ஸ்பெஷல்

மண்பானைத் தண்ணீரால் சளி பிடிக்குமென்று பயமா? அதை ஆரோக்யமானதாக மாற்ற சில டிப்ஸ்!

கஸ்தூரி ராஜேந்திரன்

கோடை கடுமையாகத் தன் வேலையைக் காட்டத் தொடங்கி வாரங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல், மே, ஜூன் மாத இறுதி வரையிலும் சமயங்களில் சீதோஷ்ண நிலை சதி செய்தால் செப்டம்பர் வரையிலும் கூட நமக்கு கோடை தான். அருங்கோடையில் கூட ஃப்ரிஜ்ஜில் நீரைக் குளிர வைத்துக் குடிப்பது பலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. கடும் சளித்தொல்லை, ஆஸ்துமா போன்ற அவஸ்தைகளுடன் ஜில்லென்று குடிநீர் அருந்தி தாகத்தை தணித்துக் கொள்ளக்கூட முடியாமல் பலர் சிரமப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஃப்ரிஜ்ஜில் தண்ணீர் வைத்துக் குடித்தால் உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்கள் மண்பானைத் தண்ணீரை முயற்சி செய்யலாம். மண்பானைத் தண்ணீர் கூடத்தான் சளி, ஆஸ்துமாக்காரர்களுக்கு எதிரி என்று சொல்வீர்களானால் அதற்கு சில மாற்று வழிகள் உண்டு. மண்பானைத் தண்ணீரே ஆரோக்யமானது தான் என்றாலும் அதன் குளிர்ச்சியால் சளி பிடிக்காமலிருக்க என்னென்ன மாற்று ஏற்பாடுகள் செய்து அதன் அபாயத்தைத் தவிர்க்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

மண்பானைத் தண்ணீரை ஆரோக்யத் தண்ணீராக மாற்றும் வழிமுறைகள்...

  • தண்ணீர்: முக்கால் லிட்டர்
  • வெட்டி வேர்: கைப்பிடி அளவு 
  • சந்தனக் கட்டை: சுண்டுவிரல் நீள சந்தனக் கட்டை
  • நன்னாரி வேர்: 5 துண்டுகள்
  • கொத்தமல்லி விதை: 2 டீஸ்பூன்
  • சீரகம்: 2 டீஸ்பூன்

திடப்பொருட்கள் அனைத்தையும் ஒருமுறை நன்றாக நீரில் அலசி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவற்றை முக்கால் லிட்டர் நீரில் ஊற வைத்து விடலாம். ஏனெனில் இந்தப் பொருட்களை எல்லாம் நேரடியாக அப்படியே மண்பானைத் தண்ணீரில் சேர்த்தால் சந்தனக் கட்டை எடை அதிகம் என்பதால் நீரில் மூழ்கிவிடும் ஆனால் வெட்டிவேர், கொத்தமல்லிவிதை, சீரகம் எல்லாம் நீரில் மிதக்கத் தொடங்கி விடும். ஒவ்வொரு முறையும் இவற்றை வடிகட்டி, வடிகட்டி நீர் அருந்த நமக்கு சோம்பேறித்தனமாகி பிறகு நாளடைவில் வெறும் தண்ணீரே மேல் என்ற மனநிலைக்கு வந்து விடுவோம். அதனால் முக்கால் லிட்டர் நீரில் இவற்றை சுமார் 5 மணி நேரமாவது ஊற வைத்துவிட வேண்டும். பிறகு ஊறிய நீரை வடிகட்டி, அதை மண்பானையில் முன்னரே ஊற்றி வைத்து சில்லென்று இருக்கும் நீரோடு சேர்த்தோமென்றால் நமக்கு அருந்த வசதியாக இருக்கும்.

இந்த பொருட்களைச் சேர்ப்பதனால் கிடைக்கும் ஆரோக்யப் பலன்கள்...

