திருநங்கைகள் மீதான சமூக பயத்தைப் போக்கும் விதமாக ‘நச்’சென்று ஒரு பதில்!

உன் பிரச்னையை மட்டுமே பார்க்கக் கூடாது. உன்னால் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் சேர்த்து யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்
திருநங்கைகள் மீதான சமூக பயத்தைப் போக்கும் விதமாக ‘நச்’சென்று ஒரு பதில்!

திருநங்கைகள் மின்சார ரயில்கள், பேருந்து நிலையங்கள், பிரசித்தி பெற்ற கோயில் வளாகங்கள், நகரத்தின் ஜன நெருக்கம் மிகுந்த சாலைகள், டிராஃபிக் சிக்னல்கள் என்று பிச்சையெடுக்கிறார்கள். அவர்களுக்கு பணம் தராமல் நகர்பவர்களை அவர்கள் சும்மா விடுவதும் இல்லை... சபிப்பதும், இன்னோரன்ன வார்த்தைகளில் திட்டுவதும் சர்வ சாதாரணமாக பலருக்கும் காணக்கிடைக்கின்ற காட்சிகளே! இந்த விஷயத்தை மையமாக வைத்து தினமணியில் சில மாதங்களுக்கு முன்பு சிறப்புக் கட்டுரை கூட வெளிவந்தது. ஒரு பக்கம் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. திருநங்கைகளில் ஒரு சிலர் இந்தியக் குடிமைப் பணித்தேர்வுகளில் வென்று அதிகாரிகளாகவும் ஜெயித்திருக்கிறார்கள். மூன்றாம் பாலினமாக அவர்களுக்கு ஒரு நல் விடியல் கிடைத்திருக்கிறது. குடிமைப்பணிகள், காவல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சினிமா, மருத்துவத்துறை என அவர்களில் பலர் ஸ்திரமான முன்னேற்றம் பெற்று இன்று அவர்களைப் பற்றிய சமூகப் பார்வையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆயினும் இன்னும் பிச்சையெடுக்கும், பாலியல் தொடர்பான சொற்களைக் பிரயோகித்து தங்களுக்கு பணம் தராதவர்களை அச்சுறுத்தும் திருநங்கைகளும் இருக்கிறார்களே? 

இவர்களுக்கு அரசு என்ன சலுகை செய்து என்ன பலன்? இவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்களை யாராலும் திருத்தவே முடியாது என்று சிலர் திருநங்கைகளைப் பற்றி அவ்வப்போது பொது வெளியில் கருத்துக்களை வெளியிடுவது சகஜமாகி வருகிறது. திருநங்கைகள் குறித்த இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். ஆனால் பொருத்தமான பதில் தான் இதுவரை கண்டடைந்திருக்கப்பட மாட்டாது. இந்நிலையில் திருநங்கைகள் குறித்த ஒரு கட்டுரைக்காக அவர்களைப் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது திருநங்கை கோமதி என்பவர் கடந்தாண்டு இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்று காணக்கிடைத்தது. அவரது நேர்காணலில் மேற்கண்ட கேள்விக்கான பதில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது.

அவரென்ன சொல்கிறார் என்றால், 

‘திருநங்கைகளில் பலரை அவர்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நிராதரவாக சென்னை, மும்பை மற்றும் பிற இந்திய நகரங்களில் தனித்து வாழும் நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்படியான நேரங்களில் அவர்களின் உணவு, உடை, உறைவிடம் என அனைத்துத் தேவைகளுக்காகவும் அவர்களே பாடுபட வேண்டியதாயிருக்கிறது. அம்மாதிரியான நேரங்களில் தங்களைப் போலவே நிராதரவாக விடப்பட்டு தனித்து வாழும் திருநங்கைகளைக் காணும் போது அவர்களுக்கு மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது. நம்மைப் போன்ற இன்னும் பல ஜீவன்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஆதரவு நிலையில் அவர்களுடன் இவர்கள் இணைந்து கொள்கிறார்கள். அப்படி இவர்கள் விவரம் அறியா வயதுகளில் இணைந்து கொள்ளும் அந்த திருநங்கைகளில் நல்லவர்களும், பக்குவமானவர்களும் இருப்பார்கள். அதே சமயம் இந்த சமூகம் தங்களை நிராகரித்ததின், குடும்பம் தங்களைக் கைவிட்டதன் பலனைச் சுமந்து சுமந்து மனம் ரணப்பட்ட திருநங்கைகளும் இருப்பார்கள். நாம் இணையும் கூட்டம் அல்லது நமக்குக் கிடைக்கும் மற்றொரு திருநங்கை அறிமுகம் மிக நல்லதாக அமைந்தால் இந்த சமூகத்தின் மீதான புரிதலைப் பற்றியெல்லாம் யோசிக்கக் கூடிய அளவுக்கு பக்குவம் கொண்டதாக அமைந்தால் அவர்களால் நாமும் நல்வழிப்படுத்தப் படுவோம். ஒருவேளை நாம் சென்று சேரக்கூடிய திருநங்கைக் கூட்டம்... சிறு வயதில், தாம் திருநங்கைகள் என்பதற்காக குடும்பத்தினரால் கைவிடப்பட்டு இந்த சமூகத்தின் நச்சுப் பக்கங்களை இளமையிலேயே மிக அதிகமாகக் காண நேர்ந்து துன்பத்தில் உழன்றவர்களாக இருந்தால், பாலியல் ரீதியிலான பசியைத் தீர்த்துக் கொள்ள எதையும் செய்யலாம் எனும் எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுடன் சேரும் பிறரும் வேறு வழியின்றி அதையே பின்பற்றத் தொடங்கவேண்டியதாகி விடும். 

என்னைப் பொறுத்தவரை எனக்கு பிற திருநங்கைகளைப் போல பாலியல் ரீதியிலான தொல்லைகள் எல்லாம் இருந்ததில்லை. ஏனென்றால் என் பெற்றோர், நான் திருநங்கையாக இருந்த போதும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களே தவிர, என் உடன்பிறந்த சகோதரர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்களில்லை. ஏனென்றால் அவர்களது நண்பர்கள் அவர்களை என்னைக் காரணம் காட்டி கேலி செய்திருக்கிறார்கள். அதனால் விளைந்த கோபத்தில் என் அண்ணன் என்னை அடிப்பதும் சண்டையிடுவதும் உண்டு. இதை நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். உணர்ந்தேன் என்று ஏன் சொல்கிறேன் என்றால், உணர்தல் என்பது என் அண்ணனுக்கு என் காரணமாக நிகழக்கூடிய அவமானங்களை, கேலிகளை நான் உணர்ந்த காரணத்தினால் மட்டுமே என்னை திருநங்கை என்று ஒதுக்கும் கூட்டத்தினரே மீண்டும் என்னை பாராட்டும் படியாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வை எனக்கு ஊட்டியது. அதனால் நான் என் அண்ணனையும் அவனது வெறுப்பையும் புரிந்து கொண்டு எனக்கு என்ன தேவை? நான் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் தெளிவாக முடிவு செய்து கொண்டேன்.

எனக்கு கையில் ஒரு கலை இருக்கிறது. மிக அழகாக சுவாமி அலங்காரம் செய்வேன். இன்றூ சென்னையைச் சுற்றி பல கோயில்களில் நான் சுவாமி அலங்காரம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நானே தனியாக ஒரு கோயிலையும் நிர்வகித்து வருகிறேன். ஒரு பக்கம் அம்மா மெஸ்  கேண்டீனையும் எடுத்து நடத்தி வருகிறேன். நடு நடுவே கல்லூரி மாணவர்கள் திருநங்கைகளைப் பற்றி எடுக்கும் ஆவணப் படங்களிலும் நடித்து வருகிறேன். இப்போது எனக்கென்று ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்படி எல்லா திருநங்கைகளுக்கும் நம்பிக்கையான ஒரு அங்கீகாரம் கிடைக்குமாயின் அவர்கள் ஏன் பிச்சையெடுக்கப் போகிறார்கள்? சக மனிதர்களைச் சபிக்கப் போகிறார்கள். என அண்ணன் என்னை அடித்துத் துன்புறுத்தும் சமயங்களில் நான் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியில் சென்று விடுவேன், அப்போது ஆஷாபாரதி எனும் திருநங்கை ஒருவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரை என்னுடைய முன்னோடி என்று சொல்லலாம். அவருடைய அறிமுகம் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் நானும் கூட நீங்கள் மின்சார ரயில்களிலோ, அல்லது சாலையோரங்களில் காசு கேட்டு அடாவடி செய்யும் பிற நிராதரவான திருநங்கை கூட்டத்தினருடன் சேர்ந்து வீணாய்ப் போயிருக்க வாய்ப்புண்டு. அவர்கள் எனக்கு அளித்த வழிகாட்டலால் மட்டுமே எனது இன்றைய சமூக அங்கீகாரத்தை நான் அடைந்திருக்கிறேன் என்பது மெய்! வீட்டில் கோபித்துக் கொண்டு நான் ஆஷா பாரதியிடம் சென்று என் மனக்கவலைகளைப் பகிர்ந்தால்... அப்போது அவர் சொன்னது இதுதான். இதோ பார் எப்போதும் உன் பிரச்னையை மட்டுமே பார்க்கக் கூடாது. உன்னால் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் சேர்த்து யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். நீ உன் குடும்பத்தினரைப் புரிந்து கொள்ள முயற்சி செய். அவர்களும் உன்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். என்பார்.

அவர் காட்டிய வழியில் தான் இன்று வரை நான் பிரயாணித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி நல்லவிதமான வழிகாட்டிகள் நமக்குக் கிடைத்து விட்டால் நமக்கான சமூக அங்கீகாரம் எளிதாகி விடும். அதை விடுத்து திருநங்கைகள் இந்த சமூகத்தின் மீதும், சமூகம் திருநங்கைகளின் மீதும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அது மட்டுமே திருநங்கைகள் மீதான பயம் குறித்த கேள்விக்கு பொருத்தமான பதிலாக இருக்க முடியும்.

- என்கிறார் கோமதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com