏற்ற பருவம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டம் மட்டுமே.
  • அனுபவஸ்தர்கள் எனில் மாம்பழங்களை அழுத்திப் பார்த்தால் அவற்றின் இளகுதன்மை, பழத்திலிருந்து கசியும் வாசனை, மற்றும் தோலின் சுருக்கங்களைக் கொண்டு பழங்கள் பழுத்தவையா அல்லது பழுத்து விட்டவை போலத் தோற்றமளிப்பவையா என எளிதில் கண்டறிந்து விடலாம்.
  • மாம்பழங்களின் மேல்தோல் சுருங்கி, அவற்றில் கரும்புள்ளிகள் சில தோன்றத் தொடங்கி விட்டதென்றால் அத்தகைய பழங்கள் உடனடியாக உண்பதற்குத் தோதானவை என்று அர்த்தம். அதற்கு மேல் நாட்களைக் கடத்தினால் அந்தப் பழங்கள் அழுகி விடக்கூடும்.
  • நீங்கள் வாங்கிய மாம்பழங்கள் பழுத்தவையா, அல்லது அரைவாசி பழுத்தவையாகவோ, ஏன் பழுக்காத காய்களாகவோ கூட இருக்கட்டும், அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்த உடனே சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டுப் பிறகு கழுவி சாப்பிடத் தொடங்குங்கள். ஏனெனில் தற்போது மாம்பழங்களிலும் கூட கவர்ச்சியாகத் தோன்றவும், விற்பனையை அதிகரிக்கவும் மெழுகு பூசப்படுவதாகக் கேள்வி. தண்ணீரில் ஊற வைத்தால் மாம்பழத் தோலில் படிந்துள்ள ரசாயனங்கள் கரைந்து விடும். 
  • மாம்பழம் வாங்குவதாக இருந்தால் காய்ப்பருவத்திலேயே வாங்கி வீட்டில் வைத்து பழுக்க வைத்துச் சாப்பிடுங்கள். மாம்பழங்களை பழுக்க வைக்க இயற்கையான முறையில் வைக்கோலில் புதைத்து வைப்பது, அரிசிக்குள் புதைத்து வைப்பது எனச் சில முறைகளை இல்லத்தரசிகள் தொன்று தொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். அந்த முறையே உகந்தது.
  • மாம்பழங்களின் மேல்தோல் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால் அது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

Image courtesy: moneycontrol.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com