  • மண்பானைத் தண்ணீரில் சேர்க்கப்படும் மேற்கண்ட பொருட்கள் அனைத்துமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை மட்டுமல்ல, மனதுக்குப் புத்துணர்ச்சி தரத்தக்க நல்ல நறுமணமும் கொண்டவை. இவை மனச்சோர்வைப் போக்கி சிறுநீரக நோய்களைத் தவிர்க்கும் விதத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகின்றன என்கிறது சித்தமருத்துவம்.
  • அதுமட்டுமல்ல, இந்தத் தண்ணீரை தொடர்ந்து 1 மாதம் நாம் அருந்திக் கொண்டிருந்தோமென்றால் நமது உடலின் வியர்வை நாற்றத்தைக் கூட குறைக்கும் தன்மை இதற்கு உண்டு என்கிறார்கள் இந்த முறையைப் பின்பற்றி மண்பானைத் தண்ணீர் அருந்தியவர்கள்.

சரி இப்போது தண்ணீர் ஊற்றி வைக்க மண்பானையை இதுவரை உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் புதிதாக மண்பானைத் தண்ணீர் குடிக்க ஆசைப்பட்டு வாங்குகிறார்கள். ஆனால், முறையாக மண்பானையைப் பயன்படுத்தத் தெரியவில்லை.

எப்படி மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து புழங்குவது என்ற சந்தேகத்திற்கான தீர்வு.

  • இப்போது அனைத்துச் சந்தைத் திடல்களிலும் மண்பானை கிடைக்கிறது. மண்பானையைத் தட்டிப் பார்த்து வாங்க வேண்டும். தட்டும் போது சுடப்பட்டு, நன்கு காய்ந்த மண்பானை எனில் சொத், சொத்தென சத்தம் வராமல் வெண்கலப் பானை போல ‘நங்’கெனச் சத்தம் வரும். அப்படிப்பட்ட மண்பானையாகப் பார்த்து வாங்கி அதில் சாதாரண குழாய்த் தண்ணீரை நிரப்பி இரண்டு நாட்கள் ஊற விட்டு பிறகு மீண்டும் தேங்காய் நார் அல்லது உடல் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தும் பீர்க்கை நார் கொண்டு மிருதுவாகத் தேய்த்துக் கழுவி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு இந்த மண்பானைக்கு ஒரு அருமையான ஸ்டாண்டு தயார் செய்ய வேண்டும். ஸ்டாண்ட் என்றால் சாதாரண வளை அல்ல. ஒரு வாயகன்ற பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் பேசினில் ஆற்றுமணல் + கல் உப்பு சம அளவு கலந்து பேசினின் முக்கால்பாகம் வரை நிரப்பி அதை மண்பானைக்குரிய ஸ்டாண்ட் ஆகப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் உப்பு மற்றும் ஆற்றுமண் உதவியால் வெயில் ஏற, ஏற மண்பானையின் சில்லிட்ட தன்மை குறையாமல் அப்படியே நீடித்திருக்கும். 
  • நன்றாகக் காற்றுப் புகும் தன்மை கொண்ட் மண்பானை எனில் அதில் நிச்சயம் ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதம் பானையின் வெளியில் கசிந்தால், உடனே அது ஓட்டைப் பானை என்று கருதி விடாதீர்கள். அது நல்ல பானை தான். பானையின் வெளிப்புறத்தில் கசியும் நீரை ஸ்டாண்ட் பேசினில் நாம் சேர்க்கும் மணல், உப்புக் கலவை ஈர்த்துக் கொள்ளும். 

இப்படியெல்லாம் முன்னேற்பாடுகள் செய்து விட்டோமென்றால் போதும், இனி சளி பிடிக்கும் என்ற பயமின்றி சந்தோஷமாக அருந்தலாம் இயற்கை ஃப்ரிஜ்ஜான மண்பானைத் தண்ணீரை. கோடையில் ஃப்ரிஜ்ஜால் கரண்ட் பில் எகிறுமோ என்ற பயமும் கூட இனித் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT